திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ஆளும் யோகம் அருளும் ஆஞ்சநேய நட்சத்திரம்!

ஆளும் யோகம் அருளும் ஆஞ்சநேய நட்சத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளும் யோகம் அருளும் ஆஞ்சநேய நட்சத்திரம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

ஆளும் யோகம் அருளும் ஆஞ்சநேய நட்சத்திரம்!

`இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், இல்லறக் கடமைகளை தவறாமல் செய்பவர், தூக்கத்தில் விருப்பமுடையவர், ஒழுக்க சீலர், உபகரணங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர், மேன்மையான தவம் புரிபவர், தாய், தந்தையை வணங்குபவர்’ என்று கூறுகிறது, ஜாதக அலங்காரம்.

நட்சத்திர மாலை, `மிக வலியுடையனாகும், வேந்தருக் கினியே, தோளான், முகம் அழகனாகும் மூல நாள் தோன்றினானே...’ என்கிறது.

ஸ்ரீஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், பூமியைப் போல் பொறுமையானவர். அதர்மத்தைக் கண்டால் பூகம்பமாக வெடிப்பவர். நேர்மைக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவர். கம்பீரமான தோற்றமும் தெய்வ பக்தியும் கொண்டவர். பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி கொண்டிருப்பவர்.

பெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் மதிப்பவர். வேத விற்பன்னர், வித்வான், சாது ஆகியோரைக் கண்டால் அவர்களின் பாதம் பணிந்து வணங்குவீர்கள். முன்னோர், மூத்தோர் ஆகியோரின் வார்த்தைகளைத் தவறாமல் பின்பற்றுபவர். கேதுவின் சாரத்திலும் குரு பகவானின் ராசியிலும் பிறந்த நீங்கள், மதச் சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பவர்.

ஆளும் யோகம் அருளும் ஆஞ்சநேய நட்சத்திரம்!

`ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்றொரு பழமொழி உண்டு. நம் அனுபவத்தில் நாம் ஆராய்ந்து பார்த்ததில் அதில் உண்மை ஏதும் இல்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால், மாமனாருக்கு ஆகாது என்பதிலும் எந்த உண்மையும் இல்லை. ‘ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்’ என்பதுதான் உண்மையாகும். அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து, சந்திரனைக் குரு பகவான் பார்க்க, நல்ல தசா புக்தி கூடி வரும் காலத்தில், அரசாளும் யோகம் உண்டு. மூல நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்திருந்தால், சத்துருக்களை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் இருக்கும்.

எனவே, மாமனாருக்கு ஆகாது என்று எண்ணி மூல நட்சத்திரத் தில் பிறந்தவளை ஒதுக்க வேண்டாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டில் மாமனார், மாமியாருடன் ஒற்றுமையாக வாழ்வதையும் மாமனார் நீண்ட ஆயுளுடன் இருப்பதையும் கண்கூடாகக் காணலாம்.

சிறுவயதிலேயே நல்ல உடல்வாகும் பேச்சுத் திறமை யும் கொண்டிருப்பீர்கள். கல்வியறிவுடன் அனுபவ அறிவும் உங்களுக்கு அதிகம் இருக்கும். கல்வி கற்கும் வயதிலேயே சுக்கிர தசை வருவதால், வாகனம் உள்ளிட்ட பல வசதிகள் இயல்பாகவே இருக்கும். ஆனால், உங்களில் சிலர் படிப்பில் அலட்சியமாக இருப்பார்கள். இடையில் கல்வி தடைப்படுவதும் உண்டு. ஆசிரியர்களிடம் எதிர்க் கேள்வி கேட்பது உங்களுக்குக் கை வந்த கலை. உங்களில் பலர், விளையாட்டில் பதக்கங்கள் பெறுவார்கள்.

மருத்துவம், சட்டம், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்களில் பலர் ராணுவம், காவல் ஆகிய துறைகளில் சவாலான பெரிய பதவிகளில் இருப்பீர்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர்த் தளவாடங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பீர்கள்.

வேலை செய்யும் நிறுவனத்துக்கு விசுவாசமாக அயராது உழைப்பீர்கள். மூத்த அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக இருப்பீர்கள். தன்மானத்துக்கு பங்கம் ஏற்பட்டால் அந்த நிமிடமே பதவியைத் துச்சமாக எண்ணி, ராஜினாமா செய்வீர்கள். உங்களில் பலர் 40 வயதிலிருந்து சுய தொழில் தொடங்குவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல் குவாரி, மருந்துக் கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவீர்கள்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

51 வயதிலிருந்து அதிகாரம் மிக்க உத்தியோகத்தில் அமர்வீர்கள். ஓய்வுபெற்ற பின்பும் ஓயாமல் உழைப்பீர்கள். பைல்ஸ், நுரையீரல், கல்லீரல் சார்ந்த பாதிப்பு வந்து நீங்கும். உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் முரட்டுத்தனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே நல்லது. உங்களில் பலர், வயதான காலத்தில் துறவறத்தில் நாட்டம் கொள்வீர்கள். கோயில்களைவிட சித்த பீடங்களையும் தியான மண்டபங்களையும் தேடிப் போவீர்கள். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.

முதல் பாதம் 

(கேது + குரு + செவ்வாய்)


முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள் பிரச்னைகளுக்குப் பின்வாங்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடுவார்கள். தனி லட்சியப் பாதை ஒன்று வைத்திருப்பார்கள். துரோகம் செய்பவர்களை ஒதுக்குவார்கள்.

இவர்கள் கொஞ்சம் கருமியே. வேற்று மதத்தவர்கள், வேற்று மாநிலத்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் இருக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவார்கள். கெமிக்கல், எலெக்ட்ரிகல், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். பிறந்த மண்ணையும் பெற்ற தாயையும் அதிகம் நேசிப்பார்கள். கிழங்கு பதார்த்தங்களை விரும்பி உண்பார்கள். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாலும் நிதானம் தவறமாட்டார்கள்.

எந்தக் காரியத்தையும் தள்ளிப்போடாமல் விரைந்து முடிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். 24 வயதிலேயே புகழடைவார்கள். சிலருக்கு 33 வயதுக்குள் சகல சௌபாக்கியமும் கிட்டும். 42 முதல் 50 வயது வரை பெரிய பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்: நாமக்கல் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை ஸ்ரீ நரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை சிறக்கும்.

இரண்டாம் பாதம்

(கேது + குரு + சுக்கிரன்)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்களுக்குச் சமயோசித புத்தி அதிகமாக இருக்கும். சிரித்த முகத்துடனும் எதிலும் துடிப்புடனும் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள். இனிப்பை விரும்பி உண்பார்கள். எப்போதும் உண்மை பேச முற்படுவார்கள். நவீன ரக ஆடை, ஆபரணம், வாகனம் ஆகியவற்றை விரும்புவார்கள். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.

படிப்பில் முதலிடம் பிடிக்க முயற்சி செய்வார்கள்.  பல மொழிகளையும் கற்றிருப்பார்கள். இரக்கம் மிக்கவர்கள். அதனால் சிலரிடம் ஏமாந்து போவார்கள். பூர்விகச் சொத்துகள் இருந்தாலும் சொந்த உழைப்பில் வீடு, வாகனம் வாங்குவார்கள். பெரியோர்களையும் பெற்றோரையும் மதிப்பார்கள். மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவ்வப்போது அவர்களுக்குப் பரிசுப் பொருள்களை வாங்கித் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் இவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். 24 முதல் 30 வயதுக்குள் வி.ஐ.பி-களின் நட்பு  கிடைக்கும். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துகள் சேரும்.

பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள திருநீர்மலையில் அருளும்  ஸ்ரீஅணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கும்.

மூன்றாம் பாதம் 

(கேது + குரு + புதன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் வாதிடத் தயங்க மாட்டார்கள். பிறர் சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எந்த வேலையையும் தானே செய்வார்கள். பரந்த அறிவு கொண்டவர்கள்.

சிலர் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர், ஆவிகளின் சமிக்ஞை களை அறிந்தவர்களாக இருப்பார்கள்.

தான தரும அறக்கட்டளை வைத்து நடத்துவார்கள். துவையல், பொடி மற்றும் பழங்களை அதிகம் விரும்புவார்கள். எதையும் முழுமையாக முடிப்பதில் சிறு தடங்கல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் அளவாகப் பழகுவார்கள். சிறு வயதில் பல ஏமாற்றங்களைச் சந்திப்பார்கள். தவறு செய்தால் பெற்றோராக இருந்தாலும் அவர்களை ஒதுங்கி விடுவார்கள்.

வியாபாரத்தில் ஆர்வம் உண்டு. ஏஜென்சி, புரோக்கரேஜ் மூலம் லாபம் சம்பாதிப்பார்கள். கட்டுப்பாடு இல்லாத உத்தியோகம் என்றால் மட்டுமே வேலையைத் தொடர்வார்கள். மற்ற எவரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு, மனைவி - பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். 24 வயதிலிருந்து அடையவேண்டிய இலக்கு இவர்களுக்குத் தெரியும். 40 வயது முதல் அதிரடி முன்னேற்றங்கள் வாழ்வில் நிகழும்.

பரிகாரம்: திருவதிகையில் அருளும் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீவீரட்டேஸ்வரரை வணங்கி வாருங்கள்; எதிர்காலம் சிறப்பாகும்.

நான்காம் பாதம் 

(கேது + குரு + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் அதிகாரப் பதவியில் அமர்வார்கள். இளம் வயதிலேயே திட்டமிட்டு எதையும் செய்வார்கள். எதிலும் தோல்வி வராதபடி பார்த்துக்கொள்வார்கள். அரசியல், ஆன்மிகம், அறிவியல் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள்.

பால், தயிர் கலந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். மற்றவர்கள் இவர்களை விமர்சிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். பொதுவாக அமைதியை விரும்புபவர்கள். தேவைப்பட்டால் யுத்தம் செய்யவும் தயங்க மாட்டார்கள். கோபப்படாமல் சிரித்த முகத்துடன்  சாந்தமாக இருப்பார்கள்.

செல்வம், செல்வாக்கை விரும்புபவர்கள். அவ்வப்போது சந்நியாசம் பற்றியும் யோசிப்பார்கள். வயிற்று வலி, கழுத்து நோய், சுவாசக் கோளாறு ஆகியவை வந்து பிறகு நீங்கும். படிப்பில் சூரப்புலிகள். ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற சவாலான கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள்.

கட்சிக்கு, இயக்கத்துக்குத் தலைமை தாங்குவார்கள். அரசு மரியாதை இவர்களுக்கு இருக்கும். மனைவியையும் தாயையும்  ஒருசேர அதிகம் நேசிப்பார்கள். ஆகவே சில நேரங்களில் தாயா, தாரமா என்ற போராட்டம் வரத்தான் வரும். இவர்களுடைய வார்த்தையைப் பிள்ளைகள் தட்டமாட்டார்கள். 25 வயதுக்குள்ளேயே தெளிவான எதிர்காலம் தெரியும்.

39 வயதிலிருந்து எல்லா வளங்களும் பெருகும்.

பரிகாரம்: பஞ்சமி திதியன்று சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

மூல நட்சத்திரம்

நட்சத்திர தேவதை : அஷ்டதிக்பாலர்களில் வடமேற்குக்கு  அதிபதியான நிருதி.

வடிவம்     :  அங்குசம் போன்ற வடிவத்தில் ஆறு  நட்சத்திரக் கூட்டமைப்பு.

எழுத்துகள்        : யே, யோ, பா, பீ.

ஆளும் உறுப்புகள்    : இடுப்பு, தொடை, நரம்புகள்.

பார்வை    : கீழ்நோக்கு.

பாகை    : 240.00 - 253.20

நிறம்    : கருமை.

இருப்பிடம்    : பட்டினம்.

கணம்    : ராட்சச கணம்.

குணம்    : உக்கிரம்.

பறவை    : செம்போத்து.

மிருகம்    : பெண் நாய்.

மரம்    : பாலுள்ள மாமரம்.

மலர்    : அசோக புஷ்பம் (சிவப்பு).

நாடி    : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி    : சர்க்கரைவள்ளி வேர்.

பஞ்சபூதம்    : வாயு.

நைவேத்யம்    : தயிர் வடை.

தெய்வம்    : ஸ்ரீஆஞ்சநேயர்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி
தன்னோ மாருதி ப்ரசோதயாத்


அதிர்ஷ்ட எண்கள்    : 2, 3, 7.

அதிர்ஷ்ட நிறங்கள்    : பழுப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசை    : வடமேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வியாழன், செவ்வாய்.

அதிர்ஷ்ட ரத்தினம்    : வெண் ஓபல் (Opal)

அதிர்ஷ்ட உலோகம்    : பிளாட்டினம்.

மூல நட்சத்திரத்தில்...

விவாகம், விதை விதைத்தல், கிரகப்பிரவேசம், தானியம் வாங்குதல், வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்ளுதல், குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், மருந்துண்ணுதல், பரிகார பூஜை ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் கிட்டும்.

பரிகார ஹோம மந்திரம்

மூலம் ப்ரஜாம் வீரவதீம் விதேய
பராச்யேது நிர்ருதி: பராசா
கோபிர் நக்ஷத்ரம் பசுபி: ஸமக்தம்
அஹர்ப்பூயாத் யஜமானாய மஹ்யம்
அஹர் நோ அத்ய ஸுவிதே ததாது
மூலந் நக்ஷத்ர மிதி யத்வதந்தி
பராசம் வாசா நிர்ருதிந் நுதாமி
சிவம் ப்ரஜாயை சிவமஸ்து மஹ்யம்

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்