மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 31

மகா பெரியவா - 31
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 31

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 31

`இட்லி' என்ற பெயர் எதற்கு?

மகா பெரியவா - 31

கா பெரியவருக்குச் சமையல் கலையில் இருந்த ஞானம் அபரிமிதமானது. `விருந்து பரிமாறும் வரிசை நியதியிலும் வாழ்க்கைத் தத்துவம் உண்டு' என்று  மகாபெரியவா கூறிய விளக்கம் மிக அற்புதமானது.

ஒருமுறை மடத்துக்கு வந்த பக்தர் ஒருவரிடம், குழம்புக்கும் ரசத்துக்குமான வித்தியாசம் குறித்து, தனக்கேயுரிய பாணியில் சுவைபட விளக்கிய மகாபெரியவா, அந்த விளக்கத்தோடு சேர்த்து வாழ்க்கை தத்துவத்தையும் அங்கிருந்த அனைவருக்கும் வெகு அழகாக போதித்தார்.

 ``நமக்கு `தான்' (Ego) என்ற ஒண்ணு இருந்தால், மனம் குழம்பிப்போகிறது. அது மட்டும் இல்லேன்னா, மனசு நன்னா தெளிவா ரசமாய் இருக்கும்.  இதை நமக்குத் தினமும் நினைவுபடுத்து வதற்குத்தான் குழம்பு, ரசம் பண்றோம். அதையும் முதல், இரண்டாவது என்று ஒரு வரைமுறை வைத்து சாப்பிடறோம். விருந்துகளில் முதலில் குழம்பு சாதம், தொடர்ந்து ரசம் சாதம், பட்சணம், பாயசம், மோர் சாதம்  என்று வரிசைப்படுத்திச் சாப்பிடுவதில் வாழ்க்கை தத்துவமே இருக்கு.

எல்லோரும் `ஈகோ'வுடன்தான் பிறக்கிறார்கள். அதுதான் ஆரம்பம். அதையே, முதலில் சாப்பிடும் `தானோடு' சேர்ந்த குழம்பு காட்டுகிறது. பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல்போகும் வாழ்க்கையே, மனசு தெளிந்துவிட்டால் பிடித்துப் போகிறது, ரசமாக இருக்கிறது.

அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பட்சணமும் பாயசமும். இனிமையையே அனுபவித்துக்கொண்டிருந்தால் திகட்டிவிடும். அதற்கு மேலே போய் பிரும்மானந் தத்துடன் லயிக்கணுமே...  அதுதான் மோர். அதுவே சாஸ்வதமான நிலை. பிறகு மேலே தொடர எதுவுமில்லை. மோர் சாதம் முடிந்ததும் இலையை எடுத்துவிட்டு எழுந்துவிட வேண்டியதுதான்!"

மகா பெரியவா - 31

பெரியவா சொன்ன இந்த விளக்கத்தைப் பலமுறை படித்திருக்கிறோம்; பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். இருந்தாலும் `தான்' கலந்த குழம்பில்தான் ஆரம்பிக்கிறோம்!

கா பெரியவா சந்நியாசம் பெற்றதற்கான பின்னணியை, இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் அனுபவித்தோம். இப்போது, பெரியவா அவர்களின் தன்னிலை விளக்கமாக அந்தப் புனிதச் சூழலை மறுபடியும் காண்போம்.

இதோ மகா பெரியவா கூறியிருப்பது...

“1907-ம் வருடம் ஆரம்பம். தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள திண்டிவனத்தில், கிறிஸ்துவ மிஷன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தின வருடம் எங்கள் டவுனுக்கு வந்திருந்த காமகோடி பீடம் சங்கராசார்ய சுவாமிகள், கலவை கிராமத்தில் ஸித்தி அடைந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஆற்காட்டிலிருந்து 10 மைல் தொலைவிலும், காஞ்சியிலிருந்து 25 மைல் தொலைவிலும் இருப்பது அந்தக் கிராமம். என் தாய்வழிச் சகோதரரான ஒருவர், சிறிது காலம் ரிக் வேத அத்யயனம் செய்தபின், ஆசார்ய சுவாமிகளின் முகாமில் சேர்ந்திருந்தார். அவரைப் பீடாதிபதியாக ஆக்கியிருந்ததாகச் செய்தி வந்தது. என் தாயாரின் ஒரே சகோதரி கணவனை இழந்தவள். திக்கற்றவள். அவளுடைய ஒரே மகன் அவர். முகாமில் அவளைத் தேற்றுவதற்கு ஒரு ஆத்மாவும் கிடையாது.

அந்தச் சமயம் என் தந்தை திண்டிவனம் தாலுகாவில் பள்ளிக்கூட சூபர்வைசராக இருந்துவந்தார். 

திண்டிவனத்திலிருந்து 60 மைல் தூரத்திலிருந்த கலவைக்கு, தமது மாட்டு வண்டியில் குடும்பத்தோடு செல்வதென்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சிராப்பள்ளியில் ஒரு கல்வி மாநாடு இருந்ததால், அத்திட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று.

மகன் சந்நியாச ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்து விட்டது குறித்து, தன் சகோதரியைத் தேற்றும் பொருட்டு என் அம்மா, என்னையும் மற்றக் குழந்தை களையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள். ரயிலில் காஞ்சிபுரம் சென்று, அங்குள்ள சங்கராசார்யர் மடத்தில் தங்கினோம். குமாரகோஷ்டி தீர்த்தத்தில் என் அன்றாடக் கடன்களை முடித்துக் கொண்டேன்.

ஆசார்ய பரமகுரு ஸித்தியடைந்த பத்தாம் நாளன்று மகாபூஜை நடத்துவதற்காகச் சாமான்கள் வாங்க வேண்டி, கலவையிலிருந்து சிலர் மடத்து வண்டியில் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், பரம்பரையாக வந்த மடத்து மேஸ்திரி. என்னைத் தன்னுடன் வருமாறு அவர் அழைத்தார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனியே பின்னால் வர ஒரு வண்டி அமர்த்தப்பட்டது.

பிரயாணத்தின்போது அந்த மேஸ்திரி, நான் திரும்பி வீட்டுக்குப் போக இயலாமல் போகக் கூடுமென்றும் என் எஞ்சிய வாழ்க்கை மடத்திலேயே கழிய வேண்டியிருக்கலாம் என்றும் ஜாடையாகக் குறிப்பிட்டார். என் ஒன்றுவிட்ட சகோதரர் மடாதிபதியாகிவிட்டதால், நான் அவருடன் வசிக்கவேண்டுமென அவர் விரும்புகிறார் போலிருக்கிறது என்று முதலில் எண்ணினேன். அப்போது எனக்கு வயது பதிமூன்றுதான். எனவே, மடத்தில் அவருக்கு என்னவிதத்தில் உதவியாக இருக்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால், வண்டி ஓட ஓட மேஸ்திரி பக்குவமாக விஷயத்தை விளக்கினார். பூர்வாசிரமத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரராக இருந்த ஆசார்ய சுவாமிகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு ஜன்னி கண்டுவிட்டதாம். அதனால்தான் என்னை சீக்கிரமாகக் கலவைக்கு அழைத்துச்செல்வதற்காக குடும்பத்திலிருந்து என்னைப் பிரித்துத் தனியே கூட்டிச்செல்கிறார்களாம்.

என்னை அழைத்து வருவதற்காகத் திண்டிவனத்துக்கே அவர் போகவிருந்தாராம். அதற்குள், என்னைக் காஞ்சிபுரத்திலேயே சந்தித்து விட்டதாகவும் சொன்னார்.

இந்த எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்திருந்த பிரார்த்தனை.

என் அம்மாவும் மற்றக் குழந்தைகளும் கொஞ்சநேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். பாவம், என் அம்மா. சகோதரியைத் தேற்றுவதற்காகப் புறப்பட்டு வந்தவள். தன்னையே பிறர் தேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தாள்.

நானாக துறவுபூண்டு சந்நியாச ஆடை அணியவில்லை. கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிட்டியதில்லை. சந்நியாசம் பெற்ற முதல் நாளே ஒரு மாபெரும் சமஸ்தானத்தின் வசதிகளும் பொறுப்புகளும் என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டன.

நான் சந்நியாச ஆசிரமம் ஏற்றபோது, தும்முலூர் ராமகிருஷ்ணய்யாவும், அடைப்பாளையம் பசுபதி ஐயரும் கலவையில் இருந்தார்கள். இருவரும் தென்னாற்காடு ஜில்லா கோர்ட்டில் பணியாற்றி வந்தார்கள். என் குருவின் குருவுக்கு அத்தியந்த சீடர்களாக விளங்கியவர்கள் அவர்கள். என் இளமை வாழ்வை உருவாக்குவதில் உதவுவதென்று இருவரும் உறுதியாயிருந்தார்கள் என்று பிற்பாடு தெரிந்தது.

பசுபதி அடிக்கடி என்னைத் தனியே சந்திப்பார். இடைக்காலத்தில் என்னிடம் என்னென்ன பலவீனத்தைக் கவனித்திருந்தாரோ, அதையெல்லாம் சுட்டிக்காட்டுவார். அவற்றை வெல்வதற்குத் தாம் கூறும் யோசனைகளைக் கேட்கும்படி மன்றாடுவார்.

என்னிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்போது, சந்நியாச ஆசிரமத்திலிருக்கும் என்னிடம், தாம் செய்யும் அபவாதங்களுக்காக, பிற்பாடு பிராயச்சித்தம் செய்துவிடுவதாகக் கூறுவார்” என்று தன் ‘சுய சரிதை’யில் குறிப்பிட்டிருக்கிறார் மகா பெரியவா.

மகா பெரியவா - 31

‘`இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”

தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்.

“இலையில் இட்டவுடன் இல்லைன்னு காலியாகிறது. இட்டு + இல்லை இட்டிலை... இட்டிலி...” என்றார் பண்டிதர்.

பெரியவா சற்று யோசனை செய்தார்.

“எல்லோரும் இலையில் இல்லைன்னு ஆக்கிடுவாளா... என்னைப் போல எத்தனையோ பேர் அதையும் வெச்சிண்டு உட்கார்ந்திருக்காளே! எனக்கு என்ன தோண்றதுன்னா, ஏதாவது சமைக்கறதுன்னா சிரமப்படணும். அடுப்புப் பக்கத்திலேயே நிக்கணும். இல்லேன்னா சமைக்கற பண்டம் கருகிப்போயிடலாம். ஆனா, இட்லிக்கு மட்டும் பானைல இட்டுட்டு பத்து நிமிஷம் அதை மறந்துட்டு, அதான்... இல்லைன்னு விட்டுட்டு அந்தப் பக்கம் போயிடலாம். இட்லி தானே பக்குவமாயிடும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை இடுதல் என்பார்கள். இடுகாடு, இடுமருந்து, இட்டிலி..” என்று பண்டிதருக்கு விளக்கம் தந்தார் பெரியவா.

வருடம் 1958. மகா பெரியவா சென்னையில் முகாமிட்டிருந்த நேரம். ஒரு நாள் இரவு, நகர்ப்புற பயணமாக மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.

விமான நிலைய வாயிலில் நின்றிருந்த அதிகாரிகள் வரவேற்க, பெரியவா விமான நிலையத்துக்குள் சென்றார். உடன் வந்த பக்தர்களும் கூடவே சென்றார்கள். சுவாமிகள் விமானத்துக்குள் சென்று பார்க்க ஏற்பாடாயிற்று. “நீங்களெல்லாம் விமானத்துக்குள் வரவேண்டாம்... இங்கேயே இருங்கோ...” என்று பக்தர்களுக்கு உத்தரவு இட்டுவிட்டுச் சென்றார் பெரியவா.

ஆனால், பெரியவா விமானத்துக்குள் இருப்பது போல் படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில், கோஷ்டியில் கேமராவும் கையுமாக இருந்த புகைப்படக்காரர், பலர் தடுத்தும் கேட்காமல் சுவாமிகளுக்குப் பின்னால் சென்றார். திரும்பிவரும்போது முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு வந்தார்!

நடந்தது இதுதான். பெரியவாளுக்குத் தெரியாமல் விமானத்துக்குள் சென்று, அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த அவரைப் படமெடுத்திருக்கிறார் புகைப்படக்காரர். ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரியவா, ‘நான் சொன்னதற்குப் பிறகும் நீ ஏன் இங்க வந்தே’ என்பது போல் புகைப்படக்காரரைப் பார்த்திருக்கிறார். புகைப்படக் காரருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போயின!

“ஏர்போர்ட் உள்ளே, அதுவும் விமானத்துக்குள்ளே பர்மிஷன் இல்லாம போட்டோ எடுக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா” என்று மகா பெரியவா கேட்டதும் வெலவெலத்துப் போனார் புகைப்படக்காரர். “அப்படி ஒரு சட்டம் இருக்கு இல்லியா” என்று அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, “என்கூட வந்திருக்கான்னு பேசாம இருந்தேளா...” என்று பெரியவா கேட்டதும், அவர்களும் பதிலேதும் சொல்ல முடியாமல் சங்கடப் பட்டிருக்கிறார்கள். புகைப்படக் காரரைப் பார்த்து, “ரோலைக் கழற்றி இவாகிட்டே கொடுத்துட்டு வா...” என்று சற்றுக் கடுமையாகக் கூறியிருக்கிறார் பெரியவா.

பின்னர், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அருகிலுள்ள விமான நிலைய வானிலை ஆய்வுக் கூடத்துக்கு விஜயம் செய்தார் பெரியவா. அங்கிருந்த அதிகாரிகள், அவரவருக்கு உரிய பகுதிக்கு சுவாமிகளை அழைத்துச் சென்று, பல்வேறு நுணுக்கங்களை விளக்கிக்கொண்டிருந்தனர்.

இளமைத் துடிப்புடன் காணப்பட்ட ஒரு விஞ்ஞானி, விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை என்று கூறினார்.

“ஏன் அப்படி” என்று தெரிந்துகொள்ள பெரியவா ஓரிரு கேள்விகள் கேட்க, அதை அறிவுபூர்வமாக ஆங்கிலத்தில் விளக்கினால் பெரியவாளுக்குப் புரியாது என்று நினைத்தோ என்னவோ, சரியாக விளக்க முடியாமல் திணறினார்.

மகா பெரியவா அவரிடம், ‘`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர்  (stratosphere) தானே” என்று கேட்க, சட்டென்று முகம் வெளிறிப்போனாராம் அந்த இளம் விஞ்ஞானி!

- வளரும்...

- வீயெஸ்வி

பூஜையின் அங்கங்கள்!

திருக்கோயில் வழிபாட்டில் ‘பூஜை’ என்பது முக்கிய அம்சமாகும். நித்திய பூஜை என்பதை சாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என மூன்றாகப் பிரித்துள்ளனர் நம் முன்னோர்.

இதில் சாங்கம் என்பது அபிஷேகம், வஸ்திரம், ஆபரணம், சந்தனம், புஷ்பம் என்ற முக்கியமான கூறுகளை உடையது.

மகா பெரியவா - 31

உபாங்கம் என்பது இறைவனுக்குச் செய்யும் தூபம், தீபம், குடை, கண்ணாடி, சாமரம், நர்த்தனம், கீதவாத்யம் போன்ற உபசாரங்களாகும்.

பிரத்யங்கம் என்பது நைவேத்தியம், பலி, ஹோமம், நித்ய உற்சவம் ஆகியவையாகும்.

அபிஷேகம் என்பது கோயில் வழிபாட்டில் மிகவும் முதன்மையானது. ‘எழுபதுக்கும் மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் பண்டைய கால வழிபாட்டில் இருந்தன’ என்று சைவ நூல்களில் ஒரு தகவல் உண்டு. அபிஷேக பலன்கள் குறித்தும் ஞானநூல்கள் விவரிக்கின்றன. உதாரணமாக...

நெல்லிமுள்ளிப் பொடி அபிஷேகம்: நோய் நீங்க; பசும் பால்: ஆயுள் விருத்தி; தேன்: சங்கீத ஞானம்; பஞ்சாமிர்தம்: தேக ஆரோக்கியம்; மாம்பழம்: நன்மக்கட்பேறு; சந்தனம்: லட்சுமி கடாட்சம்; அன்னம்: சாம்ராஜ்யப் பதவி வாய்க்கும்.

- தெ.நமசிவாயம், சென்னை-44