Published:Updated:

நினை அவனை! - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

நினை அவனை

நினை அவனை! - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை

Published:Updated:
நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

பாலஸ்தாவத் க்ரீடா ஸக்த:
தருணஸ்தாவத் தருணீஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணீ கோபி ந ஸக்த:


கருத்து : குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் ஈடுபாடு. இளைஞனாகும்போது வேறுவித மயக்கம். முதியவனாகும் போது, வெவ்வேறு கவலைச் சிந்தனைகள். ஆக, பரப்பிரம்மத் திடம் பற்றுவைத்தவர்கள் எவரும் இல்லை!

நினை அவனை! - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

சாஸ்திரங்கள் ஒருவரது வாழ்வை நான்கு கட்டங்களாகப் பிரிக்கின்றன. முதல் கட்டம் பிரம்மசார்யம். அதாவது, திருமணமாகாத பருவம். இரண்டாவது கட்டம் கிருஹஸ்தம். அதாவது இல்லற வாழ்க்கை. மூன்றாவது கட்டம் வானப்பிரஸ்தம். இந்தக் காலகட்டத்தில் எல்லா பற்றுகளையும் மெள்ள மெள்ள விட்டுவிட முயற்சி செய்யவேண்டும்.

இறைவனைத் துதிப்பதிலும் யாகங்களை வளர்ப்பதிலுமே அதிக நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். வானப்பிரஸ்த தர்மத்தை எவன் ஒருவன் முறையாகப் பின்பற்றுகிறானோ, அவனுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இவர்களில் சிலர், அதற்கும் அடுத்த சந்நியாசம் எனும் கட்டத்தில் பிரவேசிப்பார்கள்.

யார் அந்தச் சிலர்..?

வானப்பிரஸ்த கட்டத்திலேயே மனைவி, மக்கள், செல்வம் மீது பற்றில்லாமல் இருப்பவர் எவரோ, அவர் சந்நியாச வாழ்க்கைமுறையில் பிரவேசிக்க வேண்டும். வெவ்வேறு பருவங்களில் பல்வேறு ஆசைகளில் சிக்குண்டு, பலவித பாமரத்தனமான கவலைகளில் ஆட்படுகிறோம். ஆக இறைவனிடம் மெய்யான பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம்.  அதாவது வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய கட்டங்களுக்குரிய வயதிலும்கூட இறைநாட்டம் உண்டாவதில்லை. இதை உணர்த்தும் வகையில் நாரதர் தொடர்பான சுவையான கதை ஒன்று உண்டு. இதை ‘நாரத கர்வ பங்கம்’ என்பார்கள். 

ஒரு முறை நாரதர் வைகுந்தம் வந்திருந்தார்.  அப்போது ‘`சுவாமி! தங்களின் உண்மை பக்தனான நாரதன் வந்திருக்கிறான்’’ என்று லட்சுமிதேவி கூறினாள். 

‘`உண்மையான பக்தனா...’’ என்று புன்னகை யோடு கேள்வி எழுப்பினார் ஸ்ரீவிஷ்ணு.

நாரதர் திடுக்கிட்டார். ‘`நாராயணா! என்ன... இப்படி கேட்டுவிட்டீர்கள்! எப்போதும் உங்கள் திருநாமத்தையே உச்சரிக்கும் என்னைவிடவும் சிறந்த பக்தன் ஒருவன் இருந்துவிட முடியுமா’’ என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

‘`இருக்கிறானே’’ என்ற விஷ்ணு, ஒரு கிராமத்தில் வசித்து வந்த குயவன் ஒருவன் இருக்கும் திசையை சுட்டிக்காட்டினார்.

நினை அவனை! - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

சற்றும் தாமதிக்காத நாரதர், உடனடியாகப் புறப்பட்டுச் சென்று அந்தக் குயவனின் வீட்டை அடைந்தார். `எந்த வகையில் இவன் நம்மைவிட உயர்ந்த பக்திமான் என்று பார்த்துவிடுவோம்' எனும் எண்ணத்தோடு, குயவனின் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார். 

காலையில் எழுந்ததும் `‘நாராயணா'’ என்று ஒருமுறை கைகூப்பியபடி கூறினான் குயவன். பிறகு, தன் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான். கடுமையாக உழைத்தான். இரவில் தூங்கப் போவதற்குமுன் இன்னொரு முறை `‘நாராயணா'’ என்றான். அவ்வளவுதான்!    அடுத்தடுத்த நாள்களிலும் அதே நிலைதான்.

நாரதர் அதிர்ச்சி அடைந்தார். திருமாலைச் சந்தித்து நடந்ததைக்கூறினார். ‘`தினமும் பலமுறை உங்கள் நாமத்தை உச்சரிக்கும் என்னைவிடவா, தினமும் இருமுறை மட்டுமே உங்களை நினைக்கும் அந்தக் குயவன் சிறந்தவன்’’ என்று கேட்டார். 

திருமால் இதற்கு நேரடியாக விடையளிக்க வில்லை.  ‘`நாரதா! உனக்கு ஒரு சிறிய சோதனை.  இந்தக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொள். இதிலுள்ள எண்ணெய் ஒருசொட்டுகூட சிந்திவிடாதபடி மூவுலகையும் வலம் வரவேண்டும்’’ என்றார். 

`‘அவ்வளவுதானே’' என்றபடியே, எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் நாரதர். அவரது கவனமெல்லாம் கிண்ணத்தின் மீதே இருந்தது. வெகு ஜாக்கிரதையாக தனது பயணத்தை முடித்தார். வெற்றிப் புன்னகையுடன் திருமாலைச் சந்தித்தார். 

திருமால் கேட்டார்: `‘நாரதா இன்று எத்தனை முறை என் நாமத்தைக் கூறினாய்?’’

நாரதர் விழித்தார். அவரது கவனமெல்லாம் எண்ணெய்க் கிண்ணத்தின் மீதல்லவா இருந்தது!

‘`இன்று ... எண்ணெய்க் கிண்ணத்தின் மீதே கவனமாக இருந்ததால், உங்கள் திருநாமத்தைக் கூற முடியவில்லை’’ என்றார் நாரதர். 

இப்போது பகவான் சொன்னார்:

‘`நாரதா! கஷ்டமும் சோதனைகளும் நிறைந்த வாழ்க்கையிலும் என்னை நினைப்பவனே உண்மையான பக்தன். ஜடாமுடி தரிப்பதாலும் என் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவன் பெரும் பக்தனாகிவிடமுடியாது!’’

அஸதோ மா ஸத்கமய 
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமயேதி

இதன் கருத்து... ‘பரம்பொருளே! நீ எங்களைத் தீய வழியிலிருந்து விலக்கி நல்வழியில் அழைத்துச் செல். எங்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப் போ. சாவிலிருந்து அகற்றி வீடுபேறு எனும் இன்ப மயமான சாகாநிலைக்கு இட்டுச் செல்’ என்பதே.

சோதனைகள் நிறைந்த காலகட்டத்திலும் இறைவனை நினைக்கும் அளவுக்கு மனதைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டிலுமே இடம்பெறுபவர் அனுமன். ராமாயணத்தைப் பற்றி அறிந்த அர்ஜுனன் அனுமனிடம் ‘`இலங்கை செல்வதற்குப் பாலம் கட்ட அவ்வளவு சிரமப்பட்டீர்களே... நானாக இருந்தால், என் அம்புகளாலேயே பாலத்தை எளிதில் கட்டியிருப்பேன்’’ என்றான். 

அர்ஜுனனின் கர்வத்தைக் கண்ட அனுமன் திகைத்தார்.

“எங்கே, அப்படியோர் அம்புப் பாலத்தை இப்போது கட்டு பார்க்கலாம். ராமனின் அருளால்  நாங்கள் அமைத்த பாலத்தில் வானரசேனையே நடந்து சென்றது. நீ அமைக்கும் பாலம் என் ஒருவனைத் தாங்குகிறதா என்று பார்ப்போம்’’ என்றார் அனுமன்.  அர்ஜுனனும் உடனடியாக அம்புப் பாலத்தை உருவாக்கினான். அதன்மீது அனுமன் ஓர் அடி வைத்ததுமே அது நொறுங்கிப்போனது. அர்ஜுனன் தலைகுனிந்தான். தன் தவறு அவனுக்குப் புரிந்தது.  கிருஷ்ணரின் ஆதரவால்தான் தன் வில்லாற்றல் பலனளித்தது என்பதை அவன் உணர்ந்தான்.

கிருஷ்ணர் அவன்மீது பரிதாபம் கொண்டார்.  “இன்னொரு முறை அம்பு பாலம் கட்டு” என்றார். அவரை வணங்கிவிட்டு மீண்டும் தன் அம்புகளால் பாலத்தை எழுப்பினான் அர்ஜுனன். இம்முறை,  அனுமனால் அதைச் சிதைக்கமுடியவில்லை. காரணம்... கிருஷ்ணரின் திருவருள்!

ஆக, அற்ப விஷயங்களில் நம் கவனத்தைச் சிதறவிடாமல், இறை குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவர் நம்மைத் தாங்கிப் பிடிப்பார். வாழ்க்கை எளிதாகும்; அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

- நினைப்போம்...

-ஜி.எஸ்.எஸ்.,ஓவியம்: ஸ்யாம்