பரிமுகக் கடவுளை வணங்குவோம்!


##~## |
ஸ்ரீவேதாந்ததேசிகர் சகல கலைகளிலும் சிறக்க, ஸ்ரீஹயக்ரீவரின் திருவருளே காரணம். சத்திய சொரூபனாகவும் ஞான வடிவினனாகவும் திகழும் வெள்ளைப் பரிமுகனை வணங்கிட, கல்வி சிறக்கும், ஞானம் பெருகும் என்பது வேதாந்ததேசிகரின் வாக்கு.
ஆகாசமும் பாதாளமுமே காதுகளாகவும், சூரிய ரேகைகளே பிடரி மயிர்களாகவும், பூமியை நெற்றியாகவும், கங்கை- சரஸ்வதியை புருவங்களாகவும், சூரிய- சந்திரரை கண்களாகவும், சந்தியா தேவதையே மூக்காகவும், பித்ரு தேவதைகளே பற்களாகவும், கோலோகமும் பிரம்ம லோகமும் இரண்டு உதடுகளாகவும், காலராத்ரியை கழுத்தாகவும் கொண்டு விளங்குகிறார் ஸ்ரீஹயக்ரீவர்.
மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த 'ஸோதே’ மடத்து ஸ்ரீவாதிராஜ ஸ்வாமிகளும், வைணவத்தில் 'முனித்திரய ஸம்பிரதாயம்’ எனும் அமைப்பை ஸ்தாபித்த ஸ்ரீகோபாலார்ய மகாதேசிகனும் ஸ்ரீஹயக்ரீவ உபாசகர்களே!

• முக்தி க்ஷேத்திரங்கள் ஏழில் ஒன்றான காஞ்சியில், அகத்திய முனிவர் தவம் செய்து ஸ்ரீஹயக்ரீவரின் பேரருளைப் பெற்றதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீவிளக்கொளி பெருமாள் கோயிலில், ஸ்வாமி தேசிகனுடன் அருளும் ஸ்ரீஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
• இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள பரகாலமடத்திலும் ஸ்ரீஹயக்ரீவர் அருள்கிறார். இங்குள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீசரஸ்வதிதேவியால் ஸ்ரீராமானு ஜருக்குக் கொடுக்கப்பட்டு, பிறகு வழிவழியாக தேசிகனை அடைந்து, பின்னர் பரகால மடத்தில் பிரதான பெருமானாக அமைந்துவிட்டதாகக் கூறுவர்.

• ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் அருள்பாலித்த தலம், திருவஹீந்திரபுரம் (ஒளஷதிமலை). இங்கு ஸ்வாமி தேசிகருக்குக் காட்சி தந்த கோலத்திலேயே அருள்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். தவிர, தேவநாதன் ஸ்வாமி சந்நிதியில் யோக ஹயக்ரீவராக அருள்கிறார்.
• ஆவணி சிரவணம்- ஸ்ரீஹயக்ரீவரின் அவதார நன்னாள். இதை முன்னிட்டு திருவஹீந்திரபுரத்தில் மலைக்கு மேல் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது.
• செட்டிப் புண்ணியம்- இந்தத் தலத்தில் யோக நிலை யில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி.
• தேவியுடன் சேர்ந்து ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராய் அருளும் வேத நாயகனை தரிசித்து வழிபட, கல்விச் செல்வம், பொருட்செல்வம் உட்பட சகல சம்பத்துகளும் கிடைக்கும். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில், தேர் மண்டபத்தில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.
• திருவையாறு- திருக்காட்டுப்பள்ளி மார்க்கத்தில் உள்ள திருப்பெரும்புலியூரிலும் (தில்லை ஸ்தானம்), காளஹஸ்தி அருகில் மங்களம்பாடு தலத்திலும் (ஸ்ரீவேணுகோபாலன் கோயில்) ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
இந்தப் புண்ணிய தலங்களுக்குச் சென்று ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதுடன், பசும்பால், அருகம்புல், வெண்தாமரை, கடலை, ஏலக்காய் ஆகியவற்றை அர்ப்பணித்து வேண்டிக்கொள்ள, சகல நலன்களும் உண்டாகும்.
படம், தகவல்கள்: எம்.என்.ஸ்ரீநிவாஸன்