Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 6

கண்டுகொண்டேன் கந்தனை - 6
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 6

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 6

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை - 6
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 6
கண்டுகொண்டேன் கந்தனை - 6

பச்சைக்கல் அற்புதங்கள்...

முருகப்பெருமான், பிரம்மதேவனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்ட கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டார்குப்பம் தலம் குறித்தும் ‘அச்சாயிறுக்காணி’ என்று தொடங்கும் அந்தத் தலத்துக்கான திருப்புகழில், சுவாரஸ்யமான ஒரு செய்தியை அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார் என்றும் சொல்லியிருந்தேன்.

அது, என்ன செய்தி தெரியுமா?

`முருகா! நீ ஒரு தச்சன். எந்தக் காலத்திலும் மக்கிப்போகாத கெட்டுப்போகாத (சூரன் எனும்) மாமரத்தை வேலால் அரிந்து, அதைக்கொண்டு மயில், சேவல் ஆகிய உருவங்களை ஆக்கியவன்’ என்று போற்றும்  அருணகிரியார்,  `இந்த அருமைச் செயலைச் செய்ததனால், நீ மயில் சேவலாக்கிப் பிளந்த சித்தன்’ என்றும் வேடிக்கையாகவும் சுவையாகவும் பாடுகிறார். (1952-ம் ஆண்டு ‘அமிர்தவசனி’ இதழில் ‘முருகப்பாசாரி’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார், தணிகைமணி).

கண்டுகொண்டேன் கந்தனை - 6

மேலும், `எப்போதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனும் நான்கு திசைகள்கொண்ட இந்தப் பூமியில், கீர்த்தி நிறைந்த தச்சூர் எனும் ஊரின் வடக்கே அமைந்துள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே’ என்று பாடும் அருணகிரியார், இத்தலம் அக்காலத்தில் பிரபலமான பெயருடன் திகழ்ந்ததைக் காட்டுகிறார்.

`தமிழகத்தில் ஆரணி, கள்ளக்குறிச்சி, திட்டக்குடி ஆகிய சப் டிஸ்ட்ரிக்ட்களிலும், புதுக்கோட்டை அருகிலும் ‘தச்சூர்’ எனும் பெயரில் கிராமங்கள் இருக்கின்றன’ என்று தணிகைமணி அவர்கள் குறிப்பிட்டாலும், ஆண்டார்குப்பத்தையே இப்பாடலுக்கு உரிய தலமாக உறுதிசெய்கிறார்.

இனி, சிறுவாபுரி தலத்துக்குச் செல்வோம்!

அருணகிரிநாதர் சிறுவை, சிறுவாபுரி என்று பாடியுள்ள நான்கு பாடல்களை ஒரே தலத்துக்கு உரியவையாகவே காட்டியுள்ளார், தணிகைமணியவர்கள்.

கண்டுகொண்டேன் கந்தனை - 6

‘இது சின்னம்பேடு எனவும் சிறுவரம்பேடு எனவும் வழங்கும். பொன்னேரிக்கு மேற்கே ஏழு மைல் தூரம். காஞ்சிபுரத்துக்கு வடக்கில் ஐந்து மைலில் `சிறுவாக்கம்’ என்று ஒரு தலம் உள்ளது. விக்ரவாண்டிக்குச் சமீபத்திலும் `சிறுவை’ என ஓரூர் இருப்பதாகத் தெரிகின்றது’ என்று தணிகைமணியவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி, ஆரணி, காளஹஸ்தி செல்லும் ஜி.என்.டி. சாலையில், சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (சின்னம்பேடு). முன்பு குறிப்பிட்ட தச்சூர் கூட் ரோடிலிருந்து 2 கி.மீ. தொலைவில் சின்னம்பேடு சாலை உள்ளது. அதில் 2 கி.மீ. தூரம் சென்றால், இவ்வூரை அடையலாம்.

சாலையின் இருபுறமும் (முன்பு) மொந்தன் வாழைத்தோட்டங்களும் பச்சைப்பசேல் என நெல்வயல்களும் நிறைந்த மிகச்செழிப்பான பூமி. அவ்வழியே நடந்து செல்லும்போது, வயலூர் நம் நினைவுக்கு வரும். அதேபோல், புதுவாயில் ஆரணி வழியில் `அகரம்’ என்ற இடத்திலிருந்தும் ஒரு கி.மீ தொலைவு பயணித்து இவ்வூரை அடையலாம்.

இத்தலம்தான் அருணகிரிநாதர் பாடிப் பரவிய சிறுவை - சிறுவாபுரி என்பதை உறுதி செய்யும் வகையில், சிறுவை திருப்புகழ் பாடலில் முக்கியமான புராணச் செய்தியை அருணகிரியார் பதிவுசெய்கிறார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 6

`லவன், குசன் ஆகிய ராமனின் குமாரர்கள் யானைப் படை, காலாட் படைகளைக்கொண்டு, கோதண்டராமனுடன் போரிட்டு வெற்றிபெற்ற நகரம். குபேரனின் அளகாபுரி போல் செல்வச்செழிப்புடன் உள்ள இந்தத் தலத்தில் (அடியார்களுக்கு) வரம் அதிகமாகக் கொடுக்கும் பெருமான் இவன்' என்று இத்தலத்து முருகனைப் பாடுகிறார்.

`சிறுவராகி இருவர் அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
சிலை இராமன் உடனெதிர்ந்து சமராடி
செயமதான நகர மர்ந்த அளகை போல வரம் மிகுந்த
சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள்’

- என்பது அந்தத் திருப்புகழ் வரிகள்.

சிறுவர் + அம்பு + எடு = சிறுவரம்பேடு என்றாகி, சின்னம்பேடு என்று மருவியுள்ளது. சிறுவர் (லவன், குசன்) புரி - சிறுவர் புரி - சிறுவாபுரி என்றாகியுள்ளது. இந்தத் தலத்துக்கு அருகில் `முதலம்பேடு’ என்ற ஊர் உள்ளது (அதாவது முதல் அம்பு எடுத்த ஊராம்). மேலும், சிறுவாபுரிக்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் குசஸ்தலை ஆற்றங் கரையில்,  ‘திருக்கள்ளில்’ என்ற தலம் உள்ளது. திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற இத்தலம் தற்போது `திருக்கண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவானந்தேஸ்வரர் கோயிலில், சோழர் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் ‘சிறுவரம்பேட்டு மாப்பூதங்கிழான் என்பவர் இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளார்’ என்ற தகவல் காணப்படுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 6

எனவே, அருணகிரிநாதரின் சிறுவை திருப்புகழில் உள்ள புராண வரலாற்றுடன், இக்கல்வெட்டுச் செய்தியையும்கொண்டு, இந்தச் சிறுவாபுரிதான் அருணகிரியார் பாடிய தலம் என்று உறுதிசெய்ய முடிகிறது. (சென்ற நூற்றாண்டில், சிறுவை மோகன சுந்தரம் எனும் தமிழறிஞர் இவ்வூரில் வாழ்ந்தாராம்).

சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரிக்கு முதன்முதலில் சென்றபோது, கந்தசாமி குருக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இவ்வூரில் ஸ்ரீபாலசுப்ரமணியர் கோயில், ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், செல்லியம்மன் விநாயகர் பஜனை கோயில் மற்றும் ஜைனக்கோயில் ஒன்று உள்ளன என்பதைக் குறிப்பிட்டார். சிறுவாபுரித் திருப்புகழ் ஒன்றில் ‘ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி’ என்று அருணகிரியார் பாடியுள்ளதை இங்கு குறிப்பிடலாம்.

முருகன் ஆலயத்துக்குச் சென்றபோது, முற்றிலும் சிதிலமாகிக் கிடந்த அந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மூலஸ்தானத்தில் சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், மூலவரை தரிசிக்க இயலவில்லை (கதவு மூடியிருந்தது). இங்குள்ள விநாயகர் சந்நிதியில் அவரது திருமேனி மிக மிக அற்புதம். பச்சைக்கல்லில் கடைந்தெடுக்கப்பட்ட அழகான வடிவம். அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!

கண்டுகொண்டேன் கந்தனை - 6

அதேபோல், தனியே மயில் மண்டபத்தில் திகழும் மரகத மயிலும் அதியற்புதமான திருமேனி ஆகும்; வேறு எங்கும் நான் கண்டதில்லை. இந்த மயிலின் அழகைப் பார்ப்பதற்கென்றே பல மைல் தூரம் கடந்து இக்கோயிலுக்கு வரலாம். மரகத விநாயகரையும் மரகத மயிலையும் செய்த சிற்பியின் கலைத்திறனை எண்ணியெண்ணி வியந்தேன்.

அடுத்து, அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு அர்ச்சகர் அழைத்துச் சென்றார். இத்திருக் கோயிலில் உள்ள அனைத்துத் திருமேனிகளும் பச்சைக்கல்லில் உருவானவை. ஆனந்தவல்லியின் அற்புத எழிற்கோலம் கண்ணைவிட்டு அகலாது. மூக்கில் மூக்குத்தி அணிவிக்க வசதியாகத் துளை செய்துள்ள அருமையை குருக்கள் காட்டினார். இந்த விக்கிரகங்களை உருவாக்கிய தெய்விகச் சிற்பியை மனதார வணங்கினேன்.

இவ்வூரின் வரதராஜர் கோயிலில் உள்ள ஒரு சந்நிதி (காஞ்சிபுரத்தில் உள்ளது போல்) திருவூரகப் பெருமாள் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது. இவரைப் பற்றியும் அருணகிரிநாதர் திருப்புகழில் `திருவூரக மால் திருமருகோனே’ என்று பாடுகிறார்.

இவ்வூரின் வளப்பமும் செழிப்பும் 650 ஆண்டுகளுக்கு முன்பு அருணகிரிநாதர் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தேன்.  `பொன் போன்று பிரகாசிக்கும் கோபுரம், பெரிய மதில், கோயில், பல வீதிகள்...  இவை மட்டுமா! தேவர்களின் தேவேந்திரப்பட்டினத்தைவிட மேம்பட்டதாகிய குபேரனின் அளகாபுரியினும் சிறப்பானதாக லட்சுமி வாசம் செய்யும் சிறுவாபுரி’ என்று பாடியுள்ளாரே! அருளாளர் வாக்கில் வந்த அனைத்துமே சத்தியம்தான். சிறுவாபுரியைப் பற்றிய சிந்தனை வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

- தொடரும்...