ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

`யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹோபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே'


கருத்து:  இந்த உடல் இயங்கும்வரை - அதாவது மூச்சுக்காற்று உடலில் சுற்றிக்கொண்டிருக்கும்வரை மட்டுமே  மற்றவர்கள் உன்னைக் குறித்து சிறிதேனும் அக்கறைகொள்வர். மூச்சுக்காற்று வெளியேறி நீ இறந்துவிட்டால், உன் மனைவியும் உன் உடலை அணுக அஞ்சுவாள்.

டல் என்பது வெறும் கருவிதான். ஆத்மாதான் அதை இயக்கும் சக்தி.  இது புரியாமல் உடலுக்குச் சுகம் அளிக்க மட்டுமே தொடர்ந்து முயன்று கொண்டிருப்பது அறிவீனம். இதற்கு ஒரு சரியான உதாரணமாக யயாதியைக் கூறலாம்.

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

அசுர குருவான சுக்கிரரின் மகள் தேவயானி. அவளின் தோழி சர்மிஷ்டை; மன்னன் விருஷபருவாவின் மகள். ஒரு முறை இருவரும் தோழிகளோடு நீராடச் சென்றனர். நீராடி முடித்துவிட்டுக் கரையேறும்போது, தெரியாமல் தேவயானியின் உடையை அணிந்துகொண்டாள் சர்மிஷ்டை. இதனால் கோபமுற்ற தேவயானி அவளைக் கடிந்துபேச, ‘`என்ன இருந்தாலும் நான் மன்னன் மகள். மன்னருக்கு ஒரு படி கீழ்தான் குருவாகிய உன் தந்தை’’ என்று சர்மிஷ்டை கூற, இருவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இதன் முடிவில் தேவயானியை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டு வெளியேறினாள் சர்மிஷ்டை.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தப் பக்கமாக வந்த யயாதி என்ற மன்னன் கிணற்றிலிருந்து குரல் கேட்டு எட்டிப்பார்த்தான். கிணற்றுக்குள் தவித்துக்கொண்டிருந்த தேவயானியைக் காப்பாற்றினான் யயாதி. அவளது அழகில் மனதைப் பறிகொடுத்தவன், சுக்கிரரிடம் சென்று பெண் கேட்டான். அவர் ஒப்புக்கொள்ள தேவயானியும் சம்மதித்தாள். ஆனால், கூடவே  ‘`சர்மிஷ்டை எனக்கு வேலைக்காரியாக உடன் வரவேண்டும்’’ என்று பிடிவாதம் பிடித்தாள். ‘குருவின் சாபத்தைப் பெற்றுவிடக்கூடாதே’ என அஞ்சிய அசுர மன்னன் விருஷபருவாவும் இதற்கு ஒப்புக்கொண்டு தன் மகளான சர்மிஷ்டையை, தேவயானியுடன் அனுப்பிவைத்தான்.

யயாதி தேவயானியுடன் இன்பமாக இல்லறம் நடத்தினான். இடையே சர்மிஷ்டையும் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள். சர்மிஷ்டை மூலமாக மூன்று மகன்களுக்குத் தந்தை ஆனான் யயாதி. 

கொஞ்சம் தாமதமாகத்தான் இதை அறிந்தாள் தேவயானி. கரைகடந்த கோபத்துடனும், கண்ணீருடனும் தன் தந்தையிடம் புகார் செய்தாள். மகளுக்குத் துரோகம் செய்த மருமகனை எண்ணியதும் சுக்கிரரைக் கோபம் பீடித்தது. சாபம் பிறந்தது. ‘`உன் இளமை உன்னைவிட்டுத் தொலையட்டும்’’ என்றார்.  

அடுத்த நொடியே யயாதியை மூப்பு (முதுமை) பற்றியது. சுருங்கிய தேகம், தள்ளாடும் உடல். யயாதி பரிதவித்தான். சுக்கிரரின் காலில் விழுந்து கெஞ்சினான். மனம் கனிந்த சுக்கிரரும் ஒரு பரிகாரம் கூறினார். ‘`இளைஞன் எவனாவது உன் முதுமையைப் பெற்றுக்கொண்டால், உனக்கு இளமை திரும்பும்’’ என்றார்.

நினை அவனை! - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

மோகம் வெட்கம் அறியாது என்பதற்கு உதாரணமானான் யயாதி. தன் மூத்தமகனிடம் சென்று அவனுடைய இளமையைத் தருமாறு கெஞ்சினான். தர மறுத்தான் அவன். இரண்டாவது மகனும் தந்தையின் வேண்டுகோளை நிறைவேற்ற மறுத்தான். பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன் என்ற தந்தையின் ஆசைவார்த்தைகள்கூட முதல் இரு மகன்களையும் ஒத்துக்கொள்ளவைக்கவில்லை. யாருக்குத்தான் இளமையிலேயே மூப்பினைச் சுமக்கப் பிடிக்கும்?

ஆனால் என்ன வியப்பு! யயாதியின் மூன்றாவது மகனான புரு மட்டும் தந்தைக்காக இந்தத் தியாகத்தைச் செய்ய முன்வந்தான். யயாதிக்கு இளமை திரும்ப, புரு கிழவனானான்.

பலவிதங்களில் தன் மோகத்தைத் தணித்துக் கொண்டான் யயாதி. தவறு...  தணித்துக்கொள்ள முயன்றான். மோகத் தீ அடங்குவதாக இல்லை. மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஒரு கட்டத்தில் உண்மையை உணர்ந்தான். சிற்றின்பத்தைவிட்டுப் பேரின்பத்தை நாடுவதே தன்னை உய்விக்கும் வழி என்பதைப் புரிந்து கொண்டான். புருவிடம் சென்று தன் செயலுக்காக வருந்தினான். பின்னர் அவனிடமிருந்து முதிய வடிவத்தைப் பெற்றான். 

ஆக  ‘உடல்... உடல்...’ என்று அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எவ்வளவு அறிவீனம் என்பது தெரிகிறதல்லவா!

த்தரை என்ற இளம் பெண்ணுக்குச் சத்ருகன் என்பவனைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் அவனுக்கோ வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது.

‘மலைக்கோயிலுக்கு மனைவியை அழைத்துச் செல்வோம். அங்கிருந்து அவளைக் கீழே தள்ளி விட்டால், அவள் இறந்துவிடுவாள். அதன்பிறகு, அவள் கால்தடுக்கிக் கீழேவிழுந்து இறந்ததாகக் கதைகட்டுவோம். பிறகு நமக்குப் பிடித்தவளோடு வாழ்க்கை நடத்துவோம்' என்று திட்டமிட்டான்.  

இருவருமாக மலை ஏறினார்கள். கோயிலை அடைந்தார்கள். சட்டெனச் சத்ருகன் தன் கத்தியை வெளியில் எடுத்தான். ‘`உன் நகைகளை எல்லாம் ஒரு துணியில் கட்டி எனக்குக் கொடு. உன்னை இந்தக் கத்தியால் குத்தி மலையிலிருந்து கீழே தள்ளப்போகிறேன்’’ என்றான்.

பத்தரை நடுங்கினாள். தன் நிலையை எண்ணி அழுதாள். பிறகு, ‘`எனக்கு எதிராக நடந்துகொண்டாலும், நீங்கள் என் கணவர்.  உங்களை மூன்றுமுறை வலம்வந்துவிட்டு உங்கள் காலடியில் கிடக்கிறேன். அப்போது நீங்கள் என்னைக் கொன்றுவிடலாம். இப்போது என் நகைகளைத் தந்துவிடுகிறேன்’’ என்றபடி தன் நகைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றிக் கொடுத்தாள். பிறகு கணவனை வலம் வந்தாள். மூன்றாவதுமுறையாக வலம்வரும்போது அவனைப் பின்னாலிருந்து தள்ளிவிட்டாள். அவன் இறந்தான். பின், அவள் மலையின் மாற்று வழியில் இறங்கத் தொடங்கினாள். 

கேவலம் ஒருத்தியின் உடலுக்காகத் தன் கணவன் தன்னைக் கொல்லத் தீர்மானித்தது, அவள் மனதில் உண்மையை உணர்த்திவிட்டது. அவள் துறவுபூண்டாள். குண்டலகேசி என்று பெயர் பெற்றாள்.

காபாரதக் கதை ஒன்று உண்டு. குளத்திலுள்ள விஷம் கலந்த நீரைக் குடித்துவிட்டு பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருமே அடுத்தடுத்து நினைவிழந்தனர். தம்பிகளைத் தேடி அங்கு வந்த தர்மர் அதிர்ச்சியடைந்தார். உண்மையை உணர்ந்தார். தானும் அந்த விஷநீரைக் குடித்து இறந்துவிடலாம் என்று தீர்மானித்தார். அப்போது யட்சன் ஒருவனின் அசரீரி கேட்டது.

‘`தர்மா! நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ சரியான விடை அளித்தால், உன் தம்பிகளை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றது. தர்மன் ஒப்புக் கொண்டான். இதைத் தொடர்ந்து யட்சன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தர்மன் மிகச் சரியான பதில்களைக் கூற, அவன் தம்பிகள் உயிர் பெற்றனர். யட்சன் கேட்ட கேள்விகளில் மிக முக்கியமான ஒன்று ‘`உலகின் மிகப்பெரிய வியப்பு எது'’ என்பதுதான். அதற்கு தர்மர், ‘`தானும் இறக்கப்போகிறோம் என்பதை அறிந்தும் இன்று இறந்தவர்களுக்காக அழுது துடிக்கும் மக்கள்தான் மிகப்பெரிய வியப்பு’’ என்றார்.

ஏதோ நாம் சாகாவரம் பெற்றவர்களைப்போல எண்ணிக்கொண்டு, பிறரின் இறப்பின்போது அவ்வளவு துக்கப்படுகிறோம்! 

இதில் இன்னொரு வேதனையும் உண்டு. எல்லோருமே பாவத்தின் விளைவுகளை எண்ணிப் பயப்படுகிறார்கள். அப்படியிருந்தும் புண்ணியச் செயல்களைச் செய்வதற்குத் தயங்கு கிறார்கள். தொடர்ந்து பாவச்செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்!    

‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ’’ என்றார் கண்ணதாசன். அந்த ‘யாரோ’ இறைவன் மட்டுமே.

- நினைப்போம்...

- ஜி.எஸ்.எஸ்., ஓவியம்: ஸ்யாம்