மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 25

அன்பே தவம் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 25

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 25

`ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’ என்பார்கள். சொல்லின் மகத்துவம் அப்படி. அதுதான் முதல் சந்திப்பு... கேட்ட கேள்விக்கு அனுமன் தந்த பதிலைக் கண்டு வியந்துபோனார் ராமன். சொல்லப்படும் செய்தி எளிமையாக, இனிமையாக, உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தது அனுமனின் பதில். அதற்காக ராமன் தந்த பட்டம், ‘யார்கொல் இச்சொல்லின் செல்வன்?’  

சீதையைத் தேடுவதற்கு அவரை அனுப்பினார் ராமன். இலங்கை, அசோகவனத்தில் சீதையைக் கண்டுவிட்டார் அனுமன். கண்டதைச் சொல்வதற்கு ராமனிடம் வந்தார். `சீதை எங்கிருக்கிறாள்?’ ராமனின் இதயத் துடிப்பு உச்சத்தில் இருந்த தருணம் அது. தேர்வு முடிவு, தேர்தல் முடிவு... எதுவாக இருந்தாலும் பதற்றத்தை, பரபரப்பை ஏற்படுத்தாமல் வெற்றிச் செய்தியை அறிவிக்க வேண்டும். அனுமன், ‘கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றார். `கற்பினுக்கு அணியாக சீதையைக் கண்டேன்’ என்ற மகிழ்ச்சிச் செய்தியை விவேகமாகச் சொன்னார். அதனால்தான் அவர், ‘சொல்லின் செல்வன்.’

இந்தத் திறமையை, பக்குவத்தைத்தான் இன்றைக்கு, `தகவல் பரிமாற்றத்திறன்’ (Communication Skill) என்கிறோம். விற்பனை, ஒரு பொருளை சந்தைப்படுத்துதல், நிர்வாகம், அரசியல்... என எந்தத் துறையாக இருந்தாலும் தகவல் பரிமாற்றத்திறன் இருந்தால்தான் உயர முடியும். பேச்சாற்றலால் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தவர்களின் வரலாற்றை நாம் அறிவோம். பொது வாழ்க்கை, தொழில் முன்னேற்றம் போன்றவற்றுக்கு மட்டுமல்ல... தனிமனித வாழ்க்கைக்கும் இது அவசியமானது. அன்புக்கு இன்சொல்லும் ஓர் அடிப்படை. யாரிடம், என்ன பேச வேண்டும்... எப்படிப் பேச வேண்டும்... இருவர் சந்திக்கும்போது யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்ப தெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்திருக்க வேண்டும்.

அன்பே தவம் - 25

`சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’ என்கிறார் திருவள்ளுவர்.


ஒரு சொல்லைச் சொன்னால், அதற்குப் பதிலாக வேறு எந்தச் சொல்லையும் போட முடியாததாக அது இருக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக, வெல்லும் சொல்லாக,  இனிமையானதாக இருக்க வேண்டும்.

நியூயார்க் நகரம். பரபரப்பான காலை நேரம். சாலையோரமாக ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஓர் அட்டை. அதில், `நான் பார்வையற்றவன். தயவுசெய்து உதவி செய்யுங்கள்!’ (I’m Blind. Please Help) என்று எழுதியிருந்தது. அதற்கு அருகே ஒரு காலித் தகரக்கிண்ணம். ஆயிரக் கணக்கானவர்கள் அவரைக் கடந்து போனார்கள். ஆனால் பாத்திரத்தில் ஒரு சல்லிக்காசுகூட விழவில்லை.

அந்தப் பக்கமாக, விளம்பரத் துறையில் பணியாற்றும் ஒருவர் வந்தார். அவர் பெயர் டேவிட் ஓகில்வி (David Ogilvy). அந்த மாற்றுத்திறனாளியையும் அவர் பக்கத்திலிருந்த அறிவிப்பையும் பார்த்தார். தன் கோட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு மார்க்கர் பேனாவை எடுத்தார். அந்த அட்டையில் மேலும் சில வார்த்தைகளை எழுதினார். போய்விட்டார். சற்று நேரத்திலேயே, காலிப் பாத்திரம் நோட்டுகளாலும் சில்லறைகளாலும் நிரம்பி வழிந்தது. அட்டையில் மாற்றி எழுதப்பட்ட வாசகம் இதுதான். `இது வசந்தகாலம். நான் பார்வையற்றவன்.’ (It’s Spring and I’m Blind.). இந்தச் சொல்லாற்றல் காரணமாகத்தான் ஓகில்வி, `விளம்பரங்களின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

உலகத்தை உலுக்கிய உரைகள் ஏராளம். அவற்றில் ஒன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றியது. எல்லோரும், `இவர் என்ன பேசி விடப்போகிறார்?’ என்று அலட்சியமாக நினைத்த நேரத்தில், அவர் ஆற்றிய உரை, `இந்தியாவின் ஆன்மிகம் எது?’ என்பதை உலகுக்கு அடையாளம் காட்டியது.

‘என் அருமை சகோதர, சகோதரிகளே...’ என்று தொடங்கியது அவர் முழக்கம். `பிற மதக் கொள்கைகளை மறுக்காமல் மதித்தல், அவற்றை எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளல் என்ற மேலான பண்புகளை உலகத்துக்கு போதித்த நாட்டைச் சார்ந்தவன் நான்.  உலகின் அனைத்து நாடுகளாலும் மதங்களாலும் கொடுமைக்குள்ளாகி விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்குப்  புகலிடம் தந்து உதவிய பெருமைக்குரிய நாட்டைச் சேர்ந்தவன் நான்...’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். 

`இந்த அவை கூடியபோது முழங்கிய மணியோசை, மதவெறிக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் பயணம் செய்யும் மனங்களில் நிலவும் இரக்கமற்ற உணர்வுகளுக்கும் சாவு மணியாக மாறும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்...’ என்று அவர் தன் உரையை நிறைவுசெய்ததும், ஆன்மிக மாளிகையின் சாளரத்தின் வழியாக, இதுவரை அல்லாத புதிய சமரசக் காற்று உலகமெங்கும் வீசத் தொடங்கியது.

ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த தருணம். அமெரிக்க விடுதலைப்போரில் உயிரிழந்த வீரர்களின் கல்லறைகளுக்கு மரியாதை செலுத்த கெட்டிஸ்பர்க் (Gettysburg) நகருக்கு வந்தார்.  நான்கு லட்சம் பேர் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் ரத்தினச் சுருக்கமாக, பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஒரு வாசகத்தைப் பிரகடனம் செய்தார்...  `மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களின் அரசாங்கம்.’ இன்றைக்கும் குடியாட்சித் தத்துவத்தின் பொருளாக இது கருதப்படுகிறது. 

அன்பே தவம் - 25

ஒரு பள்ளி வகுப்பறையில் ஒரு வாசகம் இப்படி எழுதிவைக்கப்பட்டிருந்தது... `சிரியுங்கள், கொட்டமடியுங்கள். உங்களுடன் சேர்ந்து வகுப்பே சிரிக்கும். ஆனால், தலைமையாசிரியர் அறைக்குப் போகப்போவது நீங்கள் மட்டும்தான்.’ இதைப் படித்த பிறகு எந்த மாணவனாவது சேட்டை செய்வானா... வார்த்தைகளின் மகத்துவம் அப்படி.

‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.’

என்பதற்கு இலக்கணமாக உரை நிகழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா. காந்தியடிகள் மறைந்துவிட்டார். அண்ணாவிடம், காந்தியடி களுக்கு இரங்கல் உரையைக் கேட்கிறார்கள். `ஒரு நாட்டின் ஒரு தலைமுறையில் வீரர் ஒருவர் தோன்றி, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தருவார். அடுத்த தலைமுறையில் சட்ட நிபுணர் ஒருவர் தோன்றி, நல்லாட்சி நிறுவுவார். மூன்றாம் தலைமுறையில் விவேகி ஒருவர் தோன்றி, நாட்டு மக்களை நல்லவர்களாக ஆக்குவார். மூன்று தலைமுறைகளில், மூன்று  வெவ்வேறு மனிதர்கள் செய்யவேண்டியதை ஒரே தலைமுறையில் ஒரு மனிதர் செய்து காட்டினார் என்றால் அவர்தான் காந்தி...’ என்றார் அண்ணா.

சில நேரங்களில், அண்ணாவுக்கு மேடையில்தான் தலைப்பு தரப்படும். அடுத்த கணமே அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்து விடுவார். அப்படி, ஒரு கல்லூரியில் அவருக்குத் தரப்பட்ட தலைப்பு ‘நல்ல தீர்ப்பு.’

“இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நான் புறப்பட்டபோது வீட்டில் என் மனைவி உடல் நலமில்லாமல் இருந்தார். `சென்னைக்கு நீங்கள் போக வேண்டாம்’ என்று கூறினார். அவர் உடல்நலமில்லாமல் துன்பப்பட்டதால், என்னை சென்னைக்குப் போக வேண்டாம் என்று சொன்னது அவரது மனநிலைக்கு ஏற்ற நல்ல தீர்ப்பு.

அவர் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், `இரவு திரும்ப வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு, இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பின்பற்றியதால் இங்கு வந்திருக்கிறேன். இது எனக்கு நானே வழங்கிக்கொண்ட நல்ல தீர்ப்பு.

புகைவண்டி நிலையத்துக்கு, வண்டி வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வந்துவிட்டேன். எனக்கு முன்பு காத்திருந்தவர்கள், `பாழாய்ப்போன ரயில் இன்னமும் வரவில்லை’ என்று சபித்துக் கொண்டிருந்தார்கள். இது, ரயிலின் தாமதத்துக்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பு. அவர்களுக்கு அது நல்ல தீர்ப்பு.

ரயில் வந்தது. வந்தவுடன், பலர் பற்றிக்கொண்டார்கள். சிலர் தொற்றிக்கொ ண்டார்கள். சிலர் இடம் கிடைக்காமல் நின்றார்கள். சிலர் ரயிலை விட்டுவிட்டார்கள். ரயிலை விட்டுவிட்டவர்கள்,  `பாழாய்ப்போன ரயில் நம்மை விட்டுவிட்டுப் போகிறதே’ என்று சபித்தார்கள். இது தங்கள்  இயலாமைக்கு அவர்கள் வழங்கிய நல்ல தீர்ப்பு.

இந்தக் கல்லூரிக்கு வந்தபோது, `வாயிற்படியில்கூடக் கால் வைக்கக் கூடாது’ என்று கல்லூரி நிர்வாகம் தடுத்தது. இது, கல்லூரி நிர்வாகம் என்மீது வைத்திருக்கும் மதிப்பீட்டுக்கு வழங்கிய நல்ல தீர்ப்பு.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் இன்றைக்கு நான் மாணவர்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். மேடையில் நான் பேசித்தான் தீர வேண்டும் என்று மாணவர்கள் போராடி, இங்கே என்னைப் பேசவைத்திருக்கிறார்கள். இது மாணவர்கள் என் பேச்சுக்கு வழங்கிய நல்ல தீர்ப்பு...”

`கம்பனடிப்பொடி’ சா.கணேசன், காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கியவர். அந்த அமைப்பு, மேடைப் பேச்சைப் பொறுத்தவரை நேரவரையறையில் கண்டிப்பாக இருக்கும். குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் நிகழ்ச்சி முடியும். ஒருமுறை ஜீவா அங்கே உரையாற்றினார். மேடையில் சிவப்பு விளக்கு எரிந்தால், பேச்சாளர் பேச்சை நிறுத்திவிட வேண்டும்.  அன்று ஜீவா கம்பனின் ராமகாதையை அற்புதமாகப் பேசினார். உரையைக் கேட்டு மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள். சிவப்பு விளக்கு எரிந்தபோதும் ஜீவா பேசிக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும்,  கம்பனடிப்பொடியாரை யாரோ கேட்டார்கள்... `எல்லோருக்கும் நேர வரையறையில் கண்டிப்பைக் காட்டும் நீங்கள், சிவப்பு விளக்கு எரிந்தபோதும், ஜீவாவை மட்டும் ஏன் பேச அனுமதித்தீர்கள்?’

கம்பனடிப்பொடியார் சொன்னார்... `இங்கு ஜீவாவா பேசினார்...  கம்பனே பேசினார்.’

நாம் இளைய சன்னிதானமாகப் பொறுப்பேற்றிருந்த தருணம். கடியாபட்டி கிராமத்தில் மெய்யப்பனாரின் மணிவிழா. அதற்கு மகாசன்னிதானம் நம்மை அனுப்பிவைத்தார்கள். பதிப்புத்துறையில் முத்திரை பதித்தவர், மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மெய்யப்பனார். மணிவிழாவில் தமிழறிஞர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இளைய சன்னிதானமாக, பொதுவாழ்வின் முதல் கன்னிப் பேச்சு அது. நாம் பேசுவதற்கு முன்னர் அரங்கத்தில் அமர்ந்துகொண்டு, மூன்று விரல்களைக் காட்டினார் மெய்யப்பனார். அதாவது, `மூன்று மணித்துளிகளில் வாழ்த்துரை வழங்குங்கள்’ என்று பொருள். ஆனால், அந்த விரல்கள் அப்படியே இரண்டாகி, ஒன்றில் நின்றது. ஐந்து நிமிடங்களில் நாம் உரையை முடித்தோம்.  நம் உருக்கமான உரையை ஏற்றதன் அடையாளமாக அரங்கமே அமைதியில் உறைந்திருந்தது. காலச்சக்கரம் சுழன்றோடியது. 

நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யப்பனாரின் தந்தை குங்கிலியம் சண்முகனாரின் 80-ஆவது சதாபிஷேக விழா. `ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் தனி உரையாற்ற வேண்டும்’ என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார் மெய்யப்பனார். நாம் எவ்வளவு நேரம் பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதல்ல முக்கியம். சமூகத்துக்கு என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

`உண்மையைப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். அன்பாகப் பேசுங்கள்’ என்கிறது மகாபாரதம். `பேசுவதைவிட, பேசாமல் இருப்பதே மேலானது.  பேசித்தான் தீர வேண்டும் எனில், உண்மையை மட்டுமே பேச வேண்டும். உண்மையைப் பேசும்போதும் அன்பாகப் பேச வேண்டும்.  உண்மையாகவும், அன்பாகவும், தர்ம நியாயங்களுக்குக் கட்டுப்பட்டும் நாம் பேசினால் மண்ணில் அனைவரும் நல்லவண்ணம் வாழலாம்’ என்கிறது மகாபாரதம்.

இதைத்தான் கன்ஃபூஷியஸ், `பேசுவதற்குத் தகுதியானவர் என்று தெரிந்தும், நீ பேசாமல் இருந்துவிட்டால் ஒரு நல்ல மனிதரை இழந்துவிடுவாய். பேசுவதற்குத் தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசிவிட்டால் உன் வார்த்தைகளை இழந்துவிடுவாய்.  அறிவுள்ளவர்கள், மனிதர்களையும் இழப்ப தில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை’ என்றார். எனவே, உண்மையைப் பேசுவோம்; அன்பாகப் பேசுவோம்!

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்

அடிகளாரைக் கேளுங்கள்

அன்பே தவம் - 25

குன்றக்குடி ஆதீனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் சமூகப் பணிகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும்..?

- தில்லை, திருவாரூர்


“குன்றக்குடி ஆதீனம் ஆன்மிகப் பணிகள், கல்விப் பணிகள், சாதி-சமய நல்லிணக்கப் பணிகள், தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள், கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து ஆற்றிவருகிறது. விதைத்தவை, விளைச்சல் கண்டிருக்கின்றனவா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.”

மொபைல், ஐபோன் போன்ற நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன?

- கலாதரன், சித்தன்னவாசல்

“நெருப்பு, அடுப்பிலும் விளக்கிலும் எரியும்போது ஆக்க சக்தி.  அதே நெருப்பு கூரையில் பற்றினால் அழிவு சக்தி. அதைப்போல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நன்மைக்குப் பயன்படுத்தினால் நன்மையே.  தீமைக்குப் பயன்படுத்தினால் தீமையே. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா.’ ”

பழைமையான கோயில்கள் அநேகம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலையில் புதிய கோயில்கள் கட்டுவது தேவையா?

- தமிழமுது, பட்டுக்கோட்டை

“பழைமையான கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும்.  பாதுகாக்கப்பட வேண்டும்.  அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.”

கடவுள் இருக்கிறாரா... இருந்தால் இன்னும் எப்படி அபலைகளின் அழுகுரல்களைக் கேட்டுக்கொண்டு கல்லாக இருக்கிறார்... அவரின் நியாயத்துக்காக எத்தனை காலம் மக்கள் காத்திருக்க வேண்டும்?

- பிரதீபா, நாகூர்


“கடவுள் தன் கருவியாக நம்மைப் படைத்திருக்கிறார். நியாயங்களுக்காகப் போராடுங்கள். கடவுள் துணைநிற்பார்.”
 
ஆலயங்களில், `சிறப்பு தரிசனம்’ என்ற பெயரில் செல்வந்தர்களையும் முக்கியஸ்தர்களையும் ஸ்வாமிக்கு அருகிலேயே நிற்கவைத்து வணங்க வைக்கிறார்கள். ஆனால், சாதாரண ஏழைகள் வரிசையில் அதுவும் தொலைவில் நின்று மங்கலான வெளிச்சத்தில் இறைவனை தரிசிக்கவேண்டியிருக்கிறது. இறைவனின் சந்நிதியில் இத்தகைய வித்தியாசங்கள் தேவையா?

- சந்தியா, மதுரை

“ஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம்.”

இன்னும்கூடத் தமிழ் வழிபாட்டுக்காக ஆலயங்களில் போராட வேண்டியுள்ளதே?

- மகரன், நாகர்கோவில்


“தமிழ் வழிபாடு மக்களின் கையில் உள்ளது. மக்கள் விரும்பினால் நிறைவேறும்.”

அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.