
வி.ஆர்.சுந்தரி
அம்பலப்புளியில் ஆடல்வல்லான்!
பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாறு இது. இந்துமத ஆலயங்களை எல்லாம் சிதைத்துச் சீரழித்தபடி மொகலாயர்கள் முன்னேறிய காலம். `எங்கே, நம் தெய்வத்துக்கும் இடையூறு வந்துவிடுமோ' என்று, ஆலய நிர்வாகிகள் எல்லாம் பயந்த காலம்.
இந்த நிலையில், அடியார் கூட்டம் ஒன்று, தங்கள் ஊர் ஆலயத்திலிருந்த தெய்வ வடிவத்தை ஒரு பேழையில் வைத்துத் தூக்கிக்கொண்டு, ஊரை விட்டு வெளியேறியது.

நள்ளிரவில், புளியந்தோப்பு ஒன்றை அடைந்தது அந்தக் கூட்டம். அங்கே, பெரியதொரு புளிய மரத்தின் பொந்தில், தாங்கள் சுமந்து வந்த தெய்வத்தை மறைத்துவைத்துவிட்டுத் திரும்பியது.
விடிந்ததும் தோப்பின் உரிமையாளரான விவசாயி, தோப்பைப் பார்வையிட வந்தார். அப்போது, குறிப்பிட்ட அந்தப் புளிய மரத்தின் பொந்து அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அவருக்குள் சந்தேகம் எழவே, மரத்தை அணுகி பொந்தின் அடைப்பை நீக்கிப் பார்த்தார்;
உள்ளே அழகான தெய்வ வடிவம் இருப் பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார்.
பொந்தை பழையபடியே யாருக்கும் தெரியாதபடி மூடிவைத்துவிட்டு ஊருக்குள் வந்தார். “அந்தப் புளிய மரத்துல சாமி இருக்குதாம். நான் கனவுல கண்டேன்” என்று ஊராரிடம் மேம்போக்காகச் சொல்லிவைத்தவர், தான் மட்டும் நாள்தோறும் அந்தப் புளிய மரத்தைப் பூசித்து வந்தார்.
ஆண்டுகள் கடந்தன. படையெடுப்பின் அச்சம் நீங்கியது. புளியமரப் பொந்தில் தெய்வத் தைக் கொண்டு வந்து வைத்தவர்கள், அதை மீண்டும் எடுத்துச் செல்வதற்காக வந்தார்கள். ஆனால், ஸ்வாமியை மறைத்துவைத்த மரம் எது என்பது அவர்களுக்கு மறந்துபோனது. குறிப்பிட்ட மரத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் அவர்கள் திகைத்து நின்றிருந்தபோது, அருகில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், “யப்பா! மாடுகளைக் கொண்டுபோய் அந்த அம்பலப்புளியில் விடு. நான் பின்னால வரேன்'' என்றார், தன் அணுக்கன் ஒருவனிடம்.

அதைக்கேட்ட அடியார்கள், “நீங்கள் சொல்லும் மரத்துக்கு அம்பலப் புளி என்ற பெயர் வரக் காரணம் என்ன” என்று அந்த முதியவரிடம் கேட்டார்கள்.
முதியவரோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. எங்க மொதலாளி அந்த மரத்துக்கு அடிக்கடி பூசை செய்வாரு. அவர்கிட்டத்தான் கேக்கணும்” என்றார்.
உரிமையாளரிடம் போய்க் கேட்டார்கள். அடியார் கூட்டத்திடம் அவர் உண்மையைச் சொல்லிவிட்டார். அடியார்கள் மகிழ்ந்தார்கள். விவசாயியின் அனுமதியுடன் மரப்பொந்தில் இருந்த தெய்வத்தைத் தங்களின் ஊருக்கு எடுத்துச் சென்று வழிபாட்டைத் தொடங்கினார்கள்.
அடியார்களால் புளியமரத்தில் மறைத்துவைக்கப் பட்ட தெய்வம், நடராஜர்; மறைத்துவைத்த அந்த அடியார்கள், தில்லைவாழ் அந்தணர்கள்.
அம்பலப் புளியைத் தன்னகத்தே கொண்ட அந்தச் சிற்றூர் ‘புளியங்குடி’ என அழைக்கப்படு கிறது. தோப்பின் சொந்தக்காரரான அந்த விவசாயியின் குடும்பத்தார் ‘புளியங்குடியார்’ என அழைக்கப்படுகிறார்கள்.
இந்தத் தகவல்களை...
`தெளிவந்து அயன் மால் அறியாத
தில்லைப்பதி அம்பலவாணர்
புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை
காட்டிப் பொருள்காட்டி
எளிதிற் புளியங்குடியாரென்று
இசைக்கும் பெருமை ஏர் உழவர்
வளருங் குடியில் பொலிவாழ்வு
வளஞ்சேர் சோழ மண்டலமே'
- என்று ‘சோழ மண்டலச் செய்யுள்’ எனும் நூல் கூறுகிறது.
இந்தத் தகவல்களை ‘அம்பலப் புளி’ எனும் கட்டுரையில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களும் `சிதம்பரம்’ எனும் நூலில் மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர் அவர்களும், பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி, தில்லையம்பதியாம் சிதம்பரம் திருக் கோயிலின் மகத்துவத்தை அறிந்து மகிழ்ந்த அருளாளர்கள் பலரும், அதன் பெருமைகளைப் பெருமிதத்தோடு விளக்கியுள்ளனர். அவற்றிலிருந்து சில துளிகளை நாமும் அனுபவிக்கலாம். அதற்குமுன், சிதம்பரம் ஆலயத்தில் நடைபெறும் வழிபாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.
சிதம்பரம் திருக்கோயிலில், விடியற்காலை 6 மணியளவில், பள்ளியறையில் இருக்கும் ஸ்வாமியின் திருவடிக்குப் பால் - பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, திருவடியைப் பல்லக்கில் அமர்த்தி - சிற்றம்பலத்தில் கொண்டு சேர்ப்பது மரபு. விடியற்காலையில் நடைபெறும் இந்த வழிபாடு ‘பால் நைவேத்தியம்’ எனப்படும்.

பகலில் மூன்று கால பூஜைகளும் இரவில் மூன்று கால பூஜைகளுமாக, ஆறுகால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. இந்த ஆறு காலங்களிலும் சந்திரமௌலீஸ்வரராகிய ‘ஸ்படிக’ லிங்கத்துக்குக் கனகசபையில் அபிஷேக - ஆராதனைகள் நடந்த பிறகே, நடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் தீபாராதனை நடைபெறும்.
காலை 9 மணிக்குக் காலைச் சந்தி; காலை 11 மணியளவில் இரண்டாம் காலம்; நண்பகல் 12 மணியளவில் உச்சிக்காலம் - என வழிபாடுகள் நடைபெறும்.
இவற்றில் இரண்டாவது கால பூஜையின்போது, காலை ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடந்த பிறகு, ரத்தின சபாபதிக்கு அபிஷேகம் செய்து, ஸ்வாமிக்கு முன்னும்பின்னுமாகக் கற்பூர ஆரத்தி காட்டுவார்கள். அப்போது, ஏராளமான அடியார்கள், அங்கே குழுமியிருந்து தரிசனம் செய்வார்கள்.
மாலை ஐந்து மணிக்கு ஸ்படிக லிங்க அபிஷேகம் நிறைவுபெற்ற பின், 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். 7 மணிக்கு ஸ்படிகலிங்க அபிஷேகம் நடந்து, ஏழரை மணியளவில் சிதம்பர ரகசிய பூஜையும் நடைபெறும்.
அதன்பின் 8 மணிக்கு, (இரவு) இரண்டாவது கால பூஜை நடைபெறும். இரவு 9:30 மணிக்கு ஸ்படிகலிங்க அபிஷேகம் நடக்கும். பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.
இந்தத் தருணத்தில், ஆலயங்கள் அனைத்திலும் எழுந்தருளியிருக்கும் இறையின் திருவருள் கலைகள் அனைத்தும், தில்லையில் அருளும் நடராஜப்பெருமானிடம் வந்து ஒடுங்குகின்றன என்பது, அப்பர் சுவாமிகள் அருளிய புக்க திருத்தாண்டகத்தால் விளங்கும். ஆகையால், சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்த ஜாம வழிபாடு, மிகவும் சிறப்புடையதாகும்.
அர்த்தஜாம பூஜையில் தீபாராதனை முடிந்த பிறகு, சிற்சபைப் பெருமானின் திருவடி, பல்லக்கில் அமர்த்தப்பட்டு வலமாகக் கொண்டுவரப்பட்டு, பள்ளியறையில் அமர்த்தப்படும். தொடர்ந்து அங்கே தீபாராதனை நடைபெறும். அதன்பிறகு, சண்டிகேசுவரருக்கும் பைரவருக்கும் தீபாராதனை நடந்து, `அர்த்தஜாம அழகர்’ தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெறும்.
நாள்தோறும் நடக்கும் ஆறுகாலபூஜைகளை தரிசித்த நாம், அந்த ஆடல்வல்லானுக்கு ஆண்டு தோறும் நடக்கும் ஆறுவிதமான அபிஷேகங்களை தரிப்போம்.
- இன்னும் வரும்...
பொன்மழை பொழிந்தது!
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது, `பொன்மழை பெய்தூர்' எனும் கிராமம். இந்தப் பெயருக்குப் பின்னார் சுவாரஸ்யமான திருக்கதை ஒன்றுண்டு.
முன்னொரு காலத்தில் ஆகாச பூபதி என்ற மன்னன் இந்தப் பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்குப் பிள்ளையாரே மகளாகப் பிறந்தார் என்கின்றன புராணங்கள். நல்லதொரு சுபமுகூர்த்த நன்னாளில் பிள்ளைக்குப் பெயர் சூட்டும் வைபவம் நடைபெற்றது. அதையொட்டி சுமங்கலி போஜனமும் சிறப்பாக நடைபெற்றது.

உலகுக்கே அன்னையாய்த் திகழும் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனே அந்த வைபவத்துக்கு வந்து உணவு அருந்தினாள். அந்தத் தருணத்தில் அங்கே ஒரு முகூர்த்த கால அளவு மழை பொழிய வைத்தாளாம் அம்பிகை.
மழையின் சாரலோடு பொற்காசுகளும் சேர்ந்து பொழிந்தன. இந்த அற்புதத்தைக் கண்டு மன்னரும் மக்களும் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வை, `பஞ்ச சதீ' எனும் நூலில் பாடியுள்ளார், மூக கவி. பொன்மழை பொழிந்ததால், இந்தக் கிராமத்துக்குப் பொன்மழை பெய்தூர் என்றபெயர் ஏற்பட்டதாம்!
- சைலபதி