மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்

ஓவியம்: மாருதி

உலகம் செழிக்கட்டும்!

ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்

ன்று மழை பொய்த்து எங்கும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மழையே இல்லை என்று எல்லோரும் புலம்பித் தவிக்கிறார்களே தவிர, அதற்கான அடிப்படைக் காரணம் என்ன, அதற்கு என்ன பிராயச்சித்தம் - பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை.

ஒருவர் கேட்டார், ‘எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படியான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன’ என்று.

புத்திசாலியாக இருக்கின்ற மனித இனம் செய்யும் தவறுகள், திரிசமங்கள், அடாவடித்தனங்கள், வேஷ பூஷாதிகள்... அவனுடைய இயல்புப்படி மனிதகுலத்துக்குச் சேவை செய்யாமல், அவன் செய்யக்கூடிய தவறுகள் போன்றவற்றால்தான்  இயற்கை சீற்றம் அடைந்து, மழை பொழியாமல், மனிதர்கள் உள்ளிட்ட பல ஜீவராசிகளையும் துன்புறுத்துகிறது.

ஆம்! மனிதகுலத்தின் இப்படிப்பட்ட அதர்மச் செயல்களால்தான் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. எப்படி தெரியுமோ?

முதலில் காற்று கெட்டுப் போகிறது. காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பசை போய் காற்று கெட்டு விடுகிறது. அந்தக் காற்று தண்ணீரில் பட்டதும் தண்ணீரும் கெட்டுப் போகிறது. ஆக, காற்றிலும் தண்ணீரிலும் மாசு ஏற்பட்டுவிடுகிறது. அந்தத் தண்ணீரின் மாசு, பூமியிலும் படிந்து பூமியையும் கெடச் செய்துவிடுகிறது. பூமியில் இருக்கக்கூடிய உரமும் உயிர்ச்சக்தியும் போய் பூமி மாசுபட்டு விடுகிறது. மாசு படிந்த பூமியில் உற்பத்தியாகக் கூடிய செடிகொடிகளும் மாசையே கக்குகின்றன.  அவற்றின் வழியே கிடைக்கும் காய்கனிகளைச் சாப்பிடும் மனிதர்களின் சிந்தனையிலும் மாசு படிந்துவிடுகிறது. அதனால் அவனுடைய சிந்தனை தாறுமாறாகி, இந்த லோகத்துக்குக் கெடுதல் செய்யத் தூண்டுகிறது.

ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்

ஆக, மனித இனம் செய்த அதர்மச் செயல்கள்தான், சங்கிலிக் கோத்த மாதிரி இத்தனை பாதிப்புகளுக்கும் காரணமாகின்றன. இதற்குப் பரிகாரம், தர்மச்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுதான். இந்தத் தர்மங்களைச் சொல்வது வேதம்தான். அதைப் புரிந்துகொள்ளாமல், மனிதர்கள் தங்களுடைய  சிற்றறிவைக் கொண்டு வேதமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது!

மனிதர்களுடைய சிற்றறிவைக்கொண்டே இந்த லோகத்தை அடக்கிவிட முடியாது. மனிதன் தன் புத்தியினால் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. வேதங்களில் சொல்லப் பட்டிருப்பவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்தால் மனித குலத்துக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த உலகத்தில், வேதங்களில் சொல்லப்பட்ட தகவல்கள்தான் முதன்முதலில் வெளிப்பட்டன.   பிறகு வெளிப்பட்ட எல்லா தகவல்களுக்கும் வேதங்களின் தகவல்கள்தான் அடிப்படை. வேதங்கள் சொல்லும் விஷயங்களின் அடிப்படை யில்தான் சிந்தனையே செய்கிறார்கள். மனிதன் முதன்முதலில் சிந்திக்கத் தொடங்கியபோது, அவன் சிந்திப்பதற்கு ஒரு விஷயம் வேண்டுமே. அந்த விஷயங்கள் வேதங்களில்தான் இருந்தன. எனவே, அவன் வேதங்களிலுள்ள விஷயங்களைப் பற்றித்தான் முதலில் சிந்திக்கத் தொடங்கினான்.

வேதங்களில், ஆத்திகம் இருக்கிறது; நாத்திகம் இருக்கிறது. நல்லவனும் இருக்கிறான்; கொடியவனும் இருக்கிறான். வேதம் சொல்லாத எந்த ஒரு விஷயமும் வெளியில் இல்லை. வேதங்கள் என்றால், வெறுமனே யாகம் செய்வது, பூஜை செய்வது, தபஸ் செய்வது மட்டுமல்ல; எல்லா விஞ்ஞானமுமே அவற்றுள் அடக்கம். எப்படியெல்லாம் மழை வருகிறது; எப்படியெல் லாம் இயற்கை தழைத்துச் செழிக்கிறது; பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது; மனிதர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று அத்தனை விஷயங்களும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவை கூறும்  அறிவுரைகள், நமக்கு நல்வழி காட்டுவன!

ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

மழைவெள்ளம் பெருக்கெடுத்து உயிர்களைத் துன்புறுத்துவதை மனிதகுலத்தால் தடுக்க முடிவதில்லை. நிலநடுக்கம் ஏற்படுவதையும் தடுக்க முடிவதில்லை. வீசும் புயல் காற்றையும் தடுக்க முடிவதில்லை. அனல் கக்கும் வெப்பத்தை மனித குலத்தால் தடுக்க முடிகிறதா என்றால், முடிவதில்லை என்பதுதானே உண்மை!

இதற்கெல்லாம் காரணமே மனிதகுலம் செய்யக் கூடிய அதர்மச் செயல்கள்தான். இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற இடர்ப்பாடுகளைக் கடந்து, நாம் நல்ல நிலைமைக்கு வரவேண்டுமானால், `காரீர இஸ்ட்டி' யாகத்தைச் செய்யவேண்டும். அந்த யாகத்தினால் மழை பெய்யும்; இந்த லோகம் செழிக்கும்.

ஒருத்தர், ‘வேதம் படித்த தீட்சிதர்களைக் கொண்டு, காலையிலிருந்து மாலை வரை காரீர இஸ்ட்டி ஹோமம் செய்தேன். ஆனால், மழை வரவில்லையே’ என்று கேட்டார்.

வேதம் என்ன சொல்கிறது  தெரியுமோ?

மழை வரும் வரை காரீர இஸ்ட்டி ஹோமம் செய். மழை பெய்யத் தொடங்கியதும் ஹோமத்தை நிறுத்து என்று சொல்கிறது. அது எத்தனை நாளாக இருந்தாலும் தொடர்ந்து ஹோமம் செய்யச் சொல்கிறது.

ரோகம் தீரும்வரை மருந்து சாப்பிட வேண்டும்தானே. அதேபோல், `யாகம் எத்தனை நாள் செய்யவேண்டும்' என்று  கேட்டால், `உரிய பலன் கிடைக்கும்வரை செய்யவேண்டும்' என்றுதான் வேதம் சொல்கிறது.

எனவே, வேத மாதாவை நாம் பிரார்த்தனை செய்துகொண்டு, வேதம் படித்த, யாகம் செய்யத் தகுதி வாய்ந்த பெரியோர்களை அழைத்து, அவர்களுக்குத் தேவையான திரவியங்களுடன், அவர்களுக்கான சம்பாவணையும் கொடுத்து இந்தக் காரீர இஸ்ட்டி ஹோமத்தைச் செய்ய வேண்டும். இதன் மூலம் எல்லாவிதமான சிரேயஸ்ஸும் வரும். எனவே, நாம் எல்லோரும் சேர்ந்து இந்த ஹோமத்தைச் செய்வோம். அதன் மூலம் மழை பெய்ய  வைத்து, சகல ஜீவராசிகளும் சந்தோஷமாக இருக்கும்படிச் செய்வதால், நமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

நம் முன்னோர், இந்த ஹோமத்தைச் செய்து, உரிய பலனை அனுபவித்த பிறகுதானே இந்த ஹோமத்தைப் பற்றி எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆகையால், நாம் பூரணமான நம்பிக்கையுடன் இந்தக் காரீர இஸ்ட்டி ஹோமத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

- தொடரும்...

மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஸ்ரீவேங்கடேச ராமாயணம்

புராணங்களில் குறிப்பிடத்தக்கது பிரமாண்ட புராணம். இதன் மத்திய பகுதியில் இடம்பெறும் `ஸ்ரீவேங்கடேச சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்' மகத்துவமானது; திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் நித்ய ஆராதனைகளின்போது பாராயணம் செய்யப்படுகிறது.

ஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்

183 சுலோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரத் தில் திருமாலின் தசாவதார மகிமைகள் பேசப்படுகின்றன. அவற்றில் ராமாவதாரம் குறித்த 14 சுலோகங்கள் கொண்ட பகுதி, `ஸ்ரீவேங்கடேச ராமாயணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வேங்கடேச ராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்தால், முழு ராமாயணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.