மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

ம் நாட்டில் இப்போது பரபரப்பான தேர்தல் காலம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடு தழுவிய தேர்தலுக்கு ஆயத்தப்பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டன. ‘நீயா? நானா’ போட்டி டெலிவிஷன் சேனல்களைவிட்டு வெளியே நடுத்தெருக்களுக்கும் வந்துவிட்டன!

மகா பெரியவாளும் தேர்தல் குறித்து பல்வேறு சொற்பொழிவுகளில் பேசியிருக்கிறார்.  எப்போதோ அவர் பேசியுள்ள பல விஷயங்கள் இப்போதும் பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது. அந்த மாமுனிவரின் தீர்க்கதரிசனம், சிலிர்க்கவைக்கிறது!

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

‘திருவுள்ளச் சீட்டு’ என்று ஒரு வார்த்தை அடிபடுகிறதே, அது சீட்டுப் போட்டு எடுக்கற விஷயம்; பகவத் ப்ரீதியாக ஈச்வர சங்கல்பத்தின்படி அமைந்தது என்ற அர்த்தத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது.

இங்கே சொல்லும் தேர்தல், கோயிலிலேயே - கோயில் பூஜகரே பங்குகொண்டு நடப்பதாக இருக்கும். அதோடு தெய்வத்துக்குச் சமமான குழந்தையைக்கொண்டு சீட்டு எடுப்பதாக இருக்கிறது. இந்த ‘ப்ரஸைடிங் ஆபீஸர்’ கொஞ்சம் கூட நடுநிலைமை தப்பிப் பண்ணுவதற்கு இல்லை!

சரியாகச் சொல்லப்போனால் ஆண்டவனே தான் இங்கே ப்ரஸைடிங் ஆபிசர். பால் குடிக்கிற குழந்தைகளின் வாய் வழியாக ஈச்வர சக்தியே வருகிறது என்ற அர்த்தத்தில், பைபிளில் வாசகம் வருகிறது. இங்கே, குழந்தையின் கை வழியாக அவனுடைய திருவுள்ளம் வெளிவருவதாக நினைத்து தேர்தல் ஏற்பட்டிருக்கிறது.

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

‘தற்காலத்தில் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு’ என்று சொல்கிறார்கள் என்றால், அந்தக் காலத்தில் ஆலய மண்டபத்தில் சமஸ்த ஜனங்களையும் கூட்டி, இப்படி தேர்தல் நடத்தி `இதுவே மகேசன் தந்த தீர்ப்பு’ என்று சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

முடியரசு போய்க் குடியரசு வரும்போதே, மனிதரைப் பார்க்காமல் கொள்கைகளைப் பார்ப்பதாகப் பெரிசாகப் பறைசாற்றப்படுகிறது. ஜாதி, ஸ்தானம் முதலிய எதையும் பார்க்காமல், ஐடியாலஜியின் பேரிலேயே சமூகக் காரியங்கள் நடப்பது இப்போதுதான் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஆனால், வாஸ்தவத்திலோ இப்போதுதான் தர்மம், நீதி, நேர்மையான நிர்வாகம், திறமையான சமூக அமைப்பு ஆகியவற்றின் உண்மைகளைப் பார்க்காமல், தனி மனுஷ்யர்களையும் கட்சிகளையுமே பிடித்துக் கொண்டு நிற்பது ஜாஸ்தியாகி வருகிறது.

‘காந்தி சொன்னாரா... அதுதான் வேதம். அதற்குக் கொஞ்சம் வேறாக - அவருக்கு நேற்று வரை நெருக்கமாக இருந்த ராஜகோபாலாசாரி அபிப்பிராயப்பட்டால்கூட, இவர் தேச விரோதமானவர் என்று அர்த்தம். இல்லாவிட்டால் வேறு ஒரு அம்பேத்கரோ, டாங்கேயோ ஏதோ சொல்லிவிட்டால், அதுதான் சத்யம்’ என்கிற ரீதியில் ஜனங்கள் கொள்கைகளைவிட்டு, (தனி) மனுஷ்யர்களையே பிடித்துக்கொண்டு நிற்பது ஜாஸ்தியாகி வருகிறது.

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

முதலில், தனிமனுஷ்யரிடம் மோகம் மாதிரியான பிடிமானம். அதற்கு அப்புறம் ஏதோ ஒரு பார்ட்டி வ்யூ (கட்சிக் கண்ணோட்டம்). இது இரண்டுக்கும் மிஞ்சி உண்மைகளை மனம் திறந்து உள்ளபடி பார்ப்பது என்பதே அபூர்வமாகி வருகிறது. எப்படிப்பட்ட தனி மனுஷர்களின் பின்னே ஜனங்கள் போகிறார்களென்று பார்த்தால், யாருக்குக் கவர்ச்சி சக்தி இருக்கிறதோ, அவருக்குப் பின்னேதான்.

ஒருவருக்கு நல்ல ஆரசியல் ஞானம் இருக்கலாம். தேச நலனுக்காக கொள்கைகளை வகுத்து அவற்றைத் திறம்பட நடத்திவைக்கிற சக்தி இருக்கலாம். நேர்மையான நடத்தை இருக்கலாம். இதெல்லாம் அவரிடம் இருந்தாலும், இவற்றில் எதுவுமே இல்லாத இன்னொருவருக்கு, மேடையில் நன்றாக ஜோடித்துப் பேச முடிகிறது, வசீகரமான பெர்சனாலிடி இருக்கிறது. என்றால்... இவற்றின் கவர்ச்சியிலேயே இவர் விஷயம் தெரிந்த அந்த இன்னொருவரைவிட, ஜனங்களின் பெரிய ஆதரவைப் பெற்றுவிடுகிறார். இந்தத் துர்தசையில்தான் இப்போது தேசமிருப்பதாகத் தெரிகிறது.

சமூகத்தின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுமே இப்படிப்பட்ட கவர்ச்சியில் மயக்கத்துடன் செல்கிறார்களென்றால், இதிலேயும் விஷயம் தெரியாத பாமர ஜனங்களைத்தான் விசேஷமாக வளைத்துவிட முடிகிறது. இதை நினைக்கும்போது, `கவர்ச்சியம்சத்தை உத்தேசித்துதான் வோட்டர் களுக்கு வேறு தகுதியே வைக்காமல், வயது வந்தோர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்று செய்வதோ’ என்றுகூடத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

சோழர் காலத்தில் உச்சியில் முடியரசு இருந்தபோது, கீழே தேர்தலில் பெர்ஸனலாலிடி என்பதே இல்லை. கட்சி என்பதும் இல்லவே இல்லை. தர்மம், தகுதி என்பனவற்றின் மேலான அடிப்படையிலேயே முழுக்க முழுக்க தேர்தல் நடந்திருக்கிறது. கான்டிடேட் என்பவன் பெர்ஸனலாக யார், அவன் எந்த பார்ட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் தர்மிஷ்டன், தகுதி வாய்ந்தவன் என்பவையே கவனத்துக்கு வந்திருக்கின்றன.

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

இப்படிப்பட்டவர்களே தங்களுடைய சொந்தக் கவர்ச்சியினால் இல்லாமல், யோக்யதாம்சங் களுக்காக மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்புறம் ஒரு வருஷம் அவருக்குப் பதவிக்காலம். மறு வருஷம் மறுபடியும் இதேமாதிரி தேர்தல். ஆனால், இதே நபர் அந்தத் தேர்தலிலோ, அதற்கப்புறம் இரண்டு வருஷங்களில் நடக்கும் தேர்தலிலோ எலெக்ட் ஆக முடியாது.

இந்தத் தேர்தலில் காணும் அநேக முக்கியமான அம்சங்களில் இன்னொன்று, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு எத்தனை ஓட்டுகள் என்று எண்ணி, மெஜாரிட்டி பேஸிஸில் (பெரும்பான்மையான அடிப்படையில்) ஒருத்தர் ஜெயித்ததாக நிர்ணயம் பண்ணாததாகும்.

ஒருத்தன் மெஜாரிட்டி அடிப்படையில் ஜெயிக்கிறான் என்றால், உடனே அவனுக்கும் அவனை ஆதரிப்பவர்களுக்கும் தங்களுடைய எதிரிகளான மைனாரிட்டி யார் யார் என்பதிலேயே புத்தி போக இடமேற்படுகிறது. தொடர்ந்து அவர்களை எப்படி இம்சிக்கலாம், ‘விக்டிமைஸ்’ பண்ணலாம் என்பதில் கவனம் போகலாம். மைனாரிட்டியின் பரம நியாயமான கோரிக்கைகளைக்கூட, மெஜாரிட்டி பலத்தினால் திரஸ்காரம் பண்ணிவிடக்கூடாது என்று சோழகாலப் பூர்விகர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

முதலில் ஒரு அபேக்ஷகர் எலெக்ட் ஆவதில், வோட்டர்களை வைத்து மெஜாரிட்டி மைனாரிட்டி பார்ப்பது. அப்புறம் இதில் ஜெயித்த அபேக்ஷகர்கள் எல்லாவற்றையும் சேர்த்து சபையை அமைத்து அரசாங்க அதிகாரத்தைக் கொடுப்பதிலும், கட்சிகளை வைத்து மெஜாரிட்டி - மைனாரிட்டி என்ற அடிப்படைகளில் முடிவு செய்வது. இந்த அடிப்படையில் ஜன சமூகத்தையே பிளந்துவிட்டது போலக்கூட ஆகிறது. அதாவது இரண்டு பிரிவுக்காரர்களும் ஏதோ ஒவ்வொரு விதமான கோட்பாடுகளுக்கும் திட்டத்துக்குமே தங்கள் புத்தியை குறுக்கிக்கொள்கிறார்கள். அந்த closed mind உடன் இன்னொரு தரப்பை, அது எதிர்த் தரப்பு என்றே வைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

மைனாரிட்டியின் தர்ம நியாயக் கோரிக்கை களையும் மெஜாரிட்டியி னரான அரசாங்கத்தினர் ஆட்சேபிக்கிறார்கள். இவர்களும் அவர்களுடைய ஆட்சியில் என்ன நல்லது நடந்திருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மறுத்து, எப்போது பார்த்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை சொல்வதாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் சோழர்காலத்தில் யோக்யதாம்சங்களைத் திட்டவட்டமாக தீர்மானமாக வைத்தார்கள். அப்படிப்பட்டவன் மெஜாரிட்டி பெற்றானா, மைனாரிட்டி பெற்றானா என்ற வீண் சண்டைகள் கிளம்ப இடமில்லாமல், குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப் பண்ணினார்கள்.

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

அப்புறம் எலெக்ட் ஆகிற எவனாவது தப்பாக நடந்தாலும் அவனுடைய அதிகாரம் ஆழ ஊன்ற முடியாதபடி, பதவி காலம் ஒரே ஒரு வருஷம்தான் என்று வைத்தார்கள். இந்த ஒரு வருசத்துக்குள்ளேயும்கூட, ஒரு மெம்பர் குற்றம் பண்ணியதாகத் தெரிந்தால், உடனே பதவி நீக்கம்தான். ‘வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங் கண்டபோது அவனை யொழித்துவதாகவும்’ என்று கல்வெட்டு சொல்கிறது!

`உலக நடப்புகளிலும், நாட்டு அரசியலிலும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளிலும் அதீத ஆர்வம் காட்டியவர் மகா பெரியவா. ஐந்தே நிமிடங் களில் பத்திரிகைகளிலுள்ள முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொண்டுவிடுவார். வாரப் பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்து, தேவையானவற்றை ஒரு நொடியில் படித்துவிடுவார்.

வரலாற்றுக் கதைகளை ஊன்றிப் படிப்பார். வரலாறு எது, ஆசிரியரின் கற்பனைகள் எவை என்பதைப் பிறரிடம் எடுத்துரைப்பார். ஆனந்த விகடனில் வரும் என் அரசியல் கார்ட்டூன்களை விமர்சனம் செய்வார். பல நேரங்களில் என் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். என் கருத்துக்களுக்கான காரணங்களையும் கேட்டறிவார்” என்று எழுதுகிறார், `ஸ்ரீதர்’ என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரைந்து வந்த பரணீதரன்.

“உனக்குக் காமராஜர் ரொம்ப உசத்தி... அவர் பண்றது, பேசுறது எல்லாமே ரைட். அதான் அவரை ஒரேடியாக தூக்கி வெச்சு கார்ட்டூன் போடறே, இல்லையா?” என்று ஒரு முறை விமர்சனம் செய்தாராம் மகா பெரியவா.

“மத்த பாலிட்டிஷன்ஸைப் பார்க்கிறப்ப, காமராஜர் ஒரு தனி மனுஷனா தெரியறார். அவர்கிட்ட எனக்குப் பல விஷயங்கள் பிடிச்சிருக்கு” என்று ஸ்ரீதர் சொல்ல, சிரித்தாராம் மாமுனிவர்!

ஒரு முறை மயிலாப்பூரிலிருந்து அடையாறுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் மகா பெரியவா. உடன் சென்றவர்களின் கோஷ்டியில் பரணீதரனும் இருந்திருக்கிறார்.

இதுமாதிரி நடந்து செல்லும்போது ஊர் விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார் பெரியவா. உலகம் கண்டறியாத ஒரு மகான், தவயோகி, பிரும்ம ஞானி, ஜீவன் முக்தர் தம்மை எளியவராக்கிக்கொண்டு, நம் நிலைக்கு இறங்கி வந்து, ஒரு சாதாரண மனிதரைப்போல் பேசிப் பழகி வந்தவர் என்பது ஒரு வியப்பான செய்தி.

அன்று அடையாறுக்கு நடந்து சென்றபோது, பரணீதரனிடம் கேட்டார் மகாபெரியவா...

“காமராஜர் என்ன அலாதி... அவரை ஏன் உசத்தின்னு சொல்றே?”

- வளரும்...

-வீயெஸ்வி

புத்தர் என்ன சொன்னார்?

மகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’

து  ஒரு  புத்த  விஹாரம். அந்த  வயோதிக  ஜென்  துறவி உள்ளே வந்தார்; அமர்ந்தார். புத்தர் சிலையின் அருள் முகத்தை  ஏறிட்டு  நோக்கினார். அப்படியே நெடுநேரம் தியானத்தில்  லயித்துவிட்டு,  பிறகு எழுந்தார்; வெளியேறினார்.

இது தினம்தோறும் நிகழ்ந்தது. மடத்தின் தலைமை குரு, துறவியிடம், “நெடுநேரம் தியானம் செய்தீர்களே, புத்தர்  தங்களிடம் என்ன சொன்னார்’’ என்று கேட்டார்.

 “அவர் எதுவும் சொல்லமாட்டார். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்’’ என்றார் ஜென்குரு.

“அவரிடம், நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“எதுவும் சொல்லமாட்டேன். அமைதியாகக்  கேட்டுக் கொண்டிருப்பேன்’’ என்றார் துறவி.

 -ஆர்.சி.எஸ்.