திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

`செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!

`செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
`செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!

- டாக்டர் டி.எஸ்.என்

ருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது சந்திரன் மற்றும் சுக்கிரன் அமைந்துள்ள இடத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷம் எனக் குறிப்பிடப்படுகிறது.

‘செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்குத் திருமணம் எளிதில் ஆகாது. செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதே தோஷம் உள்ளவரையே திருமணம் செய்துவைக்க வேண்டும்; இல்லையெனில் வீண் அபவாதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு’ என்பார்கள். ஆனால், செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க... செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து,  விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன. அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம். 

`செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!

• கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டிலிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

• செவ்வாய் இருக்கும் 2-ம் இடம், மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷம் இல்லை

• செவ்வாய் இருக்கும் 4 -ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷம் இல்லை

• செவ்வாய் இருக்கும் 7-ம் இடம் கடகம், மகரமானால் தோஷம் இல்லை.

• செவ்வாய் இருக்கும் 8-ம் இடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.

• செவ்வாய் இருக்கும் 12-ம் இடம் ரிஷபம், துலாம் ஆனால் தோஷம் இல்லை.

• சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

• குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.

• சந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

• புதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

• சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

• செவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி, லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளிலிருந்தால் தோஷம் கிடையாது. உதாரணமாக கும்ப லக்ன ஜாதகருக்குக் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரது ஜாதகத்தில், சனி துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம். `லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் கும்ப ராசியின் அதிபதியான சனி, லக்னத்துக்கு 9-வது வீடான துலாத்தில் இருப்பதால், செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.

• 8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசியானது மேஷம், சிம்மம், விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை.

• செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகியவை. உச்ச வீடு மகரம். எனவே மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.
 சனி, குரு, கேது ஆகிய கிரகங்களோடு செவ்வாய் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தாலோ தோஷம் கிடையாது.

• செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், குரு. இவர்களின் வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

இவை தவிர, ஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமணம் நிகழும் முன்பே செவ்வாய் தசை நடந்து முடிந்துவிட்டால், செவ்வாய் தோஷம் பாதிக்காது என்பார்கள். உதாரணமாக மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனன கால தசை, செவ்வாயாக அமையும். அவர்களின் 6-7 வயதுக்குள் செவ்வாய் தசை நடந்து முடிந்து விடும். இவர்களுக்குத் திருமண காலத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு இருக்காது என்பார்கள்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குக் காரணங்களை மொத்தமாகக் கருத்தில் வைத்துப் பார்த்தால் செவ்வாய் தோஷம் பற்றிய பயம் நீங்கும்.

12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளில் செவ்வாய் இருந்தால்... அந்த இடம் லக்னம் 2, 4, 7, 8, 12 - ஆக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. இதை ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல் மற்ற விதிவிலக்குக் காரணங்களையும் வைத்துப் பார்த்தால், நூற்றில் ஐந்து  ஜாதகர்களுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கும்.

எனவே, மேலோட்டமாக ஜாதகத்தைப் பார்த்துவிட்டு செவ்வாய் தோஷம் என்ற முடிவுக்கு வரவேண்டாம்;  திருமணம் அமைவது கடினம் என பயம்கொள்ள வேண்டாம். துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.