திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 29

சிவமகுடம் - பாகம் 2 - 29
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 29

சிவமகுடம் - பாகம் 2 - 29

சிவமகுடம் - பாகம் 2 - 29

துடி முழக்கம்!

வானில் மேகங்கள் ஒரு நிலையிலில்லாமல் பிரிந்தும் கூடியும் திரிந்துகொண்டிருந்தன. மேகப் பொதிகளில் சில, மெள்ள மேற்கில் நகர்ந்து மாலிருஞ் சோலையின் முகடுகளைச் சூழ்ந்துகொண்டன.

அவற்றைப் பின்தொடர்ந்து வந்து, ஆகாயப் பந்தலென மதுரையின் விண் பரப்பை ஆக்கிரமிக்க யத்தனித்த வேறு மேகங்கள் பலவும் காற்றின் விசைக்கு ஈடுகொடுக்க முடியாமல், தங்களின் முயற்சியில் தோற்றுப்போய், அலைபாய்ந்தன.

மேகங்கள் இப்படியென்றால், அவை விலகும் போது தலைகாட்டியும் கூடும்போது மறைந்தும் திகழ்ந்த சந்திரன், தண்ணொளியை மதுரை மண்மீது முழுமையாகப் பாய்ச்ச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் என்றே சொல்லலாம்.

ஆனால், 7-ம் நூற்றாண்டின் மத்திம பாகத்தில், பரதக் கண்டத்தின் தெற்கில், பரந்துவிரிந்த பாண்டியப் பேரரசின் தலைநகரில் காலத்தால் திணிக்கப்பட்ட அந்த யுத்தத்தில் களமாடி மீண்ட வீரன் எவனையேனும் கேட்டால், சந்திரனின் அன்றைய தவிப்புக்கு வேறு காரணத்தைச் சொல்லக்கூடும்.

ஆம்... அன்னை மீனாட்சி குடியிருக்கும் கோயிலை அல்லவா சூழ்ந்து நிற்கிறது பகைவர் படை. கடும்போர் மூண்டால், பகைவர் படை உள்ளே புகுந்துவிட்டால் நிலைமை என்னவாகும்... குருதி சிந்தாத போர் உண்டா என்ன... ரத்தக்கறை படிந்தால், பார் போற்றும் அந்தப் பேராலயத்தின் புனிதம் என்னவாகும்... அன்னையின் மடியில் ஏறியா பிள்ளைகள் அடித்துக்கொள்வது... இப்படியான எண்ணங்களாலேயே சந்திரன் தவித்துப்போயிருப்பான்; போரின் போக்கைக் காண அஞ்சி மேகத்திரைக்குப் பின் மறைந்து கொண்டிருப்பான் என்று பதில் கிடைக்கலாம்.

ஆனால், காலத்தின் கணக்கு வேறுவிதமாக இருந்தது. பாண்டிமாதேவி போட்டுக் கொடுத்த திட்டமும் அதைச் செயல்படுத்திய பேரமைச்சர் குலச்சிறையாரின் தீரமும் விளைவுகளைக் காலத்தின் தீர்ப்போடு மிகச் சரியாகப் பொருந்தச்செய்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 29

விநோதமாக... ஓர் உடுக்கையின் நாதவொலி யோடு தொடங்கியது அந்தப் போர்.

வழக்கமாக ஒரு போர் தொடங்குகிறது எனில், அதற்கு அத்தாட்சியாக முரசங்கள் முழங்கும்; எக்காளங்கள் ஒலியெழுப்பும். ஆனால், துடி எனும் உடுக்கை முழக்கம்கொண்டு போர் தொடக்கம் நிகழ்கிறது எனில், அது விநோதத்திலும் விநோதம் அல்லவா!

சாதாரணமானவர்களுக்குத்தான் அது விநோதம். இந்த அண்டபகிரண்டத்தின் படைப்புக்கும் துடியின் ஒலியே தொடக்கம் என்பதை அறிந்து தெளிந்த பேரரசியார் மற்றும் குலச்சிறையார் போன்ற சிவத் தொண்டர்களைப் பொறுத்தவரை எவ்வித விநோதங்களும் இல்லை.

`ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் அந்தப் பரமனின் இயக்கமே. அவற்றில் அவர் படைத் தலை நிகழ்த்துவது, `துடி’ எனும் உடுக்கையின் முழக்கத்தால். `டம டம’வென திசையெட்டும் முழங்கும் துடியின் நாதத்திலிருந்து அகாரமும் உகாரமும் மகாரமும் தோன்றி ஒன்றிணைய, `ஓம்...’ எனும் பிரணவம் எழுந்தது; இந்தப் பிரபஞ்சம் பிறந்தது’ என்று ஞானநூல்கள் போற்றுகின்றனவே.

பரமனின் திருக்கரத்தில் திகழும் அந்தத் துடியின் முழக்கத்தையே தன் படைகளுக்குச் சமிக்ஞை ஒலியாக்கி, பெரும் வெற்றி முழக்கத்துக் கும் பாண்டிமாதேவியார் வித்திட்டதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லைதான்.

துல்லியமாகவே திட்டம் வகுத்திருந்தார்கள் பகைவர்கள். வடக்கே சாளுக்கியத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில், பாண்டியப் பெரும்படையில் ஒரு பாதி வடக்கே நகர்ந்திருந்தது. அதேநேரம், சேரர் மீதும் கண்வைத்திருக்க எண்ணி, மறு பாதியை வனப்புறத்தில் மறைந்துறையச் செய்திருந்தார் கூன்பாண்டியர். இதையே சாதகமாக்கிக் கொண்டான் சேரனின் தளபதி.

`முதலில் மறைமுகப் போர். தொடர்ந்து வெளிப்படையான படையெடுப்பு’ என்று தீர்மானித்தான், சேர தளபதி. அதன்படி சேரர் படையொன்று  சிறு சிறு குழுவாக வணிகர்கள் கோலத்தில் மதுரைக்குள் புகுந்தது. உள்நுழைந்ததும் தாக்கத் தொடங்காமல் அமைதிகாத்தது.

``மதுரை மன்னன் சமணம் சார்ந்திருக்கிறான். மீனாளின் கோயிலில் அவன் கவனம் செலுத்துவதேயில்லை. அங்கு பாதுகாப்புக் கெடுபடிகள் அதிகமிருக்காது. நமது இலக்கு திருக்கோயில்தான். இரவில் நாம் கோயிலைக் கைப்பற்றப் போகிறோம். ஏறக்குறைய பாண்டியர்களின் உயிர்க்கமலத்தையே பறிக்கப் போகிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

பாண்டியனின் தலைநகரத்துக்குள், சேரர் கோட்டையாக அமையும் மீனாட்சியம்மையின் ஆலயம். அதேநேரம், சேரர்பிரானின் வெளிப்படையான படையெடுப்பும் நிகழும். அதைத் தடுப்பதிலேயே கவனம் செலுத்தும் பாண்டியனின் வனப்புறப் படை. அவர்களுக்குத் துணையாக மதுரையின் காவற்படையும் வெளியேறலாம்.

இல்லையென்றாலும் பழுதில்லை. அந்தப் படையைச் சமாளிப்பது கடினமல்ல; மதுரை எளிதில் நம் வசப்பட்டுவிடும். தலைநகரை இழந்தால் பாண்டியனின் கதி... நிலைகுலைந்து போவான். சேரரின் மதுரை விஜயம் சுலபமாகி விடும்’’ என்று தன் அணுக்கர்களிடம்  தனது வியூகத்தை விளக்கியிருந்தான் சேரத் தளபதி.

சிவமகுடம் - பாகம் 2 - 29

விஷயம் வெளியே கசிந்தால் ஆபத்து என்று கருதி, அணுக்கர்களைத் தவிர்த்துவிட்டு அடுத்தநிலை வீரர்களுக்கும் தெரியாமல் திட்டம் பாதுகாக்கப்பட்டது. சொல்வதைச் செய்யும் விசுவாசமான அந்த வீரர்கள், வணிகர் வேடம் ஏற்றார்கள். மெள்ள மெள்ள மதுரைக்குள் புகுந்தார்கள். எவருக்கும் சந்தேகம் விளைவிக்காதபடி நகர்ந்து கோயிலைச் சூழ ஆரம்பித்தார்கள்.

அதேநேரம், மாமதுரையை ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாண்டிய காவற்படை பரபரப்பாக அணிதிரண்டது. மூன்று அணிகள் வெளியேற, ஓரிரு அணிகள் உள்ளே தங்கிக்கொண்டன.

வணிகர் வேடத்திலிருந்த படைத்தளபதி தன்னுடன் வந்திருந்த அணுக்கனிடம் கிசுகிசுத்தான்: ‘‘படை நகர்வைக் கவனித்தாயா... நம் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. சேரமான் வருவது இவர்களுக்குத் தெரிந்துவிட்டதுபோலும். சகலமும் நாம் நினைத்ததுபோலவே நடக்கின்றன. வா... நாம் நம் வேலையைக் கவனிப்போம்.’’

இருவரும் மெள்ள கோயிலின் மதிலை நோக்கி நகர்ந்தார்கள்.

அப்படி அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த வேளையில்தான், பொற்றாமரைக் குளத்தின் படிகளிலேறி குலச்சிறையாரின் பாதங்களைப் பணிந்து வணங்கினான் பரதவ வீரன். அவனைத் தொட்டுத் தூக்கி, அவன் சிரத்தில் கரம்வைத்து ஆசீர்வதித்த குலச்சிறையார்,  `வாய்ப்பேச்சு எதுவும் வேண்டாம்’ என்பதுபோல் சைகையால் அவனுக்குக் கட்டளையிட்டார். பின்னர், எவருக்கோ அழைப்புவிடுப்பது போல் இடக் கரத்தை மேலே உயர்த்தி அசைத்தார்.

ஏற்கெனவே, மண்டபத் தூண்களின் மறைவிலிருந்து வெளிப்பட்டு குலச்சிறையாரைப் பின்தொடர்ந்து வந்து, இருட்டின் மறைவில் காத்திருந்த வீரர்கள், அவர் கரம் அசைந்ததும் காலடி ஓசை எழும்பாத வண்ணம் பெருவிரல் களின் நுனியை மட்டுமே தரையில் பதித்து விநோதமாக நடந்து, படிகளில் இறங்கி, அருகில் வந்தார்கள். இப்போது குலச்சிறையார் கண்ணசைக்க, குளத்திலிருந்து வெளியேறிய பரதவ வீரனோடு சேர்ந்து அவர்கள் அனைவரும் குளத்துக்குள் இறங்கினார்கள்; நீரில் மூழ்கினார்கள்; மூச்சடக்கிக்கொண்டார்கள். குலச்சிறையார் அங்கிருந்து நகர்ந்தார். இருள் சூழ்ந்த மறைவிடத்தில் பதுங்கிக்கொண்டார்.

மறுகணம் மதிலின் மீது உருவங்கள் தென்பட்டன. தொடர்ந்து  கோயிலுக்குள் தரையில் குதித்தன. தரையோடு தவழ்ந்து தலைவாயிலை நோக்கிச் சென்றன. சில விநாடிகள் கழித்து அந்தப் பகுதியிலிருந்து எவரோ முக்கி முனகுவது போன்றும், `க்ளங்... ப்ளாங்...’ என்பது போன்ற விநோதச் சத்தங்களும் எழும்ப, என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகக் கணிக்கமுடிந்தது குலச்சிறையாருக்கு.

``வாயிற் காவலர்கள் தாக்கப்படுகிறார்கள். திட்டிவாசல் திறக்கப்படுகிறது. வரட்டும், வரட்டும்...’’ தனக்குள் சொல்லிக்கொண்டார் குலச்சிறையார்.

அடுத்த சில கணப்பொழுதுகளில் பல நூறு பேர் உள் நுழையும் சந்தடி.  குலச்சிறையார் சிரித்துக்கொண்டார். அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் இருந்தது. `பகை வீரர்கள் பூரணமாக உள்நுழைந்துவிட்டார்கள்’ என்று அவர் தீர்மானித்த அந்தக் கணத்தில் தொடங்கியது துடியின் முழக்கம்!

அடுத்த இரண்டு நாழிகைகளில் சேரன் தளபதி உட்பட, கோயிலுக்குள் புகுந்த ஒட்டுமொத்தப் படையும் குலச்சிறையாரின் முன் மண்டியிட்டுச் சரணடைந்திருந்தது. அவர்களுக்கான தீர்ப்பு, பாண்டிமாதேவியாரின் வருகைக்காகக் காத்திருந்தது.

அதேநேரம், ஓடோடி வந்த பாண்டிய வீரன் ஒருவன் குலச்சிறையாருக்கு சிரவணக்கம் செய்துவிட்டு ஒரு தகவலைச் சொன்னான்.

‘‘பின்னடைந்து ஓடுகிறான் சேரன். துரத்திச் செல்கிறது பாண்டிமா தேவியாரின் படை!’’

டுத்த மூன்று நாள்களை மிக அமைதியாகக் கழித்தது மாமதுரை.  நடந்து முடிந்த விஷயங்கள் எல்லாம் பெரும் சிந்தனைகளை உசுப்பிவிட,  அந்த அதிகாலை வேளையில் ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்தார் குலச்சிறையார்.

எதிர்பார்த்தபடியே சகலமும் நிறைவேறியதில் அவருக்குத் திருப்தியே என்றாலும், அதையும் மீறி, மாமன்னரிடமிருந்து எவ்விதமான பதில் தகவலும் வரவில்லை என்பதால் உண்டான பரிதவிப்பு அவரை ஆக்கிரமித்திருந்தது. அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைத்தார். மெள்ள கண்களை மூடி, சிவத்தை சிந்தையில் நிறுத்த முயன்றார். ஆனால், முடியவில்லை.

ரிஷபாரூட கோலத்தை தியானிக்க நினைத்தவரின் மனதில், ரிஷபத்துக்கு பதில் ஒரு கரும்புரவி தோன்றியது. அதன்மீது  ஆரோகணித்திருந்த அந்தப் பெண் கம்பீரமாக வாள் சுழற்றினாள்; ஒவ்வொரு சுழற்றலிலும் ஆயிரமாயிரம் வீரர்கள் அவளுக்கு அடிபணிந்த காட்சியைக் கண்டார். `யார் அவள்... திக்கெட்டும் திக்விஜயம் செய்த தடாதகைப் பிராட்டியா... அப்பனை நினைத்தால் அம்மை வருகிறாளா... இல்லை... அம்பிகை இல்லை... எனில் யார் அவள்...’

புரவி நெருங்கியது... திருமுகம் புலப்பட்டது... நெருங்கிப் பணிந்தார் பாண்டிமாதேவியார்!

- மகுடம் சூடுவோம்...

-ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்