ஞானம் அருளும் ஆலமர் செல்வன்!


##~## |
பட்டமங்கலம்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டமங்கலம். இங்கு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அருளும் குருதட்சிணாமூர்த்தியையும் ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்க, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.
ஆலங்குடி: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ள தலம். இங்கு, ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபட, கல்வித் தடை நீங்கும்.

தக்கோலம்: காஞ்சிபுரம் அருகில் உள்ள தலம் தக்கோலம். இங்கு, ஸ்ரீஜலநாதேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி, தன் திருமுகத்தை சற்றே சாய்த்து, புன்னகையுடன் தரிசனம் தருகிறார். இவரை வணங்கினால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
யோக தட்சிணாமூர்த்தி: அரக்கோணம் அருகில் உள்ளது இலம்பையங் கோட்டூர். இங்குள்ள சிவாலயத்திலும் ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவரை வணங்கினால் மந்திரம், ஜபம் மற்றும் தவம் ஆகியன பலிக்கும்.
கங்காதேவியுடன் தட்சிணாமூர்த்தி: சென்னை- திருவொற்றியூர்- ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீகங்காதேவியுடன் காட்சியளிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவரை வணங்கினால் தண்ணீர்க் கண்டம் விலகும். இவரை வேண்டிக்கொண்டு, நமது வீடு அல்லது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தால், நீர்வளம் பெருகும்.
தாம்பத்திய தட்சிணாமூர்த்தி: ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி- ஸ்ரீபள்ளி கொண்டீஸ்வரர் கோயிலில், ஸ்ரீதாம்பத்திய தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவரை வணங்கினால், தம்பதிக்குள் அந்நியோன்னியம் உண்டாகும்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (சென்னை) பாடி- திருவலிதாயம், தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திட்டை போன்ற தலங்களுக்கும் சென்று குருவின் திருவருளைப் பெற்று வரலாம்.
தொகுப்பு: எம்.சக்திவேல்