Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

தடத்தினில் நின்ற தில்லைத் தேரினை தளரா அன்பின்
திடத்தினால் திருப்பல்லாண்டு செப்பி அன்று ஓடவைத்து ஓர்
இடைக்கழிச் சேந்தன் மீது நசை பொழி இசைப்பா தந்த
கொடைக்குயர் சேந்தனார் தம் குரைகழல் நாளும் வாழி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தணிகை மணி.

##~##
பொருள்:
சிதம்பரத்தில் ஓடாது தடைப்பட்ட தேரை அன்பின் வலிமையால் திருப்பல்லாண்டு பாடி அதனை ஓடவைத்தவரும், திருவிடைக்கழி செவ்வேள் மீது திருவிசைப்பாவை அன்பால் பொழிந்து அருட்கொடை அளித்தவருமான சேந்தனாரின் பெருமை மிக்க திருவடிகள் என்றும் வாழ்க!

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த செல்வந்தரான திருவெண்காடரிடம் தலைமைக் கணக்கராக வேலை பார்த்தவர்தான், நாங்கூரில் தோன்றிய சேந்தனார் எனும் சிவனடியார். ஒருமுறை திருவெண்காடர்- சிவகலை தம்பதியரின் மகனான மருதவாணர், கப்பலில் வெளிநாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துவிட்டுத் திரும்பி வந்த அன்று, தமது அருமைத் தந்தைக்கு ஒரு தங்கப் பேழையைப் பரிசளித்தார்.

அந்த பேழையைத் திறந்து பார்த்த திருவெண்காடர், அதனுள் காது ஒடிந்துபோன ஊசி ஒன்றுடன், 'காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே’ என்று எழுதப்பட்ட ஓலை நறுக்கு ஒன்றும் இருந்ததைக் கண்டார். 'நாம் போகும்போது எந்த செல்வத்தையும் உடன் கொண்டு செல்ல இயலாது’ என்ற பேருண்மையை அதன் மூலம் உணர்ந்த திருவெண்காடருக்கு வாழ்வில் வைராக்யம் ஏற்பட்டது. தலைமைக் கணக்கர் சேந்தனாரை அழைத்தார். தமது நிதியறையைத் திறந்துவிடச் சொல்லி, அதனைப் பொதுமக்கள் எடுத்துச் செல்ல ஆணையிட்டார். அவ்வாறே செய்தார் சேந்தனார். இதனை அறிந்த சோழ அமைச்சர், மக்கள் கணக்கு வழக்கின்றி அள்ளிச் சென்ற பொருட்களுக்குச் சரியான கணக்குக் காட்டவேண்டும் என்று கூறிச் சேந்தனாரை சிறையில் அடைத்தார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

அதே நேரம், பட்டினத்தடிகள் என்ற பெயருடன் துறவறம் மேற்கொண்ட திருவெண் காடர், திருவெண்காட்டைச் சென்றடைந்தார். தான் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றப்போய் சிறையில் அடைக்கப்பட்டார் சேந்தனார் என்கிற செய்தி அவரை வந்தடைந்தபோது அதிர்ச்சியானார். சேந்தனாரின் மனைவி, மகன் இருவரும்தான் அந்தத் தகவலை அவரிடம் சொன்னார்கள்.

உடனே அங்குள்ள இறைவனிடம், ''சேந்தனது கை விலங்கை முறித்து என் முன் காட்டு'' என்று பட்டினத்தார் வேண்ட... அவ்வாறே சிவபிரானது கட்டளைப்படி விநாயகர், சேந்தனாரின் விலங்கை முறித்து சிறையிலிருந்து மீட்டார். பிறகு, பட்டினத்தாரின் அறிவுரைப்படி தில்லையை அடைந்து ஏழ்மையான நிலையில் வாழ்வைத் தொடர்ந்தார் சேந்தனார்.

தில்லைவனத்தில் கிடைக்கும் காய்ந்த விறகுகளை விற்று, அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு நாட்களை நகர்த்தி வந்தார். அந்த நிலையிலும் தினமும் அடியார் ஒருவருக்கு உணவளித்து, அதன்பிறகே தாமும் மனைவி மகனும் உண்பது என்ற நியமத்தை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, சோழநாட்டை முதலாம் பராந்தகனின் இரண்டாவது திருக்குமாரர் கண்டராதித்தசோழர் ஆண்டு வந்தார். தில்லைச் சிற்றம்பலவன் மீது தீவிர பற்றுக் கொண்ட இவரை 'சிவஞான கண்டராதித்தர்’ என்று கல்வெட்டுத் தகவல் குறிப்பிடுகிறது. இவர் தினமும் பக்தி சிரத்தையுடன் செய்யும் நடராஜர் பூஜை வழிபாட்டின் நிறைவில் ஆடல்வல்லானது சிலம்பொலி ஓசை கேட்குமாம். தில்லைச் சிற்றம்பலவனைத் தரிசிக்கும் வேட்கையில் இவர் பாடியுள்ள அற்புதமான 'திருவிசைப்பா பதிகம்’ ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

ஒருமுறை, தொடர்ந்து நான்கு நாட்களாக விடாது மழை பெய்து கொண்டிருந்ததால், காய்ந்த விறகு எதுவும் கிடைக்காமல் போனது, சேந்தனாருக்கு. அவரது விறகு வியாபாரம் முற்றிலும் தடைப்பட்டுப் போனது. அன்றைய உணவுக்கு வழி தெரியாத நிலையில் சேந்தனார் மிகுந்த கவலையுடன் இருந்தபோது, வயதான சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி அவரது இல்லத்துக்கு வந்தார். தமது வீட்டில் கொஞ்சம் இருந்த வரகு அரிசியைக் களியாகக் கிண்டி, வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைக் குழம்பாகத் தயாரித்து அந்த முதியவரின் பசியை ஆற்றினர், சேந்தனார் தம்பதியர். அந்தக் கிழவரோ, மீதம் இருந்த கொஞ்சம் களியையும் தமது கந்தல் உடையில் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

மார்கழி மாத திருவாதிரை உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தில்லையில் முகாமிட்டிருந்த கண்டராதித்தர், வழக்கம்போல் நடராஜர் கோயிலுக்கு வந்து சிவபூஜை செய்தார். ஆனால், பூஜை முடிந்ததும் ஒலிக்கும் சிலம்பொலி கேட்கவில்லை. 'இன்று மட்டும் ஏன் இப்படி ஆகிவிட்டது?’ என்ற வருத்தத்துடன் இரவு உணவும் சாப்பிடாமல் யோசனையில் லயித்திருந்தார் மன்னர். அவரின் துணைவியாரான செம்பியன்மாதேவி அவருக்கு ஆறுதல் கூறினார். அன்று இரவு சோழ மன்னரது கனவில் தோன்றினார், தில்லை நடராஜப் பெருமான். ''சேந்தன் வீட்டில் களி உண்ணச் சென்றிருந்ததால், உமது பூஜைக்கு வர இயலவில்லை! கவலையற்க!'' என்று உரைத்தார்.

இறைவனே தேடிச் சென்று களி உண்டார் என்றால், அந்த சேந்தனார் எப்பேர்ப்பட்ட உத்தமத் தொண்டராக இருக்க வேண்டும் என்று எண்ணிய கண்டராதித்தர், பொழுது விடிந்த பிறகும் அதே சிந்தனையில் இருந்தார்.

அந்த நேரத்தில்தான், தில்லைச் சிற்றம்பலவன் கோயில் கனக சபையில் தாங்கள் கண்ட காட்சி பற்றி மன்னரிடம் சொல்ல வந்தனர், கோயில் தீட்சிதர்கள். 'மன்னா... இன்று அதிகாலை கனகசபையைத் திறந்தபோது, அங்கே முதல் நாள் செய்த களி உணவு இறைவன் திருமேனியிலும் மற்றும் தரையிலும் சிந்தியிருக்கக் கண்டோம். இந்த உணவு எப்படி இங்கே வந்தது என்று தெரியவில்லை' என்றனர்! மன்னனுக்கு உண்மை புரிந்துவிட்டது. 'நேற்றிரவு நம் கனவில் தோன்றிய இறைவன், சேந்தனார் என்ற அடியவரின் இல்லத்துக்கு களி உண்ணச் சென்றதாகச் சொன்னாரே... அதே களி உணவுதான் கனகசபையிலும் காணப்படுகிறது’ என்று எண்ணியவர், சேந்தனாரைச் சந்திக்க ஆசைப்பட்டார்.

அன்று திருவாதிரை நாள் என்பதால், தில்லைக் கோயில் தேரோட்டம் தொடங்கியது. அசைந்து ஆடி வந்த ஆடல்வல்லானின் தேர், ஓரிடத்தில்... முதல் நாள் பெய்த பெருமழையால் ஏற்பட்ட சேற்றில் சிக்கிக்கொண்டு அசைய மறுத்தது. யானை, குதிரைகளைக் கொண்டு தேரை இழுத்தார்கள். அப்படியும் தேர் அசைந்து கொடுக்கவே இல்லை.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ''சேந்தா! தேர் நடக்கப் பல்லாண்டு பாடு!'' என்று வானில் இருந்து அசரீரி கேட்டது. அசரீரி கேட்ட மாத்திரத்தில், தேர் இழுக்கும் மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்றிருந்த சேந்தனார் பக்திப் பரவசம் ஆனார். அக்கணமே, 'மன்னுகதில்லை வளர்க நம்பத்தர்கள்...’ என்று தொடங்கி 13 பாடல்கள் பாட, தேர் மீண்டும் நகரத் தொடங்கியது. (இந்த உண்மைச் சம்பவத்தின் காரணமாகவே திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு வெல்லக் களி நைவேத்தியம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது).

நடந்த அற்புதங்களால் சேந்தனாரை அடையாளம் கண்டுகொண்டார், மன்னர் கண்டராதித்தர். சேந்தனாரை இறுகத் தழுவி மகிழ்ந்தவர், அவரை தனது அரண்மனைக்கு வந்து தங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதை மறுத்துவிட்ட சேந்தனார், தில்லையில் இருந்து தலயாத்திரை மேற்கொண்டார். தம் மனைவி மகனுடன் திருவீழிமிழலையில் அருளும் சிவபெருமானை இசைப்பாவால் பாடி மகிழ்ந்தவர், சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். பிறகு, காவிரிக்கரையில் அமைந்த சாத்தனூர் என்கிற இன்றைய திருவாவடுதுறை தலத்தை அடைந்தார்.

சில காலம் அங்கு தங்கியிருந்தவர், தொடர்ந்து குடும்பத்தாருடன் திருவிடைக்கழி என்ற அற்புதமான திருமுருகன் தலத்துக்குச் சென்றார். அஷ்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். குரா மரம் தலவிருட்சம் ஆதலால், 'திருக்குராவடி’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இங்கு கருவறையில் முருகப்பெருமான் ஒரு முகம்- இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் திருக்குமாரனாகக் காட்சியளிக்கிறார்.

சேந்தனார் தம் வாழ்நாளின் நிறைவுப் பகுதியில் திருவிடைக்கழியிலேயே வாழ்ந்தார். ஆரம்பத்தில் சிவபெருமானைப் பாடிய அந்த அருளாளர், இங்கே முருகப் பெருமானை (நற்றாயிரங்கல் என்னும் அகப்பொருட்துறையில்) போற்றிப் பாடினார். அந்த அற்புதத் திருவிசைப்பா பதிகத்தை 9-ஆம் திருமுறையில் படித்து இன்புறலாம்.

'தேவி நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல்கீழ் நின்ற தூவி நற்பீலி மாமயில் ஊறும் சுப்பிரமண்ணியன் தானே! ’ என்பது, அந்தப் பதிகத்தில் உள்ள அழகான ஒரு வரி. (சுப்பிரமண்ணியன் என்ற திருப்பெயர் தமிழ் இலக்கியத்தில் திருவிடைக்கழி திரு விசைப்பாவில்தான் முதன்முதலில் காண முடிகிறது என்பது ஆய்வாளர் கருத்து).

சேந்தனார் திருவிடைக்கழியில் ஒரு திருமடம் அமைத்து, கந்தப் பெருமானுக்குத் தொண்டு செய்து வரும் நாளில், ஒரு தைப் பூச தினத்தன்று சிவபிரான், உமாதேவி, திருமுருகனுடன் இடப வாகனத்தில் வந்து காட்சியளித்தார். அதன்பிறகு சேந்தனார், அவரது மனைவி, மகன் மூவரையும் கயிலைக்கு அழைத்துச் சென்றதாக திருவிடைக்கழி தலபுராணம் போற்றுகிறது.

'திருக்குரா நீழல் கீழ்நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மாலுலா மனமே! ’ என்று நிறைவு பெறும் (பாராயணப் பலன் கூறும்) இந்தப் பதிகத்தை நாள்தோறும் இடையறாது பாராயணம் செய்பவர்கள் எல்லாவித துன்பங்களில் இருந்தும், இடர்களில் இருந்தும் விடுபட்டு இன்புற்று மகிழ்வர்.

அதுமட்டுமா! முருகனைப் போன்ற அழகான, ஆற்றல் மிக்க, அறிவாளியான கணவனை அடைய வேண்டி இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யும் கன்னிப் பெண்களின் கனவும் நனவாகும்!

சீராரும் தைப்பூசத் திருநாளில்
சேந்தன் எனும் செய்ய திருப்
பேராளன் விடைக் கழியில் பெருமைமிகு
நன்மரமாம் பெருங் குராவின்
ஏரார்ந்த நிழற்கீழ் எம்மனையோ(டு)
ஏறூர்ந்த இறைவனாரும்
காரார்ந்த மலை உறையும் கண்மணியும்
காட்சிதர கையிலை சேர்ந்தான்.

(திருவிடைக்கழி தலபுராணம்)

- அடியார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism