Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 19 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

உறவா... உளவுத் துறையா?

தம்பதிக்கு இடையே உறவு என்பதையே மறந்து ஓர் உளவுத் துறையைப் போல ஒருவரையொருவர் வேவு பார்த்து, சந்தேகப்பட்டு, சரியான புரிதல் இல்லாமல் இருப்பதால், நாளுக்கு நாள் இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது உண்மைதானே மக்களே!

வாழ்வின் இனிமையைத் தொலைத்துவிட்டு நிற்கிறீர்கள். இவை அனைத்திற்கும் காரணம் என்ன என்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள். அழிந்து வரும் கலாசாரப் பண்புகளும், குறைந்து வரும் நன்னெறிகளும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலும்தான் காரணம் என்பது உங்களுக்குப் புரியும்.

இதற்கு முக்கிய காரணம் என்ன? நாம் உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்குப் பதிலாக, வெளியிலிருந்து உள்ளே பார்க்கவே முயற்சி செய்கிறோம். வெளிப்படையாகத் தோன்றும் பகட்டையும் படாடோபத்தையும் மனத்தில் எடுத்துக்கொள்வதால் மனசாட்சி காணாமல்போய்விடுகிறது. அதாவது, வெளியுலகத்திற்கு ஏற்றாற்போல நம் எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்கிறோம்! வெளியில் கிடைக்கும் விஷயங்கள் நம்மை சகஜமாகவும் சந்தோஷமாகவும் வாழவிடுவதில்லை. அதனாலேயே தடுமாற்றமும் தவறான புரிதல்களும் மேலோங்கி நிற்கின்றன. அப்போது எண்ணங்களிலும் தெளிவு இருக்குமா என்றால், இருக்காது.

தெளிவு இல்லையென்றால் திண்டாட்டம்தான் என் செல்லங்களே!

ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

புரிதலா – பிரிதலா?

இன்றைய சூழலில் சகிப்புத்தன்மை என்பது கணவன், மனைவி இருவருக்குமே கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் போட்டா போட்டி. பல நேரங்களில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு முற்றிவிடுகிறது. அது எங்கே கொண்டுபோய் விடுகிறது தெரியுமா? புரிதலுக்குப் பதிலாகப் பிரிதல் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது! அதாவது மனம் ஒன்றிப்போகாமல் மணம் முறிந்து விவாகரத்து என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. அதன்பின் நடக்கும் கூத்துகள் இருக்கின்றனவே... அவை அனைத்தையும் மெத்தப் படித்த இருவர் செய்யும் செயலாகவே எடுத்துக்கொள்ள முடிவதில்லை!

பெரும்பாலும் மணமாகிப் பிள்ளைகளைப் பெற்ற பிறகும், சிலர் மணமான குறுகிய காலத்திலும், உப்புப் பெறாத சில காரணங்களைச் சொல்லிப் பிரிந்து செல்கின்றனர். வழக்கோ பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கும். யார் சொல்லியும் கேட்கக்கூடாது என்ற மன நிலை வேறு! நீங்கள் மட்டுமல்ல, நீங்கள் பெற்றெடுத்த குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் இனிய அனுபவங்களைத் தொலைத்துவிட்டு, கவனிப்பாரற்று வாழும் துர்பாக்கியத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதுமட்டுமா... உங்களைப் பெற்றவர்களும் உறவினர்களும் உங்களுக்கிடையே சிக்கிக்கொண்டு நிம்மதி இழந்து தவிக்கின்றனர். ‘இந்த வயதிலே எங்களுக்கு இப்படி ஒரு நிலையா?’ என்று பலர் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

இத்தகைய வழக்குகளைக் கையாளும் நீதிமன்றங்கள்... இப்போதெல்லாம், முக்கிய நகரங்களில் தனித்தனி நீதிபதிகள் அடங்கிய குடும்ப நீதிமன்றங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதாகக் கேள்விப் படுகிறேன். ஏனென்று கேட்டால், “என்னத்தைச் சொல்வது, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. இப்படி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நிலைமை என்ன கதியாகுமென்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிவிடும். எங்களால் முடிந்தவரை இருவரையும் ஒன்று சேர்க்கவே முயல்கிறோம். சிலவற்றில் குடும்பம் ஒன்று சேர்ந்தாலும், பெரும்பாலான வழக்குகள் விவாகரத்தில்தான் முடிகின்றன” என்று வருத்தப்படுகின்றனர் நீதித் துறையினர்!

மாதா அமிர்தானந்த மயி
மாதா அமிர்தானந்த மயி


இத்தகைய சூழலை நீங்கள் தவிர்க்க முடியாதா? ஏன் முடிவதில்லை?

பணம், பதவி, புகழ், சுதந்திரம்

இருவரும் சமம் என்று நிரூபிக்க, பணம், பதவி, புகழ், சுதந்திரம் ஆகியவற்றை அடைவதற்காக, சூழ்நிலை மற்றும் சம்பிரதாயங்களுடன் போராடுவதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் அவரவரின் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறீர்கள். அவை அத்தனையையும் அடைவதற்கான முயற்சி யில் தீவிரத்தைக் காட்டுவது இன்றைய சூழலுக்கு மிக அத்தியாவசியம் என்கிறீர்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்!

இந்தச் சிக்கலுக்கான வழியை இப்படிக் கூட யோசிக்க லாமே! அதாவது... `நாங்கள் இருவரும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்ந்து, அதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைவோம்' என்று சபதம் மேற்கொள்ளுங்கள் மக்களே! அப்போது இதுபோன்ற நீதிமன்றங்கள் தேவையில்லையே!

நீதிபதிகளும் இவ்வழக்குகளை விருப்பத்துடன் கையாளுவதில்லை. அவர்களுடைய நேரம் விரயமாவது தவிர்க்கப்படுமல்லவா? இதையும் மனத்தில் கொள்ளுங்கள் என் செல்லங்களே!

இப்போது நடைபெறுவது சென்ற காலத்துக்கும், வரும் காலத்துக்கும் இடையேயான போராட்டம் என்பதாகவே எடுத்துக்கொள்ளுங்கள். இது கடந்த காலத்தின் ஆண் இனத்தின் விட்டுக்கொடுக்காத வாழ்வுக் கும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் அழகானதொரு எதிர் காலத்தை மனத்தில் கொண்டு நிகழும் போராட்டங்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தமாகும்.

இனியும் காலதாமதம் வேண்டாம். உலகின் நிலை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டு வருகிறது. இப்போது தவறுகளைத் திருத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காணவில்லையென்றால், இனி வரும் காலங்கள் இதைவிட மோசமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!

விட்டதையும் பிடிக்க முடியாது, கையில் இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது!

மீண்டும் சொல்கிறேன்...

வாழ்க்கையின் அடித்தளமான அன்பு எனும் ஆயுதத்துடனும், பாரபட்சமற்ற புரிதலுடனும் முன்னேறிச்சென்றால் அது நிச்சயம் பலனளிக்கும். உணர்ந்து செயல்படுங்கள். நல்லதே நடக்கட்டும்!

- மனம் மலரும்...

அம்மாவின் ஆன்மிகப் பயணம்

அரச மரம் பெரும் விருட்சமாக வளர்ந்து நின்றது. சுகுணானந்தரின் தாயார் மாதவி மாலையில் வந்து விளக்கு ஏற்றி வைத்து விட்டுப்போவதும், அவருடன் சுதாமணியும் வந்து விளக்கேற்றித் தொழுவதும் தொடர்ந்தது.

பின்னர் ஒரு குடில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீகிருஷ்ணர், காளியின் படங்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குடிலில் சுதாமணி தியானம் செய்வதும், தங்குவதும் வழக்கமானது. சதா சர்வகாலமும் தியானம் தியானம், தியானம்தான். பொதுமக்களும் அங்கு வந்து தொழுவது வழக்கமானது.

பின்னர் மக்கள் அதிகம் திரண்டதால், ஆரம்பகால கிருஷ்ண பாவங்கள் மற்றும் தரிசனம் பக்தர்களின் வசதிக் காகக் குடிசைக்கு வெளியே எற்பாடு செய்யப்பட்டது.

பொன், பொருள் என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிவிடாமல், தீவிர கிருஷ்ண பக்தியினால் தமது பக்தி மார்க்கத்தில் மூழ்கினார் சுதாமணி. நாளாக, நாளாக, நடைபெறும் அற்புதங்களைக் கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது அதிகரித்தது.

அதில் எப்போதும்போல பக்திப்பெருக்கில் வந்தவர்களும் உண்டு, உண்மைதானா என்று சோதிக்க வந்தவர்களும் உண்டு. இரண்டுமே அம்மாவிற்கு ஒன்றுதானே!

ஒரு நாள் கிருஷ்ண பாவத்திற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கருமேகம் திரண்ட இருண்ட வானம் மழையின் வருகையை உணர்த்தி எச்சரித்தது. அருகிலுள்ள பகுதிகளில் சிறு தூரலாகத் தொடங்கிய மழை கொட்டித் தீர்த்தது. கிடைக்கும் இடத்திலெல்லாம் மக்கள் மழைக்கு ஒதுங்கினர்.

அரச மரத்தடியினில் குவிந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர். சிறிது நேரத்தில் அந்த பகுதியிலும் மழை கொட்ட ஆரம்பித்துவிடும் என்று அஞ்சினர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த மழை, மக்கள் கூடியிருந்த - கிருஷ்ணபாவத்திற்கு தயாரான அந்த அரச மரத்தடிப் பகுதியை மட்டும் விட்டுவைத்தது. ஒரு துளி மழை இல்லை! `அந்த இடத்தில் மட்டும் மழை இல்லையே எப்படி' என்று மக்கள் அதிசயித்தனர்!

அங்கிருந்த மக்களில் சிலர், ஸ்ரீகிருஷ்ண லீலையில் கிருஷ்ண பரமாத்மா தமது மக்களையும், பசுக்களையும் காப்பாற்ற கோவர்தன மலையைத் தூக்கி நிறுத்திக் குடை - போல் பிடித்ததைச் சுட்டிக்காட்டி, அம்மாவிடம் ஸ்ரீகிருஷ்ணர் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டதால் அத்தகையை லீலைகள் நிகழ்வதாய் நெகிழ்ந்துபோயினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு