நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி

கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி

கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி
கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி
##~##
சி
வனாரும் பார்வதியும் அமர்ந்திருக்க... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் வந்து வணங்கி, வேதத்தின் பொருளை உபதேசித்து அருளும்படி வேண்டினர். கருணையுடன் அதனை ஏற்ற சிவபெருமான், கல்லால மரத்தடியில் தென்திசை நோக்கி அமர்ந்து, ஆதி குருவாக, ஸ்ரீதட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து, அவர்களுக்கு உபதேசித்தருளினார்.

முனிவர்களுக்கு யோகத்தையும் ஞானத்தையும் தந்தருளிய ஆதிகுரு, ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி எனும் திருநாமத்துடன் காட்சி தந்து, இன்றைக்கும் எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்கிறார். அந்தத் திருத்தலம்- திருப்புலிவனம்.

உத்திரமேரூரில் இருந்து கீழரோடு வழியே காஞ்சிபுரம் செல்லும் பாதையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். 2-ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, பல்லவ மன்னனால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான ஆலயம்.

அதுமட்டுமா? வியாக்ரபாத முனிவர் தவமிருந்து வணங்கி ஞானம் பெற்றதால், இங்கேயுள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாம். 

கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி

கல்லால மரத்தடியில், சிம்மத்தின் மீது திருப்பாதம் வைத்தபடி, மற்றொரு பாதத்தை முயலகன் மீது வைத்துக் கொண்டு, சிரசில் ருத்திராட்சம் துலங்கக் காட்சி தரும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும்; தேறாத மாணவர்கள்கூட, அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறுவார்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள், தொடர்ந்து 18 வாரங்கள் இங்கு வந்து நெய்விளக்கேற்றி, ஸ்ரீசிம்ம தட்சிணா மூர்த்தியை வணங்கி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும்; ராஜ யோகம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் வழிபட்ட தலம்;  எனவே இங்கு ஸ்ரீசோழீஸ்வரர், ஸ்ரீபாண்டியரேஸ்வரர், ஸ்ரீசேரலேஸ்வரர் எனும் திருநாமங்களில் லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கலாம். தவிர, வியாக்ரபாதருக்கும் தனிச் சந்நிதி உள்ளது.

ஆதிகுருவாம் ஸ்ரீசிம்ம தட்சணாமூர்த்தியையும், வியாக்ரபாத முனிவரையும் வணங்குங்கள்; கல்வி- கேள்வியில் வளம் பெறுவீர்கள்!

- அ.ராமநாதன்
படங்கள்: பு.நவீன்குமார்