திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 33

ரங்க ராஜ்ஜியம் - 33
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 33

ஓவியம்: அரஸ்

`கஞ்சன் நெஞ்சும் கடுமல்லரும் சங்கடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடராழியும் வாழுமிட மென்பரால்
மஞ்சுசேர் மாளிகை நீடகில் புகையும் மாமறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே'

- திருமங்கையாழ்வார்

ழகிய மணவாளக் கோலத்தில் எம்பெருமான், மணவாட்டியாய் மகாலட்சுமி... உடல் கொள்ளாச் செம்பொன்! நீலன் இருவரையும் முகமூடியோடு சுற்றி வந்து கூர்ந்து பார்த்தான்.

நேருக்கு நேரான முதல் பார்வை. அதன் தாக்கம் நீலனைச் சற்று கூசச் செய்தது; தடுமாறவும் வைத்தது. இருந்தும் சமாளித்தான்.

“மணமக்களே! நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. எங்களைப் பார்த்தாலே தெரிந்திருக்கும்... நாங்கள் யாரென்று. எங்களுக்கு உங்களைத் துன்புறுத்தும்  நோக்கமெல்லாம் கிடையாது. எங்களுக்குத் தேவை உங்கள் பொன் நகைகள் மட்டுமே. அவற்றைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, போய்க்கொண்டே இருங்கள்” என்றான்.

அவன் பேச்சுக்கு எம்பிராட்டி பதில் கூற விழைந்தாள்.

“கள்வனே, இது என்ன கொடுமை! மணமாகி தாய் வீட்டுச் சீதனங்களுடன் செல்லும் எங்களிடமா நீ களவாடுவது. உனக்கொரு பெண் இருந்து அவளுக்கு இப்படி நேர்ந்தால், நீ என்ன செய்வாய்” என்ற அவளின் கேள்வி, நீலனை அதிரச்செய்யவில்லை. மாறாகச் சிரித்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 33

“ஏன் சிரிக்கிறாய்?’'

`‘நீ இப்படிக் கேட்பாய் என்றுதான் எனக்குப் பிள்ளை களே இல்லை போலும். எனவேதான் சிரித்தேன்!”

“அதனால் என்ன... என்னை உன் மகளாகக் கருதி விட்டுவிடு.”

“ஆஹா! எத்தனை பெரிய மனதம்மா உனக்கு. என்னை உன் தந்தை ஸ்தானத்துக்குக் கொண்டுசென்றுவிட்டாயே. மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் உங்கள் வசம் உள்ள பொன் எனக்குக் கட்டாயம் வேண்டும். நான் களவாட இடமின்றி, நீயே உன் தந்தைக்குத் தருவதுபோல் தந்துவிடு.”

தான் சொன்னதை வைத்தே தன்னை மடக்கிய நீலனை எண்ணி வியந்த லட்சுமிதேவி எம்பிரான் பக்கம் திரும்பி, `இனி உங்கள் பாடு...' என்பது போல பார்த்தாள். எம்பிரானும் தொடங்கினார்.

“இப்படிப் பிறர் பொருளைக் களவாடி வாழ்கிறாயே, இதுவும் ஒரு பிழைப்பா... உனக்கு வெட்கமாக இல்லை?”

“வெட்கமா... எனக்கா... அது எதற்கு?”

“அதுசரி, மறத்துப்போய்விட்டது என்று சொல்.”

“எதற்கு வீண் பேச்சு. நகைகளைக் கழற்று...”

“கழற்றாவிட்டால்...”

“நாங்களே கழற்றுவோம்.”

“இப்படி மிரட்டி அபகரிக்க எண்ணுகிறாயே, உனக்கு நரகம்தான் கிட்டும் தெரியுமா!”

“நான் இப்போது சொர்க்கத்தில் இருப்பதாக நினைப்பா உனக்கு!”

“பிறகு?”

“எப்போது என் மேனிமேல் போட்டிருந்த வைணவச் சின்னங்களை அழித்தேனோ, எப்போது வைணவனான நான் மீண்டும் கள்வனாக மாறினேனோ, எப்போது என் நாட்டில் மட்டும் மழையற்றுப் போனதோ, அப்போதே நான் மட்டுமல்ல... என் நாடும் நரகத்தில்தான் உள்ளது.”

நீலனின் பதில் எம்பெருமானுக்கே வியப்பளித்தது.

“எப்படிப் பேசினாலும் உன் காரியத்திலேயே குறியாக இருக்கிறாயே... நான் கழற்றித் தராவிட்டால் என்ன செய்வாய். என்னைக் கொன்றுவிடுவாயா?”

“அதற்கு எதற்கு உன்னைக் கொல்லவேண்டும். நகைகளைக் கழற்ற எனக்குத் தெரியாதா என்ன!”

“அப்படியானால் கழற்றிக்கொள்!”

எந்தப் பதற்றமும் இல்லாமல், எந்தப் பயமும் இல்லாமல் எம்பெருமான் கூறவும் நீலனுக்கு அது சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. எப்போதும் கத்தியைக் காட்டி சுற்றி வளைக்கும்போது எல்லோரும் நடுங்கித்தான் நிற்பார்கள். இப்படி விவாதிக்க மாட்டார்கள்; அதுவும், துளியும் பயமோ பதற்றமோ இல்லாமல்!

அதுகுறித்த சிந்தனையோடு பெருமான் மேனிமேல் கிடந்த நகைகளைக் கழற்றத் தொடங்கினான் நீலன்.அந்தச் சாக்கில் பெருமானின் மேனியின்மீதும் அவன் கரங்கள் பட்டன.

நீலனுக்குள் பலவித ரசமாற்றங்கள்!

அவற்றை உள்ளுக்குள் அனுபவித்தபடியே எல்லா நகைகளையும் கழற்றியவன்,  பிராட்டியின் பக்கம் திரும்பினான். அவள், நகைகளைக் கழற்றி தயாராக வைத்திருந்தாள். அவற்றைத் தந்தாள். ஆக, ஒரு நகை மூட்டையே தயாராகிவிட்டது.

‘இதைக்கொண்டு ஒரு வார காலத்துக்கு ஊருக்குச் சோறிடலாம்' என்று எண்ணிய நீலன், யதார்த்தமாய் எம்பெருமானின் கால் விரல்களைப் பார்த்தான். அதில் ஒரு விரலில் திகழ்ந்த மெட்டி கண்ணில் பட்டது.

பெண்கள்தானே மெட்டி அணிவர். இது என்ன ஆண்மகன் காலில்... என்று எண்ணியவன், ‘அது என்ன’ என்று கேட்டான்.

“தெரியவில்லையா, மெட்டி என்பார்கள். நீ கேள்விப்பட்டதில்லையோ?”

“மெட்டியை அறிவேன். அதை ஆண்மகன் அணிந்திருப்பதுதான் விந்தை!”

“நான் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண். எனக்கு இனபேதம் கிடையாதப்பா...”

“இப்படி, இந்த உலகில் ஒருவன்தான் கூறலாம். நீ அல்லன்” என்றான் நீலன்.

“யாரப்பா அவன்?”

“விண்ணுளன் அவன். மண்ணிலும் உளன். என் மனதில், உன் மனதில் என்று எங்கும் இருப்பவன் அவன்!”

“அவன் பெயர்?”

“வைகுந்தன், கோவிந்தன், நாராயணன், கேசவன், பத்மநாபன், அச்சுதன், அனந்தன், மாதவன்... இப்படிப் பல பெயர்கள் அவனுக்கு!”

“பெயரைக் கேட்டால் அர்ச்சனை செய்கிறாயே?”

“சந்தோஷப்படு. அவன் நாமங்கள் இப்போது உன் காதில் புகுந்துள்ளன. இனி, உனக்குத் துன்பம் இல்லை.”

“அதை, ஒரு துன்பத்தில் இருக்கும்போது கூறுகிறாயா?”

“போதும் பேச்சு. என் வாழ்வில் உன்னைப்போல ஒருவனைச் சந்தித்ததே இல்லை. உன்னிடம்  துளியும் பயமில்லை.”

“நான் அபயமளிப்பவன். என்னிடம் எப்படி பயமிருக்க முடியும்?”

“அபயமளிக்கக்கூட அவனால் மட்டுமே முடியும். நீ பெருமைபட்டுக்கொள்ளாதே. கழற்று மெட்டியை.”

“நீதானே நகைகளைக் கழற்றினாய். இதை மட்டும் என்னைக் கழற்றச்சொல்கிறாயே?”

“இந்தச் சாக்கில் உன் காலைப் பிடிக்க சொல்கிறாயா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை. விருப்பம் இல்லாவிட்டால் விட்டுவிடு.”

“அது மட்டும் முடியாது. எதைச் செய்தாலும் நூறு சதம் சரியாகச் செய்யவேண்டும்.”

“அப்படியானால், நீயே என் காலிலிருந்து கழற்றிக்கொள்.”

இப்படிச் சொன்னதுடன், காலை முன்னால் காட்டி, ‘உம்... பிடித்துக்கொள்’ என்பதுபோல பார்த்தார் பரந்தாமன்.

அந்தத் திருப்பாதங்களை ஞானியரும் ரிஷிகளும் ஒருபுறம் தேடோதேடென்று தேடிக் கொண்டிருக்க, அந்தப் பாதங்கள் நீலனின் முன் `பிடித்துக்கொள்' என்று தாமாக வந்ததென்றால், நீலன் எத்தனை பெரும்பேற்றினைப் பெற்றிருக்க வேண்டும்!

நீலன் முதலில் சிந்தித்தான். பின் அந்தக் காலை தன் மடிமீது வைத்துப் பற்றினான். அந்த நொடியே அவனுள் பல மாற்றங்கள்; இனம் புரியாத உணர்வின் ஓட்டங்கள்!

பாற்கடலில் விழுந்து ஒரு பந்துபோல மிதக்கிற உணர்வும், அதுவரை நுகர்ந்திராத அருமையான வாசனையை நுகர்கின்ற உணர்வும், பிடித்த காலை விட்டுவிடாமல் அப்படியே இருந்தாலென்ன என்கிற உணர்வும் எழ, அவனுள் பல பல மாற்றங்கள்!

சிறிதுநேரம் அவனிடம் செயல்பாடே இல்லை. எம்பெருமான்தான் அவனை மீட்க முனைந்தார்.

“என்னப்பா... மெட்டியைக் கழற்றத் தோன்றவில்லையா.”

அவர் அப்படிக் கேட்கவும்தான் நீலனின் மனம் கலைந்தது.

- தொடரும்...

- இந்திரா சௌந்தர்ராஜன்

சதுர தாண்டவம்!

ரங்க ராஜ்ஜியம் - 33

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து படவேடு செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காமக்கூர் திருத்தலம். ஸ்ரீமுருகப்பெருமான், சந்திரன், அர்ஜுனன் மற்றும் ரதிதேவி சிவபெருமானை வழிபட்ட தலம் இது. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்த தலங்களுள் இதுவும் ஒன்றாம். சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்.

பரமன், இங்கே சதுர தாண்டவம் ஆடியதாக விவரிக்கிறது காமாத்தூர் புராணம். கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவதால்,  பெரும் வல்லமையும் பேராற்றலும் கிடைக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும் என்கிறார்கள்.

- எம். கணேஷ், சென்னை-4