

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- ஆர்.கணேசன், திருச்சி-19
தினசரி பூஜையில், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் இயற்றிய ஸ்ரீசண்முக கவசம் பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். இந்தக் கவசம் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்?
- ஜி.டி.சுப்ரமணியன், மயிலாடுதுறை
சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் இயற்றிய 'ஸ்ரீஜய மங்கள ஸ்தோத்திரம்’ இரண்டு பாகங்களாக உள்ளதாமே! இந்தப் புத்தகத்தை வீட்டில் வைத்துப் படித்து வந்தால், நன்மைகள் பெருகும் என்பார்கள். இந்த நூல் எங்கு கிடைக்கும்? எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்?
- எஸ்.மோகன முரளிதரன், புதுச்சேரி

'துளசி மாலா ஸ்தோத்திரம்’ சி.டி-யாக வாங்கி வைத்திருக்கிறேன். புத்தகமாகவும் வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? அறிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!
- ஜெ.பட்டாபிராமன், சென்னை-61
பல்வேறுவிதமான யாகங்கள் மற்றும் அவற்றுக்கான பலன்களைத் தெளிவாக உள்ளடக்கிய புத்தகம் ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்டேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு என்ன? எங்கு கிடைக்கும்?
- எம்.ஐயாசாமி, திருச்சி
நூற்றெட்டு அம்மனின் திருவுருவங்களும் கொண்ட மிகப் பெரிய அட்டை, பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால் அனுப்பி வைத்து உதவுங்களேன்.
- டி.ரவி, புதுச்சேரி
என் கொள்ளுத் தாத்தா ஆதம்பாவூர் எனும் கிராமத்தில் வாழ்ந்தார் என்றும், அங்கு பிரபலமான ஜோதிடராக இருந்தார் என்றும் அறிந்தோம். ஆதம்பாவூர் எனும் கிராமம் எங்கு உள்ளது? அங்கே முக்கியமான ஆலயங்கள் ஏதும் உள்ளனவா? விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தந்தால் மகிழ்வேன்.
- ஆர்.கலாவதி, சென்னை-83

''என் தந்தை, தினமும் 'ஸ்ரீநாராயண சதகம்’ பாராயணம் செய்து வழிபடுவார். 'நவாமி நாராயண பாத பங்கஜம்’ என்று துவங்கும் அந்த ஸ்லோகத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். அந்த ஸ்லோகங்கள் அடங்கிய சி.டி. ஏதும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?'' என, கடந்த 13.12.11 இதழில் ஈரோடு வாசகர் எஸ்.சந்திரசேகரன் கேட்டிருந்தார்.
ஸ்ரீநாராயண சதகம் நூல், 'சி.வி.கிருஷ்ணா புத்தக விற்பனைக் கூடம், 121, அம்மன் கோயில் தெரு (பத்மநாபா தியேட்டர் அருகில்), வால்டாக்ஸ் சாலை, சென்னை-1’ என்ற முகவரியில் கிடைக்கும் என, சென்னை வாசகி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

''கேரளாவில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு அரிவாள்மீது சத்தியம் செய்வார்கள் என்றும், அந்த கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டால், குடிப்பழக்கத்தில் இருந்து மீளலாம் என்றும் அறிந் தேன். அந்த அம்மனின் பெயர், கோயிலின் விபரம் ஆகிய தகவல் களை தெரியப்படுத்துங்கள்'' என, கடந்த 10.01.12 இதழில் சென்னை வாசகர் பி.எல்.சரவணன் கேட்டிருந்தார்.
கேரள மாநிலத்தின் பத்தனம் திட்டை மாவட்டத்தில் உள்ளது 'சக்குளத்துக் காவு’ பகவதி அம்மன் கோயில். குடிப்பழக்கத்தை நிறுத்த அம்மனின் வாள்மீது கைவைத்து, 'இனி குடிக்க மாட்டேன். அம்மா மீது சத்தியம்’ என்று உறுதிமொழியைப் பெறுவர்.
ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என வாசகர்கள், ஈரோடு ஜி.நாகராஜ், குளச்சல் செந்தில்குமார், கும்பகோணம் கங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் 'காரிய ஸித்தி அபிஷேகம்’ அங்கு சிறப்பு.
அதில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தால், திருமணத் தடை, குழந்தையின்மை போன்ற குறைகள் நீங்கும்; தொழிலில் முன்னேற்றம் பெறலாம் என்று கோவை வாசகர் சி.கதிர்வேல் தெரிவித்துள்ளார்.
''ஷீர்டி சாயிபாபாவின் குழந்தைப் பருவம், 16 வயது வாலிபனாக ஷீர்டிக்கு வருகை தந்தது, அப்போது முதல் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கைச் சரிதத் தொகுப்பு புத்தகமாக வந்துள்ளதா?'' என்று கடந்த 10.1.12 இதழில் சென்னை வாசகர் டி.வி.கணேசன் கேட்டிருந்தார்.
ஷீர்டி சாயிபாபாவுடன் பேசிப் பழகிய ஹேமாட்பந்த் இயற்றிய 'ஸ்ரீஸாயி ஸத் சரித்திரம்’ புத்தகத்தில் முழு விவரங்களும் உள்ளன. அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, 'ஸ்ரீஸாயி பாபா சன்ஸ்தான், ஸாயி நிகேதன், 804-பி, டாக்டர் அம்பேத்கர் ரோடு, தாதர், மும்பை-400 014 மற்றும் ஸ்ரீஸாயி பாபா சன்ஸ்தான், ஷீர்டி, அகமத் நகர் மாவட்டம், மகாராஷ்டிரா-423 109 ஆகிய முகவரிகளில் கிடைக்கும் என்று சென்னை வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
'''மாடக்கோயில்கள் எழுபது என்பர். அவை அனைத்துமே சிவாலயங்கள்தானா? அந்தத் தலங்களின் பெயர் மற்றும் முகவரி அறிய ஆவல். அதுபற்றி அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்'' என, கடந்த 10.1.12 இதழில் வாசகர் வி.எஸ்.வேலாயுதன் கேட்டிருந்தார்.
'மாடக்கோயில்கள் என்றால் யானை ஏற முடியாதபடி அமைக்கப்பட்ட கோயில்கள் என்பர். கோச்செங்கட்சோழன் எனும் மன்னன் கட்டிய 70 கோயில்களும் மாடக் கோயில்கள்தான்.
குடியாத்தம் சிவ.ஆ.பக்தவத்சலம் எழுதிய, 'திருத்தலங்கள் வழிகாட்டி’ என்ற நூலில், இந்த ஆலயங்கள் அமைந்துள்ள இடங்கள், செல்லும் வழி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூலைப் பெற, 'ஆ.பக்தவத்சலம், 43, சந்நிதி தெரு, நெல்லூர்பேட்டை, குடியாத்தம்-632 602’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், புலவர் ஜெய.செந்தில்நாதன் எழுதிய, 'திருமுறைத் திருத்தலங்கள்’ என்ற நூலிலும் மாடக் கோயில்கள் பற்றி விரிவாக உள்ளன என காஞ்சிபுரம் வாசகி திரிபுரசுந்தரி தெரிவித்துள்ளார்.