
20 வகை ஆலயங்கள்
தமிழகத்தின் பொக்கிஷங்கள் என்ன என்று கேட்டால், `கோயில்கள்' என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். இன்றும் 40,000-க்கும் மேற்பட்ட புகழ் மிக்க ஆலயங்கள் நம்மிடையே உள்ளன. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களும் சிறப்பான வழிபாட்டில் இருந்து வருவதில் சந்தோஷமே.

'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்...' எனத் தொடங்கி சுமார் 40 கோயில்களைப் பற்றி விவரிக்கிறது, சிலப்பதிகாரம்.
நம் தமிழகம் பல்வகைக் கோயில்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புற்றுத் திகழ்வதை தேவாரமும் எடுத்துக் கூறுகிறது. குறிப்பாக அப்பர் பெருமான், திருக்கோயில் வகைகளை விளக்கிக் கூறுகிறார்.
'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே!'
78 பெரிய கோயில்களும் அத்துடன், கரக் கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என கோயில் வகைகளைப் பற்றி விவரிக்கிறார் அவர்.
கோயில்கள் அமைந்த இடம், அமைக்கப்பட்ட விதம், போன்றவற்றைக் கொண்டே கோயில்களின் வகைகள் பிரிக்கப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை அறிவோம்.
ஞாழற் கோயில்:
ஞாழல் மரத்தடியே எழுந்த கோயில். மர நிழலில் கட்டப்படும் மேடைக் கோயிலும் ஞாழற் கோயில் எனப்படுகிறது. திருப்பாதிரிப் புலியூர் கோயில் ஞாழற்கோயிலே.
கரக் கோயில்:
வட்ட வடிவில் தேர் போன்ற அமைவில் அமையும் கோயில் கரக்கோயில். மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கரக் கோயில் வகையைச் சேர்ந்தது.
ஆலக் கோயில்:
ஆலக்கோவில் என்பது நீர் சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில்களே. திருக்கச்சூர் கோயில் இதற்கு நல்ல உதாரணம்.
இளங்கோயில்:
பெரிய கோயிலை எழுப்புவதற்கு முன்பு அமைக்கப்படும் பாலாலயக் கோயில் போன்ற உப கோயில் இது. திருவான்மியூரில் ராஜகோபுரம் தாண்டியதும் குளத்துக்கருகே உள்ளது இளங்கோயில்.
பெருங்கோயில்:
பிரமாண்ட வடிவில் சிற்ப சாஸ்திரப்படி எல்லா அம்சங்களுடன் எழும் கோயில்கள் பெருங்கோயில்கள் ஆகும். சிதம்பரம், திருவாரூர் கோயில்கள் இவ்வகையே.
கொகுடிக் கோயில்:
போகம் போன்று சிற்ப சாஸ்திரங்கள் கூறும் ஆலய வகைகளில் இதுவும் ஒன்று. `முல்லைக்கொடி நிறைந்த இடங்களிலும் உள்ளவை, கொகுடி மரத்தில் கட்டுமானம் கொண்டவை கொகுடிக் கோயில்கள்' என்ற விளக்கமும் உண்டு.
மணிக் கோயில்:
ஆறு மற்றும் எட்டு பட்டை கொண்ட விமானத்தை உடைய கோயிலே மணிக் கோயில் எனப்படும்.
குடைவரைக் கோயில்:
இது மலையைக் குடைந்து உருவாக்கப்படும். திருச்சி, மகேந்திர வாடி, பல்லாவரம் போன்ற இடங்களில் இவ்வகைக் கோயில்கள் உண்டு.
இவை தவிர, பிரமாண்ட பாறையைச் செதுக்கி உருவாக்கப்படும் ஒற்றைக் கல் கோயில்கள், கற்றளிகள், செங்கல் தளிகள், யானைகள் இறங்க முடியாத மாடக் கோயில் கள், விமானம் கொண்ட தூங்கானை மாடக் கோயில்களும் தமிழகத்தில் உண்டு.







கி.பி. 505-ம் ஆண்டு உஜ்ஜயினியில் வாழ்ந்தவர் வராகமிஹிரர். வானவியல், ஜோதிடம், கணிதம் உள்ளிட்ட பல துறைகளில் கரை கண்ட ஞானி. இவர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற ஞான நூலில், 20 வகைக் கோயில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அவர்.
அவை பற்றிய விவரம்:
மேரு: உயர்ந்த கோயில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் கொண்டது.
மந்தரா: மலை போன்ற வடிவிலானது.
நந்திவர்த்தன: சிறிய வடிவிலான சிற்பக்கோயில்.
குஹராஜ: குகைகளுக்கிடையே உருவான இயற்கையான கோயில்.
குஞ்சர: யானை வடிவிலானவை.
வ்ருக்ஷ: மரத்திடையே உருவானவை.
ஹம்ச: உலோகங்களால் உருவானவை.
சர்வதோபத்கர: சக்கர வடிவில் உருவானவை.
கட கோயில்: யந்திர வடிவிலானவை
கயிலாசக் கோயில்: கயிலாயச் சிகரம் போன்றவை
விமானச் சந்தம்: உயர்ந்த விமானம் கொண்டவை.
நந்தன கோயில்: 26 வகையான அம்சங்களைக் கொண்டவை.
சமுத்க: விசாலமான இயற்கையான கோயில்.
பத்ம கோயில்: தாமரை வடிவிலானவை.
கருடக் கோயில்: கருட வடிவிலானவை
சிம்ஹ: சிம்மம் வடிவிலானவை.
வ்ருத்த கோயில்: உருளை வடிவிலான அமைப்பைக் கொண்டவை.
சதுஸ்கோணக் கோயில்: சதுர வடிவிலானவை.
ஷோடசரி: 16 பட்டை வடிவிலானவை
அஷ்டசரி: 8 பட்டை வடிவிலானவை.
இப்படியான கோயில்களை மட்டுமன்றி அவற்றைப் பராமரிக்கும் விதத்தையும் வராஹமிகிரர் போன்ற ஞானிகள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.
ஜோதிட அடிப்படையிலும் அவரவர் ஜாதக நிலைக்கு ஏற்ப தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்தும் ஆன்றோர்கள் பலரும் வழிகாட்டியுள்ளனர்.
அப்படியான ஆலயங்களைத் தேடிச் சென்று தரிசிப்பது சிறப்பாகும். அத்துடன், அத்தகைய ஆலயங்களின் மகிமையை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதும், அதற்கேற்ப அவற்றைப் பராமரித்துப் பாதுகாப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.