திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

கயிலையில் நடந்த பிள்ளைகளின் விளையாட்டு!

கயிலையில் நடந்த பிள்ளைகளின் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலையில் நடந்த பிள்ளைகளின் விளையாட்டு!

இரா.வ.கமலக்கண்ணன்

துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்று போற்றப்படுபவர். இவர் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தார். மணமக்களை வாழ்த்தி ஒரு பாமாலை பாடியருளினார். அப்பாடலின் பொருளை முதலில் காண்போம்.

கயிலையில் ஒருநாள் அம்மையும் அப்பனும் வீற்றிருந்தனர். அப்போது, விநாயகன் ஈசனிடம், “அப்பா! தம்பி முருகன் என்னுடைய பெரிய செவியைப் பிடித்துக் கிள்ளினான்” என்று சிணுங்கிக்கொண்டே கூறினார். அதைக் கேட்ட சிவபெருமான், “முருகா! ஏன் அவ்வாறு செய்தாய்” என்று முருகனிடம் கேட்டார்.

கயிலையில் நடந்த பிள்ளைகளின் விளையாட்டு!

அதற்கு முருகன், “தந்தையே! அண்ணன் என் ஆறு முகங்களிலும் உள்ள பன்னிரண்டு கண்களையும் குத்திக் குத்தி எண்ணினான்” என்றார்.

இப்போது விநாயகர் என்ன சொல்லப்போகிறார் என்று அவரைப் பார்த்தார் ஈசன்.

“அப்பா! தம்பி என் தும்பிக்கையை இழுத்துப் பிடித்து 1, 2 என முழம் போட்டு அளந்தான்; அதனால் எனக்கு வலித்தது’' என்றார். விநாயகனின் இந்தப் பதிலைக் கேட்டதும் குகன் நகைத்து நின்றார். இந்த நிலையில் சிவபிரான் பர்வதராஜன் மகளாகிய பார்வதியைப் பார்த்து “உன் மக்களின் குறும்புத்தனத்தைப் பார்ப்பாயாக” எனக் கூற, பல அண்டங்களையும் பெற்ற உமையம்மை  ஐங்கரனை அருகில் அழைத்து ஆறுதலாகப் பேசி அகம் மிக மகிழ்ந்தாள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய சிவபிரானும் உமையம்மையும் மணமக்களாகிய உங்களைக் காப்பாற்றுவார்களாக!

இனி, பாடலைப் பார்ப்போம்...

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து நின்றைய
என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினன்
என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியார்
விளங்குகண் எண்ணினன் என, வெம்பிடும்
பிள்ளையைப்பார்த்து நீ அவ்விகடமேன் செய்தாய் என,
மருவும் என் கைநீளமுழ மளந்தான் என்ன மயிலவன்
நகைத்து  நிற்க மலையரையன் உதவவரு உமையவளை
நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகுபல அண்டம் கருப்பமாய்ப்
பெற்ற கன்னி, கணபதியை அருகழைத்து அகமகிழ்வு
கொண்டனள் கருத்துடன் உமைக் காக்கவே

தம்பதியைக் கற்பனை நயம் மிளிர வாழ்த்திய சிவப்பிரகாச சுவாமிகளின் அழகுத் தமிழ்ப்பாடல் அற்புதம்தான்!

‘காளமேகப் புலவரும் கலைமகளும்’

ருமுறை திருமலைராயன் பட்டினத்துக்குச் சென்றிருந்த காளமேகப் புலவர், அங்கே ஒரு மளிகைக்கடையின் அருகில் இருந்தார். அப்பகுதியை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையைச் சேர்ந்த புலவர் - ‘அதிமதுரகவி’.

கயிலையில் நடந்த பிள்ளைகளின் விளையாட்டு!

இந்தப் புலவர், காளமேகத்தின் கவித்திறனை அறிய விரும்பி, ஏவலாள் ஒருவனை அழைத்து, ``கடைக்குச் சென்று மேகம், பசு, ரத்தினம் வாங்கி வா'' என்று அனுப்பிவைத்தார். அந்த ஏவலாள் வந்து கேட்டதும் கடைக்காரர் விழித்தார். அருகிலிருந்த காளமேகப்புலவர், “யார் உன்னை அனுப்பியது” என வினவ, அவன் அதிமதுரகவி என்றான். உடனே “அது ஒரு கடைச் சரக்கு” என்ற காளமேகம்,  “கடைக்காரரே! இவன் காராமணி கேட்கிறான்” என்றார். (கார்-மேகம்; ஆ- பசு; மணி-ரத்தினம்).

அவன் சென்று அதிமதுரகவியிடம் நடந்ததை விவரித்தான். “ஓஹோ அப்படியா! அப்புலவன் நாளை அரசவைக்கு வரும்போது அவனை அவமானப்படுத்துவேன்” -  என்றவர், சூழ்ச்சியாக அவையில் மிகுதியாக ஓர் ஆசனமும் இல்லாமல் செய்தார்.

மறுநாள் காளமேகப்புலவர் அவைக்குள் நுழைந்து, நிலைமையை உணர்ந்துகொண்டார். உடனே, கலைமகளைத் துதித்து ஒரு பாடல் பாடினார்...

‘வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடு என்னைச்
சரியாசனம் வைத்த தாய்'
- என்று அவர் பாடியதும், மன்னரின் ஆசனத்துக்குச் சமமாக ஆசனம் ஒன்று வளர, அதன் மீது ஏறி அமர்ந்தார் காளமேகம். அதைக் கண்டு வியந்த புலவர்கள், அவரை வணங்கித் தொழுதனர்!