திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 31

ரங்க ராஜ்ஜியம் - 31
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 31

ஓவியம்: அரஸ்

நீலனின் மகத்துவத்தைச் சோழன் உணர்ந்துகொண்டதுபோல் இந்த உலகமும் உணரவேண்டும் என்று திருவுளம் கொண்டார் பகவான். அதன்பொருட்டு வானம் பொய்த்து பஞ்சம் தலைவிரித்தாடியது தரணியில். இதில் தானமாவது கீனமாவது. சத்திரத்தை இழுத்து மூட வேண்டிய கட்டமும் வந்துவிட்டது!

“எம்பெருமானே இது என்ன சோதனை” என்று சற்று கலங்கித்தான் போனான் நீலன்.

“பட்ட கடனுக்கே பொன்னைத் தந்தாயே... பாடாய்ப்படுத்தும் பசிப்பிணியின் பொருட்டு என்ன தரப்போகிறாய்”-என்றும் கேட்டான். மாலவன் மௌனம் காத்தார்.

நீலனோ மனம் கலங்கினான் என்றாலும் நிலை மாறவில்லை. மிகச் சரியாக கேட்டான், திருச்சந்நிதி முன்னால் சென்று நின்று... “எதற்கிந்த சோதனை” என்று.

சந்நிதியில் பதிலில்லை.

“பேசமாட்டாயா...?”

இதற்கும் பதிலில்லை.

“நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்.

எதற்கிந்த சோதனை?” - மீண்டும் கேட்டான்.

ரங்க ராஜ்ஜியம் - 31

அப்போது, பழுத்த வேதியரின் வடிவில் சந்நிதிக்குள் நுழைந்து நீலனோடு பேச விழைந்தார் பகவான்.

“திருவாலி மன்னா! அவன் பொன்னையும் நெல்லையும் அள்ளிக் குவித்தபோது, நீ அதை உன் சேவைக்காக மட்டுமன்றி, உனக்காகவும் எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா. அப்படிச் செய்திருந்தால், இப்போது நீ வருந்தும் நிலை வந்திருக்காதுதானே?”

“அந்தணரே... இது என்ன கேள்வி! அவனிடம் பொருள் பெற்றா அவன் அடியார்க்கு செலவிடுவது. என் பங்கு என்று அதில் எதுவும் இருக்க வாய்ப்பில்லையே?''

வேதியர் தொடர்ந்து கேட்டார்.

“சோழனுக்குக் கப்பம் கட்ட மட்டும் அவன் உதவி வேண்டுமா?”

“அப்படி ஒரு சூழல் உருவாகிவிட்டது  அந்தணரே! சொல்லப்போனால், அந்த கப்பப் பொருள்களையும் நான் எம்பெருமானுக்கு திருப்பித் தரவேண்டும்.”

“இப்போதைய போக்குக்கே வழியில்லை. இதில், கப்பத்தையும் கடனாகக் கருதி, அதையும்  திருப்பிச் செலுத்தப் போகிறாயா நீ?”

“ஏன் அந்தணரே... என்னால் முடியாதென்பது உங்கள் முடிவா?”

“சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!”

ரங்க ராஜ்ஜியம் - 31

“இப்போது இல்லை என்பதற்காக எப்போதும் இல்லை என்றாகிவிடுமா?”

“எதற்கு வீண் பேச்சு... இன்றைக்கு மணி அரிசி இல்லை. பெருமாளுக்கே இன்றைக்கு நைவேத்தியம் வெந்நீர்தான். இதற்கு என்ன சொல்கிறாய் நீ?”

வேதியரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நீலன் தடுமாறினான்.

“பதில் சொல்ல முடியவில்லை பார்த்தாயா? நீ பழைய நீலனாக பரகாலனாக இருந்திருந்தால், உனக்கு இல்லாமல் போகும்போது களவாடவாவது செய்வாய். இப்போதோ, நீ வைணவ நெறிக்கு மாறிவிட்ட வைஷ்ணவன். ஒரு வைஷ்ணவன் களவைப் பற்றி நினைப்பதுகூட பாவம்...”

“அந்தணரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“நீ வைணவனாகிவிட்டதால், கை கட்டி நின்று கண்ணீர் விடும் நிலை வந்ததுதான் மிச்சம் என்கிறேன்.”

“அப்படிச் சொல்லாதீர்கள். அதையும் இந்தச் சந்நிதி வாசலில் நின்றுகொண்டு சொல்லாதீர்கள். ஒரு நல்ல வைஷ்ணவனை எம்பெருமான் எப்போதும் கைவிட மாட்டான்.”

“உண்மைதான்... அந்த வகையில் நீ முழுமையான ஸ்ரீவைஷ்ணவனும் இல்லை. உனக்கு இன்னும் மந்த்ரோபதேசமே ஆகவில்லையே! இதில், நான் செய்வேன், நான் சாதிப்பேன்... என்ற பேச்சு வேறு...”

“அவனுக்குத் தொண்டு செய்யத்தானே நான் பேசுகிறேன்...”

“இந்த `நான்'தானப்பா மனிதக் கூட்டத்துக்கே பெரிய பிரச்னை...”

“புரியும்படிச் சொல்லுங்கள்...”

“நான் யார் தெரியுமா... நானொரு அரசன்... நானொரு மாவீரன் அல்லது நானொரு பரம வைஷ்ணவன்... இதெல்லாம் உன்னைக் கட்டிப் போடும் ஒரு கயிறாகி விட்டது. இந்த `நான்' என்பதிலிருந்து நீ விடுபட்டால், உனக்கு ஏதாவது வழி பிறக்கலாம்.

எனக்குத் தெரிந்து, இந்தத் திருவாலி நாடுதான் மழையில்லாமல் தவிக்கிறது. மற்ற இடங்களில் ஒரு குறைவுமில்லை. இந்நிலையில், நீ திருடுவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை. திருட்டு ஒன்றும் உனக்குப் புதிதல்ல. இல்லாதவர் பொருட்டு இருப்பவரிடம் எடுக்கும் களவு உனக்குக் கை வந்த கலை.

ஆனால் நீ வைணவனாகிவிட்ட படியால், அதை நீ செய்ய இயலாது. செய்தாலோ வைணவனாக இருக்க முடியாது. இப்போது அடியவனாகப் பார்க்கப்படும் நீ கொடியவனாகப் பார்க்கப்படுவாய். பாவம் நீ... உனக்கு எப்படி உதவுவது என்றே எனக்கும் தெரியவில்லை.”

வேதியர் வடிவில் வந்த மாலவன் மூட்டிய வெப்பம் நீலனுக்குள் முதலில் குழப்பத்தை விளைவித்தாலும், இறுதியில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

தன் மேனியில் துலங்கிய பன்னிரு திருமண் காப்பை அவர் எதிரில் அழித்துக்கொள்ளத் தொடங்கினான். வெண்ணிற ஆடையைக் களைந்து வேறு ஆடையை ஏற்று, இடைக்கச்சையும் அணிந்துகொண்டான். கட்டாரி முதலானவற்றைத் தரித்துக்கொண்டு, ஆயுதபாணியாக புரவியின் மேல் ஏறி அமர்ந்தான்.

“மன்னா... என்ன இது மாற்றம்?”

“மாற்றம்தான்... நான், இனி மனத்தால் மட்டுமே வைணவன்; புறத்தால் கள்ளன்!”

“அப்படியானால் திருடப்போகிறாயா?”

“ஆம்! என் நாட்டில் நல்ல மழை பொழிவு உண்டாகி, பழைய வளம் ஏற்படும்வரை திருடத்தான் போகிறேன்.”

“திருடியாவது திருப்பணி செய்யத்தான் வேண்டுமா?”

“நிச்சயமாக! இல்லாதவரிடம் திருடினால்தான் குற்றம். இருப்பவரிடம் திருடுவது தவறில்லை.”

“திருட்டுக்கு இப்படி ஒரு நியாயமா?”

“என்ன செய்ய... எனக்கு இப்போது வேறு வழி இல்லையே...?”

“நான் உன்னிடம் விவாதம் செய்தது தவறாகி விட்டது. மன்னா... நன்றாகக் கேட்டுக்கொள்.ஒரு கள்ளன் திருந்தி பக்திநெறியில் சிறந்த வைஷ்ணவனாகலாம். ஆனால் ஒரு  வைஷ்ணவன் ஒருக்காலும் கள்வனாகவே கூடாது.”

“எனக்கு வேறு வழியில்லை என்கிறேனே...”

“நீ தொடர்ந்து தொண்டு செய்ய நினைப்ப தால்தானே களவாட எண்ணுகிறாய். சிறிது காலம் தொண்டு செய்வதை நிறுத்திவிடு.”

“என் உயிருள்ள வரை தொண்டு செய்வேன் என்று சங்கல்பம் செய்திருக்கிறேனே...”

“இப்படிச் சங்கல்பம், தொண்டு என்று நீ சிந்தித்தால், வைணவனாகவே இருக்க முடியாது. பெரும்பாவியாகத்தான் ஆவாய்...”

“உண்மைதான்...  களவாடினால் வைஷ்ணவனாக முடியாது. பாவியாகத்தான் முடியும். ஆனாலும் பரவாயில்லை. வைஷ்ணவனாக வாழா விட்டா லும், வைஷ்ணவத்துக்காக வாழ்ந்துவிட்டு போகிறேன்...”

“என்ன... வைஷ்ணவத்துக்காக வாழப் போகிறாயா?”

“ஆம்! எனக்கு என்னவானாலும் கவலையில்லை. என் வைஷ்ணவ நெறிக்கு எந்தத் தடையும் தீங்கும் இந்த மண்ணில் நேரிடக்கூடாது.என் உடலில் உயிருள்ள வரை அதற்கு நான் இடம் தர மாட்டேன்...”

நீலனின் பதில் வேதியரை சிலிர்க்கவைத்தது.வீரத்தில் தீரம் காட்டிய நீலன், பக்தியிலும் புது இலக்கணம் படைத்து தீரம் காட்டி நின்றான்!

- தொடரும்..

-இந்திரா சௌந்தர்ராஜன்

உறுதிப்பாடு!

ரைகியூ என்ற ஜென் அறிஞர் ஒருவர், தன்   தேநீர் ஜாடியை ஒரு பூக்கூடையில் வைத்து, அந்தப் பூக்குடையைச் சுவரில் ஓர் அழகான  இடத்தில் ஆணி அடித்துத் தொங்கவிட விரும்பினார். 

அதற்காக  மரத்தச்சர் ஒருவரை  வரவழைத்தார். தச்சர் ஏணி மூலம் சுவரின் மீது ஏறினார்.

அறிஞர் கீழே இருந்துகொண்டே தச்சரிடம், “ஆமாம், அந்த இடத்துக்குச் சற்று மேலே..,  வேண்டாம் சற்றுக் கீழே... அங்கே இல்லை கொஞ்சம் இடப்பக்கமாக...'' என்றெல்லாம் கூறி, தான் தீர்மானித்திருந்த சரியான இடம் வரும் வரையில், அந்தத் தச்சருக்கு வழிகாட்டிக்  கொண்டிருந்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 31

அறிஞர் விரும்பிய சரியான இடத்தைத் தச்சர் அடையாளம் கண்டகொண்டார். ஆனாலும் உடனடியாக வேலையை ஆரம்பிக்கவில்லை. அறிஞரைச் சோதிக்க விரும்பி, சுவரில் ஆணி அடிக்கப் போகும் தருணத்தில், அறிஞர் காட்டிய இடத்தை மறந்துவிட்டவர்போல் நடித்தார்.

“இந்த இடத்தில்தானே ஆணி அடிக்கச் சொன்னீர்கள். அல்லது அந்த இடமா... மேலேயா... கீழேயா...” என்று  கேட்டுக்கொண்டே இருந்தார். இப்படி, தச்சர் பல இடங்களைக் காட்டிய போதும், சலித்துக்கொள்ளாமல் பொறுமையுடன் வழிகாட்டி, தான் தேர்ந்தெடுத்த சரியான இடத்தை அடையாளம் காட்டி, அதிலேயே ஆணியை அடிக்கச் செய்து பூக்கூடையைத் தொங்கவிட்டார் அறிஞர்.

எதன்பொருட்டும் நமது இலக்கை மாற்றிக்கொள்ளக் கூடாது!