Published:Updated:

திருச்சி ஐயப்பன் கோயில்

திருச்சி ஐயப்பன் கோயில்

திருச்சி ஐயப்பன் கோயில்

திருச்சி ஐயப்பன் கோயில்

Published:Updated:
திருச்சி ஐயப்பன் கோயில்
##~##
'''சு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

த்தம் சோறு போடும்’ என்பார்கள். ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, இறைவனை அடைவதற்கான முதல் படியே தூய்மைதான்! அதனைச் செவ்வனே நிறைவேற்றி, லட்சக்கணக்கான பக்தர்களையும் அதன்படி பின்தொடர வைப்பதுதான் திருச்சி ஸ்ரீஐயப்பன் கோயிலின் மிகச் சிறந்த பணி!'' எனச் சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

திருச்சி- மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், நீதிமன்றத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீஐயப்பன் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும்,  'இது ஆலயமா... பூங்காவா?!’ என்று சந்தேகம் வரும் அளவுக்குப் புற்களையும் பூக்களையும் வளர்த்துப் பராமரித்து வருகிறது கோயில் நிர்வாகம்.

பூக்களின் நறுமணத்தை நுகர்ந்தபடியே நாலாப்புறமும் திரும்பிப் பார்த்தால், எங்கும் சுத்தம்; சுகாதாரம்! சாதாரண நாளிலேயே கூடுகிற திருச்சி மக்கள், கார்த்திகை துவங்கிவிட்ட நிலையில், ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஐயப்பனைத் தரிசிக்காமல் இருப்பார்களா, என்ன?!

கார்த்திகையில் விரதம் துவங்கிய ஐயப்ப சாமிகளும் திரளென வருகின்றனர். திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். அத்தனைக் கூட்டமிருந்தும் அங்கே இல்லாத ஒன்று... இரைச்சல். அத்தனைக் கூட்டங்களையும்  தன்னகத்தே கொண்டுள்ள கோயிலில், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பேரமைதி.

திருச்சி ஐயப்பன் கோயில்

''சூழல் சுத்தமாவும் அமைதியாவும் இருந்தா, கடவுளை நினைக்கிறதும் அவருக்குள்ளே ஐக்கியமாறதும் ரொம்பவே எளிது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தாலும், ஒவ்வொருவரும், 'இங்கே ஸ்வாமியும் நாமளும்தான் இருக்கோம்’னு நினைக்கிற பக்குவத்தை அமைதியான சூழல் கொடுத்துடும்'' என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.

தினமும் சுமார் 2,000 பக்தர்கள், இங்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் எப்படியும் சுமார் 10,000 பக்தர்களுக்கும் குறைவின்றி வருவார்கள். அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தி, 'எல்லாரும் வரிசையில வாங்க... வரிசையில வாங்க’ என்று கையில் கழியை வைத்துக்கொண்டு எவரும் சொல்வதுமில்லை; மிரட்டுவதுமில்லை. ஆனாலும், தாங்களாகவே ஒழுங்குக்குக் கட்டுண்டு கிடக்கின்றனர் பக்தர்கள்; வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். எந்த அத்துமீறலும் இல்லாமல், நின்று நிதானமாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைத் தரிசித்து, நிம்மதியுடன் திரும்புகின்றனர் என ஆலயத்தின் கட்டுப்பாடுகளையும் அதனைக் கடைப்பிடிக்கும் பக்தர்களையும் பார்த்துச் சிலிர்க்கின்றனர், திருச்சிக்காரர்கள்.

தூய்மை மற்றும் நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி வருகிறது கோயில் நிர்வாகம். கோயில் அமைந்திருக்கும் சாலையைப் பராமரிக்கும் பணியையும் மாநகராட்சியிடம் கேட்டு வாங்கிச் செய்து வருகிறதாம். இத்தனைக்கும் கோயிலில் உண்டியல், வசூல் என ஏதுமில்லை.

திருச்சி ஐயப்பன் கோயில்

''அற்புதமான கோயில்; மிகச் சிறந்த நிர்வாகம்; உள்ளே வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு, வெளியே வந்தா... மனசே சுத்தமாயிடுது; அமைதியாயிடுது'' என்று, சமீபத்தில் தன் சொந்த ஊரான திருச்சிக்கு வந்த கவிஞர் வாலி, கோயிலுக்கு வந்து சிலாகித்துச் சென்றார் என்கின்றனர் பக்தர்கள்.

மெய்யான உலகத்தையும் இன்பத்தையும் வலியுறுத்துகிற ஆலயத்தில், ஓரிடத்தில் அழகிய கல்வெட்டு ஒன்று, 'அம்மாவிடம் பொய் சொல்லாதே!’ என்று அறிவுறுத்துகிறது. சிறு வயதில் அம்மாவிடம் விளையாட்டாகச் சொல்கிற பொய்கள்தானே பின்னாளில் பெரிய பொய்களுக்கும் தவறுகளுக்கும் அச்சாரம் போடுகிறது என்ற எண்ணத்தில் தானோ என்னவோ, அப்படி ஓர் அறிவிப்பு! அங்கே நின்று உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அன்பர்கள் பலரைக் காண்கிறோம்.

கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு, நன்கொடைகள் எங்கிருந்தெல்லாமோ வந்து குவிகின்றன. அதே நேரம், எந்த ஒரு பக்தரும் ஒரு விஷயத்துக்கு மொத்தமாக நிதியளிப்பதை கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. ஏன் என்று விசாரித்தபோது வந்த பதில் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்தது. ''எல்லாரும் சேர்ந்து செய்யறதுதான் சிறப்பு! தனியருத்தராகச் செய்யும்போது, மனசுக்குள் தன்னை அறியாமல் ஓர் அலட்டலும் ஆணவமும் கர்வமும் வந்துடும். இப்படி ஆணவமும் அலட்டலும் மனசுக்குள் குடியேறினா, ஆண்டவன் எப்படிக் கருணை காட்டுவார்?!'' என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர். நியாயம்தானே!

கோயிலுள், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான ஆலயங்கள், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த மரங்கள் என அறிவிப்புப் பலகைகள். அதுமட்டுமின்றி, அந்தந்த மரங்களையும் அங்கே நட்டு, வளர்த்து வருகின்றனர். 'மரங்களை வளர்ப்போம்’ எனும் வாசகங்களும் அங்கே இடம்பெறத் தவறவில்லை. 'ஆலயத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும், மரம் வளர்க்கவேண்டும்’ எனும் உயரிய கருத்தைச் சொல்லாமல் சொல்கின்றனர்; மனசுள் விதைக்காமல் விதைக்கின்றனர்!

திருச்சி ஐயப்பன் கோயில்

அதுமட்டுமா?! ரத்த தானம், கண் தானம், உடலுறுப்பு தானம், கல்விச் சேவை, மருத்துவ உதவி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், தேவார- திருவாசக வகுப்புகள் என... ஆன்மிகம், உடல்நலம், பொதுநலம் ஆகிய மூன்றையும் போதிக்கின்றனர், ஆலயத்தில்.

இன்னொரு சிறப்பு... இந்தியாவின் புண்ணியத் தலங்களிலிருந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 444 புனிதக் கற்கள், ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்தப் புனிதக் கற்களை அனைவரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.  

பக்தியைக்கூட இயந்திரத்தனமாகக் கடைப்பிடிக்கிற நவீன உலகம் இது. ஆனாலும், கோயிலை நவீனப்படுத்தியதன் மூலம், திருச்சி ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் அமைதி, சுற்றுச் சூழல், தூய்மை ஆகியவற்றையும் நல்லொழுக்கத்தையும் பக்தர்களின் மனதுள் விதைப்பதால், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் இந்தக் கோயில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

'ஹூம்... புராதன- புராணப் பெருமைகள் கொண்ட, மன்னர் பெருமக்கள் கட்டிய பிரமாண்ட ஆலயங்களையும் இதேபோல அழகும் தூய்மையுமாக, அமைதியும் நற்சிந்தனைகளுமாக வைத்துக்கொண்டால் எவ்ளோ நல்லாருக்கும்!’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டபடியே ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு வெளியே வருகிறோம்.  

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism