ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!


##~## |
கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!

வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற

வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!
- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்