மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே’ என்கின்றன ஞானநூல்கள். யாவர்க்கும் எளியராய், இனியராய், அன்பராய், எல்லாவற்றிலும் இறைவனையேக் காணும் தெளிவுபெற்றவராய் வாழ்பவரே அடியார்கள்.

இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை அடியார்கள்?!

`அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி...' என ஞானச்சுடர் விளக்கேற்றியும், `இச்சுவைத் தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று இறையைப் போற்றியும் வழிபட்ட ஆழ்வார் பெருமக்களும் ராமாநுஜர் போன்ற ஆசார்ய புருஷர்களும் மாலவனின் அடிபோற்றி மகிழ்ந்தார்கள்.

ஈசனைக் கண்டதுமே காதலாகிக் கண்ணீர் உகுத்து, ஊண் உறக்கம் மறந்து, ‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்ல’ராய் வாழ்ந்த கண்ணப்பர், இறைக்காக தன் குழந்தையையே வாளால் அரிந்து உணவு படைக்கவும் தயாரான சிறுதொண்டர் போன்ற நாயன்மார்களும், தேவார மூவரும் இன்னும்பல அடியார்களும் சிவனைச் சிந்தையில் நிறைத்து திருத்தொண்டாற்றி பெரும் புகழ் கொண்டவர்கள்.

இவர்கள் மட்டுமா? பக்தமீரா, துகாராம், மத்வர், ராகவேந்திரர், குமரகுருபரர்... என்று இந்தப் புனித பூமியில் மனித தெய்வங்களாய்த் தோன்றி, செயற்கரிய தொண்டுகளால் சிறந்த அடியார்களும் மகான்களும் ஏராளம். இவர்களின் தியாகத்தையும் பக்தியையும் இந்த உலகம் உள்ளளவும் கொண்டாடிக்கொண்டிருக்கும்.

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

இப்போதும் இறைப்பணியில் தம்மையே இழைத்துக்கொள்ளும் தியாகசீலர்கள் பலர் உண்டு. ஆனாலும், தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அதனாலேயே நமக்குத் தெரிவதில்லை.

நம் தர்மங்கள் எல்லாம் சரிவர நடக்கின்றன என்றால், அதற்கு இந்த இறைத்தொண்டர்களின் தியாக வாழ்வே காரணம். ஆளே வராத ஆலயமானாலும், ஒருவேளைப்  பூஜையேனும் செய்துகொண்டு வறுமையில் வாடும் அர்ச்சகர், இந்த லோக க்ஷேமத்துக்காக வாழ்பவர்தானே?

தமிழகம் முழுக்க பழுதடைந்து கிடக்கும் பல ஆலயங்கள் புனரமைக்கப்படுவதும், அங்கு  பூஜைகள் நடைபெறுவதும் சாத்தியமாயின என்றால், எளிமையான அடியார்களின் அருந் தொண்டே அதற்குக் காரணம் என உறுதியாகக் கூறலாம். இப்படி, வாழ்நாள் முழுக்க உடல், பொருள், சுகம் எல்லாவற்றையும் இறைப்பணிக்காகவே தத்தமளித்து வாழும் புண்ணிய சீலர்களை அடையாளம் காட்டவே இந்தத் தொடர்.

அப்படியான புண்ணியசீலர்களில் நாம் முதலாவ தாகச் சந்திக்கப்போவது, எந்தக் கவலையுமற்ற ஓர் எளிய அன்பரை! கவலையற்ற நிலைதானே முக்தி. கவலையை ஒழிப்பவர் பிறப்பை வெல்பவர் அல்லவா?

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

நீங்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கச்சபேஸ்வரர் கோயில்களுக்குச் சென்றிருக்கிறீர்களா?   பிரமாண்டமான அந்த ஆலயங்களில் நிறைய   சந்நிதிகளும், லிங்கங்களும் அமைந்திருக்கும். அந்தச் சந்நிதிகள் அனைத்திலுமுள்ள தெய்வமூர்த்தங்களுக்குத் தாமரை அல்லது நாகலிங்க பூக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.

அனுதினமும் தவறாமல் இந்த மலர்களைச் சமர்ப்பிக்கும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகிறார் அன்பர் ரஜினி. ஒன்றல்ல, இரண்டல்ல ஆறு ஆண்டுகளாக ஒருநாள்கூட நிறுத்தாமல் தினந்தோறும் 500 தாமரைகள் அல்லது நாகலிங்கப் பூக்களை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு அளித்து வருகிறார் அன்பர் ரஜினி.

விவசாயக் கூலித்தொழிலாளியான இவருக்குச் சிறிய குடிசையும் வயதான தாயாரும் மட்டுமே இந்த உலகில் சொந்தம். ஈசனையே சொந்தமெனக் கொண்டவருக்கு வேறெந்த சொந்தம் சாஸ்வதமாகும் சொல்லுங்கள்?

காஞ்சிபுரம் அருகில் தாமல் என்ற ஊரை அடுத்த முசரவாக்கம்தான் ரஜினிக்குச் சொந்த ஊர், வயது 32. பன்னிரண்டாம்  வகுப்பு வரை படித்திருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு கூலி தந்தாலும் காலை 6 மணிக்குத்  தொடங்கும் விவசாய வேலையை மதியம் 2 மணிக்குள் முடித்துவிடுவார். அதன்பிறகு இவரின் முக்கியமான பணி... மலர்களைச் சேகரிப்பதுதான். காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு 150 கி.மீ. சுற்றளவில் திகழும் ஊர்களில் மலர்களைச் சேகரித்து வருகிறார்.

மழை, வெயில், புயல் என்று எத்தனை இடையூறுகள் வந்தபோதும், இதுநாள் வரை ஈசன் அருளால் இந்தப் பணியை நிறுத்தியதே இல்லையாம். ஆரம்பத்தில் சைக்கிளில் சென்று மலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்தவருக்கு, இப்போது அடியார்கள் சிலர் சேர்ந்து பழையவிலையில் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.

`தினமும் மலர்கள் கிடைப்பது சாத்தியமா?' என்று கேட்டால், ``ஆமாம்'' என்று உற்சாகமாகச் சொல்பவர், நம்மிடம் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

‘‘ஒரு குளத்தில் தாமரை மலர்களைப் பறிக்கும் போது, மீண்டும் நிறைய தாமரைக்கொடிகள் முளைக்கும்விதம் விதைகளைத் தூவி விடுவேன். இதனால் தொடர்ச்சியாக மலர்கள் கிடைத்து வருகின்றன’’ என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், 20-க்கும் மேற்பட்ட பொதுக் குளங்களைச் சீர்ப்படுத்தி தாமரைகளை வளர்த்து வருகிறாராம்.  

``அதுசரி, கடுமையான கோடைக்காலத்தில் தாமரை மலர்கள் கிடைப்பது கடினம் ஆயிற்றே’’ என்று கேட்டால், சட்டென்று பதில் வருகிறது...

‘‘அப்போது நாகலிங்க மலர்களைச் சேகரிப்பேன். சிவனருளால் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாகலிங்க மரங்களையும் வளர்த்து வருகிறேன். அவையும் விரைவில் மலர்கள் கொடுக்கத் தொடங்கிவிடும்’’ என்று சொல்லும் ரஜினி, பஞ்சகவ்யம் தெளித்தும், இயற்கை உரங்கள் இட்டும் அந்த மரங்களைப்  பராமரித்து வருகிறாராம். இந்தப் பணியை ஆரம்பித்தபோது, இவர் சந்தித்த சிரமங்கள் மிக அதிகம். அதுபற்றி அவரே சொல்கிறார் கேளுங்கள்...

``ஆரம்பத்தில், மலர் பறிக்கப் போகும் இடங்களிலெல்லாம், வியாபாரத்துக்காகவே மலர் பறிக்க வருகிறேனென்று விரட்டியடிப்பார்கள்.  சிலர், பணம் கொடுத்தால் மலர் தருகிறோம் என்று தொல்லை கொடுப்பார்கள். என்னிடம் ஏது பணம்?  தினமும் அடியும் திட்டும் வாங்கினாலும் எந்த அவமானத்தையும் பெரிதாக எண்ணாமல் மலர் சேகரிக்கும் பணியை விடாமல் செய்தேன். பிறகு மெள்ள மெள்ளப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க ஆரம்பித்தார்கள்.

அதேபோல், தாமரை மலர்களைப் பறிக்கக் குளத்தில் இறங்கினால் 10 அடிக்குள்ளேயே கழுத்து வரை சேற்றில் முங்கிவிடுவேன். எல்லா மலர்களையும் பறிக்கவேண்டும் என்பதால், குளத்தின் நடுப்பகுதி வரை செல்வேன். சிலநேரம் தாமரைக்கொடிகள் சுற்றிக்கொள்ளும்; தண்ணீர் பாம்புகள் சுற்றிக்கொள்ளும். பலமுறை விஷ முள்கள் கால்களைப் பதம் பார்த்திருக்கின்றன.  ஆனாலும் இதுவரை எந்தவிதமான உயிராபத்தை யும் சந்தித்ததிலை; அதுகுறித்த பயமும் இல்லை. என் அப்பன் ஏகம்பன் துணையிருக்க கவலை எதற்கு?’’ என்று புன்னகைக்கிறார் அன்பர் ரஜினி.

இறைவனுக்குப் புதிதாக மலர்ந்த மலர்களைச் சமர்ப்பிப்பது மிகவும் விசேஷம் என்கின்றன ஞானநூல்கள்.  `இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லையே' என்பார்கள் சாமானியர்கள்.  ஆனால், உள்ளத்தில் பக்தியிருந்தால் சகலமும் சாத்தியமே என்று நிரூபித்துக்க்கொண்டிருக்கிறார் இந்த அடியார்!

‘‘அன்றலர்ந்த புதிய மலர்களைப் பறிக்க நினைக்கும் தருணங்களில், நாகலிங்க மரத்தின் அடியிலேயே இரவில் படுத்துக்கொள்வேன். அதிகாலையிலேயே எழுந்து மலர்களைப் பறித்து விடுவேன். புதுமலர்களைச் சமர்ப்பிப்பதில் அப்படியொரு சந்தோஷம் எனக்கு.

இதுவரை நான்கு முறை என் மீது நாகபாம்பு ஊர்ந்து சென்றிருக்கிறது. அப்போதெல்லாம் உடம்பை அசைக்காமல், மனதுக்குள் திருப்பதிகம் பாடியபடி கிடந்திருக்கிறேன். நாகங்களும் எதுவும் செய்யாமல் சென்றுவிடும். ஒருமுறை, கச்சபேஸ்வரர் ஆலயத்தின் குளக்கரையிலிருந்த லிங்கத் திருமேனிக்கு மலர் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். சட்டென்று என் முதுகில் விழுந்து என் மேனியில் ஊர்ந்துசென்றது ஒரு நாகம். அப்படியே சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டேன். மனதுக்குள் பஞ்சாட்சரம். நாதன் துணையிருக்க நாகம் தீண்டுமா நம்மை!''

பக்தியும் பரவசமுமாய் தனது மலர்ப்பணி குறித்து விவரிக்க விவரிக்க அவரின் திருமுகமும் பூவாய் மலர்கிறது. மலர் அர்ப்பணிக்கும் திருப் பணி மட்டும்தானா? இல்லை வேறு திருப் பணிகளும் செய்துவருகிறார் அடியவர் ரஜினி. நம் சிந்தையைச் சிலிர்க்கவைக்கும் திருப்பணிகள் அவை!

-அடியார்கள் வருவார்கள்...

-மு.ஹரிகாமராஜ்

படங்கள்: பெ.ராகேஷ்

பாண்டி நாட்டு அகோபிலம்!

புண்ணிய புருஷர்கள் - புதிய தொடர்

நெல்லை- தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பாவூர். இங்கு 16 கரங்களுடன், பிரகலாதவரதராக மேற்கு நோக்கி காட்சி தருகிறார் ஸ்ரீநரசிம்மர். இவரின் 6 கரங்கள் இரண்யனின் வயிற்றிலும், மற்றவை ஆயுதங்களுடனும் திகழ்கின்றன. கீழப்பாவூரை ‘பாண்டி நாட்டு அகோபிலம்’ என்கிறார்கள்.

- எஸ். வத்சலா, சென்னை-64