சகலகலாவல்லியே சரணம்! - நாகை முகுந்தன்

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது முன்னோர் வாக்கு. அரசனுக்கு அவன் வகிக்கும் பதவியை வைத்து அவனது நாட்டில் மட்டும்தான் மதிப்பு- மரியாதை. ஆனால், கல்விமானுக்கோ அவன் எங்கு போனாலும், எந்த நாட்டுக்குப் போனாலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

பிறவிகள்தோறும் தொடர்ந்து வருவது கல்வி. இதையே,
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
- என்கிறார் வள்ளுவர். ஆகவே, நாம் சம்பாதிக்க வேண்டிய, சேர்க்க வேண்டிய சொத்து கல்வியே!
கந்தவேளின் பெருமையையும், கன்னித்தமிழின் சிறப்பையும், கல்வியின் உயர்வையும் வெளிநாடுகளுக்கும் சென்று பறைசாற்றி வந்தவர், திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். அவர், வெளிநாடோ அல்லது வெளி ஊர்களுக்கோ எங்கு சென்றாலும் கையில் காசு கொண்டு போகமாட்டார்!
##~## |
அத்தகைய கல்வியில் நம் குழந்தைகளும் தலைசிறந்து விளங்க வேண்டாமா? ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகப் போகின்றன. நம் பிள்ளைகள் அதிக மதிப்பெண்களுடன், முதலிடத்தில் தேர்ச்சி பெற வேண்டாமா? அதற்கு உண்டான தெய்வப் பாடல்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்வோமா?
வாரியார் ஸ்வாமிகளின் வாக்கிலிருந்தே தொடங்கலாம், வாருங்கள்!
யாரேனும் வாரியார் ஸ்வாமிகளிடம் போய், ''சாமி! எம் புள்ளைக்குப் படிப்பே வரல சாமி! இதுக்குப் படிப்பு வரும்படியா எதுனாச்சும் பாட்டு சொல்லிக் குடுங்க சாமி!'' என்று கேட்டால், ''அம்மா! நான் ஒரு பாட்டு சொல்றேன். இதை தினந்தோறும் உங்க புள்ளய சொல்லச் சொல்லுங்க. அவன், ஞானசம்பந்தர் மாதிரி வருவான். இது, அடியேனின் குருநாதர் அருணகிரிநாதர் அருளியது'' என்று சொல்லி, கீழ்க்காணும் பாடலையும் சொல்வார் வாரியார் ஸ்வாமிகள்.
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர் போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
சமரிலெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவாயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.
- அருணகிரி நாதர்

நாம் என்னதான் நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு நெருங்க நெருங்க நம் மனதில் இனம்புரியாத ஒரு பயம் தோன்றும்; கூடவே தளர்வும் வரும். இந்த பயமும் தளர்வும் நீங்கி, நற்கல்வி பெறுவதற்கு கீழ்க்காணும் பாடலைச் சொல்லி வழிபடலாம்.
தனம் தரும் கல்வி தரும்ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே...

- அபிராமி அந்தாதி
தேவகுரு பிரஹஸ்பதி ஒருமுறை, சரஸ்வதிதேவியைத் துதித்தார். துதி முடிந்ததும் கலைவாணி தரிசனம் தந்தாள். பிரஹஸ்பதிக்கு அருள்புரிந்ததுடன், ''இந்த ஸ்தோத்திரத்தை மூன்று காலங்களிலும் (காலை, மதியம், மாலை) துதிப்பவர்களுக்கு, எனது பரிபூரணமான அனுக்கிரகம் உண்டு'' என்றும் ஆசி தந்தாளாம்.
பிரகஸ்பதி அருளிய ஸ்ரீசரஸ்வதி துதி...
ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்த்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்
மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்
ஸீப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்
பத்மோபவிஷ்டாம் குண்டலீனீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்
இதன் பொருள் என்ன தெரியுமா?

'நல் அறிவைக் கொடுப்பவள். உயர்ந்தவற்றை அளிப்பவள். தூய்மையானவள். வீணையைக் கொண்டவள். 'ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ராம்’ எனும் மந்திரத்தில் விருப்பம் கொண்டவள். கெட்ட புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவள். ஒளிமயமானவள். அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவள். அறியாமை எனும் இருளைப் போக்குபவள். வெண்மையானவள். மோட்சத்தை அளிப்பவள். மங்கலகரமான திருமேனி கொண்ட அழகி. மங்கலங்களை அருள்பவள். தாமரையில் இருப்பவள். மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பவள். சூரிய மண்டலத்தில் இருப்பவள். ஸ்ரீவிஷ்ணு வுக்கு ப்ரியையாக இருப்பவள். இப்படிப் பட்ட ஸரஸ்வதி தேவியை நமஸ்காரம் செய்கின்றேன்.’
அனுதினமும் மூன்று வேளையும் இந்தத் துதிப் பாடலைப் பாடுங்கள்... கடினமான பாடங்களும் எளிதில் மனதில் பதியும், அப்படிப் படித்ததை தெளிவாக எழுதும் திறன் அமையும். பிறகென்ன... தேர்வில் மதிப்பெண்களை அள்ளிவிடலாமே!
கம்பர், சோழமன்னனின் அரசவையில் இருந்தபோது ஒரு பெரும் பிரச்னை எழுந்தது. அப்போது, அன்னை கலைவாணியை துதித்து, அந்தப் பிரச்னையில் இருந்து மீண்டாராம் கவிச்சக்ரவர்த்தி.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.

அருமையான தமிழ்ப் பாடல். தினமும் படித்து கலைமகளை நம் மனதில் குடியேற்றிவிட்டால், அப்புறம் எக்ஸாம் பூதத்துக்கு பயப்படவே வேண்டாம்!
பாதாம் புயத்திற் பணிவார்
தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள்
பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்
இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி
தாவ தெனக்கினியே
கம்பர் அருளிய ஸரஸ்வதி அந்தாதி இது!
குமரகுருபரரும் பல தெய்வப் பாடல்களைத் தந்துள்ளார்.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த
நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெம்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகலகலாவல்லியே
- தன்னை அவமானப்படுத்திய துருக்கிய மன்னனிடம், அவன் மொழியிலேயே பேச வேண்டும் என்பதற்காகச் சகலகலாவல்லி மாலையைப் பாடித் துதித்தாராம் குமரகுருபரர். பிறகு கலைமகளின் திருவருளால், துருக்கிய மன்னனின் மொழியிலேயே பேசி, அவனைப் பணியச் செய்தாராம். மன்னன் இவருக்கு மடம் கட்டுவதற்காக காசியில் இடம் அளித்தான். காசியில் அப்படிக் கட்டப்பட்ட மடம் இன்றும் இருக்கிறது.
நீங்களும் மேற்கண்ட, மிக அற்புதமான சகலகலாவல்லி மாலை பாடலைப் பாடி, கலைவாணியைத் துதியுங்கள்... ஆங்கிலம், இந்தி போன்ற வேற்றுமொழிப் பாடங்களிலும் முதலிடம் உங்களுக்குத்தான்!


ஸ்ரீவேதாந்ததேசிகர் எழுதிய ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்லோகங்கள் கொண்டது. இதை பக்தியுடன் பாராயணம் செய்தால், தேர்ந்த அறிவும் வாக்கு வல்லமையையும் பெறலாம் என்று ஸ்ரீதேசிகனே அருளி இருக்கிறார். இதன் முதல் ஸ்லோகத்தையாவது நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்தால், அவர்கள் கல்விமான்களாவது நிச்சயம்.
ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யா நாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
கருத்து: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமான, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமான, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழிபடுகிறோம்.
ஸ்ரீசுகபிரம்ம மகரிஷி அருளிய ஸ்லோகம் ஒன்றும் உண்டு.
ஸ்ரீ வித்யா ரூபிணி : சரஸ்வதி: சகலகலா வல்லி;
சாரபிம்பாதரி : சாரதாதேவி : சாஸ்திரவல்லி:
வீணாபுஸ்தகதாரிணி : வாணி: கமலபாணி:
வாக்தேவி : வரதாயகி : புஸ்தகஹஸ்தே: நமோஸ்துதே:
- இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வழிபட, மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்.

துதிப்பாடல்களாலும் வழிபாடுகளாலும் பரிபூரண மான இறையருள் நமக்கு உண்டு என்றாலும்... வரத்தை வெற்றிக் கனியாக்குவது நம் கையில்தான் இருக்கிறது.
கூடுமானவரை தேர்வுக்காலத்தில் எளிதில் செரிமான மாகும் உணவுகளையே உட்கொள்ளுங்கள். இரவில், சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து படிக்க ஆரம்பியுங்கள். அவ்வப்போது, நண்பர்களிடம் பாடம் தொடர்பான கேள்விகள் கேட்கச் சொல்லி, அதற்கான விடை உங்களுக்குத் தெரிகிறதா என்று சுயபரிசோதனை செய்வதும் அவசியம்.
பேனா, பென்சில் என்று தேவையானவற்றை ஒன்றுக்கு மேல் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு எழுதி முடித்ததும், எழுதிய விடைகளையும், கேள்வி எண்களையும் ஒரு முறைக்கு இருமுறை திருப்பிப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்வு எழுதத் துவங்குமுன், ஒருகணம் உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதாரப் பிரார்த்தித்துவிட்டு எழுதத் துவங்குங்கள்... வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!