திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

சோமயாகப் பெருவிழா!

சோமயாகப் பெருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
சோமயாகப் பெருவிழா!

சோமயாகப் பெருவிழா 8.6.19 - கோயில்திருமாளம்

சோமாசிமாற நாயனார், அந்தண குலத்தில் தோன்றிய அடியார். உலக நன்மைகள் அன்றி வேறு பலன் எதிர்பாராது வேள்விகள் செய்யும் உத்தமர். அகிலம் அனைத்தும் பயன்பெறச் செய்யப்படும் அற்புதமான சோமயாகத்தைச் செய்ய விரும்பினார் சோமாசிமாற நாயனார். அதன் அவிர்பாகத்தை அந்த ஆரூர் பெருமானே நேரில் வந்து பெற்று  அருளவேண்டும் என்று தீராத தாகம் கொண்டார். அதற்கு ஆவன செய்யுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார்.  சுந்தரரும் அப்படியே உதவ வாக்கு தந்தார். யாகமும் தொடங்கியது.

மறையோர் வேதம் முழங்க, சோமயாகம் சிறப்பாக நடந்துமுடியும் தறுவாயை எட்டியது. இனி அவிர்பாகம் இடவேண்டியதுதான் பாக்கி. சிவன் அங்கு பிரசன்னமாகப் போகும் தருணத்திற்காகக் காத்திருந்தனர் அடியார்கள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

சோமயாகப் பெருவிழா!

ஒரு நீசன் கையில் நான்கு நாய்களைக் கட்டியிழுத்துக் கொண்டு, தோளில் மரித்த கன்றினைச் சுமந்தபடி தாரை தப்பட்டைகள் முழங்க யாக சாலைக்கு அருகில் வந்தார். அவனோடு, இரு குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு அவன் மனைவியும் வந்தாள். இதைக் கண்டு அனைவரும் வெறுத்து விலகி ஓட, சோமாசிமாற நாயனாரோ, அவர் யார் என்பதை உணர்ந்தார்.

சங்கரரை நீசனாகி வழிமறித்து ஆட்கொண்ட ஈசனே, தன்னை ஆட்கொள்ள நீச ரூபம் கொண்டதை அறிந்தார் சோமாசிமாற நாயனார். நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்பதையும், மதுக்குடம் சுமந்தவள் அன்னை அம்பிகை எனவும், அவள் முதுகின் பிள்ளைகள் விநாயகன் முருகன் எனவும் அறிந்தார். காண்போர் வியக்க, அவிர்பாகத்தை மாற்று உருவில் வந்த அந்த மறையவனுக்கே வழங்கினார். அந்தக் கணத்தில் தியாகேசர் நீச ரூபம் நீங்கி இடப வாகனராய் காட்சிகொடுத்து அருளினார்.

அனைவருக்குள்ளும் ஆண்டவன் உறைகிறான் என்பதை உணர்த்திய இந்தத் திருவிளையாடல், ஒவ்வொரு ஆண்டும் திருவாரூருக்கு அருகில் உள்ள கோவில்திருமாளத்தில், சோமயாகப் பெருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 8.6.19 அன்று (சனிக்கிழமை) ஆயில்ய நட்சத்திர நாளில், கோவில்திருமாளத்தில் உள்ள மகாகாளநாத சுவாமி ஆலயத்தில், சோமயாகப் பெருவிழா உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு ரிஷபாரூடனை தரிசனம் செய்தால் முன்வினைப் பயன்கள் நீங்கி, மெய்ஞ்ஞான வரம் பெறலாம் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது : திருவாரூர் - மயிலாடுதுறை பயணப்பாதையில் பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது கோவில்திருமாளம். மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

-சைலபதி