தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 27

ரங்க ராஜ்ஜியம் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 27

ஓவியம்: அரஸ்

ரங்க ராஜ்ஜியம் - 27

‘வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின் சர ணென்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியதோர் தெய்வங்கொண்டொளிக்கும்’
- என்றழைப்ப
ஏதலார் முன்னே யின்னரு ளவர்க்குச்
செய்துன் மக்கள் மற்றிவரென்று கொடுத்தாய்
ஆதலால் வந்துன் அடியினையடைந்தேன்

ரங்க ராஜ்ஜியம் - 27

அணிபொழில் திருவரங்கத்தம் மானே!’

-பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

பூரணக் கும்பத்தைப் பின்தொடர்ந்த நீலன் வந்தடைந்த இடம், உப்பிலியப்பனின் சந்நிதி. அங்கே, திரையிடப்பட்டிருந்தது. அது தற்காலிகத் திரை. பூ உலகில் அதற்குத் திரை என்று பெயர்- ஞான உலகில் அதற்கு ‘தடை, தகவின்மை, தடுப்பு, தற்காலிகம்’ என்று எவ்வளவோ பெயர்கள்.

பொறுமையுடன் காத்திருப்போர் முன்பு அந்தத் திரை விலகிடத் தவறியதேயில்லை. ஞானமுள்ளோர் அத்திரை முன் காத்திருக்கத் தவறியதுமில்லை.

நீலனைக் காலன் இங்கு அழைத்து வந்து நிறுத்திவிட்டான். பொறுமையையும் மெள்ளப் புகுத்தினான். இனம்புரியாத பரவச உணர்வில் நீலன் திருச்சந்நிதிமுன் நின்ற நிலையில், அவனையும் அறியாமல் அவன் கைகள் இரண்டும் மார்புப்புறம் கூடிப் பிணைந்துகொண்டன. அமைச்சர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

அவன் கை கட்டி நின்றதேயில்லை..! சோழச்சக்கரவர்த்திக்கு வருடாவருடம் வரி செலுத்த நேரிடும் வேளையிலும், பொன்னோடும் நெல்லோடும் ‘எப்படி என் பங்கு... பார்த்தீரா?’ எனும் செருக்கோடுதான் நின்றிருக்கிறான்.

ரங்க ராஜ்ஜியம் - 27

எப்போதும் அவனுள் செருக்குதான் நிரம்பி வழிந்துள்ளது. பணிவை அவன் பிறரிடம் மட்டுமே எதிர்பார்த்திருக்கிறான். தன்னிடம் அவன் உணர்ந்ததேயில்லை.

ஆனால், இங்கோ எல்லாம் தானாய் நிகழ்ந்தபடி இருக்கின்றன. திரையும் விலகியது - மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. குங்கிலியப் புகை மணக்க மணக்கப் பரவிய நிலையில், கற்பூர தீபச்சுடர் முன்னால் அந்த மாலவனும் உப்பிலியப்பனாய் தேவியர் சகிதம் நீலனுக்கு அருட்காட்சி அளித்தான்.

நீலன், விண்ணிலிருந்து விழுந்த ஒரு மின்னல் வெட்டியது போல் உணர்ந்தான். கட்டிய கைகளைப் பிரித்து கூப்பத் தொடங் கினான். சூழ்ந்து நிற்போர் ‘நாராயணா... நாராயணா’ என்றனர்.

அஷ்டாட்சரம் - உலகின் ஒரே மந்திரம்!

பிறவிப் பூட்டைத் திறக்கும் சாவி!

கர்மப் பதிவை அழிக்கும் ரசாயனம்!

எது வாழ்வு என்பதைச் சொல்லித்தரப் போகும் ஆசான்!

மோச வாழ்வில் இருந்து மோட்ச வாழ்வுக்கான பாலம்!

நீலன் காதுகளில் விழுந்துவிட்டது. ‘மறவன் நீலன்’ அந்த நொடி முதல் ‘மாலவ நீலன்’ என்றானான். உப்பிலியப்பன் மேல் வைத்த விழிகளை அவனால் எடுக்க முடியவில்லை.

பார்... நன்றாகப் பார்...

நானே கம்பீரம். நானே கருணை. நானே பிரபஞ்சம். நானே சந்திர சூர்யர். நானே இவ்வையம் - அதன் மக்கள் - அவர் வாழ்வு. நீ என் திருமேனிக் கேசத்தின் லட்சத்தில் ஒரு பங்கு - என்றெல்லாம் அந்த உப்பிலியப்பன் பேசியதுபோல் உணர்ந்த நீலன், கண்ணீர் வடிக்கலானான். அங்கிருப்பவர்க்கெல்லாம் அது ஆச்சர்யக் காட்சி. நீலனின் மந்திரி கமலவிமலர் என்பவர் மட்டும் தயங்கித் தயங்கி ‘`மன்னா ஏன் அழுகிறீர்... என்னாயிற்று” என்று கேட்டார்.

“கமலவிமலரே! நான் பாவி... இக்காட்சியை இதுநாள் வரை காணாத வனாகவே இருந்துவிட்டேனே... எத்தனைப் பெரிய பாவி நான். இன்று குமுதவல்லியால் இது சாத்தியமாகியுள்ளது. அவள் இனி என் தேவியில்லை... ஆவி” என்றான்.

ரங்க ராஜ்ஜியம் - 27

உப்பிலியப்பன் அவன் கண்ணீரை ரசித்தான் - பேச்சை ருசித்தான். காட்சி யால் மட்டுமே இத்தனை மாற்றம். காலத்தாலும் என்று கூறலாம். எதற்கும் ஒரு காலம் உண்டு என்பது எத்தனைப் பெரிய உண்மை! உப்பிலியப்பனிடம் நேரிட்ட ரசவாத மாற்றங்களோடு திருநறையூர் சென்று ஆச்சார்ய நம்பி முன் நின்றான்.

நம்பி, நீலன் வந்து நிற்கும் கோலம் பார்த்து வியந்தார். அவன், அவரின் காலடியில் விழுந்து பணிந்தான். பின்னர், அவர் முன் தட்டுத்தட்டாய் பொன்னையும் பொருளையும் வைத்தான். அதில் உப்பிலியப்பன் கோயில் துளசி மாலையும் அடக்கம். நம்பி அதை மட்டும் எடுத்து தான் அணிந்துகொண்டார். அவரது ஞானத்துக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

ஓர் அழுக்குப் பட்டுத்துணியை உப்பிலியப்பன் சலவை செய்து அனுப்பியுள்ளான். அதை இனி தேவ கலிங்கமாய் ஆக்க வேண்டும்.

“மன்னா..!”

“நான் மன்னனில்லை குருவே.  உங்கள் சீடன்.”

“மகிழ்ச்சி... எப்படி, இப்படி ஒரு மாற்றம்?”

“உங்கள் பாஷையில் சொல்வதானால் விதி. என் பாஷையில் சொல்வதானால் குமுதவல்லி.”

“எதுவாய் இருப்பினும் இனி உனக்கு நற்கதி. நீ இனிதான் வாழவே போகிறாய்!”

“உண்மை. என் கடந்த காலங்கள், நான் நல்வாழ்வு வாழக் காத்திருந்த காலங்கள் என்றாகி விட்டன.”

“சரியாகச் சொன்னாய்... நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்...”

“நான் சொல்வதா? நீங்கள் சொல்லுங்கள்... நான் இனி என்ன செய்யவேண்டும்?”

ஆசார்ய நம்பி ஆச்சர்ய நம்பியாகிச் சிரித்தார். பின், “நல்லதோர் அரசனாய் நாட்டுமக்களின் காவலனாய், திருமாலின் தொண்டனாய் வாழ்வாயாக” என்றார்.

“இது போதுமா நான் ஸ்ரீவைஷ்ணவனாவதற்கு?” என்று மிகப் பணிவாகக் கேட்டான் நீலன்.

ஆசார்ய நம்பி முகத்தில் ஆனந்த அதிர்வு!

“தவறாக ஏதும் கூறிவிட்டேனா?”

“இல்லை... உன் போல் ஒருவன், இப்படிக் கேட்டதே எனக்குப் புதிய அனுபவம். வைஷ்ணவனாக அந்த குலத்தில் பிறந்தவர்கள் பலருண்டு. பிறவாமல் ஆவதென்பது அவரவர் செயல் திறத்தால் மட்டுமே சாத்தியம்...”

“அந்தச் செயல்பாடுகள் எவை?”

“நான் எனும் செருக்கடக்குதல், நாம் எனும் நினைவாகுதல் இது முதல் செயல்பாடு!”

“மற்றவை?”

“பஞ்ச சம்ஸ்காரம் எனும் விதிமுறைப்பாடுண்டு. அதன்படி நூலளவு பிசகுமின்றி செயல்படுதல்...”

“அவை?”

“தோள்களில் மாலவன் திருச்சின்னம் தரித்தல், பன்னிரு திருமண் காப்புடன் மாலவன் அடியார்க்குச் சேவை செய்தல், அன்றாடம் மாலவனுக்குத் திருவாராதனம் புரிதல்,  மாலவன் பாசுரங்களை உருக்கமாய் ஒதுதல், அவன் ஆலயத்தில் திருத்தொண்டு புரிதல்...”

“ஆஹா... அற்புதம்! இனிமேல்தான் நான் வாழப்போகிறேன் என்பது எவ்வளவு உண்மை. நீங்கள் கூறியவாறே செயல்படுவேன் குருவே!”

நீலன் துளியும் தயக்கமின்றி முன்வந்தான்.

ஆசார்ய நம்பி பிரமித்து நின்றார். நெடுநேரம் கழித்து, ‘`ஒன்றை மட்டும் உனக்கு என்னால் தர இயலாது’’ என்றார்.

“என்ன அது?”

“மந்த்ரோபதேசம்...” என்றார் ஒரு சொல்லில்.

ஆச்சார்ய நம்பி சொன்னது நீலனுக்கு முதலில் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. சொல்லப்போனால் ‘மந்த்ரோபதேசம்’ என்றால் என்னவென்றுகூட அவனுக்குத் தெரிந்திருக்க வில்லை. அது, அவன் குழப்பமும் கேள்வியும் கொண்ட முகத்தில் நன்றாகவே எதிரொலித்தது. ஆச்சார்ய நம்பிக்கும் அது புரிந்தது.

“நீலா... மந்த்ரோபதேசம் என்று நான் கூறியது உனக்கு என்னவென்றே தெரியவில்லை என நினைக்கிறேன்.”

“ஆம் குருவே... அது என்னவென்று நீங்களே விளக்கமாய்க் கூறவேண்டும்.”

“மந்த்ரோபதேசம் என்பது உன் காதுகளுக்குள் பிறர் அறியாவண்ணம் உன் மனதை நிலைநிறுத்தி நான் கூறப்போகும் ஒரு அஷ்டாட்சர சொல்...!”

“அஷ்டாட்சர சொல் என்றால்..?”

“எட்டெழுத்துக்களால் ஆன அந்த மாலவனின் திருப்பெயர்... அதையே அஷ்டாட்சரம் என்போம்.”

“அந்தப் பெயர்?”

“அதைத்தான் உன் வரையில் என்னால் கூறமுடியாது என்றேன்...”

“ஏன் குருவே?”

“எல்லா விஷயத்துக்கும் இந்த உலகில் சில விதிப்பாடுகள் இருக்கின்றனல்லவா?''

“விதிப்பாடா?”

“ஆம்... ஒரு மன்னனாகீய நீ தெருவில் வரும்போது, எல்லோரும் உன்னை வணங்க வேண்டும் என்பது முதல், இந்தக் குற்றத்துக்கு இந்தத் தண்டனை என்பது வரை எவ்வளவோ விதிப்பாடுகள் உள்ளனவே... அவற்றைக்கூடவா அறியாதவன் நீ?”
“குருவே! அந்த விதிப்பாடு இங்கே உங்கள் வரையில் எப்படி தடையாக உள்ளன? அதிலும் ஒரு திருப்பெயரைச் சொல்வதற்குத் தடை என்றால் வியப்பாக உள்ளது...”

“இதில் வியக்க எதுவுமில்லை... நானொரு சந்நியாசி. எனக்கென இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியமங்கள் உள்ளன. எனக்கான நியமங்கள் உனக்குப் பொருந்தாது. நீயோ அரசன்.

இப்படி எனக்கிருக்கும் நியமப்படி, வேதம் தெளிந்த - அன்றாடம் வேதத் தொடர்புடைய மாந்தருக்கே, அஷ்டாட்சரத்தை நான்  உபதேசிக் கலாம். அப்படி நான் உபதேசிப்பதை அவர் எக்காரணம் கொண்டும் பிறருக்கு உபதேசிக்கக் கூடாது. குறிப்பாக அஷ்டாட்சர மந்த்ரோபதேசம் என்பது வேதம் கூறுபவர்க்கே. வேதம் கூறும் பிறப்பாளரான பிராமணரிலும்கூட உபநயனம் தரித்திடாத பிரம்மசாரிகளுக்கு உபதேசிக்க விதி இல்லை.

அக்னி வளர்த்து, உபநயனம் தரித்து, அன்றாடம் காயத்ரி மந்திரம் உபாசித்து, நான் கூறிய பஞ்ச சம்ஸ்காரப்படி வைணவ தர்மங்களைப் பேணி நடக்கும் ஒருவருக்கே என்னால் உபதேசிக்க முடியும். அப்போதுதான் அஷ்டாட்சர மந்திரமும் தன் பூரண சக்தியைக் காட்டி அவருக்கு வைகுண்டத்தில் எம்பெருமானிடத்தில் இடமளிக்கும்...”

“சரி.. எனக்கு உபதேசிக்க விதியில்லை என்று கூறிவிட்டீர்.. எதற்காக இப்படி ஒரு கட்டுப்பாடு? இறைநாமம் என்பது எல்லோருக்கும் ஆனதுதானே? எல்லோரும்தானே அவன் மக்கள்?”

அர்த்தம் பொதிந்த இந்தக் கேள்விக்கு விளக்க மாகப் பதில் சொல்லத் தொடங்கினார் நம்பி.

- தொடரும்

-இந்திரா சௌந்தர்ராஜன்

எண்ணெய் ஊறும் சிவலிங்கம்!

ரங்க ராஜ்ஜியம் - 27

யிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், ஆடுதுறையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருநீலக்குடி. இங்கு அம்பிகையே சிவலிங்கத்துக்கு எண்ணெய்க்காப்பு செய்வதாக நம்பிக்கை. இங்குள்ள சிவலிங்கத்தின் மீது எவ்வளவு நல்லெண்ணெய் விட்டாலும், அது முழுவதும் சிவலிங்கத்துக்குள்ளே ஊறி விடுகிறதாம். இந்தக் கோயிலில் அம்பிகை சந்நிதியில் எண்ணெய் வைத்து வழிபட்ட பின்னரே, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர்.