Published:Updated:

``நரசிம்மரை வேண்டிக்கிட்டா சூரியனைக் கண்ட பனிபோல பிரச்னைகள் விலகிடும்!" - வழக்கறிஞர் சுமதி #WhatSpiritualityMeansToMe

``என்னுடைய இஷ்டதெய்வம்னா சோளிங்கரில் கோயில் கொண்டிருக்கும் லட்சுமி நரசிம்மர்தான். எங்க குடும்பத்துக்குக் குலதெய்வமும் அவர்தான். எங்க பாட்டியெல்லாம் சோளிங்கர் கோயிலுக்குப் போனால் பத்து நாள்களுக்கு மேல தங்கியிருந்து சாமி கும்பிட்டுட்டுப் பொறுமையா வருவாங்க. அந்த அளவுக்கு பக்தி''.

``நரசிம்மரை வேண்டிக்கிட்டா சூரியனைக் கண்ட பனிபோல பிரச்னைகள் விலகிடும்!" -  வழக்கறிஞர் சுமதி #WhatSpiritualityMeansToMe
``நரசிம்மரை வேண்டிக்கிட்டா சூரியனைக் கண்ட பனிபோல பிரச்னைகள் விலகிடும்!" - வழக்கறிஞர் சுமதி #WhatSpiritualityMeansToMe

``குற்றவியல் துறை வழக்கறிஞரா இருக்கிறதால எனக்குப் பலவிதமான பிரச்னைகள், குழப்பங்கள் தொழில்ரீதியாக வரும். அதுமாதிரி நேரங்கள்ல மனசுக்குள்ள நரசிம்மரை நினைச்சுக்குவேன். சில நாள்கள்லயே சூரியனைக் கண்ட பனிமாதிரி அந்தப் பிரச்னைகளை விலகிப் போகச் செஞ்சிடுவார்" - நெகிழ்ச்சியாகத் தொடங்குகிறார் வழக்கறிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான சுமதி. 

``என்னுடைய இஷ்டதெய்வம்னா சோளிங்கரில் கோயில் கொண்டிருக்கும் லட்சுமி நரசிம்மர்தான். எங்க குடும்பத்துக்குக் குலதெய்வமும் அவர்தான். எங்க பாட்டியெல்லாம் சோளிங்கர் கோயிலுக்குப் போனால் 10 நாள்களுக்கு மேல தங்கியிருந்து சாமி கும்பிட்டுட்டுப் பொறுமையா வருவாங்க. அந்த அளவுக்கு பக்தி.

எனக்கும் தனிப்பட்டமுறையில நரசிம்மரை ரொம்பவும் பிடிக்கும், காரணம் அவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வம். என்னதான் இரணியன் குயுக்தியா வரம் வாங்கினாலும், அதிலும் ஒரு வித்தியாசமான அறத்துடன்கூடிய வழியைக் கண்டுபிடித்து இரணியனுக்குப் பாடம் புகட்டி, தன் அவதார மகிமையை வெளிப்படுத்தினார் நரசிம்மர். மனுஷன் எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும், அவனைவிடவும் கடவுள் அதிபுத்திசாலிங்கிறதை உணரவெச்ச பெரிய இதிகாசகாலச் சம்பவம். திருப்பதியில் கோயில் கட்டினப்போகூட முதல்ல நரசிம்மர் தூணைத்தான் எழுப்பினார்கள் என்று சொல்லுவார்கள்.

குற்றவியல் துறை வழக்கறிஞராக இருக்கிறதால எனக்குப் பலவிதமான பிரச்னைகள், குழப்பங்கள் தொழில் ரீதியாக வரும். ஆனா, அதுமாதிரி நேரங்கள்ல நரசிம்மரை நினைச்சுக்குவேன். நம்மால் முடிஞ்சதை நாம பண்ணிட முடியும். நம்மால் முடியாததை அவன்கிட்ட விட்டுட்டு சரணாகதியா இருக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

ஒருமுறை எங்க ஆபீஸ்ல வேலை பார்த்த 12 பேர்ல நாலு பேர் மட்டும் கொஞ்சம் சரியில்லாம இருந்தாங்க. அவங்களால எனக்கு அப்பப்போ ஏதோ ஒரு பிரச்னை வரும். சூழ்நிலை ரொம்பவும் கடினமா இருந்துச்சு. நேரா சோளிங்கருக்குக் கிளம்பிப்போனேன். 
750 அடி உயரத்துல, 1,305 படிக்கட்டுகளுடன் இருக்கிற சோளிங்கர் மலையேறிப் போய், யோக நிலையிலிருக்கிற லட்சுமி நரசிம்மரை வழிபட்டேன். தினமும் காலையில் குளிச்சு முடிச்சுட்டு சாமி படத்துக்கு முன்னால நின்னு சொல்ற,

``மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே''
 

என்னும் திருமங்கையாழ்வார் பாசுரத்தை மனதார உருகிப்பாடி கும்பிட்டுட்டு வந்தேன். எனக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த அந்த நாலு பேரும் ஒரே வாரத்துல அவங்களாகவே ஆபீஸை விட்டு விலகிப்போயிட்டாங்க. அந்தத் திருத்தலத்துல நாலு நிமிஷம் இருந்து வழிபட்டாலே போதும், நாம நினைச்ச காரியம் நினைச்சபடி நடக்கும்ங்கிறது பலரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை எனக்குமிருக்கு. 

அதேமாதிரி இந்த மலைக்கு எதிரில் இருக்கிற 350 அடி உயரத்துல, 406 படிக்கட்டுகளுடன் கூடிய மலையில் தியான நிலையிலிருக்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சிவியா இருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்துவைக்கிறார். இந்த இரண்டு மலைகளில் இருக்கும் தெய்வங்களின் நினைவாகத்தான் எங்கள் மகளுக்கு `சிம்மாஞ்சனா'னு பெயர் வெச்சிருக்கோம். 

என்னுடைய குருன்னு சொல்லணும்னா குரு ராகவேந்திரரைச் சொல்லுவேன். அவரும் பிரகலாதனுடைய அம்சம்தான். நரசிம்மருக்கு அடுத்து, நான் வணங்குவது சரஸ்வதியைத்தான். ஒவ்வொரு நாளும் பூஜையின்போது, குமரகுருபரர் இயற்றிய, 

``வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே'' 

எனும் `சகலகலாவல்லி மாலை சரஸ்வதி துதி'யைச் சொல்லி வழிபடுவேன். வருஷத்துல ரெண்டுமுறையாவது கூத்தனூருக்குப் போய் சரஸ்வதியை வழிபட்டு வருவேன். கல்விக் கண் கொடுத்த கண்கண்ட தெய்வம் அல்லவா? என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுமதி.