Published:Updated:

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

தெய்வ மனுஷிகள்: பிரண்டி
பிரீமியம் ஸ்டோரி
தெய்வ மனுஷிகள்: பிரண்டி

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

Published:Updated:
தெய்வ மனுஷிகள்: பிரண்டி
பிரீமியம் ஸ்டோரி
தெய்வ மனுஷிகள்: பிரண்டி

ருநூறு பேருக்கும் மேல அந்தக் கூட்டுக் குடும்பத்துல இருந்தாக. தலைமுறை தலைமுறையா ஒத்துமைக்குப் பேர்பெற்ற குடும்பம். எல்லாரும் கடுமையான உழைப்பாளிங்க. ஆயிரக்கணக்குல ஆடு மாடுங்க, காடு கரைன்னு ஏகப்பட்ட சொத்துக. இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு வஞ்சகமில்லாம ஒண்ணா மண்ணா வாழ்ந்தாக. 

அந்தக் குடும்பத்துக்குத் தலைவர் அய்யங் குட்டி. தங்கமான மனுஷன். கணக்குல வலுவா இருக்கற ஒரு கணக்குப்புள்ளயைத் தேடிக்கிட்டிருந்தாரு அவரு.

``பிரான்மலைக்குப் பக்கத்துல, ஆசாரமான ஒரு மனுஷன்... கணக்குல புலியாம். கை நேர்மையும் உண்டாம். ஆளு வெச்சுக் கூட்டியாருவமா”னு கேட்டாரு அய்யங்குட்டியோட தம்பி. ``சரி”ன்னு சொல்லிட்டாரு அய்யங்குட்டி.

ஒருநா காலையில, பஞ்சக்கச்சம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தாரு கணக்குப்புள்ளை. முத பார்வையிலேயே புடிச்சுப்போச்சு அய்யங்குட்டிக்கு. ``என்னவே, கணக்கெழுத கூலி என்ன கேப்பீரு”ன்னு கேட்டாரு.

கணக்குப்புள்ளை சிரிச்சாரு... ``என்ன தருவீகளோ குடுங்கய்யா. ஒரே ஒரு வெசனம் தான். எனக்கொரு தங்கச்சி இருக்கிறா.பேரு பிரண்டி. ஆயி அப்பன் இல்லாத பொண்ணு. அவளுக்கொரு கல்யாணத்தைப் பண்ணி கரையேத்திட்டுத்தான் நான் வாழ்க்கையை அமைச்சுக்கணும். நாங்க ரெண்டு பேரும் தங்கிக்க ஒரு குடிசை குடுத்தியன்னா உங்ககூடவே ஒண்டிக்குவோம்”னாரு.

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

``அதுக்கென்னவோய். இத்தனை மனுஷங்க இருக்கும்போது நீங்கமட்டும் சுமையா என்ன... தயங்காம வாரும். இதோ இந்தப் பொட்டல்லயே குடிசையமைச்சுத் தரச் சொல்றேன்”னு சொல்லிட்டாரு.

நல்லநாள் பாத்து கணக்குப்புள்ள தங்கச்சியோட வந்து சேந்துட்டாரு. பிரண்டி, அண்ணங்காரனுக்கு ஒத்தாசையா இருப்பா. அய்யங்குட்டிக்குப் பாதி வேலை குறைஞ்ச மாதிரி இருந்துச்சு. அந்தப் பெரிய குடும்பத்துல அண்ணனும் தங்கச்சியும் ஒண்ணுக்கொண்ணா ஆகிப்போனாக.

ஒருக்கா, அந்தூரு ஈஸ்வரங்கோயிலு திருவிழா வந்துச்சு. வாலி நாட்டு ராஜா திருவிழாவுக்குத் தலைமை தாங்க வந்தாரு. அய்யங்குட்டியோட முதப் பேத்திக்கு வயது பதினேழு. நல்லா விளைஞ்ச பருத்தி மாதிரி வனப்பா இருப்பா. செவப்பு பட்டுல தாவணி போட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு திரிஞ்சவ ராஜாவோட மகன் பார்வையில விழுந்துட்டா. பய மயங்கிப்போனான்.

திருவிழா முடிஞ்சிருச்சு. திடீர்னு ஒருநாள், குதிரை வண்டியில வந்து இறங்குனாரு ராஜா. அய்யங்குட்டி குடும்பம் திகைச்சுப்போச்சு. சீரு செனத்தியோட பின்னாடி ஏழெட்டுப் பொம்பளைக வேற. அய்யங்குட்டி கும்பிட்ட கைய எடுக்காம அப்படியே வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போனாரு.

“தோ பாருமய்யா அய்யங்குட்டி. உம்ம பேத்தியை எம்புள்ள... அதாம்யா... உங்க இளவரசன்... திருவிழாவுல பாத்துப்புட்டான். அதுல இருந்து, `கட்டுனா அவளைத்தான் கட்டுவேன்’னு நிக்குறான். அவம் விருப்பத்தை நிறைவேத்தி வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இப்பவே நிச்சயம் வெச்சுக்குவோம். கல்யாணத்தை அடுத்தமாசம் வெச்சுக்குவோம்”னாரு ராஜா.

அய்யங்குட்டி வாயடைச்சுப்போனாரு. ராஜாவே வந்து பொண்ணைக்குடுன்னு கேக்குறாரே. தட்டமாட்டாம, ``உங்க சித்தம் ராஜா”ன்னு சொல்லிட்டாரு. பொண்ணைக் கூட்டியாந்து ராஜா குடும்பம் முன்னாடி நிறுத்துனாக. கழுத்து ஒடியற அளவுக்கு நகைகளை அள்ளிப்போட்டா மகாராணி. `இன்னிக்குக் கழிச்சு அடுத்த பத்தாம் நாளு கல்யாணம்’னு நாள் குறிச்சாக.

ராஜா அந்தப்பக்கம் போனாரோ, இல்லையோ, இந்தப்பக்கம் `குய்யோ... முறையோ’னு குதிக்கிறா அய்யங்குட்டி பேத்தி. `அவளுக்கு கூடவே இருக்கிற மாமங்காரன் மேல காதல்.. அவனை விட்டுட்டு வேறொருத்தனையெல்லாம் நினைச்சுக்கூடப் பாக்கமாட்டேன்’னு அழுவுறா புள்ளை. `ராஜாவூட்டு சம்மந்தம். ராணி மாதிரி இருக்கலாம்’னு என்னென்னவோ சமாதானம் செஞ்சு பாத்தாக. எதுக்கும் அவ மசியலே.

“நம்ம  குடும்பத்தில பொண்ணுக்கு விருப்பமில்லாம கல்யாணத்தை நடத்துற பழக்கமில்லை. ஆனா, பொண்ணு கேட்டுப் போயிருக்கிறது ராஜா. இனிமே முடியாதுன்னா விடமாட்டான். மொத்தப் பேரையும் கொன்னு போட்டுருவான். என்ன செய்யலாம்”னு கேட்டாரு அய்யங்குட்டி.

ஆளுக்கொன்னா யோசனை சொன்னாக. இறுதியா ஒரு முடிவுக்கு வந்தாக.  ஒருபக்கம் ராஜாவை ஏமாத்த, கல்யாண வேலை பாக்குற மாதிரி நடிச்சாக. இன்னொருபக்கம், இருந்த பாத்திரம், பண்டம், நகை நட்டெல்லாம் அள்ளி மூட்டையா கட்டுனாக.

கணக்குப்புள்ளைக்கு சந்தேகமாகிப்போச்சு. திடீர்னு இருக்கிற பொருளையெல்லாம் ஏன் மூட்டை மூட்டையாக் கட்டுறாக? அய்யங் குட்டிக்கிட்டே கேட்டுப்புட்டாரு. ``அய்யா ஏதோ திட்டம் போட்டிருக்கீங்கன்னு தெரியுது. என்னன்னு தெரியலே. என்னைய நட்டாத்துல விட்டுட்டுப் போயிறாதீய”ன்னாரு.

அய்யங்குட்டிக்குப் பரிதாபமாப் போச்சு. இப்படியொரு மனுஷனை விட்டுட்டுப் போகக் கூடாதுன்னுட்டு, ``கணக்குப்புள்ளை... எங்க பொண்ணுக்கு ராஜா மகனைக் கட்டிக்கிட விருப்பமில்லை. விருப்பமில்லாம எங்க பொண்ணை பலிகொடுக்க முடியாது. அதான் ராவோட ராவா இந்த நாட்டை விட்டே வெளியேற தயாராகிக்கிட்டிருக்கோம். எங்ககூடவே நீங்களும் உங்க தங்கச்சி பிரண்டியும் வந்திருங்க”ன்னு கூப்பிட்டாரு. கணக்குப்புள்ளை யோசிச்சாலும், ``எங்கேயோ கெடந்த எங்களைக் கூட்டியாந்து, குடும்பத்துல ஒருத்தரா பக்கத்துலயே வெச்சுக்கிட்டிய. உங்களுக்கு ஒரு துயரம்னா நாங்களும் நிப்போம்”னு சொல்லிட்டு, பிரண்டியும் அவ பொருளையெல்லாம் மூட்டை கட்ட ஆரம்பிச்சுட்டா.

நாளைக்குக் கல்யாணம். இன்னிக்கு ராத்திரி பொண்ணுக்கு ராஜா போட்ட நகையெல்லாம் கழற்றி, அவுக வளத்த ரெண்டு நாயிங்க கழுத்துல போட்டாக. வீட்டுக்கு முன்னாடி அதுங்களைக் கட்டிப்போட்டுட்டு, மாடுகளை மட்டும் ஓட்டிக்கிட்டு, ஆளுக்கொரு மூட்டையா தலையில சுமந்துக்கிட்டு வேகுவேகுன்னு உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு நடக்குறாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெய்வ மனுஷிகள்: பிரண்டி

பொழுது விடிஞ்சிருச்சு. அங்கே, பொண்ணைக் கூட்டிக்கிட்டுப்போக மேளதாளத்தோட ராஜா வந்துட்டாரு. வந்து பாத்தா வீடு அடைச்சுக்கெடக்கு. நாயிங்க ரெண்டும் வாசல்ல நின்னு ஊளையிட்டுக்கிட்டு கெடக்குதுக. போட்ட நகையெல்லாம் நாயிங்க கழுத்துல கெடக்கு.

ராஜாவுக்குப் புரிஞ்சுபோச்சு. கண்ணெல்லாம் கோபத்துல செவந்திருச்சு. கூடவந்த படையாளுக வீட்டை உடைச்சு உள்ளே புகுந்து தேடுறாக. நாயிங்க ரெண்டும் மிரண்டு போச்சு. கயித்தை அத்துக்கிட்டு தம் மக்கள் போன திசையில ஓடுதுக.

``எப்பிடியும் அந்த நாயிங்க மோப்பம் புடிச்சுக்கிட்டு அவுக ஆளுகங்கிட்ட போய் சேந்திரும். கூடவே போங்க. எல்லாரையும் வெட்டி அக்னியாத்துல போட்டுட்டு பொண்ணைத் தூக்கிட்டு வந்திருங்க”னு சொல்லிட்டாரு.

தப்பிச்சுப்போன கூட்டம், அக்னியாத்துக் கரையில மலைச்சுப்போய் நிக்குது. தலைக்கு மேல தண்ணி போகுது. அதுவும் கட்டறுத்துப் பாயுது ஆறு. மாடுங்கள பத்தி விட்டாக. அதுங்க முட்டி மோதி அக்கரைக்குப் போயிருச்சுக. ஆளுக யாரும் கால் வைக்க முடியலே.

கரையில ஒரு பெரிய மரம் நிக்குது. பிரண்டிதான் அந்த யோசனையைச் சொன்னா, ``இந்த மரத்தை வெட்டி இக்கரைக்கும் அக்கரைக்குமா போடுங்க”ன்னு. விறுவிறுன்னு வாளும் கோடரியுமா பத்து பயலுக வேலையில இறங்குனானுவ. அடி இக்கரையிலயும் நுனி அக்கரையிலயுமா பொத்தடின்னு விழுந்துச்சு மரம். முதல்ல சிண்டு சிறுசுகளையெல்லாம் தூக்கி விட்டாக. அடுத்து பொம்பளைக போனாக.

பிரண்டி மட்டும் கரையிலயே நின்னா. அய்யங்குட்டி, ``ஏந்தாயி... ஆபத்து வர்றதுக்கு முன்னாடி நீயும் அக்கரைக்குப் போயிரு. அதுக்குப்பெறவு ஆம்பளைகள்லாம் ஏறி வாரோம்”னாரு. பிரண்டி கேட்கலே. ``இல்லேய்யா... நீங்கள்லாம் போங்க பின்னாடி வர்றேன்”னுட்டா.

அதோ கண்ணுக்கு எட்டுன தூரத்துல மோப்பம் புடிச்சுக்கிட்டு ஓடியாருதுக நாயிங்க. பின்னாடி தூசியைக் கிளறிவிட்டு வரி வரியா வந்துக்கிட்டிருக்கானுவ ராஜா ஆளுங்க. அய்யங்குட்டி மரத்துல ஏறி அக்கரைக்குப் போயிட்டாரு.

கணக்குப்புள்ளை ``பிரண்டி வா, வா''ன்னு கூப்பிடுறாரு... ``அண்ணே... நீ முதல்ல போண்ணே”ன்னு அவரையும் அனுப்பி வெச்சுட்டா பிரண்டி.

வீரனுங்க கைக்கு எட்டுற தூரத்துக்கு வந்துட்டானுங்க. அக்கரைக்குப் போக, தோதா கெடக்கு மரம். நொடிப்பொழுதுல எல்லாரையும் வெட்டிப்போட்டுட்டு பொண்ணைத் தூக்கிட்டுப் போயிருவானுவ. பிரண்டி கீழே கெடந்த வாளை எடுத்தா... இடைக்குறுக்கா கெடக்குற மரத்துல ஏறி பாதியில நின்னுக்கிட்டா. விறுவிறுன்னு அறுத்தா பாருங்க மரத்தை. இக்கரையில நிக்குற ஆட்கள் திகைச்சுப்போயிட்டாக.

``தாயி... என்ன காரியம் செய்யறே... மரத்தை அறுத்தா நீ ஆத்துக்குள்ள விழுந்துருவே... ஆத்தோட வேகத்துல யாராலயும் காப்பாத்த முடியாது தாயி. எது நடந்தாலும் நடக்கட்டும். இந்தக் காரியத்தைச் செய்யாதே”னு கத்துறாரு அய்யங்குட்டி. கணக்குப்புள்ளையும் கதறி அழுவுறாரு... ``பிரண்டி... ஓடியாந்துருமா...”னு அழைக்கிறாரு.

``எந்த ஆதரவும் இல்லாம நின்ன நமக்கு இருக்க இடம் கொடுத்து சோறு போட்டு காப்பாத்தினவுக. அவுக யாருக்கும் சேதாரம் வரக் கூடாது”னு சொல்லிக்கிட்டே வெட்டி வீழ்த்திட்டா பாதி மரத்தை. கூடவே அவளும் விழ, அள்ளிச்சுருட்டிக்கிட்டுப் போயிருச்சு பாழாப்போன ஆத்து வெள்ளம்.

பொண்ணைத் தூக்கவந்த வீரனுங்க, அக்கரையில இருந்து இக்கரைக்கு வரமுடியாம அப்படியே திரும்பிட்டானுவ.  தங்கச்சியைப் பறிகொடுத்த சோகத்துல, அன்னந்தண்ணி சாப்பிடலே கணக்குப்புள்ளை. அஞ்சாறு நாள்லயே செத்துப்போனாரு.

`கணக்குப்புள்ளையும் பிரண்டியும் தங்கள் குலத்தைக் காக்கவந்த தெய்வங்கள்’னு அந்த மக்களுக்குப் புரிஞ்சுபோச்சு. ரெண்டு பேருக்கும் பச்சரிசி மாவுல உருண்டை பிடிச்சு வெச்சு வணங்க ஆரம்பிச்சாக. அப்படியே வழிவழியா அந்த வழிபாடு வளர்ந்துச்சு.

பிரண்டியும் அவுக அண்ணன் கணக்குப்புள்ளையும் சிவகங்கைக்குப் பக்கத்துல செல்லியம்பட்டிங்கிற ஊர்ல இப்போ குடியிருக்காக.  இன்னிக்கும் அந்த மக்களோட மரபாளுவ ரெண்டு பேருக்கும் மரியாதை பண்ணிட்டுப் போறாக. ஊருக்குத் தெக்கால எல்லையில இருக்கு அவுக வீடு. கணக்குப்புள்ளையை இப்போ அந்தூரு மக்கள், ‘அய்யனாரு’னு கூப்பிடுறாக. பிரண்டி அவருக்குப் பக்கத்துல கனிவா உக்காந்திருக்கா.

இப்பவும் கஷ்டம்னு யாரு போனாலும் அதைப் போக்கி அனுப்புறாக அண்ணனும் தங்கச்சியும்!

-வெ.நீலகண்டன்

படம்: எஸ்.சாய் தர்மராஜ்

ஓவியம்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism