ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 32

ரங்க ராஜ்ஜியம் - 32
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 32

ஓவியம்: அரஸ்

`பொய் வண்ணம் மனத்தகற்றிப்
    புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு
    மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில்போல்
    திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான்
    கண்டது தென்னரங்கத்தே'


- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்

நீலன் மாறிவிட்டான்! பழைய பரகாலனின் தோற்றத்துக்கே மீண்டும் மாறிவிட்டான். அவனது ‘ஆடல்மா' எனும் வெண்புரவியின்மீது ஒரே தாவில் ஏறி, அதைக் காற்றாய்ச் செலுத்தினான்.

அரண்மனையை அடைந்து தன் சகாக்களை அழைத்து, “நாம் இனி கள்ளர்கள். மிதமிஞ்சிய செல்வம் கொண்டிருப்போர் அனைவரும் இனி நம் பகைவரே! களவுச் செல்வத்தால் நம் நாட்டில் முதலில் பசியைப் போக்குவோம். அடுத்து, ஆலயங்களில் நிகழ்ந்திடும் ஆறு கால பூஜைகள்... அவற்றுக்கும் ஒரு குந்தகமும் வந்து விடக்கூடாது” என்றான்.

அவன் சகாக்கள் தயங்கி நின்றனர்.

“சகாக்களே! என் மாற்றத்தில் எனக்கே பிரியம் இல்லைதான். என்ன செய்வது. இது சோதனைக் காலம்... இதில் நான் என்னைப் பாவியாக்கிக் கொண்டாவது ஊரை வாழவைக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமில்லை எனில் பரவாயில்லை... என்னோடு வராதீர்கள். நான், தனி ஒருவனாகக் களவுக்குச் செல்வேன். நான், முன் வைத்த காலை என்றும் பின் வைத்ததில்லை என்பதைத்தான் நீங்கள் அறிவீர்களே...” - நீலன் முத்தாய்ப்பாகப் பேச, அவர்கள் சம்மதித்தனர்.

நம் கள்ளநெறியைப் பிறர் அறியத் தேவையில்லை. குறிப்பாகக் குமுதவல்லிக்குத் தெரியவேகூடாது. நம் குறிக்கோள், மக்கள் பசியின்றி வாழ வேண்டும் என்பதே. அதேபோல், மாலவனின் ஆலயத்தில் ஒரு  பொழுது  பூஜைக்குக்கூட குறைவு வந்துவிடக்கூடாது” என்று எல்லோருக்கும் வாய்ப்பூட்டுப் போட்டவன், முகமூடிக் கவசத்தை அணிந்துகொண்டான்.

ரங்க ராஜ்ஜியம் - 32

தொடங்கியது கள்வ நெறி!

பாவம் குமுதவல்லி! களவாடிய பொன் பொருள் எல்லாம் பொற்காசுகளாகி, பின் அரிசியும் பருப்புமாய் மாறியதை, அவளால் முதலில் அறிய முடியவில்லை.

அன்ன சாலைகள் தொடர்ந்து இயங்குவதைக் கண்டவள் ‘எப்படிச் சாத்தியமாயிற்று’ என்று நீலனிடம் கேட்டபோது, “செல்வந்தர்களிடம் கடன் பெற்றுச் செய்கிறேன்” என்றான். அவளும் நம்பிவிட்டாள்.

அப்படியே ‘`உங்களைக் கடன்காரனாக்கிக் கொண்டாவது செயல்படவேண்டுமா” என்றும் கேட்டாள்.

“கைநிறைய பொருளிருக்க, அதை அள்ளித் தருவதில் என்ன பெருமை விளைந்துவிடும் தேவி. இல்லாத நிலையிலும் தொடர்வதில்தானே கொள்கையைச் சுமப்பது தெரியும்” என்று கூறி,  அவள் வாயை அடைத்துவிட்டான்.

இருந்தும் ஒரு நாள், “கட்டளையிட்ட நான் சொல்கிறேன்... அன்னதானத்தை நிறுத்திவிடுங்கள். பட்டினி கிடப்போம். அந்தப் பரந்தாமன் பரிதாபப்பட்டு முன்போல வாழ்விக்கச் செய்தால் வாழ்வோம். இல்லையெனில், உயிரை விடுவோம்” என்றாள்.

“நாம் விடலாம்... நம் மக்கள்?”

“இந்தக் கேள்விக்கான பதிலை அந்த மாலவனல்லவா சொல்லவேண்டும்?”

“அவன்தான் சொல்லவில்லையே... `எப்படிச் சமாளிக்கிறாய் என்று பார்க்கிறேன்' என்பது போலல்லவா உள்ளது அவன் போக்கு?”

“சோழ மன்னனுக்கு நீங்கள் கடன்பட்டபோது ஓடிவந்தவன், இப்போது ஏன் இப்படி வாட்டுகிறான் என்று தெரியவில்லையே...”

கண்ணீர் பெருக்கினாள் குமுதவல்லி.

“அழுவதைவிட ஆவதைச் செய்வது சிறந்தது. அதைத்தான் நான் செய்கிறேன். இப்போது என்ன கெட்டுவிட்டது?”

“என்ன கெட்டுவிட்டதா... எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களே! இதைவிடவா ஒரு கேடு வேண்டும்?”

“உருவம்தான் மாறியுள்ளது. உள்ளம் முன்பைவிட அவனை அதிகம் எண்ணியபடி உள்ளது. நீ கலங்காதிரு. நானா, அவனா என்று பார்த்து விடுகிறேன்...”

“ஐயோ! இது என்ன செருக்கான பேச்சு. அவனெங்கே நாமெங்கே?”

“உண்மைதான்! அவனெங்கே... நானெங்கே... நானொரு கள்ளன் - சாமான்யன் - வாளால் பல்லுயிர்களைக் கொன்றவன். எல்லா போகங்களையும் திகட்டத் திகட்ட அனுபவித்தவன். காட்டுக்குப் போனேனா... தவம் செய்தேனா... புலன்களைத்தான் அடக்கினேனா! எதைச் செய்தேன் என்னை அவன் ரட்சிக்க; எங்கிருக்கிறது எனக்குத் தகுதி...”

“என்ன இது தாழ்வான பேச்சு... அதெல்லாம் பழங்கதை! நீங்கள்தான் உங்களையே அவன் வசம் ஒப்படைத்துவிட்டீர்களே.”

“அது நடிப்பா இல்லை உண்மையா என்று அவன் சோதிக்கலாமல்லவா?”

“அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் பொறுமையின்றி மாறிவிட்டீர்களே...”

“இல்லை தேவி. திட்டமிட்டே மாறினேன்.”

“நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.”

“தேவி... பேசியது போதும்.  நீ போய் எப்போதும் போல் இரு. போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.”

தற்காலிகமாய்க் குமுதவல்லியைச் சமாளித்தான். ஆனால், அன்று இரவே நீலன் முகமூடி அணிந்து களவுக்குப் புறப்பட்டதை அவள் தற்செயலாக அறியவும், அப்படியே நொறுங்கிப்போனாள். நேராகத் திருச்சந்நிதிக்குச் சென்றாள்.

“எம்பெருமானே! இதென்ன கொடுமை? செம்பு தங்கமானது என்று கருதியிருந்தேன். ஆனால் அது துருப்பிடித்த இரும்பாகிவிட்டதே... இதற்காகவா நான் பாடுபட்டேன். இதுவா நல்ல நெறி.

கடன்பட்டுக் கலங்கி நின்றபோது கை கொடுத்த கோவிந்தனே... இப்போது கள்வனாகிவிட்டவனை என்ன செய்யப்போகிறாய். என் கேள்விக்கொரு நல்ல பதிலை நீ சொல்லாவிட்டால், உன் சந்நிதியிலேயே வாளால் என்னை நான் மாய்த்துக் கொள்வேன். இது உன்மேல் ஆணை” என்று உணர்ச்சிப்பெருக்கோடு சத்தியம் செய்தாள் குமுதவல்லி.

களவுப் பணத்தில் எரிந்த தீபச்சுடர் தந்த ஒளியில் அந்த இறைவனும் கள்ளச்சிரிப்பு சிரித்தான். பின், குமுதவல்லிக்காக மட்டுமின்றி நீலனுக்காகவும் புறப்பட்டுவிட்டான்!

பாற்கடல்!

லட்சுமிதேவி ஒரு மணப்பெண்ணைப் போல் கழுத்துகொள்ளாத நகையோடு காட்சி தந்திட, எம்பெருமானும் மாப்பிள்ளைக் கோலத்தில் ஒரு செல்வச்சீமானின் பிள்ளைபோல தோற்றமளித்தார்.

எம்பெருமான் கைசொடுக்கிய மாத்திரத்தில் வைகுண்டவாசிகளில் பலரும் கல்யாண வீட்டுக்கு வந்த உற்றார் உறவினர் ஆகினர்.

“இப்படி ஒரு நாடகம் அவசியம்தானா”  என்று கேட்டாள் லட்சுமி.

“போடவைக்கிறானே அந்த நீலன்...”

“மழையைப் பொழியச் செய்தால் வறுமை நீங்கி விடும். அவனும் மாறிவிடுவானே...”

“தேவி! நீலன் என் அடியவனானது பெரிதேயில்லை. என் அடியவன் திரும்ப நீலன் ஆனான் பார்... அதை நான் வியக்கிறேன்!”

“கெட்டவன் நல்லவனாகிப் பின் மிகக் கெட்டவனானதை வியக்கிறீர்களா?”

“நீலன் எப்போதுமே கெட்டவனில்லை.பிறப்பால் அவன் தங்கம். குமுதவல்லி அவனை ஒரு நல்ல நகையாக்கினாள், என் பொருட்டு. நான் அவனைக் கிரீடமாக்கப்போகிறேன்.”

“கிரீடமாகவா?”

“ஆம் தேவி! நீலன் என் பக்தர்களில் கிரீடம் போன்றவன். எனக்காக ஒரு பக்தன் பூக்கள் தூவி பூஜிக்கிறான்... ஒருவன் பட்டினி கிடந்து பூஜிக்கிறான்... ஒருவன் தவம் செய்து தவிக்கிறான்...

இப்படி, தங்களை மையமாக வைத்து பக்தி புரிவோர் நடுவில், தன்னையே பணயம் வைத்து, தன் பக்தியையும் பணயம் வைத்த நீலனைப் போல் ஒருவனை நீ கண்டிருக்கிறாயா?”

“உண்மைதான்... தன் பொருட்டு திருடியவர்கள் உண்டு. ஆனால், இவன் உங்கள் பொருட்டல்லவா திருடனாகியுள்ளான்...”

“ஆனது மட்டுமா... வைணவனாகத்‘தான்’ வாழ முடியவில்லை; வைணவமாவது வாழட்டும் என்றானே, கேட்டாயா?”

“உங்கள் மார்போடு இருக்கும் எனக்கு எப்படிக் கேட்காமல் போகும்... ஆனாலும் களவு களவுதானே. அது எப்படிச் சரியாகும்?''

“ரண சிகிச்சையை நீ கொலையாகக் காண்பாயா?”

“என்றால், நீலன் புரிவது ரண சிகிச்சையைப் போல் ஒரு மருத்துவமா?”

“இல்லையா பின்னே. நான் தந்ததைப் பெற்று நோகாமல் நோன்பு கொண்டாடியிருக்கலாமே... ஆனால், அவன் அவ்வாறு செய்யவில்லையே!”

“யாசகம் பெறவே மறுத்தவன், கள்ளனாக மாறுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது அல்லவா?”

“அவன், தன்னைப் பெரிதாகக் கருதியிருந்தால், அவனிடம் `நான்' எனும் அகந்தை இருந்திருந்தால், நீ சொல்வதுபோல் நடந்துகொண்டிருப்பான்.

அவன், தன்னை ஒரு கருவியாக மட்டுமே கருதுகிறான். கள்ளன் ஆனபோதிலும் அதில் பிறர் கண்ணீருக்கு அவன் இடம் தரவில்லை என்பதையும் எண்ணிப் பார்.

மிகுதியாக வைத்திருக்கும் சுயநலம் கொண்டோரிடமிருந்தே களவு புரிந்துவருகிறான். ஒரு கோணத்தில் இது களவல்ல... களவெனும் பெயரில் தர்மபரிபாலனம்!”

“அப்படியானால் அந்த தர்மபிரபுவை ரட்சிக்கப்போகிறோமா?”

“இதற்கு மேலும் தாமதித்தால், குமுதவல்லியைக் கொன்ற பாவம் என்னை வந்து சேர்ந்துவிடாதா?”

“ஆட்டுவிப்பதும் நீங்கள். ஆடுவதும் நீங்கள். இதில் இப்படி ஒரு மானுட பாவமா?”

“மானுடரட்சணைக்கு மானுட பாவம்தான் உகந்தது. நாம் புறப்படுவோமா?”

வைகுண்டத்தில் இப்படிக் கேட்ட மாலவன், பிராட்டியோடு கல்யாணக்கோலத்தில், ஒரு கூட்டமாய் வண்டி கட்டிக்கொண்டு நீலன் ஒளிந்திருக்கும் மரங்கள் சூழ்ந்த வழித்தடத்தில் வரலானான்.

நீலனும் கூட்டத்தாரோடு வளைத்துப் பிடிக்கலானான்.

தொடங்கியது நாடகத்தின் இறுதிக்காட்சி!

- தொடரும்.

- இந்திரா சௌந்தர்ராஜன்