நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

பிள்ளையார் கொடுத்த வாக்குறுதி!

பிள்ளையார் கொடுத்த வாக்குறுதி!

பிள்ளையார் கொடுத்த வாக்குறுதி!
பிள்ளையார் கொடுத்த வாக்குறுதி!
##~##
கோ
வையில் இருந்து மைசூர் செல்லும் சாலை அது! வேப்ப மரமும் அரச மரமும் இணைந்தபடி காட்சி தரும் அந்த மரத்தடியில், சிறியதொரு விக்கிரகமாகக் காட்சி தந்தார் ஸ்ரீவிநாயகர். மாலை நேரத்தில் அந்த இடத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவது வழக்கம்.

விநாயகர் அருள்பாலிக்கும் அந்த இடத்தை தினமும் சுத்தம் செய்து பராமரித்து வந்த மூதாட்டி ஒருத்தி, குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை மனதில் கொண்டு, 'இந்தக் குழந்தைங்கள்லாம் நல்லாப் படிச்சுப் பெரியாளா வரணும். நீதான் நல்ல புத்தியையும் ஞானத்தையும் கொடுக்கணும்’ என விநாயகரிடம் வேண்டிக்கொண்டாளாம். வழக்கம்போல அன்றிரவும் மரத்தடியில் படுத்து உறங்கிப் போனாள் மூதாட்டி. அவளது கனவில் தோன்றிய பிள்ளையார், 'இந்த மரத்தடியிலேயே எனக்குக் கோயில் கட்டி வழிபடு; இந்தக் குழந்தைகளுக்குக் கல்வி ஞானத்தை அருள்வது என் பொறுப்பு’ என்றாராம்! விடிந்ததும், இந்தத் தகவல் ஊருக்குத் தெரிய... பிறகென்ன, அற்புதமான ஆலயம் எழும்பியதாம்!

பிள்ளையார் கொடுத்த வாக்குறுதி!

கோவை- காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஆலயம். இங்கு விநாயகரின் திருநாமம்- ஸ்ரீசித்தி விநாயகர்.

கோவை மற்றும் சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக, விஜயதசமி நன்னாளில் ஸ்ரீவிநாயகரின் சந்நிதிக்கு குழந்தைகளுடன் வந்து வழிபட்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.

தேர்வுக்காலம் நெருங்கியதும், 10-வது மற்றும் 12-வது படிக்கும் மாணவர்கள், விநாயகருக்கு அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை சார்த்தி, நோட்டுப் புத்தகங்களையும் பேனா முதலானவற்றையும் அவரது திருவடியில் வைத்துத் தோப்புக்கரணமிட்டு, வணங்கி எடுத்துச் செல்கின்றனர். மூதாட்டிக்குக் கொடுத்த வாக்கின்படி, ஸ்ரீசித்தி விநாயகரும் தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு கல்வி கடாட்சத்தை அருளிவருகிறார். வெள்ளிக் கவசத்துடன் ஜொலிப்பதால், இவருக்கு ஸ்ரீவெள்ளி விநாயகர் எனும் திருநாமமும் உண்டு. ஆக, வெள்ளி விநாயகரை வணங்கி கல்வி வரம் பெறலாம்!

- ம.பிருந்தா, படங்கள்: வெ.பாலாஜி