
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராமநாதபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது ரெகுநாதபுரம். இங்கே கேரள முறைப்படி, பிரமாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீவல்லபை ஐயப்பன் திருக் கோயில். கார்த்திகை மாதம் வந்துவிட்டால், ராமநாதபுரம் மாவட்டமே இங்கு திரண்டு வந்து, தினமும் ஐயப்ப ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கிறது.
''முதன்முதல்ல, 11 பேர் சேர்ந்து, எங்க ஊர்ல இருக்கிற ஸ்ரீவல்லபை விநாயகர் கோயில்ல இருமுடி கட்டி சபரிமலைக்குப் போனோம். அதுக்குப் பிறகு, எங்க ஊர்லயே ஸ்ரீஐயப்ப சாமிக்குக் கோயில் கட்டினப்ப, ஸ்ரீவல்லபை ஐயப்பன்னே சாமிக்குப் பேரு வைச்சு, கும்பிட்டு வரோம். கோயில் கட்டறதுக்கு ஆட்களையெல்லாம் கூப்பிடாம, நாங்க அத்தனை பேரும் எங்களோட சொந்த வேலை நேரம் போக, மீதி நேரங்கள்ல ராத்திரிபகலா கட்டட வேலைகள்ல ஈடுபட்டோம். இப்ப வருஷா வருஷம், சுமார் 150 கன்னிச்சாமிகளைக் கூட்டிட்டுப் போறோம்'' எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் மோகன் குருசாமி.

''எரிமேலியில் பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சி எப்படி விசேஷமோ, இங்கும் அதே அளவுக்கு விமரிசையாக நடைபெறும். தீராத குறைகள் யாவும் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை கிடைத்த திருப்தியில், தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், இங்கு வந்து ஐயனைத் தரிசித்துச் செல்கின்றனர்'' என்கின்றனர் ஊர்க்காரர்கள்.
கோயிலில் உண்டியல் இல்லை; எவரிடமும் நன்கொடை கேட்டு நிற்பதும் கிடையாதாம். ஆனால், எந்தக் காரியம் செய்யும்போதும், ஐயப்ப அன்பர்கள் தாங்களாகவே முன் வந்து உதவிகளைச் செய்துவருகிறார்களாம். அதுமட்டுமா?! முதியவர்கள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள், மாணவ- மாணவிகள் ஆகியோருக்கு, ஸ்ரீவல்லபை ஐயப்பன் அறக் கட்டளை எனும் பெயரில், பல்வேறு உதவிகளையும் செய்துவருகின்றனராம்.
''ஆலயத்தை வழிபாடாகவும் பிரார்த்தனைத் தலமாகவும் மட்டுமே நாங்க பார்க்கலை. கோயிலின் மூலமா, ஸ்ரீஐயப்பனின் திருப்பெயரால், சமூகத்துக்கு நம்மாலான திருப்பணிகளைச் செய்யணும்; விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்னு எங்களுக்குத் தோணுச்சு.


ஒருத்தன் மத்தவங்களைப் பத்தி சிந்திக்கறதுக்கும் 'நீயும் நானும் சமம்’னு உணர்றதுக்குமான விஷயம்... அன்னதானம். அதனால அறக்கட்டளை சார்பில், எங்க கோயில்ல அடிக்கடி அன்னதானமும் சீரும்சிறப்புமா நடந்துக்கிட்டிருக்கு'' என்கின்றனர் அறக்கட்டளையின் உறுப்பினர்கள்.
''கோயிலுக்கு வர்ற பக்தர்களுக்கு சின்னதா உண்டியல் ஒண்ணு கொடுக்கறோம். 'உங்களால தினமும் இதுல ஒரு ரூபாய் சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்த்த பணத்தை ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயிலுக்குக் கொடுங்க; அந்தப் பணம், பம்பா நதிக்கரையில அன்னதானம் பண்றதுக்கு உதவும்; அந்தப் புண்ணியம் உங்களையும் வந்து சேரும்'' என்று சொல்லும்போது, வியப்பும் பூரிப்பும் மேலிடுகிறது.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டம் என்று பேரெடுத்தது ராமநாதபுரம் மாவட்டம். ஆனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவல்லபை ஐயப்பன் அறக்கட்டளையினர், வருடா வருடம் சபரிமலைக்குச் சென்று ஸ்வாமி ஐயப்பனை தரிசித்துத் திரும்புவது மட்டுமே குறிக்கோளாகச் செயல்படவில்லை. இன்னொரு முக்கிய காரியத்தையும் செயலாற்றுகின்றனர்.
'வனத்தைப் பாதுகாப்போம்; சபரிகிரி வாசன் குடியமர்ந்து அருள்பாலிக்கும் சபரிமலையைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவோம்!’ - 'இருமுடிப் பையில் பிளாஸ்டிக் டப்பாக்களைத் தவிர்ப்போம்; சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தென்படாமலும், யானைகள் முதலான விலங்குகள் மனிதர்கள் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களைத் தின்று அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படாமலும் காப்போம்!’ என்னும் வாசகங்கள் கொண்ட பேனர்களைத் தாங்கியபடி, சபரிமலைக்குப் பயணிக்கின்றனர். 'நம் உடம்பு மற்றும் மன அழுக்குகளையும் பாவங்களையும் கழுவுவதற்குத்தான் பம்பை நதி. எனவே, பம்பையில் ஆடைகளை நீந்த விடாதீர்கள்’ என்னும் வாசக பேனர்களைக் கொண்டு, பக்தியுடன் சுற்றுச்சூழல் பராமரிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.


''நம்மளைச் சுத்தி இருக்கிறதெல்லாம் நல்லா இருந்தால்தான் நாம நல்லா இருக்கமுடியும். நாம ஆரோக்கியமா இருந்தாத்தான், சபரிமலைக்கு வந்து, ஐயப்ப சாமியோட அருளைப் பெறமுடியும். இப்படி யோசிச்சதுதான், இந்த பேனர் ஐடியாக்கள்!
எங்களோட இந்தப் பிரசாரம் பற்றித் தெரிஞ்சதும், சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் எங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கௌரவிச்சாங்க; சிறப்பு தரிசனம் பண்ணி வைச்சாங்க; ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு அணிவிச்ச மாலையை, எங்க இருமுடிப் பைக்கு அணிவிச்சு மரியாதை செஞ்சாங்க. இதை கேரளப் பத்திரிகைகள் எழுதிப் பாராட்டிச்சு. இது எல்லாமே ஸ்ரீஐயப்பனோட கருணையால நடந்ததுதான். நாங்க செய்யற இந்த விஷயமே ஸ்ரீஐயப்ப பக்தியால விளைஞ்சது'' என்று மெய்சிலிர்க்கத் தெரிவிக்கிறார் ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் அறக்கட்டளையைச் சேர்ந்த மோகன் குருசாமி.
கூடுதல் தகவல் ஒன்று: 'விரத காலத்தில் சிகரெட், பான் பராக் முதலான லாஹிரி வஸ்துக்களைப் பயன்படுத்துகிற அன்பர்களுக்கு, எங்களது குழுவில் இடமில்லை’ என்று கோயிலில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளது அறக்கட்டளை.
'மனசும் சுத்தமா இருக்கணும்;
மலையும் சுத்தமா இருக்கணும்!’
ஸ்வாமி சரணம்!
- ச.புபேஸ் படங்கள்: உ.பாண்டி