Published:Updated:

மகா பெரியவா - 30

மகா பெரியவா - 30
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 30

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 30

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 30
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 30

`குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?'

மகா பெரியவா - 30

`அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா' என்ற மகாபெரியவரின் உத்தரவுக்கு ஏற்ப, அவர் குறிப்பிட்ட அதே தேதியில் மடத்துக்கு வந்தார் அந்த விவசாயி. ஒரு தட்டில் பூ, பழங்கள் ஆகியவற்றோடு கொஞ்சம் பணமும் வைத்துச் சமர்ப்பித்தார்.

“சாமி! நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைக் குட்டிகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரிய சாமி நீங்கதான்...” என்று உணர்ச்சிவசப்பட்டார் விவசாயி.

மென்மையாகப் புன்னகைத்தார் மகா பெரியவா.

“நீ குலதெய்வம் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டே இல்லியா. இப்ப சொல்றேன்...”

“நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வம். முன்னோர்கள்னு சொன்னால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே அதில் அடக்கம். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்குல எடுத்துக்கணும். இந்தத் தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய வரிசை ஒன்று உண்டு. அதுதான் ‘கோத்திரம்’ என்கிற ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்திலிருந்து பெண்கள் வந்து, இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும்  ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால் அடுத்து, இவர்கள் அத்தனைபேருக்கும் நட்சத்திரம், உடலமைப்பு, குணங்கள் எல்லாமே மாறுபட்டிருக்கும். அதுதான் இயற்கையும்கூட. ஆனால், கோத்திரவழி மாறாதபடி, இவர்கள் நம் குலதெய்வம் எனும் தெய்வச் சாந்நித்தியத் தில் கைகூப்பி நின்னுருப்பா. தலைமுடி காணிக்கை கொடுத்திருப்பா. காது குத்துவது மாதிரி சம்பிரதாய வழிமுறைகளும் நடந்திருக்கும்.

மகா பெரியவா - 30

இந்த உலகத்துல ஆயிரமாயிரம் கோயில்கள் இருக்கு. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம், போகாமலும் இருக்கலாம். அது நிச்சயமில்லே. ஆனால், குலதெய்வம் கோயிலுக்கு... நாம் பக்தி என்ற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கே அழைத்துச் செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வச் சந்நிதியில் நாம் நிக்கறபோது, நம் பரம்பரை வரிசைல போய் நிக்கறோம்...” - மகா பெரியவா சொல்லச் சொல்ல, விவசாயியின் முகத்தில் பரவசம்!

“அது மாத்திரமில்லே... ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே, இப்படியொரு பரம்பரை வரிசை இருக்கறதை நினைச்சுப்பார்க்கக்கூடத் தெரியாம, இரண்டு பாட்டன் பாட்டி பெயருக்கு மேல தெரியாமத்தான் நம் வாழ்க்கைப் போக்கு இருக்கு.

ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரைல இறையின் சக்தி, குலதெய்வமாக வெளிப்படறது. இந்த வழிவழிப் போக்குல ஒருத்தர் மூட்டை மூட்டையா புண்ணியத்தைச் சம்பாதித்திருக்கலாம்... இன்னொருத்தர் பாவமேகூட பண்ணியிருக்கலாம். நாம அங்கே போய் நின்னு நம் பொருட்டு பிரத்தியேகமாக வெளிப்படற அந்தத் தெய்வ சக்தி யைத் தொழும்போது, அவர்களும் பித்ருக்களாக இருந்து பார்க்கிறார்கள்... நாமளும் ஆசீர்வதிக்கப் படறோம்...”

பெரியவா சொல்வதைக் கேட்ட பக்தர்கள் கூட்டம் சிலிர்த்தது. மகான் தொடர்ந்தார்.

“குலதெய்வ வழிபாட்டுல நல்ல சமாசாரம் ஒண்ணும் அடங்கியிருக்கு. சந்தர்ப்பச் சூழல் களாலோ, கர்மப் பலன்களாலோ, அதுவுமில்லாத பல்வேறு காரணங்களாலோ ஒருத்தருக்கு கடவுள் பக்தி இல்லாமல் போறது. அதாவது, கண்ணுக்குப் புலப்படாத  கடவுளை நம்பறதுக்கு நாம தயாரா இல்லை. ‘நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது’ன்னு வீறாப்பாப் பேசி, நாத்திகத்துல நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே போகும் நிலைமை வந்தாலும் பெரிசா தோஷமில்லே. காரணம், அவர் இப்படி ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசைல பெற்றோர் களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறிடுவார் என்பதுதான் இதிலுள்ள சிறப்பான அம்சம்.

மகா பெரியவா - 30

அதேநேரம், இப்படி நம்பிக்கை இல்லாமப் போன ஒருவர், தன் பிள்ளைகளைக் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துவர மாட்டாரே. இதனால அவர்கள் பரம்பரைத் தொடர்புக்கு ஆட்படாம போய்டுவாளே என்ற கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரே வழில, ஒரே கோத்திரத்தில கல்யாணம் பண்ணிக்காம, முன்னோர் காட்டிய வழியில போற பட்சத்துல, வாழ்க்கைல நமக்குப் பெரிய கஷ்டம் எதுவும் வர்றதில்லே என்பதுதான் இந்தமட்டில் நாம புரிஞ்சுக்கணும்.”

கண்கள் கலங்கி நின்ற விவசாயி, மகா பெரியவாளிடம் உத்தரவு பெற்றுச் சென்றார்.

மகா பெரியவா ஒருமுறை பரமக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் பின்னாடியே ஓடி வந்தார் கிழவர் ஒருவர்.  வெயில் சுட்டெரிக்கும் நேரம். கிழவர் பின்தொடர்ந்து வரும் தகவல் அறிந்து, அவருக்காகவே நின்றார் பெரியவா.

அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும், “நான் இத்தனை நாள் அங்கேதானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே... எதற்கு இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால் வருகிறீர்கள்” என்று கேட்டார்.

“நான் அங்கேயும் பார்த்தேன். அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வர்றேன்...” என்றார் கிழவர்.

“என்னையும் மடத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். அருகிலேயே இருந்து உங்களையே பார்த்துக் கொண்டு, உங்களுக்குச் சேவகம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்...” என்று வேண்டிக்கொண்ட அந்தக் கிழவர் ஓர் இஸ்லாமியர்!

“என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் என்றால், இருக்கும் இடத்திலிருந்து என்னை நினைத்துக் கொள்ளலாமே... உங்கள் நினைவில் நான் வந்தால், உங்களோடு இருப்பது போலத்தானே. அதற்காக மடத்திலெல்லாம் சேரவேண்டாம்...” என்றார் சுவாமிகள்.

கிழவருக்குக் கண்ணீர் பெருகியது. ``எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான்... உங்களைப்போலத்தான் இருப்பாரென்று நினைக்கிறேன்...” என்றார் அவர். மகாபெரியவா சன்னமாகப் புன்னகைத்துக் கொண்டார். நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன

2,500 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கர் சர்வக்ஞ பீடம் நிறுவினார். பலருடன் வாதம் செய்து வென்று, பீடம் ஏறப் போகிறார் சங்கரர்.

“எல்லா கலையும் உங்களுக்குத் தெரியுங்களா. நான் செய்யும் தொழிலும் உங்களுக்குத் தெரியும் என்றால்தான் நீங்க பீடம் ஏறுவதற்கு ஒப்புக் கொள்வேன்...” என்றார் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர்.

அடக்கமே உருவமான ஆதிசங்கர், “சரி... என்னால் முடிகிறதா என்று பார்க்கிறேன். தோலும், ஊசி - நூலும் கொடு” என்றார்.

தொழிலாளி கொடுத்ததை வாங்கிக்கொண்டு, ஊசியைத் தன் மூக்கின் இருபக்கமும் தடவிக் கொண்டார். தொழிலாளி அப்படியே சங்கரரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

“நீங்க இதுக்குமேலே எதுவும் செய்யவேண்டாம். நீங்க எல்லாம் தெரிஞ்சவங்கதான் சாமி... என்னை மன்னிச்சுடுங்க...” என்றார்.

செருப்பு தைக்கத் தொடங்குவதற்குமுன், செய்யவேண்டிய நுட்பமான ஒரு செயல், ஊசியை மூக்கில் தேய்ப்பது. மூக்கின் மேல் வரக் கூடிய எண்ணெய்ப் பசை அதற்குத் தேவை, அந்த வழுவழுப்பால் தோலுக்குள் ஊசி எளிதாக நுழைந்துவிடும். இத்தகைய சர்வக்ஞ பீடத்தில் அலசப்படாத செய்திகளோ, தெளிவு ஏற்படாத விஷயங்களோ கிடையாது. ஆதிசங்கர் போலவே அனைத்தும் அறிந்த மகா பெரியவா, பக்தர்களைப் பிரமிக்க வைத்த சம்பவங்கள் ஏராளம். சமையல் கலையில் மகா பெரியவருக்கு இருந்த ஞானம் அபரிமிதமானது.

மூட்டை நிறைய கருணைக்கிழங்கை மடத்துக் குக் கொடுத்தார் பக்தர் ஒருவர். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து மசியல் செய்தார் மடத்தின் சமையல்காரர். மதியம் பந்தியில் சாப்பிட்ட ஒவ்வொருவரும் மசியலை வாயில் போட்டுக் கொண்டதும் மீதியை அப்படியே இலையில் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லை.

சுவாமிகளுக்கு  இது தெரியவந்தது. சமைத்தவர் கையைப் பிசைந்துகொண்டு எதிரில் வந்து நின்றார். “எனக்குத் தெரிஞ்சவரையிலும் கிழங்கை  கழுநீரில் அலம்பி, புளி விட்டுக் கொதிக்கவெச்சுதான் மசியல் செய்தேன்...” என்றார் தயக்கத்துடன்.

“இனிமே கருணைக்கிழங்கு வேகும்போது, அதோடு கொஞ்சம் வாழைத்தண்டை வெட்டிப் போடு... மசியல் அரிக்காது” என்று தீர்வு கொடுத்தார் மகா பெரியவா!

ருநாள் மடத்துக்கு வந்திருந்த பக்தர் ஒருவரிடம், “குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம். இரண்டிலும் ஒரேவிதமான புளி, உப்பு, பருப்பு, சாம்பார் பொடி, பெருங்காயம்தானே இருக்கு” என்று கேட்டார் சுவாமிகள். பிறகு, அவரே விளக்கமும் தந்தார்.

“குழம்பில் ‘தான்’ (காய்கறி) உண்டு. ரசத்தில் இல்லை. அதனால் குழம்பு கெட்டியா இருக்கும். ரசம் தெளிவா இருக்கு. நமக்கும் ‘தான்’ (Ego) என்ற ஒண்ணு இருந்தால் மனம் குழம்பிப்போகிறது. அது மட்டும் இல்லேன்னா, மனசு நன்னா தெளிவா ரசமாய் இருக்கும்'' என்றார்.

அதுமட்டுமல்ல... விருந்து சாப்பிடும் வரிசை நியதியிலும் வாழ்க்கைத் தத்துவம் உண்டு என்று  மகாபெரியவா கூறிய விளக்கம் மிக அற்புதமானது.

- வளரும்...

- வீயெஸ்வி

பவளமல்லி உதிர்வது ஏன்?

ருமுறை, நாரதர் தேவலோகத்தி லிருந்து கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கிருஷ்ணனிடம் கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணனோ, அதை பாமாவிடம் கொடுத்து விட்டார். இதைக் கண்ட நாரதர், உடனே ருக்மிணியிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.

ருக்மிணி உடனே கோபமுற்றாள். தன் தோழியின் மூலம் ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து வரச் செய்து, அவரிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள். கிருஷ்ணன் அவளை சமாதானப்படுத்தினார் என்றாலும் அவள் சமாதானம் அடையவில்லை. தனக்கு பாரிஜாத மரமே வேண்டும் என்றாள்!

மகா பெரியவா - 30

அவள் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணிய கிருஷ்ணன், இந்திரனுடன் போரிட்டு, பாரிஜாத மரத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்து ருக்மிணியின் வீட்டில் ஊன்றி னார். இதனால் ருக்மிணி கோபம் நீங்கி சமாதானம் அடைந்தாள்.

ஆனால், அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் பாமாவின் வீட்டில் விழுந்து, ருக்மிணிக்கு ஒரு பூ கூட கிடைக்காமல் போனது. அது ஏன் தெரியுமா, ருக்மிணி  கேட்டது பாரிஜாத மரத்தைத்தான், பூவையல்ல.

இன்றும்கூட பாரிஜாதம் என்ற பவளமல்லிப்பூ தானாக உதிர்வது இதனால்தான் என்கிறார்கள் பெரியோர்கள்.

-ஆர். கண்ணன், சென்னை-61