திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 5

புண்ணிய புருஷர்கள் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள் - 5

புண்ணிய புருஷர்கள் - 5

``நம்புங்கள்... ஒரு விதை முளைக்கும்போது இறைவன் இந்த உலகின்  மீது இன்னமும் நம்பிக்கையும் கருணையும்கொண்டிருக்கிறான் என்பதை...’’ என்கிறார் விஜயன்.

எல்லோரும் ஈசனை வெவ்வேறு வடிவங்களில் தரிசித்துக் கொண்டிருக்க, இவர் மரங்களின்வழியே தரிசிக்கிறார். இவரைப் பொறுத்தவரை மரங்கள், சிவ வடிவங்கள். தமிழகமெங்கும் பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பாதுகாத்து, வளர்த்தும்வருகிறார். இயற்கைவழியே இறைவனை தரிசிக்கும் இவரது மகத்தான சேவை நம்மை மலைக்கவைத்தது. அவரைப் பார்ப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்றோம்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். `` `யாராலும் வெட்ட முடியாத மரங்களை நடவேண்டும்’ என்று ஆசைப்பட்டேன். அதற்கு அந்த ஈசனே வழிகாட்டினார். மற்றபடி நான் செய்யும் இந்தப் பணியில் எந்தச் சிறப்புமில்லை. ஐவகைத் தொழிலும் அவனுடையவை; அவற்றில் நம்மால் எதைச் செய்துவிட முடியும்’’ என்றவர் நம்மோடு மேற்கொண்டு பேசவே மறுத்துவிட்டார்.

``ஐயா... உங்களைப் பற்றியல்ல, மரங்கள் வளர்ப்பது குறித்துத்தான் எழுதப்போகிறோம்... எங்களுக்குச் சிறு சிறு விளக்கங்கள் கொடுங்கள், போதும்...’’ என்றதும் தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கினார்.

புண்ணிய புருஷர்கள் - 5

``வரம் கொடுத்த ஈசனின் தலைமீதே, கரம்வைக்கப் பார்த்த பஸ்மாசுரனைப்போல மனிதர்கள் வாழத் தொடங்கிவிட்டார்கள். ஈசனின் அற்புதமான, இன்றியமையாத படைப்பான மரங்களை அழித்துவிட்டு, பிறகு மழைக்காக அழுகிறார்கள்; வெயிலில் துன்பப்படுகிறார்கள். மனிதர்களுக்கு முன்னரே பிறந்தவை மரங்கள். அவை, தமக்கென எதையுமே வைத்துக்கொள்ளாதவை. மனிதன், அவனுக்காக மட்டுமே வாழ்கிறான். மரங்கள், சகல ஜீவராசிகளுக்காகவும் வாழ்கின்றன. மரங்களின்றி உலகமில்லை. எனவே, மரமும் மகேசனின் அம்சம்தான்’’ என்று மரக்கன்றுகளுக்கு நீர்விட்டுக்கொண்டே பேசத் தொடங்கினார்.  

``காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், மரங்கள்மீது சிறுவயது முதலே அப்படி ஓர் ஈர்ப்பு. ஆறாவதுவரைதான் படித்தேன். மரம், செடி, கொடிகளுடனேயே வளர்ந்தேன். அவற்றிடமிருந்துதான் பாடங்கள் படித்தேன். கொஞ்சம் பெரியவனானதும், ஊரெங்கும் மரங்களை நட்டு வளர்க்கும் ஆசை துளிர்த்தது. அந்தப் பணியைச் செய்யத் தொடங்கினேன். ஆனால் பாருங்கள்... ஆடு, மாடுகள் மட்டுமன்றி, மனிதர்களும் நான் நட்டுவைத்த அந்த இளங்கன்றுகளைச் சேதப்படுத்தினார்கள். அப்போதுதான், `யாராலும் சேதப்படுத்த முடியாத மரங்களை வளர்க்க வேண்டும்’ என்ற ஆசை மனதுக்குள் ஆழமாகப் பதிந்தது.

அப்படித்தான் ஆலயங்கள்தோறும் கொன்றை, வில்வம், புன்னை, மனோரஞ்சிதம், வன்னி, மகிழம், ஆல், அரசு, நாகலிங்கம்... என விதவிதமான தலவிருட்சங்களை வளர்க்கத் தொடங்கினேன். கோயிலில் வளர்வதால், யாரும் அவற்றைச் சேதப்படுத்த முன்வர மாட்டார்கள் என்பது என் எண்ணம். அது நிறைவேறியது. இன்று ஆலயங்கள் மட்டுமன்றி,  ஏரிக்கரைகள், மலைகள், கல்லூரி வளாகங்கள், பொதுவெளி எனப் பல ஆயிரம் மரங்கள் தமிழ் நாடெங்கும் வளர்ந்துநிற்கின்றன’’ நடந்ததை நினைவுகூரும்விதமாக, கண்களில் கனவு மின்னச் சொல்கிறார் விஜயன். விதைகள் சேகரிப்பது, உரங்கள் தயாரிப்பது, செம்மண் சேகரிப்பது,  விதைகளை தன் வீட்டில் ஊன்றி வளர்ப்பது, வளர்ந்த செடிகளை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று நடுவது, உழவாரப் பணி செய்வது, திருவோடு தயாரிப்பது, வில்வத் தட்டைகள் செய்வது... என்று ஓயாமல் ஏதாவதொரு பணியைச் செய்துகொண்டேயிருக்கும் இவருக்கு இவரின் குடும்பத்தினர் பக்கத்துணையாக இருக்கிறார்கள்.
 
``அவர்களும் சிவனடியார்களாக இருப்பதால், என் பணி எளிதாக முடிகிறது’’ என்கிறார் விஜயன். பல ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுத்திருக்கும் இவர், சக்தி விகடன் நடத்திய உழவாரப் பணிகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். அந்த வகையில் கீழ்ப்பசார், கத்தாரி குப்பம் சிவாலயங்களில் நந்தவனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். 

``சரி... முதன்முதலாக நீங்கள் வளர்த்த மரங்களைப் பற்றிச் சொல்லுங் களேன்...’’ என்றதும், அவருக்கு உடம்பு சிலிர்க்கிறது.

``அது ஓர் அற்புதமான அனுபவம், என் ஆண்டவன் எனக்குவைத்த சோதனை என்றுகூடச் சொல்லலாம். பத்தாண்டுகளுக்கு முன்னர், காஞ்சிபுரம் அருகேயுள்ள சக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே இரண்டு வில்வக் கன்றுகள் வளர்ந்திருந்தன. அவற்றைக் கொண்டுபோய் ஆலயத்துக்குள்ளேயே  பாதுகாப்பாக வளர்ப்பதற்காக அந்தக் கோயில் அர்ச்சகரிடம் கேட்டேன். அவரோ, `வளர்ந்ததைப் பிடுங்கக்கூடாது. வேண்டுமானால் நீ வேறு புதிய வில்வக் கன்றுகளைக் கொண்டு வா... பார்க்கலாம்’ என்றார். நானும் சில வில்வக் கன்றுகளை எடுத்துக் கொண்டுபோய் ஆலயத்தினுள் நட்டுவைத்தேன்.

புண்ணிய புருஷர்கள் - 5

அப்போதும் அந்த அர்ச்சகர் சலித்தபடி, `இந்த மண்ணில் எந்தச் செடியும் வளர்வதில்லை. நாங்கள் எத்தனையோ செடிகளை வைத்துப் பார்த்துவிட்டோம். பார்க்கலாம்... உன் ராசியை’ என்றார். எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. நான் முதன்முதலில் ஆலயத்தில்வைத்த கன்று நன்றாக வளரவேண்டும் என்று விரும்பினேன். எனவே, பதிகம் பாடியபடியே நீர் ஊற்றினேன். தினமும் கோயிலுக்குச் சென்று, செடியின் அருகிலேயே அமர்ந்து பதிகம் பாடுவேன். பத்து நாள்களாகச் செடியில் எந்த மாற்றமும் இல்லை.

நான் பிழைப்புக்காக கட்டட வேலை செய்துவருகிறேன். வேலை முடித்து வரும்போது, சில நாள்களில் கோயில் அடைத்திருக்கும். சுவர் ஏறிக் குதித்துக்கூட அந்தக் கன்றுகளிடம் மன்றாடி, பதிகம் பாடிக் கெஞ்சுவேன். ஆச்சர்யம்... கன்றுகள் மெள்ள வளர்ந்தன. அந்த அர்ச்சகருக்கு வியப்பு. அதன் பிறகு, ஒட்டிவாக்கம் சிவாலயத்தில் கன்றுகளை நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தேன். இன்று திருவாரூர், கொல்லிமலை, மாமண்டூர்... எனப் பல ஆலயங்களில் நான் நட்டுவைத்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. எல்லாம் சிவனருள். அவனன்றி எதுவும் நடக்குமா!

கன்றுகளை நடும் பணியின்போதே ஆன்மிகம் குறித்தத் தேடல் உருவானது. `ஏன் பிறந்தோம்... பிறந்ததற்கான நோக்கம் என்ன...’ என்று என்னுள் கேட்டுக்கொண்டே இருந்தேன். நல்ல அடியார் கூட்டம் என்னை ஆட்கொண்டது. அவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நடும் பணியை வேகப்படுத்தினேன். உழவாரப் பணி செய்யும் ஆலயங்களெங்கும் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம்.

குரு ஒருவரின் திருவருளால், கடம்பந்துறை ஆலயத்தில் குடும்பத்தோடு தீட்சை வாங்கிக் கொண்டேன். என் மனைவி, இரு மகள்கள் என எல்லோருமே இணைந்து, சிவப்பணிகளைச் செய்துவருகிறோம். புதரில்தீப்பற்றிக்கொண்டதைப்போல பஞ்சாட்சரம் நெஞ்சில் பற்றிக்கொண்டதும் மனக்குப்பைகள் அகன்று போயின. எங்களுக்கான தேவைகள் குறைந்துபோயின. நீரைத் தேடிச் செல்லும் வேரைப்போல ஈசனை நாடியே எங்கள் சிந்தை, சொல், செயல் எல்லாம் போயின.

`இந்த வாழ்க்கை போதும், தேவைக்கு அதிகமாக எதையும் கொடுத்து விடாதே ஈசனே’ என்றே ஒவ்வொரு கணமும் வணங்கி வேண்டுகிறோம். அதுதான் எங்களுக்கு துணிவையும் பணிவையும் தருகிறது. இன்றைக்கும் ஒவ்வொரு விதையை நடும்போதும், பதிகங்களைப் பாடியபடிதான் நடுகிறோம். `விளைவதும் வீணாவதும் ஈசனின் அருளால்தான்’ என்று உணர்கிறோம்.

புண்ணிய புருஷர்கள் - 5

தன்னிடத்தே உலகையும், உலகத்திடையே தன்னையும் காண்பவன்தான் ஞானி. ஈசனின் அத்தனை படைப்புகளையும் நேசிப்பவனே ஞானி. ஒரு மரத்தை அநாவசியமாக இம்சிப்பவன் மனிதனாக இருக்கவே லாயக்கற்றவன். அவனிடம் இறை அம்சம் தங்காது. எனவே, இயற்கையின்வழி இறைவனை தரிசியுங்கள். ஈசன் கருணைமிக்கவன். அதன் வெளிப்பாடுதான் மரம். ஏதேனும் ஓர் ஆலயத்தில் ஒரு மரத்தை நடுங்கள். அது நீங்கள் நூறு முறை அபிஷேகம் செய்ததற்கு சமம்.

என்னைப் பொறுத்தவரை இயற்கையைப் பாதுகாப்பது ஒன்றுதான் ஈசனை ஆராதிக்கும் வழி. எங்களால் வளர்க்கப்பட்ட மரங்களைப் பார்க்கும்போதெல்லாம் வியந்து, நெகிழ்ந்து போவேன். `இவை இருக்கும்வரை எனக்கு மரணமில்லை’ என்கிற பெருமிதம் மேலோங்கும்’’ அழுத்தமான குரலில் நெக்குருகிச் சொல்கிறார் விஜயன்.  வையத்துள் வாழ்வாங்கு வாழவிருக்கும் அவரை வணங்கி, விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

- மு.ஹரிகாமராஜ், படங்கள்: பெ.ராகேஷ்

அடியார்க்கும் அடியேன்!

"திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே"


ந்த இச்சைகளிலும் அகப்படாத அடியார்கள் இருக்கும் நாட்டில் பகை உண்டாவதில்லை; மழை வளம் குன்றாது இருக்கும்; அகக்குறை இல்லாமல் எல்லோரும் இன்புற்றிருப்பர் என்று திருமூலர் கூறுகிறார்.  உண்மைதான், அன்பே சிவமென்று வாழ்ந்திருக்கும் அடியார்களின் ஆன்ம பலத்தால் நன்மையே விளையும் என்பதை இந்த புண்ணிய புருஷர்கள் தொடர் நமக்கு உணர்த்திவருகிறது. தன்னைத்தானே தேடித் கொண்டிருக்கும் இந்த புண்ணியாத்மாக்களின் வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும் சக்தி விகடனின் சாதனை மகத்தானது. அடுத்து எந்த அடியார் சரித்திரம் வருமோ என்ற ஆவலைத் தொடர்ந்து தூண்டி வருகிறது இந்தத் தொடர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத இதுபோன்ற புண்ணிய புருஷர்கள் உள்ளவரை நமது தர்மங்களை யாராலும் சிதைக்க முடியாது. எத்தனை வெளிநாட்டு நாகரீகங்கள் நம்மைத்  தாக்கியபோதும் நாம் தனித்து நின்றதெல்லாம் தியாகஉணர்வு கொண்ட இது போன்ற அடியார்களால்தான்.

அன்பற்ற உலகில் ஆண்டவன் இருப்பதில்லை என்பதைத்  தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தத் தொடர் ஓர் ஆன்மிகப் பொக்கிஷம். எல்லாத்  தரப்பு எளிய அடியார்களையும் போற்றிப் பாராட்டும் இந்த பணி பாராட்டத்தக்கது. இந்தத் தொடரால் பல இளைஞர்கள் ஆன்மிகப் பாதைக்கு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அன்பையும் நம்பிக்கையும் விதைக்கும் எந்த ஒரு செயலும் போற்றத்தக்கது. சக்தி விகடன் அதைத்  தொடர்ந்து செய்துவருகிறது. நன்றியும் பாராட்டுதலும் உரித்தாகட்டும்...

வெங்கடபதி, திண்டிவனம் சந்திரமௌலீஸ்வரர் ஆலய நிர்வாகக் கமிட்டித் தலைவர்.