மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 27

சிவமகுடம் - பாகம் 2 - 27
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 27

சிவமகுடம் - பாகம் 2 - 27

சிவமகுடம் - பாகம் 2 - 27

சிவன் திருநீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமாதேவியை நாயகியாக்கி, மாபெரும் காவியத்தைச் சிருஷ்டிக்க ஆயத்தமாகிவிட்டிருந்தது காலம். அதன்பொருட்டு மாமதுரையைக் களமாக்கி, மாமன்னரையும், பேரமைச்சர் முதலானோரையும், தேவியாரின் சத்ரு - மித்ருக்களையும் கருவிகளாக்கிக் களமிறக்கிவிட்டிருந்தது.

ஆதியந்தம் இல்லாது நீளும் தனது இயக்கத்தின் சிறு பகுதியாய் இப்படியான ஒரு சித்திரத்தைத் தீட்டாமல் காலம் தவிர்த்திருந்தால், இன்றளவும் பார்போற்ற திகழும் மாமதுரையின் வரலாறு, வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். அருளுலகம் போற்றும் அறுபத்துமூவரில், அடியார்கள் மூவரின் திருக் கதைகளும் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்!

சிவமகுடம் - பாகம் 2 - 27

அதுமட்டுமா?

`இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல்கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின் - நிலைவிளம்பக்
கொங்கை சுரந்த கோமகளோ சம்பந்தா
இங்கார்சொல் எனக்கு’
- என்றெல்லாம் பிற்காலப் புலவர்கள், பாண்டிமாதேவியாம் மங்கையர்க்கரசியாரை அன்னை உமையவளோடு ஒப்பிட்டுப் போற்றுவதற்கும் வாய்ப்பில்லாது போயிருக்கும்.

காலம் கதை செய்தது; இறையின் கருணை அதற்கு வித்திட்டது. ஆம்! தாம் செங்கோல் செலுத்திய சிவராஜதானியை - மகிமைமிகு மாமதுரையை, பாருள்ளளவும் சீர்பெற்றுத் திகழச்செய்ய சித்தம் கொண்டது சிவம்.

சிவசித்தத்தைச் செயல்படுத்தும்விதமாக மதுரையின் சரித்திர அத்தியாயங்களை எழுதத் தொடங்கியிருந்தது காலம்.

‘‘அம்மையே! `பூங்கமலத்துக்கு ஆபத்து’ என்ற வாக்கியத்துக்கு என்ன பொருள்... கமலம் என்று எதைக் குறிப்பிட்டுள்ளார்கள்?’’

``சிவராஜதானியை!’’

இளங்குமரனின் கேள்விக்கு, பாண்டிமா தேவியாரிடம் இருந்து சீற்றத்துடன் கூடிய முழக்கமாய் இப்படியொரு பதில் வெளிப்பட்டதும் அதிர்ச்சிக்கு ஆளானான் இளங்குமரன். ஆனாலும் மறுகணமே அந்த அதிர்ச்சி அடங்கி பெரும் ஆவேசம் வெடித்தது அவனுக்குள்.

‘‘ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள்...’’ என்றான் சீற்றத்துடன்.

‘‘எந்த விஷயத்தை இளங்குமரா?’’

சிவமகுடம் - பாகம் 2 - 27

‘‘சிவராஜதானியாம் நம் மதுரைக்குக் கன்னீசபுரம் என்றும் ஒரு திருப்பெயர் உண்டு அல்லவா?’’

‘‘ஆமாம்! அதற்கென்ன...’’

‘‘தாயே! சிவம் ஆண்டதால் மதுரை சிவராஜதானி ஆயிற்று. அதேபோல், அங்கயற்கண்ணியாம் தடாதகை பிராட்டியின் தேசம் என்பதால், இதற்கு கன்னீசபுரம் என்றும் திருப்பெயர்... அப்படித்தானே?’’

வாய்மொழியாய்ப் பதில் சொல்லாமல் சிரம் அசைத்து அவன் கருத்தை ஆமோதித்தார் பாண்டிமாதேவியார். இளங்குமரன் தொடர்ந்தான்.

‘‘மண்ணில் எண் திசைகளையும் வென்று விண்ணையும் பதம்பார்க்க படைசெலுத்திய அந்த அங்கயற்கண்ணி, இதோ மங்கையர்க்கரசியராய் உருக்கொண்டு இன்றும் மதுரையைக் காத்து நிற்கிறாள் எனும் விஷயத்தைப் பகைவர்கள் மிக வசதியாய் மறந்துவிட்டார்கள் தாயே...’’

``இளங்குமரா!’’

தனது பேச்சை மேலும் தொடரப்போன இளங்குமரனைக் கண்டிப்பு மிகுந்த தேவியாரின் குரல் கட்டிப்போட்டது.

`‘என்ன பேசுகிறாய் இளங்குமரா? அந்த மரகதவல்லி குடியிருக்கும் கோயில் மண்டபத்துக் கற்றூணுக்குச் சமமாவோமா நாம்...’’

‘‘இல்லை தாயே... நான் சொல்ல வந்தது...’’

‘‘போதும் நிறுத்து. நம்மை நாமே மிகைப்படுத்தி மதிப்பிடுவது, அலட்சியத்தைத் தலைதூக்கச் செய்யுமே தவிர, ஒருபோதும் லட்சியத்துக்குக் கைகொடுக்காது. இன்னொரு விஷயத்தையும் நன்றாகக் கவனத்தில்கொள். எதிரிகளை எப்போதும் குறைத்து மதிப்பிடாதே...’’

‘‘மன்னிக்கவும் தாயே! தாங்கள் என்னைக் கண்டித்து அடக்கிவிடலாம். ஆனால், பாண்டிய பிரஜைகள் அனைவரது மனதிலும் அந்த மீனாட்சியம்மையின் அம்சமாகவே தாங்கள் வரிக்கப்பட்டிருக்கிறீர்கள். இதை எவரும் மறுக்க இயலாது. தங்களின் கண்ணசைவு போதும்... நம் மக்களும் வீரர்களும் எதிரிகளுக்கு எதிராக எழுச்சி கொள்ள! கட்டளையிடுங்கள்...’’

இளங்குமரன் ஆவேசமாகப் பேசப்பேச... அவன் உள்ளக்கிடக்கையையும், தன்னுள் கொதித்துக்கொண்டிருக்கும் கோப உணர்ச்சியை பெரிதும் அடக்கமுயன்று அதில் அவன் தோற்றுக் கொண்டிருப்பதையும் தெள்ளத்தெளிவாக உணரமுடிந்தது பேரரசியாருக்கு.

அவன் சீற்றத்தைத் தணிக்க நினைத்தார். ஆகவே, தன் முகத்தில் கனிவை வரவழைத்துக்கொண்டு, இதழோரப் புன்னகையோடு இளங்குமரனை நெருங்கி ஆசிகூறும் பாவனையில் அவன் சிரத்தில் கை வைத்து, ‘‘குழந்தாய் அமைதி கொள். ஆவேசத்தை மிச்சம் வை. களத்தில் காட்டு’’ என்றார். பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறு பேச்சை அடக்கிய இளங்குமரன் ஒருவாறு ஆசுவாசம் அடைந்தான். அத்துடன், அன்னையின் ஆசியை ஏற்கும்விதம் முழந்தாளிட்டு சிரவணக்கமும் செய்து எழுந்தான். பாண்டிமாதேவியார் தொடர்ந்தார்.

‘‘இளங்குமரா... இப்போது நாம் இருவேறு எதிரிகளை எதிர்கொள்ளப் போகிறோம்...’’

‘‘இருவேறு எதிரிகளா..? ஒருவன் சேரன். அது எல்லோரும் அறிந்த செய்தி. மற்றொருவன்?’’

‘‘உள்நாட்டில் உலவும் வேறு பகைவர்கள்! இடையில் புகுந்து சில நூற்றாண்டுகளாக தென்னகத்தை ஆண்டவர்கள். மாமன்னன் கடுங்கோன் எனும் சூறாவளிக்கு இறையாகிச் சிதறியவர்கள். அடுத்தடுத்து தென்னவர்களாம் அவளிசூளாமணி, செழியன்சேந்தன் ஆகியோர் காலத்திலும் தலையெடுக்க முடியாமல் துவண்ட வர்கள். இப்போது, நம் மாமன்னரின் ஆட்சியை அசைத்துப்பார்க்கத் திட்டமிடுகிறார்கள். தற்போது, சேரனின் போர் நகர்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்...’’

சிவமகுடம் - பாகம் 2 - 27

‘‘அவர்கள் எந்தத் தரப்பினர் என்று ஓரளவு புரிகிறது தாயே. எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?’’

‘‘பகைவர்கள் இரு தரப்பு அல்லவா? ஆகவே, அவர்களைச் சமாளிக்க நம் தரப்பிலும் இருவேறு படைகள் தயாராகவேண்டும்...’’

‘‘புரியவில்லை...’’

‘‘பகைவரின் புலனாய்வுகளுக்குப் புலப்படும் படை ஒன்று; அது பாண்டிய சைன்னியம். அவர்களுக்குப் புலப்படாத படை ஒன்று; அது, சோழச் சைன்னியம்!’’

‘‘என்ன... சோழச் சைன்னியமா...?’’

பேரதிர்ச்சியோடு கேட்டான் இளங்குமரன்! அவன், பாண்டியப் பேரரசியார் சொன்ன, உள்ளம் திடுக்கிடும் தகவலைச் செவிமடுத்து, ஏறக்குறைய மயங்கிவிழும் நிலைக்கு ஆளானான் என்றே சொல்லவேண்டும்!

‘‘தாயே... இது மாமன்னருக்குத் தெரியுமா? தற்போது சோழச் சைன்னியம் உறைந்திருப்பது எங்கே?’’

பேரதிர்ச்சியில் பேச நா எழவில்லை என்றாலும், கடும் பிரயத்தனத்துடன் திக்கித்திணறியபடி கேட்ட இளங்குமரன், மகாராணியாரின் பதிலுக்காக அவரின் திருமுகத்தை நோக்கினான். ஆனால் பதில் வேறு திசையிலிருந்து வந்தது!

‘‘சோழ சைன்னியம் எங்கும் பாசறை அமைக்கவில்லை இளங்குமரா. அது வெளிப்படும் தருணத்தில் நீ தெரிந்துகொள்வாய்’’

கம்பீரக்குரலோடு மாளிகையின் அந்த மண்டபத்துக்குள் பிரவேசித்தார் மணி முடிச் சோழர். அந்தத் தருணத்தில் இளங்குமரன் அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை. அத்துடன், எவ்வித முன்னறிவிப்புமின்றி ஓர் அண்டை நாட்டரசன் தலைநகரில் தலைக்காட்டுவதும், அவரின் சைன்னியம் பாண்டிய தேசத்தில் ஒளிந்துறைவதும் விசித்திர விநோதமாக மனதுக்குப்படவே, ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உள்ளுக்குள் குழம்பித் தவித்தான் இளங்குமரன்.

ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்பட்டது அவனுக்கு. எல்லாம் பாண்டிய தேசத்தின் நன்மைக்காகத்தான் என்றாலும், ஒருவகையில் நடப்பது அனைத்தும் அத்துமீறல்களாகவே தோன்றின! சில நாள்களாக மாமன்னர் கூன்பாண்டியரின் ஆளுமையை, அவருடைய ராஜாங்க நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்திருக்கிறான் ஆதலால், `இதற்கெல்லாம் அவர் தரப்பிலான விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக இருக்குமோ’ என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை அவனால்.

குழப்பம், எவ்விதத் தீர்வையும் கணிக்கமுடியாத இயலாமை, முழுத் திட்டத்தையும் மகாராணியார் பகிர்ந்துகொள்ளாததால் உண்டான தவிப்பு ஆகிய அனைத்தும் அகத்தில் எழ, அவையாவும் ஒன்றிணைந்து இளங்குமரனின் திருமுகத்தில் விநோத முகபாவனையை வெளிப்படுத்த,  ஏதோ கேள்வி கேட்க யத்தனித்தவனை நெருங்கி, அவனைக் கையமர்த்தி, அவனிடம் ஓர் ஓலை நறுக்கை ஒப்படைத்தார் மகாராணியார்.

‘‘மாமன்னரிடம் சமர்ப்பித்துவிடு!’’

அந்த ஓலைநறுக்கிலிருந்த இரண்டு வரிகள், இளங்குமரனின் மனதிலிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலை அளித்தன.

அதைச் சுமந்துகொண்டு இளங்குமரன் அந்த மாளிகையிலிருந்து விடைபெற்றுக்கொண்ட அதேநேரம், பரங்குன்றத்தின் குகையொன்றில்... தங்களின் ஆசானிடத்தில், கைகட்டி வாய்ப்பொத்தி நின்று, அவரின் கட்டளைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள் அணுக்கர்கள் இருவர்.

‘அவர்களால்தான் எவ்வளவு ஆபத்துகளைச் சந்திக்கப்போகிறது இந்தக் கூடல்மாநகரம்’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்ட காலம், மெள்ள சொக்கநாதரின் திருக்கோயிலைத் திரும்பிப் பார்த்தது!

சொக்கநாதர் திருச்சந்நிதியில் அந்தத் தென்னாடுடைய சிவனாரின் பரிபூரண அருள் சாந்நித்தியத்தில், சொக்கிப்போய் நின்றிருந்தார் குலச்சிறையார்!

மூவனை மூர்த்தியை மூவாமேனியுடையானை
மூவுலகும் தானே எங்கும் பாவனை
பாவம் அறுப்பான் தன்னை
படி யெழுதலாகாத மங்கை யொடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண்டு அமுத மீந்த தேவனை

நாழிகைகள் கரைவது தெரியாமல் தொழுது கொண்டே இருந்தார் பேரமைச்சர்.

அன்றலர்ந்த தாமரையை அணுகும் வண்டு களாய் அனுதினமும் வந்து அம்மையப்பனின் அருளமுதைப் பெற்றுச் செல்லும் அடியார்கள் வந்து நீங்கிவிட, மெள்ள மெள்ள ஆலயத்தின் அரவம் அடங்கியது. சிற்சிலரே தரிசனத்துக்குக் காத்திருக்க, அர்த்தசாம ஆராதனைக்கான முன்னேற்பாடுகளும் தொடங்கிவிட்டிருந்தன.

அதையொட்டிய ஆராதனை மணிகள் ஒலிக்கத் தொடங்க, அதனால் சலனப்பட்டதுபோன்று,  புராணங்கள் போற்றும் பொற்றாமரைக்குளத்தின் தெள்ளிய நீர்ப்பரப்பில் மெல்லிய சிற்றலைகள்! தொடர்ந்து சிலபல நீர்க்குமிழிகள்! அதேநேரம்... பாண்டிய பேரமைச்சர் அதுவரையிலும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த மணியோசையும் மிகப்பெரிதாய் ஒலிக்கத் தொடங்கியது!

- மகுடம் சூடுவோம்... 

-ஆலவாய் ஆதிரையான்

ஓவியங்கள்: ஸ்யாம்