அத்திவரதர் தரிசனத்துக்காக அனந்தசரஸ் குளத்தில் நீர் இறைக்கும் பணி தொடங்கியது!

முதல் கட்டமாக, அத்திவரதர் துயில்கொண்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. தேர்ந்த பொறியாளர்கள் குளத்தில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி, நீரை இறைத்துவருகிறார்கள்.
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அத்திவரதர் உற்சவத்திற்காக, காஞ்சி மாநகரமே முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 1979 - ம் ஆண்டு பக்தர்களுக்குக் காட்சிதந்த அத்திவரதர், வரும் ஜூலை 1- ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து எழுந்தருளி, 48 நாள்கள் பக்தர்களுக்குக் காட்சி தரவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

முதல் கட்டமாக, அத்திவரதர் துயில்கொண்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. தேர்ந்த பொறியாளர்கள், குளத்தில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி நீரை இறைத்துவருகிறார்கள். குளத்தில் உள்ள நீரை இறைக்க இறைக்க அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் அத்திவரதர் துயில் கொண்டிருக்கும் பெட்டி சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

இதைப் பக்தர்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக, குளத்தில் உள்ள மீன்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு, பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. குளத்து நீர் முழுவதும் வரும் சனிக்கிழமைக்குள் இறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, குளத்தில் தேங்கியிருக்கும் சேறு மற்றும் சகதிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, மணல் கொண்டு நிரப்பப்படும். பிறகு, அத்திவரதருக்கு முறையான பூஜைகள் அனைத்தும் செய்யப்பட்டு, ஜூலை 1 - ம் தேதி பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்.