Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்கீரர்- பெரும்புலவர் கணக்காயரின் மைந்தன். பரணர், கபிலர், பெரும்தேவனார் போன்ற புலவர் பெருமக்கள் வாழ்ந்த அக்காலத்தில் பாண்டிய மன்னன் தமிழ்ச்சங்கம் நிறுவ... கடைச் சங்கத்தில் புலவர்கள் 49 பேரில் தலைமைப் புலவராய் திகழ்ந்தவர்.

'கீர்’ என்றால் 'சொல்’ எனப் பொருள். நக்கீரன் என்றால் சிறப்பான சொல்லை உடையவர் என்று கூறலாம். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நக்கீரரை 'இலக்கியப் புலவர் சிங்கம்’ எனப் போற்றுகிறார். இறையனார் அகப்பொருள் உரை நூலை நக்கீரர் இயற்ற, உருத்திரசன்மன் எனும் பெயரில் முருகப்பெருமானே ஊமைப் பிள்ளையாய் வந்து, இந்த உரை நூல் மிகச் சிறந்தது எனக் கூறும் வகையில், கண்ணில் நீர்மல்க தலையசைத்து வியந்து ஏற்றுக் கொண்டதாகக் கூறுவர்.

அதுசரி... எம்பெருமான் முருகவேள் நக்கீரரை ஆட்கொண்டது எங்ஙனம்?! அந்த சுவாரஸ்யமான திருக்கதையை, மிக அற்புதமாக விவரிக்கிறது திருப்பரங்கிரி தலபுராணம்.

மதுரை மீனாட்சியம்மை உடனுறை ஸ்ரீசோமசுந்தரரையும் பாண்டிய மன்னனையும் தவிர, வேறு எவர் குறித்தும் பாடுவதில்லை எனும் விரதம் கொண்டிருந்தார் நக்கீரர். விடுவாரா கந்தவேள்?! நக்கீரரைச் சோதிக்கத் திருவுளம் கொண்டார்.

கீரன் தம்மீது இசைத்தமிழ் மாலை புனையவில்லையே என்ற கருத்தை உணர்த்தும் வகையில், பரங்கிரியில் தமது பக்கத்தில் இருக்கும் நாரதரை நோக்கினார்.அவரும் அதைப் புரிந்து கொண்டு, பரங்குன்றத்துக்கு நக்கீரர் வந்தபோது, முருகனிடம் தெரிவித்தார். சேயோனின் அருளாடல் ஆரம்பமானது!

திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக் குளத்தில் நக்கீரர் அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். அப்போது முருகப்பெருமான் தம்முடைய பூதகணத் தலைவர்களான உக்ரன், அண்டாப்ரணன் ஆகியோரை அழைத்து, 'திருக்குளத்தில் நக்கீரரின் அனுஷ்டானத்தில் குறை கண்டு, அவரை மலைக்குகையில் சிறைப்படுத்துங்கள்’ என ஆணையிட்டார். பூதகணங்களும் அதனை சிரமேற் கொண்டனர். சரவணப் பொய்கையில் இருந்த அரச மரத்து இலை ஒன்றைக் கிள்ளி கீழே எறிந்தனர்.

அந்த இலை பாதி நீரிலும், பாதி கரையிலுமாக விழுந்தது. கரையில் இருந்த பகுதி பறவையாகவும், நீரில் இருந்தது மீனாகவும் மாறி, ஒன்றையன்று இழுத்தன.

இதனைக் கண்டு நக்கீரர் வியந்தார். 'பாவம், அந்தப் பறவையும் மீனும் இப்படி வேதனைப் படுகின்றனவே! பறவை நீரில் மூழ்கினால் இறந்துவிடும்; மீன் நீரிலிருந்து வெளியேறினால் இறந்துவிடும். என்ன செய்வது?’ என யோசித்தவர், மீனையும் பறவையையும் இணைக்கும் மெல்லிய நரம்பு போன்ற பாகத்தைக் கிள்ளிவிட்டால் பறவை பறந்து பிழைக்கும்; மீனும் நீரில் இனிது வாழ முடியும் என்ற எண்ணத்தில், அந்த இலை நரம்பைக் கிள்ளினார். ஆனால் நடந்தது வேறு! அவர் நினைத்ததற்கு மாறாக, மீனும் பறவையும் துடிதுடித்து இறந்தன.

உடனே பூதகணங்கள் இருவரும் நக்கீரர் முன் தோன்றினர். ''எங்கள் கடம்பன் உறையும் பரங்குன்றில் இந்தக் கொடிய கொலை பாதகம் செய்தீரே!'' என்று அவரது முதுகில் அறைந்து, பிடித்துச் சென்று, அங்கிருந்த மலைக் குகையில் சிறைவைத்தனர் பாவம் நக்கீரர்! முத்தமிழ் முருகனுக்கு தமிழ்ப் பாமாலை சூட்டாத குறையால் இக்குறை நேர்ந்ததோ என்று மிகவும் வருந்தினார். உள்ளத்தில் தெளிவு உண்டானது. பாமாலையைச் சூட்டத் தொடங்கினார். 'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு....’ என்று துவங்கி, 'இழும் என இழிதரும் அருவி பழமுதிர் சோலை மலை கிழவோனே’ என்று பூர்த்தி செய்தார். குன்றுதோராடும் முருகன் தான் எண்ணியது முடிந்தது என்று மகிழ்ந்தார். நவ வீரர் சூழ்ந்து வர, மயில் மீது ஆரோகணித்துக் காட்சி தந்தார்; ஆனந்தத்தில் தன்னை மறந்த நக்கீரர், செவ்வேளின் திருப்பாதங்களைப் பணிந்து வலம் வந்து வணங்கினார். அவர் சிறையிருந்த குகையின் பாறையைப் பிளந்து, வெளிக்கொணர்ந்தார் முருகவேள். திருப்பரங்குன்றத்தில் உள்ள அந்தப் பாறைக்கு 'வேலேறி பாறை’ என்று பெயர்.

அத்துடன் விட்டாரா குமரவேள்?! அன்றிரவு நக்கீரரின் கனவில் தோன்றி, ''பழமுதிர் சோலை மலை கிழவோனே... என்று அழைத்தாய் அல்லவா? நாம் இந்த பூமியில் கிழவனாக வர சிறிது காலமாகும்'' என்று கூறி நகைத்தாராம். உடனே, கண் விழித்து எழுந்த நக்கீரர்,

குன்றம் எறிந்தாய்! குரை கடலில் சூர் தடிந்தாய்
புன்தலைய பூதப் பொரு படையாய்  - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய் என் உள்ளத் துறை

- என்ற அருமையான பாடலைப் பாடினார். 'கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தவனே, கடலில் ஒளிந்த சூரபதுமனை சங்காரம் செய்தவனே, பூதச் சேனையை உடையவனே, என்றும் இளமையை உடையவனே, என்றும் அழகாய் இருப்பவனே, இடப வாகனத்தில் வரும் சிவனாரின் குமாரனே, என்றும் என் உள்ளத்தில் வாசம் செய்வீராக!’ என்பது இந்தப் பாடலின் பொருள்.

இந்தக் கதையை, திருக்காளத்திப் புராணம் வேறு விதமாகக் கூறும். 'பெண்களின் கூந்தல் மணம் இயற்கை மணமோ’ என்ற பாண்டியன் செண்பகமாறனின் சந்தேகமும், அதைக் களைவோருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அவன் அறிவித்ததும், அதைத் தொடர்ந்து தருமி எனும் ஏழை அந்தணனிடம், 'கொங்கு தேர் வாழ்க்கை.....’ எனத் துவங்கும் பாடலை இயற்றித் தந்து, அரசனிடம் கொடுத்துப் பரிசு பெறுக என ஸ்ரீசொக்கநாதர் அருளிய கதையும் நாமறிந்ததே!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

அந்தப் பாடலில் குற்றம் உள்ளதாக நக்கீரர் கூற, சிவனாரே புலவராக அவைக்கு வந்தார். அவரிடம், ''மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு எனப் பொருளுரைக்கிறது உமது பாடல். ஆனால், மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது. ஏன்... தெய்வ மகளிர் ஆயினும் அவர்களின் கூந்தலுக்கும் அப்படித்தான்'' என வாதிட்டார் நக்கீரர். உடனே, ''நீர் வழிபட்டேத்தும் ஞானப் பூங்கோதை அம்மையின் கூந்தலும் அப்ப டியோ?'' என்றார் புலவர். ''அம்மையின் கூந்தலும் அத்தகையதே'' என நக்கீரர் கூறினார். உடனே தமது நெற்றிக்கண்ணையும் சடையையும் காட்டினார் இறைவன். அப்போதும் ''வடிவெல்லாம் காட்டினாலும் இயற்றிய செய்யுளில் குற்றம் குற்றமே!'' என்று தீர்மானமாகக் கூறினார் நக்கீரர். உடன், ''தேவியின் கூந்தலைப் பழித்த அறிவிலியே... நீ குட்ட நோய் அடையக்கடவாய்!'' என்று பெருமான் சாபமிட்டார்.

நக்கீரர் பயந்து, தம் பிழை பொறுக்குமாறு அவரது திருவடிகளில் வீழ்ந்தார். 'அறிவில்லாத கோபப் பிரசாதம்’ எனும் பாடல் பாடித் துதித்தார். அதில் இரங்கிய சிவனார், ''அன்பனே! அஞ்ச வேண்டாம்; எமது அருமைப் புதல்வன் கந்தவேளைப் போற்றிப் பாடினால், அவன் உனக்கு அருள்புரிவான். நீ கயிலையைத் தரிசித்தால் இக்கொடிய நோய் தீரும்'' என்று கூறி மறைந்தார்.

அதன் பிறகு தருமிக்குப் பொற்கிழி அளிக்கப்பட்டது. நக்கீரர் குட்டநோயால் வருந்தி, கயிலைக்குப் பயணமானார். இமயமலையை அடைந்து, அங்குள்ள குளக்கரையில் ஆலமர நிழலில் தமது அனுஷ்டானத்தைச் செய்யத் தொடங்கினார்.

அப்போது இலை ஒன்று நீரில் விழ, அது பாதி பறவையாகவும் பாதி மீனாகவும் மாறி ஒன்றையன்று இழுப்பதைக் கண்டு நக்கீரர் அதிசயித்தார். உடனே, பூதம் ஒன்று அவரைத் தூக்கிச் சென்று குகையில் அடைத்தது. அங்கே முன்னரே அடைப்பட்டிருந்த 999 பேரும், ''நீ வந்து சேர்ந்தாய்; ஆயிரம்பேர் கணக்காகிவிட்டது. அதற்காகத்தான் பூதம் காத்திருந்தது. இனி இந்த பூதத்துக்கு நாம் யாவரும் இரையாவோம்'' என்று வருந்தினர்.

நக்கீரர் தம்மைப் பற்றி வருந்தாது, 'மற்றவர்களது துயரை ஒழிக்கவேண்டும்; சிவபிரான் வழிகாட்டியபடி முத்தமிழ் முருகனைப் பாடிப் போற்றுவோம்; அவன் நம் அனைவரையும் காப்பான்’ எனப் பிரார்த்தித்து, 'திருமுருகாற்றுப்படை’ எனும் தமிழ் மாலையை முருகனுக்குச் சூட்டினார். முருகப்பெருமான் உறையும் அற்புதப் பதிகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று ஒவ்வொரு தலமாகப் பாடிப் பரவினார்.

தமிழ்ச் சுவையில் கீரன் வகுத்த பாவினால் களிப்புற்று எழுந்தருளிய முருகவேள், பூதத்தை வீழ்த்தி அனைவரையும் சிறை மீட்டார். நக்கீரர் முருகவேளைப் பணிந்து, தமது நோயின் கொடுமையைக் கூற, ''தென்கயிலையாகிய காளத்தியைக் கண்டாலும், உமது பிணி ஒழியும். இந்தப் பொய்கையில் மூழ்கி கயிலையைக் காண்பாய்'' என்று கூறி மறைந்தார்.

நக்கீரரும் அவ்வாறே மூழ்கி, திருக்காளத்தியில் உள்ள பொன்முகரி நதிக்கரையில் எழுந்தார்; அதிசயித்தார்; அவரது குட்டநோயும் அகன்றது. தேவர்கள் பூமழை பொழிந்தனர். நக்கீரர் மெய்சிலிர்க்க ஞானப்பூங்கோதை உடனமர் காளத்திநாதர் ஆலயத்தை அடைந்தார். அம்மையப்பனைத் தொழுது, 'கயிலை பாதி, காளத்தி பாதி’ எனும் அந்தாதி நூலைப் பாடி வணங்கினார்.

மதுரையில் மேலமாசி வீதியில் நக்கீரர் திருக்கோயில் உள்ளது. அதனை சங்கத்தார் கோயில் என்பார்கள். திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார ஸ்வாமி அருகில் அவரின் திருவுருவம் உள்ளது.

- அடியார் வருவார்...

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

...அகத்தியர் என்றால் அடக்கியவர் என்பது பொருள். புலனடக்கம் செய்த தவத்தாலும், ஏழு கடல்களையும் தம் கைக்குள் அடக்கிய திறத்தாலும், வானுயர நிமிர்ந்த விந்திய மலையை அடக்கிய மகிமையாலும் இப்பெயர் பெற்றார். 'பொதிய மலையில் அகத்தியரின் தமிழ்ச்சங்கம் இருக்கிறது. அங்கே செல்வீர்களாயின் தமிழ்ச் சுவையை நுகர்ந்து அவ்விடத்திலேயே இருப்பீர்கள்; நான் சொன்ன காரியத்தை மறந்து விடுவீர்கள்’ என்று சுக்ரீவன், வானர வீரர்களிடம் சொன்னதாக விவரிக்கிறது கம்பராமாயணம்.

விருத்தாசுரன் என்பவன் இந்திரனுக்கு எதிராகப் போரிட்டு, சமாளிக்க முடியாமல் கடலில் போய் ஒளிந்துகொண்டான். அவனை வெளிக்கொண்டு வர, இந்திரனின் வேண்டுகோளின்படி அகத்தியர் கடல்நீரை உறிஞ்ச... அதில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளும் அவரது வயிற்றுக்குள் சென்றதால், அவருக்கு வயிற்றுவலி உண்டாயிற்று. அகத்தியர் திருத்தணிகை முருகனை வணங்கி, தனது வயிற்றுவலியை நீக்கி அருளும்படி வேண்டினார். 'கடல் நீருடன் அநேக ஜீவராசிகளை உண்டதால் பாவம் ஏற்பட்டுத் துன்புறுகிறீர். அந்தப் பாவம் நீங்க, சிவபூஜை ஒன்றே வழி!’ என்று அருளினார் தணிகைவேள். அகத்தியரும் சிவபூஜை செய்ய விரும்பி, அதற்காக நீர் வேண்டி, தர்ப்பைப் புல்லை மந்திரித்து அனுப்பினார். அது மலையிலிருந்து ஆற்றை பெருகிவரச் செய்தது. அதுவே குசஸ்தலை (குசம் - தர்ப்பை) ஆறு. இதன் கரையில் 108 (தொண்டை நாட்டில்) சிவத் தலங்களில் அகத்தியர் சிவபூஜை செய்ததாகப் புராணம் கூறும்.

அகத்தியர் தமது சீடனான இடும்பனி டம், தான் தெற்கே பொதிகை மலை செல்வதால், கயிலையிலிருந்து சிவகிரி, சக்திகிரி ஆகிய சிரஞ்சீவி மலைகளை எடுத்துவரு மாறு பணித்தார். அவர் அருளிய மந்திர சக்தியால் பிரம்ம தண்டத்தைத் தடியாகவும், அனந்தன், கார்க்கோடகன் முதலான எட்டு பாம்புகளைக் கயிறாகவும் கொண்டு, இரண்டு மலைகளையும் காவடியாகக் கட்டித் தூக்கிக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணித்தான் இடும்பன். வழியில் ஆவினன் குடி அருகே சற்றே இளைப் பாறினான். மீண்டும் அவன் காவடியைத் தூக்க முயன்ற போது, இயலவில்லை. சிவகிரியின் உச்சியில் கௌபீனம் அணிந்த சிறுவன் ஒருவன், கையில் தடியுடன் நின்றிருந்தான். அதேநேரம் காவடியின் பிரம்ம தண்டமும் நாகக் கயிறுகளும் மறைந்தன. இடும்பன் அதிர்ந்தான். மலைமீது நிற்கும் சிறுவனை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தான்.

சிறுவனோ, ''இது எனது இடம். நான் போகமுடியாது'' என்றான். கோபம்கொண்ட இடும்பன் சிறுவன் மீது பாய்ந்தான். ஆனால், அடுத்த கணமே மூர்ச்சையடைந்தான். இதையறிந்து அவ்விடம் வந்த அகத்தியர் இறைவனைப் பணிந்தார். முருகப் பெருமான் குரா மரம் ஒன்றின் அடியில் இடும்பனுக்குக் காட்சி தந்தார்; சிவகிரி- சக்திகிரிக்குக் காவல்தலைவனாகத் திகழ இடும்பனுக்கு அருள்செய்தார். அப்போது, தன்னைப் போன்று காவடி சுமந்து வரும் அடியாருக்கு அருள வேண்டும் என வேண்டினான் இடும்பன். முருகனும் அப்படியே வரம் தந்தார்.

ஆவினன்குடியான் பழநியில் அகத்தியர் இரண்டு வேளையும் முருகனை பூஜித்து வைத்தியம், ஜோதிடம், ஞான நூல்கள் போன்றவற்றை இயற்றும் பேரருளைப் பெற்றார். இதனையே, 'செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் தென்றல் வரை முநிநாதர் அன்று கும்பிட நல்லருளே பொழிந்த தென் பழநி மேலுகந்த பெருமாள்...’ என்று போற்றுகிறார் அருணகிரியார். அதேபோன்று குன்றக்குடி மலையில் உள்ள சரவணத் தடாகத்தில் மூழ்கி குமரனைப் பூசித்து, அகத்தியர் அருள் பெற்றதை அந்தத் தலபுராணம் விவரிக்கிறது.

இமயமலை, காசி, விந்திய மலை, கன்னட நாடு, குடகுமலை, தொண்டைநாடு, பாண்டியநாடு, மலைநாடு... இப்படி பாரதம் முழுவதும் அகத்தியர் வழிபட்ட தலங்கள் 'அகத்தீச்வரம்’ என்ற பெயரில் அமைந்துள்ளன. குறிப்பாக, திருநெல்வேலி அருகில் உள்ள பாபநாசம்- பொதிகை மலையில் அகத்தியர் அருவி, அகத்தியர் ஆலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது, பொதிகை மலையில் அருவ நிலையில் முருகப் பெருமானை உபாசித்து வாழ்ந்து வருகிறார் அகத்தியர்.

அரும்பதி வார ணாசி அதில்உமை பாகன் அன்று
விரும்பிய வாறு தென்பால் மேவியேர் தணிகை வந்து
குருபரன் பதங்கள் போற்றிக் குழைந்து செந்தமிழ் பயின்றோர்
அரியநல் இலக்கணம் சொல் அகத்திய முநிவர் வாழி.

- தணிகை மணியார்

திருமுருகாற்றுப்படை!

க்கீரர் பாடிய நூல்கள் பல. திருஈங்கோய்மலை எழுபது, பெருந்தேவ பாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, கண்ணப்பர் தேவர் திருமறம் ஆகியன 11-ஆம்  திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அருளிய திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டிலும், 11-ஆம் திருமுறையிலும் சேர்க்கப்பட்டு, இலக்கிய வகையிலும் தோத்திர வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிகாட்டுதல் என்று பொருள். 'முருகனைத் தரிசித்து பயன்பெற வேண்டும் எனும் ஆர்வம் கொண்ட புலவன் ஒருவன் இருக்கிறான். கந்தனருள் பெற்ற மற்றொரு புலவர் அவனைக் கண்டு, இன்ன வழியில் சென்று இந்தந்த இடங்களில் கண்டால் முருகனின் தரிசனம் கிட்டும்; அவன் அருளும் பெறலாம்’ எனக் கூறும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. முருகன் தலங்களைத் தரிசிக்க அமைந்த முதல் வழிகாட்டி நூல் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism