Published:Updated:

மகாசிவராத்திரி... நான்கு கால பூஜைகள் செய்யும் முறை... நற்பலன்கள்!

மகாசிவராத்திரி... நான்கு கால பூஜைகள் செய்யும் முறை...  நற்பலன்கள்!
மகாசிவராத்திரி... நான்கு கால பூஜைகள் செய்யும் முறை... நற்பலன்கள்!

சிவராத்திரி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சிவபெருமான் அன்பே உருவானவர். அடியார்க்கு எளியன். எளிய மனிதர்களை நாடி அருள்பாலிக்கும் அருளாளர். சக ஜீவராசிகளிடத்தும் அன்பு பாராட்டி அருள் செய்பவர்.

ரவு இந்த உலகின் ஜீவராசிகள் எல்லாம் ஓய்வெடுக்கும் நேரம். இரவில் பொதுவாக ஆலயம் தொழுதலும் வழிபாடும் ஆகம விதிப்படிக் கிடையாது. ஆனால், ஒரு சில இரவுகளை நம் முன்னோர் புண்ணிய இரவுகளாகக் குறித்திருக்கிறார்கள். அந்த நாள்களில் மட்டும் ஆலயத்தில் இறைவழிபாடு நடத்த அனுமதி உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமானவை சிவராத்திரியும் வைகுண்ட ஏகாதசியும். உலக வாழ்விலிருந்து விலகி நின்று இறைச் சிந்தனை குறித்த விழிப்பு நிலையை அடைவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் இந்த நாள்கள்.

`துஞ்சுதல் போலும் சாக்காடு' என்கிறார் வள்ளுவர். மரணமில்லாப் பெருவாழ்வாகிய ஈசனின் திருவடிகளை அடைய ஒருநாள் உறங்காமல் இருப்பதற்கு ஒரு வழி மகா சிவராத்திரி வழிபாடுதான்.  

சிவராத்திரி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சிவபெருமான் அன்பே உருவானவர். அடியார்க்கு எளியன். எளிய மனிதர்களை நாடி அருள்பாலிக்கும் அருளாளர். சக ஜீவராசிகளிடத்தும் அன்பு பாராட்டி அருள் செய்பவர். தன்னையறியாமல் சிவராத்திரி அன்று இரவு வில்வ இலைகளை அர்ச்சித்த குரங்கு ராஜயோகம் கொண்டது. மறுபிறப்பில் அரசனாகப் பிறந்தது. அரசனானதும் கிடைக்கும் சுக வாழ்வில் இறைவனை மறந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் அந்தக் குரங்கு தனக்குக் குரங்கு முகமே அடுத்த பிறவியிலும் என வேண்டிக் கேட்டுக்கொண்டது. அந்தக் குரங்குதான் முசுகுந்தச் சக்கரவர்த்தி.  

திருவைகாவூர் என்றொரு புண்ணிய தலம். இங்கு இறைவனின் சந்நிதிக்கு  துவாரபாலகர்கள் பிரம்மாவும் விஷ்ணுவும். வழக்கமாக நந்திதேவர் சிவபெருமானை நோக்கியபடி காட்சி தருவார். திருவைகாவூரிலோ எதிர்த் திசையில் கோயிலின் வாசலை நோக்கிப் படுத்திருப்பார். இதற்கும் மகா சிவராத்திரிக்கும் தொடர்பு உண்டு. 

இந்தத் தலத்தில்தான் புலிக்கு பயந்து வேடன் ஒருவன் மரத்தில் ஏறி அமர்ந்து இரவெல்லாம் கண்விழித்து வில்வ இலைகளைக் கொண்டு தன்னையறியாமல் மரத்தின் கீழ் இருந்த லிங்கத்துக்கு அர்ச்சித்தான். காலையில் அவன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்தான் யமன். சிவராத்திரி அன்று விழித்திருந்து பூஜை செய்த புண்ணிய பலனால் அவன் உயிரைக் காக்க சிவபெருமான் நந்திக்கு உத்தரவிட்டார். நந்தி யமனை விரட்டினார். நந்தியிடமிருந்து தப்பிய யமன் அங்கிருந்த தீர்த்தத்துக்குள் குதித்து உயிர் பிழைத்தான் என்கிறது தலவரலாறு. வியாதன் என்கிற வேடனே சிவபூஜை செய்து சிவதரிசனமும் குகன் என்று பெயர் பெற்று நாராயணனின் அன்பிற்கும் பாத்திரமானான்.

இது போன்ற சிவராத்திரியின் மகிமைகளை விவரிக்க ஒரு காவியமே எழுதலாம். சிவராத்திரி என்று அறியாமலும், உறக்கம் வராமல் இருப்பதற்காக மரத்திலிருந்து பறித்துப் போடும் இலைகளே அர்ச்சனை செய்வதற்கு நிகரானது என்பதை அறியாமலும் செய்த செயல்களுக்கே இத்தனை பலன்கள் கிடைக்கும் என்றால், சிவராத்திரி நாளின் புனிதத்தையும், இறைவனின் மகிமைகளையும் அறிந்து வழிபாடு செய்தால் இன்னும் எத்தனை நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும்?!

மனித மனம் ஒரு குரங்கு என்று சொல்வது உண்டு. அதுதான் மனித வாழ்வில் நிறைய பிரச்னைகளுக்குக் காரணமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் நில்லாமல் அலைபாயும். அதை ஞானிகள் அடக்கியாளக் கற்கிறார்கள். மனதை வென்றவரைத்தான் `மகாவீரர்’ என்கிறோம். ஆனால், அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால் அந்தக் குரங்கினைப் பழக்க வேண்டும். நற் சிந்தனைகளில், இறை வழிபாட்டில் அதைப் பழக்க வேண்டும். பழக்கப்பட்டுவிட்ட மனம் அதை மீண்டும் மீண்டும் நாடிச் செல்லும். அப்படியாக மனதை இறைவன் வசம் ஒப்படைக்கச் சிறந்த நாள் மகாசிவராத்திரி.

சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு காலமும் இறைவனை அபிஷேகித்து ஆராதனைகள் செய்யவேண்டும். ஒவ்வொரு காலத்துக்கும் உகந்த பொருள்கள் என்ன என்ன என்பதை நம் முன்னோர் வகுத்துள்ளனர். பொதுவாக சிவராத்திரி வழிபாடு மரணமில்லாப் பெருவாழ்வு நல்கும் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல, வாழும் இந்தப் பிறவியிலேயே பல வளங்களை அருளும் வல்லமை நிறைந்தது சிவராத்திரி. நான்கு காலமும் இறைவனைக் கண்டு தரிசிக்க நோய்கள் நீங்கி ஆரோக்கியமும், கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளமும் ஏற்படும். 

சிவராத்திரி தினத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபடவேண்டும். சிவராத்திரியின் 3-வது காலம் லிங்கோற்பவ காலம். லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்து நான்கு மூர்த்திகளுள் ஒன்று. கோயிலின் கருவறைச் சுற்று சுவரில் மேற்கு திசையில் இருக்கும். 

அடிமுடி தேடிய புராணம் ‘லிங்கோத்பவ மூர்த்தி’ தோன்றிய நிகழ்வை விளக்குகிறது. சிவராத்திரி அன்றுதான் இறைவன் நெருப்புப் பிழம்பாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உற்பத்தியாக நின்றார். மாலும் அயனும் அவன் அடிமுடி காணாது திகைத்தனர். சிவபெருமான் நெருப்பின் நடுவிலிருந்து மான், மழு, அபய வரத முத்திரைகளுடன் லிங்கோற்பவராகத் தோன்றி அருள்பாலித்தார்.  

பிரம்மன் தாழம்பூவுடன் சேர்ந்து பொய் சொன்னதால் பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமல் போயிற்று. தாழம்பூ சிவ பூஜைகளிலிருந்து விலக்கப்பட்டது என்பதை அறிவோம். அதே தாழம்பூ சிவ பூஜைக்குச் சேர்க்கப்படும் ஒரே காலம் சிவராத்திரி இரவின் 3-ம் ஜாமமான லிங்கோத்பவ காலத்தில் மட்டும்தான். தாழம்பூ மனம் திருந்தி இறைவனை வேண்டிப் பெற்ற வரம் அது. 

இறைவன் இந்தப் பிரபஞ்ச வடிவானவன். அவனின் அடியும் முடியும் தேவர்களும் அறியார். அப்படிப்பட்ட தேவன் நாம் உருவாக்கும் க்ஷணிக லிங்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் நன்நாள் சிவராத்திரி. 

அன்பார்ந்த வாசகர்களே, மகத்துவங்கள் நிறைந்த இந்த ஆண்டின் மகாசிவராத்திரி நாளில்  சக்திவிகடன் சார்பில்  விசேஷமான ஆத்ம லிங்க அபிஷேகம் (மார்ச் - 4 திங்கள் கிழமை மாலை) ஏகாம்பரநல்லூரில் நடைபெறவுள்ளது. நான்கு கால பூஜைகளும் மிகச் சிறப்பாக நியம நிஷ்டைகளுடன் நடைபெற இருக்கிறது. 

அன்னை உமையவளுக்கு ஈசன் சிவலிங்கப் பூஜையினை முதல்முதலாக உபதேசித்த திருத்தலம் எனப் போற்றப்படும் ஏகாம்பரநல்லூர் தலத்தில் சக்திவிகடன் சார்பில் சிவராத்திரி அன்று நடத்தப்படும் ஆத்ம லிங்க அபிஷேகத்தில் நீங்கள் கலந்துகொண்டு, அளவற்ற புண்ணிய பலன்களை அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நடக்கும் இடம்: ஆற்காடு பை பாஸ் அல்லது பேருந்து நிலையத்திலிருந்து திருவலம் செல்லும் பேருந்தில் ஏறி ஏகாம்பரநல்லூர் ஆலயம் வரலாம். லாலா பேட்டை அருகில் ஏகாம்பரநல்லூர் உள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு