மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 29

மகா பெரியவா - 29
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 29

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 29

ணேசன் கனபாடிகள் என்பவர் வேத பண்டிதர். காஞ்சி மடத்துடன் இவருக்கு நெருங்கிய தொடர்பும் மகா பெரியவரிடம் அதீத பக்தியும் உண்டு. இவரின் சிறு பிராயத்தில் வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.

அந்த நாளில், மாணவர்கள் விடுமுறைக்குத் தங்கள் ஊருக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், தங்கள் குருவுக்குக் காணிக்கையாக அன்போடு ஏதாவது பொருள் வாங்கி வருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை, மாணவனாக இருந்த கணேசன், தன் குருவுக்குக் காணிக்கையாகக் கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக்கொண்டான். அத்துடன் தங்கள் கிராமத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய விசேஷ ரக வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டான். பாடசாலை திரும்பிய கணேசன், தான் வாங்கி வந்தவற்றை வாத்தியாரிடம் சமர்ப்பித்துப் பணிவாக நின்றான். குருவுக்கு மெத்த மகிழ்ச்சி.

“கணேசா... எனக்காக நீ ஒரு உபகாரம் பண்ணு. எல்லா காய்கறி களையும் பழங்களையும் அப்படியே எடுத்துண்டு போய் காஞ்சி மகா பெரியவா சந்நிதியில் சேர்த்துடு. உனக்குப் பரமக்ஷேமம் உண்டாகும்...” என்றார். கணேசன் ஏனோ தயங்கினான்.

“இதோ பாரு கணேசா... அந்த நடமாடும் தெய்வம், நமக்கு எத்தனையோ வழிகள்ல அனுகிரஹம் பொழியறது. அதுக்கெல்லாம் பிரதிபலனா நாம என்ன செய்ய முடியும்? அவர் ஒரு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தைக் குளிப்பாட்ட நம்மால முடியாதே. ஒரு வாளி தண்ணி இல்லேன்னாலும் ஒரு உத்தரணி ஜலமாவது ஊத்தினோம்கற திருப்தியோட, நாம இப்படி அப்பப்ப சின்னதா எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்கலாம். தயங்காம எடுத்துண்டு போய் சேர்ப்பிச்சிட்டு வா...”

மகா பெரியவா - 29

உடனே காய்கறி, பழம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மகாபெரியவா தரிசனத்துக்குப் புறப்பட்டான் கணேசன்.

அவன் மடத்துக்கு சென்ற நேரத்தில், மகா பெரியவா அவருடைய அறைக்குள் இருந்தார். காத்துக்கொண்டிருந்த நேரத்தில் வேத மந்திரங்கள் சிலவற்றைச் சொல்லியபடியே நின்றிருந்தான் கணேசன். சிறிது நேரத்தில் மகா சுவாமிகள் வெளியே வந்தார். கணேசன் அவரை நமஸ்கரித்தான். எடுத்து வந்திருந்த காய் கனிகளை மூங்கில் தட்டில் வைத்து, அவர் முன் சமர்ப்பித்துவிட்டு பயபக்தியுடன் நின்றான்.

“இதெல்லாம் எனக்குன்னுதான் கொண்டு வந்தியா?”

மகா பெரியவா அப்படிக் கேட்டதும், ஒரு விநாடி யோசித்தான் கணேசன். எப்போதும் பொய் பேசவே கூடாது என்று தன் குரு போதனை செய்தது அவன் நினைவுக்கு வந்தது.

“இல்லை பெரியவா... என்னோட பாடசாலை வாத்தியாருக்குத்தான் இதையெல்லாம் வாங்கிண்டு வந்தேன். அவர்தான் ‘எல்லாவற்றையும் பெரியவாளுக்குக் கொண்டு போய் சமர்ப்பிச்சுடு’ன்னு சொன்னார்...”

“இது எல்லாமே உங்க நிலத்துல விளைஞ்சதோ?”

“இல்லே பெரியவா... எங்களுக்கு அந்த அளவு வசதியெல்லாம் கிடையாது...”

“அப்போ, காசு கொடுத்து வாங்கி வந்தியோ” என்று வினவினார் பெரியவா. அத்துடன், அங்கே நின்றிருந்த பக்தர்கள் பக்கம் திரும்பி, “இந்தக் குழந்தைக்கு எவ்வளவு குருபக்தி? தன் குருவுக்காகப் பிரியமா இதெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ” என்றார். கணேசனுக்கு மனம் குளிர்ந்தது.

அடுத்து நிகழ்ந்தது யாருமே எதிர்பார்க்காதது. திடீரென்று கீழே குனிந்தார் சுவாமிகள். காய், கனி நிரம்பியிருந்த மூங்கில் தட்டைத் தன் தலைக்கு மேல்  தூக்கி, தடாலென்று அத்தனையையும் தன் சிரசின் மீது அபிஷேகமாகக் கவிழ்த்துக்கொண்டார்.

அதைக் கண்டு பக்தர்கள் பரவசப்பட, கணேசன் மட்டும் திடுக்கிட்டுப்போனான். தான் ஏதாவது தவறு இழைத்துவிட்டோமோ என்று அவன் உடல் நடுங்கியது. செய்வதறியாது விக்கித்து நின்றான்.

“போய் உன் வாத்தியார்கிட்டே, குளிப்பாட்டியாச் சுன்னு சொல்லு” என்றார் பெரியவா, கணேசனிடம்.

எதுவும் புரியாத அவன், மறுபடியும் மகானை நமஸ்கரித்துவிட்டு, பிரசாதம் வாங்கிக்கொண்டு நகர்ந்தான். தன் குரு சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன. ‘அவர் பெரிய ஆலமரம். அவரை நம்மால குளிப்பாட்ட முடியுமா? ஏதோ உத்தரணி ஜலம் விடுவோம்.’

வாத்தியார் சொன்ன வார்த்தைகளுக்குப் பதிலாக, ‘இந்த எளிய காணிக்கையே எனக்குத் திருப்தியானதுதான்’ என்பதை உணர்த்தும் விதமாக, ‘குளிப்பாட்டிட்டேன்’ என்ற வார்த்தையை மகா பெரியவா உதிர்த்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

விரைந்து சென்று, மடத்தில் நடந்தவற்றைத் தன் குருவிடம் கணேசன் விவரமாகச் சொல்ல, சிலிர்த்துப் போனார் குரு. பாடசாலையில் வேத கோஷங்கள் முழங்கின.

கிராமம் ஒன்றில் மகாபெரியவா சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்த நாளில், விவசாயி ஒருவர் மகானை தரிசிக்க வந்தார். உற்சாகமின்றிக் காணப்பட்டார் விவசாயி. முகம் களையிழந்திருந்தது. பார்த்தமாத்திரத்தில் அவரது துன்பம் விளங்கியது மகா சுவாமிகளுக்கு.

“சாமி... ஏன்டா உயிரோடு இருக்கோம்னு தோணுது. பேசாம, குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கலாம்னு தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கறது சகஜம்தான் சாமி... ஆனா, என் வரைல வாழ்க்கையே போராட்டமா இருக்கு. என்ன செய்யறதுன்னே புரியல...” என்று புலம்பினார் விவசாயி.

அவர் சொல்வதைக் கருணையுடன் செவிமடுத்த மகா பெரியவா, “குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா” என்று கேட்டார்.

மகா பெரியவா - 29

“குலதெய்வமா... அப்படின்னா?”

“ஓஹோ... உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதோ?”

“ஆமாம் சாமி. வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மாவுக்குப் போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டுத் திரும்பி வந்த குடும்பம் எங்கக் குடும்பம். என் பாட்டனார் ஒருத்தருக்கு சாமி நம்பிக்கை இல்லாததால, அவரோட பிள்ளைகளும் அப்படியே வளர்ந்துட்டாங்க. அந்த வழில வந்தவங்கதான் நாங்க” என்றார் விவசாயி.

சிறிது நேரம் மௌனம்.

“உன் முன்னோர்களில் யாராவது இப்போ உயிரோட இருக்காளா” என்று பெரியவா கேட்ட தும், “என் அப்பா வழிப் பாட்டனார் ஒருத்தர் கிராமத்துல இருக்கார் சாமி...” என்றார் விவசாயி.

“அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பற்றிக் கொஞ்சம் கேட்டுண்டு வா...”

“ஏன் சாமி... அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டா என் பிரச்னை தீர்ந்துடுமா?”

“அப்படித்தான் வச்சுக்கோயேன்...”

“என்ன சாமி நீங்க... ஊர்ல எத்தனையோ கோயில் இருக்கு. அங்கெல்லாமும் சாமிங்கதான் இருக்கு... அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லலையே?”

“அப்ப அந்தச் சாமிகள்ல ஒரு சாமியைக் கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்தைத் தெரிஞ்சுட்டு வரச் சொல்றீங்களே?”

பெரியவா தொடர்ந்தார்.

“காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எத்தனை தண்ணி பிடிச்சாலும் நிக்காது. என்னை மாதிரி எதுவும் வேண்டாம்னு சொல்ற சந்நியாசி இல்லே நீ. குடும்பத்தோட வாழ்க்கை நடத்தற சம்சாரி. எனக்குப் பாத்திரமே தேவையில்லை. ஆனால், உனக்குப் பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாதானே அதுல எதையும் போட்டுவைக்க முடியும். அந்தப் பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல போடற எதுவும் தங்காதே...”

“அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா. அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடுச்சுன்னு சொல்றீங்களா சாமி” என்று எதுவும் விளங்காதவராகக் கேட்டார் விவசாயி.

“நீ கேள்வி எதுவும் கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறதைத் தெரிஞ்சுண்டு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப் போ. அங்க சாஷ்டாங்கமா உடம்பு தரைல படற மாதிரி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா எல்லாம் சொல்றேன்...” என்று சொல்லி, பிரசாதமும் கொடுத்து அந்த விவசாயியை அனுப்பிவைத்தார் மகா பெரியவா. அவரும் ஒரு பத்து நாள்கள் கழித்துத் திரும்பி வந்தார்.

“சாமி... எங்கக் குலதெய்வத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். பேச்சாயிங்கற அம்மன்தான் எங்கக் குலதெய்வம். அந்தக் கோயில் ஒரு மலையடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாததால் புதர் மண்டிப்போச்சு. நானும் என் மக்களும் போய் புதரையெல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி. ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு, அதுக்குப் பால் ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வர்றேன் சாமி...” என்ற விவசாயி கண்கள் கலங்க நின்றார்.

“அப்படியா? ரொம்ப நல்லது. அந்தக் கோயிலை நீ நல்லபடியா பராமரிக்கணும். தினசரி அங்க விளக்கு எரியற மாதிரி பார்த்துக்கணும். உன் கஷ்டங்கள் தானா விலகிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சவ. உன் குடும்பமும் ஜொலிக்கும். நீ பத்திரமா போயிட்டு வா. இருட்டிடுத்து... ஜாக்கிரதையா போ...” என்று ஆசீர்வதித்தார் மகா பெரியவா.

விவசாயிக்குப் புறப்படுவதற்குத் தயக்கம். “ஏன் சாமி... நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே... எதுவுமே சொல்லலியே...”

“அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா. அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே... பேச்சாயியை விட்டுடாதே” என்று வாஞ்சையுடன் விவசாயியை அனுப்பிவைத்தார் மகா பெரியவா.

- வளரும்...

-வீயெஸ்வி

காசனின்  குழப்பம் !

ப்பானில், பிரபு ஒருவரது சவ  அடக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார், ஜென் அறிஞர் காசன்.  அங்கிருந்த ஆடம்பரம், டாம்பீகம்,  முக்கிய பிரமுகர்களின் வருகையால் ஏற்பட்ட பரபரப்பு எல்லாமும் சேர்ந்து காசனுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தின.

மகா பெரியவா - 29

சடங்கு  ஆரம்பித்ததும்  அங்கே  ஒலித்த  மந்திர ஒலிகள், இசைக் கருவிகளின்  ஓசை  ஆகியவற்றால் காசனுக்கு வியர்த்துக் கொட்டியது.

நிகழ்ச்சி முடிந்து மடாலயத்துக்குத்  திரும்பிய  காசன்,  தன்  மாணவர்களை  அழைத்தார்.

“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான்  உங்களுக்கு ஆசிரியராக இருக்கத்  தகுதியற்றவன். உலகில் நாம் காணும்  சாதாரண நிகழ்ச்சி, அசாதாரணச் சூழல்   இரண்டையும் சமமாகப்  பாவிக்க முடியாத  மனநிலையில் இப்போது இருக்கிறேன். நீங்கள் வேறு ஆசிரியரிடம் சென்று  பயிற்சி பெறுங்கள்'' என்று கூறி, மாணவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்.

பிறகு, வேறு ஒரு கோயிலுக்குச்  சென்று  தனிமையில் தியானத்தைத் தொடர்ந்தார்.   வேறொரு ஜென் குருவிடம்  மாணவராகச் சேர்ந்து  பயின்றார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஞானம் பெற்றார்.

விதை விருட்சமானால்தான் மற்றவர் களுக்கு நிழல் தர முடியும்!