ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கல்யாண ராசிப் பொருத்தம்!

கல்யாண ராசிப் பொருத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாண ராசிப் பொருத்தம்!

கல்யாண ராசிப் பொருத்தம்!

`ஜோதிடத் திலகம்’ காழியூர் நாராயணன்

ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். அது ராசி பலன்களையும் அதிர்ஷ்டத் தையும் மட்டுமே சொல்லும் சாஸ்திரம் அல்ல; நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டியும்கூட. ஜோதிட சாஸ்திரத்தைத் துணையாகக்கொண்டால், நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும். குறிப்பாக, வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, உங்கள் ராசிக்கேற்ற ராசிக்காரரைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு, பாக்கியாதிபதி மற்றும் ராஜ்யாதிபதி ஆகிய ஒன்பது மற்றும் பத்துக்குடைய ராசிகளான தனுசு, மகரம் ஆகிய இரண்டும் மிகவும் பொருத்தமானவை. அதேபோல், ஐந்தாம் வீட்டுக்குடைய ராசியான சிம்மமும் மிக உகந்தது. இந்த ராசிக்காரர்கள் இணைந்தால், அவர்களது இல்லற வாழ்வு சிறக்கும்.

கல்யாண ராசிப் பொருத்தம்!

ரிஷப ராசிக்காரர்களுக்கு, பாக்கியாதிபதியான ஒன்பதாமிடம் மகரம், ராஜ்யாதிபதியான பத்தாமிடம் கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பு. இந்த இரண்டு ராசிகளுக்கும் அதிபதி சனி. அவர் இவர்களுக்கு யோகக்காரகனாவர். அதேபோல், ரிஷப ராசிக்காரர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவருக்குப்  பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்துக்குரிய கன்னி ராசிக்காரர் துணையாக அமைந்தால், திருமணத்துக்குப் பின் திருப்புமுனையான வாழ்க்கையைச் சந்திப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு, ஒன்பதாமிடமான கும்பம், பத்தாமிடமான மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வாழ்க்கைத்துணை அமைந்தால் வாழ்க்கை இனிப்பாக அமையும்; பொருளாதாரம் செழித்தோங்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு 5-ம் இடமான துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவது பூர்வஜென்ம பந்தமாகும்.

கடக ராசிக்காரர்களுக்கு, ஐந்தாமிடமான விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவது சிறப்பு. அதன் மூலம், அன்பு நிறைந்த குழந்தைகளுடன் அற்புதமான வாழ்க்கையை அடைவார்கள். அதேபோல் கடக ராசிக்கு சமசப்தம மான மகர ராசிக்காரர்கள் பொருத்தமான ஜோடி.

கல்யாண ராசிப் பொருத்தம்!

சிம்ம ராசிக்காரர்களுக்கு, லக்னத்திலிருந்து ஏழாம் வீடான கும்ப ராசிக்காரர்கள் மிகவும் ஏற்றத் துணை. அதற்கு அடுத்தபடியாக, பூர்வபுண்ணியாதிபதி வீடான தனுசு ராசிக்கார்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், அதீத நன்மைகள் உண்டாகும். பாக்கியாதிபதியான மேஷ ராசிக்காரர் சிம்ம ராசிக்காரர்களுக்குக் கணவனாகவோ மனைவியாகவோ அமைந்தால், அவர்களின் இல்லறம் நல்லறமாக இருக்கும்.  

கன்னி ராசிக்குரிய அதிபதி புதன். இந்த ராசிக்காரர் களுக்குத் திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். கன்னி ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானம் மகர ராசி. சனீஸ்வரனின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்வு சிறப்பாக இருக்கும். அதேபோல் இவர்கள், ரிஷப ராசிக்காரர்களை மணந்தால், அன்பு மயமான வாழ்க்கை அமையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு, இவர்களைப் போலவே சமபலமிக்க ஜாதகரையே இணையாகச் சேர்க்க வேண்டும். இவர்களின் ராசியிலிருந்து ஏழாவது ராசியான மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ரிஷப ராசி ஜாதகத்தைச் சேர்க்கக்கூடாது. எல்லா ராசியைச் சேர்ந்தவர்களுக்கும் சமசப்தம ராசியான ஏழாம் ராசிக்காரர்களை திருமண உறவில் சேர்ப்பது வழக்கம். ஆனால், விருச்சிக ராசியில் நீசமடையும் சந்திரன், (சம சப்தமம்) ரிஷப ராசியில் உச்சமடைகிறார். அதனால், இவர்களுக்குப் பதிலாக பூர்வபுண்ணிய ஸ்தானமான மீன ராசிக்காரர்களை மணந்தால், வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல், பாக்கிய ஸ்தானமான கடகராசிக்காரர்களை மணந்தால், எல்லா வளங்களையும் பெற்று வாழலாம்.

கல்யாண ராசிப் பொருத்தம்!

தனுசு  ராசிக்காரர்கள், சமசப்தம ராசியான மிதுன ராசிக்காரர்களை மணந்தால், அவர்களின் வாழ்க்கை மிகவும் அன்புமயமானதாக அமையும். அதேபோல், சிம்ம ராசியில் பிறந்த ஆணும் தனுசு ராசியில் பிறந்த பெண்ணும் மணந்துகொண்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால், சிம்ம ராசியில் பிறந்த பெண்ணை தனுசு ராசியில் பிறந்த ஆணுக்கு மணமுடித்தால் ஆகாது. தனுசு ராசிக்குப் பத்தாமிடமான கன்னி ராசிக்காரர்கள், இவர்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்களுக்கு, சமசப்தம ராசியான கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக, மகர ராசிக்குப் பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்துக்குரிய கன்னி ராசிக்காரர்கள் அல்லது ராஜ்யாதிபதியான பத்தாமிடக்குரிய துலாம் ராசிக்காரர்கள் பொருத்தமானவராக இருப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்கள், தங்களின் ராசிக்கு ஏழாவது ராசியான சிம்ம ராசிக் காரர்களை மணப்பது நல்லது. அவர்கள் தங்களின் நிர்வாகத் திறமையாலும் சாதுர்யத்தாலும் வாழ்வைச் செழுமையாக்கிக் கொள்வார்கள். அதேபோல், பூர்வபுண்ணிய ஸ்தானமான மிதுன ராசிக்காரர்களை மணப்பது மிகவும் சிறப்பாகும்.

மீன ராசிக்காரர்களுக்குச் சமசப்தம ராசியான கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் பொருத்தமான வர்களாக இருப்பர். இவர்களுக்கு அடுத்தபடியாக கடக ராசியைச் சேர்ந்தவர்களைச் சேர்க்கலாம். அதே போல், செவ்வாயை அதிபதியாகக்கொண்ட விருச்சிக ராசிக்காரர்களும் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்