சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கதம்பம்

கதம்பம்

கதம்பம்

தேக ஆரோக்கியம் தரும் ஸ்ரீசுதர்சனச் சக்கரம்!  

##~##
தி
ருச்சி முசிறியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது தின்னக்கோணம். இந்தத் தலத்து நாயகன் ஸ்ரீசுயம்பு பசுபதீஸ்வரர். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் என்பதால் இந்தத் திருநாமம். இந்தத் தலத்தில் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. இங்கு கோ தானம் செய்து, பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

சிவனாரின் ஜடாமுடி நெடுநெடுவென நீண்டு வளர்ந்து பரந்து இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே மூலவரைச் சுற்றி வலம் வருவதில்லை.

இன்னொரு சிறப்பு... இங்கே ஸ்வாமி சந்நிதி மண்டப விதானத்தில் இருக்கும் ஸ்ரீசுதர்சனச் சக்கரத்துக்கு நேர் கீழே அமர்ந்து தியானம் செய்தால் அல்லது மனதாரப் பிரார்த்தித்தால், தேக ஆரோக்கியம் கூடும்; நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது நம்பிக்கை!  

- விஷ்ணுகுமார், திருச்சி

கமலநாச்சியாரை வணங்கினால் பிரிந்த தம்பதி சேருவர்!

திருச்சி உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீஅழகிய மணவாளர் திருக்கோயில். ஸ்ரீகமலவல்லி நாச்சியார் அவதரித்த தலம் இது. எனவே இந்தத் தலத்தை நாச்சியார்கோவில் என அழைக்கின்றனர். ஸ்ரீகமலவல்லி நாச்சியாரை ஸ்ரீஅழகிய மணவாளனாக இருந்து திருமணம் செய்த திருத்தலம் என்பதால், இங்கே பெருமாளும் தாயாரும் வடக்கு நோக்கியபடி சேவை சாதிக்கின்றனர். இங்கு வந்து தரிசித்தால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவர். தவிர, ஆயில்ய நட்சத்திர நாளில், தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட... திருமணத் தடை நீங்கும்.

இங்கே தாயார்தான் பிரதானம். வைகுண்ட ஏகாதசி நன்னாளில், சொர்க்கவாசலைக் கடப்பது தாயாரின் உத்ஸவத் திருமேனிதான்!

- வசந்தா, சென்னை

பெருமாளைத் தரிசிக்க இரண்டு பாதைகள்!

திருச்சி மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது திருவெள்ளறை. இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். இங்கே, பெருமாளைத் தரிசிக்க, 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்தப் படிகள், பகவத்கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கும் என்பர். அதேபோல் நுழைவாயிலில் உள்ள நான்கு படிகள், நான்கு வேதங்களைக் குறிக்கும்.

மேலும் ஆனி முதல் மார்கழி வரை தட்சிணாயனம், தை முதல் ஆனி வரை உத்தராயனம் எனும் காலங்களுக்கு ஏற்ப, பெருமாளைத் தரிசிக்க இரண்டு பாதைகள் உள்ளன.கார்த்திகை நட்சத்திர நாளில் அல்லது கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இங்கே திருக்குளத்தில் நீராடி, பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட, சகல ஐஸ்வரியங்களும் கைகூடும் என்பர்!  

- கமலா, திருச்சி

மகத்தான வாழ்வு தருவாள் ஸ்ரீமதுர காளியம்மன்!

பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் ஸ்ரீமதுர காளியம்மன் கோயில். மதுரைகாளி என்பதே மருவி மதுரகாளி என்றானது என்பார்கள். திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

ஆலயத்தில் உள்ள உரலில் இடித்து தயார் செய்த மாவில்தான் அம்மனுக்கு மாவிளக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சாந்நித்தியம் நிறைந்த இந்த காளியம்மன், அழிக்கும் ரூபத்தில் இல்லாது அருளும் கோலத்தில் காட்சி தருகிறாள். ஸ்ரீமதுர காளியம்மனுக்கு மாவிளக்கிட்டு வழிபட, பிணிகள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

- காயத்ரி வாணி, திருச்சி

எறும்புகள் வழிபட்ட ஈஸ்வரன்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு எறும்பீஸ்வரர். மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனி; மத்தியில் பிளவுற்று இருபாகங்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றும்.

இதில் வலப்புற பகுதியை சிவபெருமானாகவும் இடபாகம் அம்பாள் ரூபமாகவும் கொண்டு, சிவசக்தி லிங்கமாக வணங்கப்படுகிறது. எறும்புகள் வணங்கியதாலேயே, ஸ்ரீஎறும்பீஸ்வரராக அழைக்கப்படுகிறார் இந்த ஈஸ்வரன். இப்போதும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும்போது சாரை சாரையாக எறும்புகள் வந்து நைவேத்தியப் பொருட்களை உண்பது, அற்புதக் காட்சியாகும்.

- ரவிஷ்ணா, ஈரோடு  

மலைக்கச் செய்யும் மலைக்கோட்டை!

திருச்சி என்றதுமே நினைவுக்கு வருவது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில். ஸ்ரீராமர், விபீஷணரிடம் கொடுத்த ஸ்ரீரங்கநாத மூர்த்தமானது, திருச்சியிலேயே கோயில் கொண்டதற்குக் காரணமானவர், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்தான்!

திருச்சி மலைக்கோட்டையின் வித்தியாசமான தோற்றம் கொள்ளை அழகு! வடக்கில் இருந்து பார்த்தால், ஸ்ரீதாயுமானவரை  நந்திதேவர்  வணங்குவது போலவும், தெற்கில் இருந்து பார்த்தால் யானையும் அம்பாரியுமாகவும் காட்சி தரும் மலைக்கோட்டை, மேற்கில் இருந்து பார்த்தால்... நங்கூரம் பாய்ச்சி நிற்கிற கப்பல் போலத் தோன்றுமாம்! மலையுச்சியில் இருந்தபடி படிக்கட்டுகளைப் பார்த்தால், அவை விநாயகப் பெருமானின் துதிக்கையைப் போலவே தெரியும் என்பர்.

- எஸ்.ஆர்.எஸ்.ரங்கராஜன், புதுக்கோட்டை