திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

? சில வருடங்களாகப் பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் கஷ்டங்கள் தீரவும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- சிவசங்கரன், சென்னை - 94

! ஜோதிட சாஸ்திரத்தில், பல வகையான யோகங்களைப் பற்றிய விளக்கங்கள் உண்டு. கஜகேசரி யோகம், பரிவர்த்தனை யோகம், குரு மங்கள யோகம் என்று பல யோகங்கள் உள்ளன. அவற்றில் குபேர யோகமும் ஒன்று.

 ஒருவருடைய ஜாதகத்தில், தன ஸ்தானமாகிய 2-ம் வீட்டின் அதிபதி, பாக்கிய ஸ்தானமாகிய 9-ம் வீட்டில் இருப்பதும், 9-ம் இடத்துக்கு உரிய கிரகம் 2-ல் இருப்பதும், 2-க்கு உரியவர் 11-லும் 11-ம் இடத்துக்கு உரியவர் 2-லும் இருக்கும் நிலையும் குபேர யோகத்தைக் குறிப்பனவாகும்.

ஒருவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய ஜாதகத்தில் குபேர யோகம் அமையப்பெற்றிருந்தால், உரிய காலத்தில் அளவற்றச் செல்வங்களைப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார்.

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் தனம் மற்றும் சுக ஸ்தானங்களில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகியவை அமையப்பெற்றிருந்தால், அவர் எவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வறுமையை அனுபவிக்க நேரிடும். அதேநேரம், அந்த இடத்துக்குக் குருவின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், உரிய பரிகாரங்கள் மூலம் பணக்கஷ்டத்திலிருந்து விடுபட முடியும்.

தங்களின் ஜாதகத்தில் சுக ஸ்தானத்தில் கேது இருந்தாலும் அவருக்குக் குருவின் பார்வை இருப்பதால், எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றிவைத்து, மகாலட்சுமி ஸ்துதிகளைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், முன்னேற்றம் ஏற்படும். இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

? மனக்குழப்பத்தால் மிகவும் கஷ்டப் படுகிறேன். சரியான உறக்கம் இல்லை என்பதால், என் பணிகளைச் செய்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இந்தப்  பிரச்னைகள் தீர என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- புஷ்பவனம் ராமன், நாகப்பட்டினம்

!மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிக் கட்டத்தை, ‘கால புருஷன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்தக் கால புருஷனின் லக்னம் மற்றும் எட்டாம் இடங்களின் அதிபதியாகத் திகழ்பவர் செவ்வாய். இவர் மனித உடலில் ரத்தத்துக்குக் காரகத்துவம் வகிக்கிறார். அவர் நல்ல நிலையில் அமைந்திருக்கவேண்டும்.

தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றுள்ளார். எனவேதான், தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக செவ்வாய் நீசம் பெற்றிருக்கும் நிலையில்... செவ்வாய் தசை நடைபெறும் காலங்களிலும் மற்ற கிரகங்களின் தசையில் செவ்வாய் புக்தி மற்றும் அந்தரம் நடைபெறும் காலங்களிலும் ஒருவரின் மன அமைதி பாதிக்கப்படும்.

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

தங்கள் ஜாதகத்தில், தற்போது சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வருடம் நீடிக்கும். எனவே, தாங்கள் செவ்வாய் கிரகத்துக்கு உரிய பரிகார ஹோமம் செய்வது நல்லது. உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரவும். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபடுவதும் நன்மை தரும். அடுத்தடுத்து வரும் கிரக தசைகளில் - செவ்வாய் புக்திக் காலங்களிலும் இந்தப் பரிகாரங்களைச் செய்தாலே போதும்; பிரச்னைகள் விலகும்.

? எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என் ஜாதகத்தில் தோஷமுள்ளதா என்பதைத் தெரிவிப்பதுடன், உரிய பரிகாரங்களையும் கூறும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

- எஸ்.சுந்தரமூர்த்தி, திருவையாறு

!ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, பல அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 12 பாவங்கள், அந்த பாவங்களின் அதிபதி, அந்த பாவங்களுக்கு உரிய காரகரின் நிலை என்று அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தே பலன் சொல்லவேண்டும்.

நீங்கள் துலா லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். 5-ம் இடமான கும்பத்தில், புத்திரகாரகர் குரு அமைந்துள்ளார். புத்திர ஸ்தானத்தில் புத்திர காரகர் அமைந்திருப்பது புத்திர தோஷத்தைக் குறிப்பிடும். மேலும் உங்கள் லக்னத்துக்கு 3 மற்றும் 6 ஆகிய  மறைவு ஸ்தானங்களுக்கும் குருவே அதிபதியாகி, 5-ம் வீட்டில் அமர்ந் திருக்கிறார். இதுவும் தோஷம்தான். ஆனால், குருவுடன் செவ்வாய் அமைந்திருப்பதன் மூலம் தங்களுக்குக் குரு மங்கள யோகம் உள்ளது.

எனவே, உங்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. ஒருமுறை குருவாயூருக்கோ அல்லது திருக்கோஷ்டியூருக்கோ சென்று பிரார்த்தனை செய்து வாருங்கள். குழந்தை பாக்கியம் கிடைத்தால் குழந்தையின் எடைக்கு எடை சர்க்கரை துலாபாரம் செய்வதாக வேண்டிக்கொள்ளுங்கள்.

பணக்கஷ்டம் விலக பரிகாரம் என்ன?

? எனக்கு 30 வயது நிறைவடைந்துவிட்டது. பல ஜாதகங்கள் பொருந்தி வந்தாலும், ஏதேனும் காரணத்தால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. ஜாதகத்தை ஆராய்ந்து ஏதேனும் பரிகாரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

- இரா.வைத்தியலிங்கம், கும்பகோணம்

!ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமணத்தின் அடிப்படையே வம்சவிருத்திதான். அதனால்தான் ஒருவருக்குத் திருமணம் நடைபெற்று சில மாதங்கள் கடந்துவிட்டாலே, ‘ஏதேனும் விசேஷம் உண்டா’ என்று விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னதான் வசதிகள் இருந்தாலும் இன்றைக்குப் பலருக்கும் திருமணம் தடைப்பட்டு வருவதை நாம் பார்க்கவே செய்கிறோம். வம்ச விருத்திக்குக் காரணமான திருமணம் ஒருவருக்குத் தடைப்படுவதற்கான பல காரணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

திருமண முயற்சிகளை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் குருபலம் வந்துவிட்டதா என்றுதான் பார்க்கிறார்கள். குரு பலம் அவசியம்தான். ஆனால், அதுமட்டுமே போதுமானதாக இருக்காது. திருமணத்தைக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு உரிய கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெறவேண்டியதும் அவசியம்.

மேலும், ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்தில் உள்ளாரோ, அந்த இடத்துக்குச் சுக்கிரன் கோசாரத்தில் வரும்போது, திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் கூடி வரும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஆகியோர் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்த இடத்துக்குச் சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், தோஷம் நிவர்த்தியாகி திருமணம் கூடி வரும்.

மேலும் திருமணம் வம்ச விருத்திக்கானது என்பதால், புத்திரகாரகரான குரு கோசாரப்படி நல்ல இடங்களுக்கு வரும் போதும் அந்த இடங்களுக்குக் கோசார குருவின் பார்வை ஏற்படும்போதும் திருமணம் நடைபெறும் என்கின்றன, ஜோதிட சாஸ்திர நூல்கள்.

நீங்கள் கடக லக்னம் துலாம் ராசியில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 7-ல் சனி இருக்கிறார். அது சனியின் சொந்த வீடு என்பதாலும், அந்த வீட்டுக்குக் குருவின் பார்வை ஏற்பட்டிருப்பதாலும் அடுத்து வரும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடி வரும். ஆகவே, பெரிதாகப்  பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், அனுதினமும் காலையில்  குளித்து முடித்து, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றிவைத்து, அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்பாளை வழிபட்டு வாருங்கள். அன்னையின் திருவருளால் விரைவில் திருமணம் கூடிவரும்; உங்கள் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணைவர் அமைவார்.

- பதில்கள் தொடரும்...

 -வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757,அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com