Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பு அலங்காரம் அவற்கே நனி புனைந்தும்
முந்து ஆதரவில் அவன் புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரி நாத! என்னை நீ ஏன்றருளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தணிகை மணி

##~##
தெ
ய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'சந்தம்’ எனும் பெரு நதியைப் பாயச்செய்து, ஓசையும் இசையுமாக அதை வளப்படுத்திய பெருமை அருணகிரிநாத சுவாமிகளுக்கே உரியது. அவர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களை, முருகப் பெருமான் தன் தாளிலும் தோளிலும் அணிந்து மகிழ்கிறான்.

14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவண்ணாமலையில் தோன்றியவர் அருணகிரிநாதர். ஆனால், அவரது வரலாறு பற்றிய முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. அவரது திருப்புகழ்ப் பாடல்களில் காணப்படும் அகச்சான்று களைக் கொண்டே அவரது வரலாற்றை- குறிப்பாக அவர் பெற்ற அருள் அனுபவங்களை நாம் அறிய முடிகிறது.

அவரது வாழ்வின் முற்பகுதியில் ஊழ்வினைப் பயனால் நோயுற்று வருந்தினார். தாய்- தந்தை, சுற்றத்தார், உலகத்தார் என அனைவரும் அவரை இகழ்ந்து பரிகசிக்கத் தாம் பிறவி எடுத்ததே வீண் என எண்ணி உயிரை விடத் தீர்மானித்தபோது, திருவண்ணாமலை ஆறுமுகப்பரமன் அவருக்குத் திருவடி காட்சியளித்தார்; யோகாநுபூதியை உபதேசித்தார். இதனை, ஞானமலை திருப்புகழில் போற்றுகிறார் அருணகிரியார்.

''முத்தைத் தரு பத்தித் திருநகை...’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து, திருப்புகழ் எனும் சந்தப்பாவைப் பாட வைத்தார் அருணை முருகன். அத்துடன், அவருக்கு சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து ஸ்பரிச தீ¬க்ஷ அளித்து, 'வயலூருக்கு வா’ என்று அழைத்தார்.

திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள வயலூரில் அருளும் பொய்யா கணபதி, அருணகிரிநாதருக்குத் திருப்புகழ் பாடும் முறையைக் காட்டி அருளினார். முருகப்பெருமானின் மயில், கடப்பமாலை, வடிவேல், சேவல், திருவடி, பன்னிரு தோள் ஆகியவற்றுடன் வயலூரையும் வைத்து, 'திருப்புகழ் விருப்பமொரு செப்பு’ என்று அனுக்கிரகம் செய்தார்.

வயலூர் முருகனை திருப்புகழால் பாடித் துதித்த வேளையில், அவருடைய கனவில் கந்தன் காட்சியளித்து, 'விராலி மலையில் காத்திருப்போம். அங்கு வருக!’ என்று அன்புடன் அழைத்தார். அத்துடன் அவரே (முருகப்பெருமானே) வழிப்போக்கனாக உடன்வர, விராலிமலை அடைந்தார் அருணகிரியார். அங்கே வள்ளி- தேவசேனா சமேதராக ஆறுமுகப் பரமனின் அற்புதக் காட்சி கிடைத்தது. அதை நாளும் நினைத்து இன்புற வேண்டும் என்று பாடி மகிழ்கிறார் அருணகிரியார்.

உள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே கவரும் தோற்றம் கொண்ட பழநிப் பதியில், ஆவினன்குடி அண்ணல் அவருக்கு ஜப மாலை தந்து, குரு வடிவில் உபதேசம் செய்தார். இன்று நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ்ப் பாடல்களில் மிக அதிகமாக 100 பாடல்கள் பெற்ற தலம் திருவாவினன்குடியான பழநி மட்டுமே!

தெய்வத் திருமலையாம் திருச்செங்கோட்டு வேலனின் திருவடிவ அழகைக் காண, அந்த நான்முகன் நாலாயிரம் கண் படைக்கவில்லையே என ஏங்குகிறார். 'சென்றே இடங்கள் கந்தா எனும்போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்’ என்று பாடிப் பரவும் அருணகிரியார், 'நான்கு திசையில் உள்ள பக்தர்கள் அற்புதம்... அற்புதம்... என்று போற்றும்படியான சந்தம் நிறைந்த உமது திருப்புகழை சிறிது அடியேனும் பாடும்படியாக அருள் செய்த உமது கருணையை மறவேன்’ என்று திருச்செங்கோட்டு முருகனின் பேரருளை நன்றியுடன் பாடி மகிழ்கிறார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

திருச்செந்தூர் கந்தனைத் தரிசித்து திருப்புகழில் பாடி இன்புறும் நாளில், அவருக்குத் திருநடனக் காட்சியளித்து அருளினார் இறைவன். 'கொண்ட நடனம் பதம் செந்திலிலும் எந்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே’ என்ற அந்த அருள் அனுபவத்தையும் பதிவு செய்கிறார் அருணகிரியார்.

ஒருமுறை அருணகிரிநாத சுவாமிகள் திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசிக்க விருப்பமுடன் சென்றார். செந்திலம்பதியை கண்குளிரக் கண்டார். உள்ளம் உருக தரிசித்தார், தோள் குளிரத் தொழுதார். சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் திருக் கோயிலின் பொலிவையும் அழகையும் கண்டு இன்புற்றார். ஊரின் அழகையும், கோயிலின் வனப்பையும், தலத்தின் பெருமையையும் போற்றிப் புகழ்ந்தார்.

அருணகிரியார் பாடியுள்ள திருச் செந்தூருக்குரிய திருப்புகழ்ப் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 84 பாடல்கள். திருவாவினன்குடி- பழநிக்கு 100 பாடல்கள். இதற்கு அடுத்தபடி அதிகப் பாடல்கள் உள்ள தலம் செந்தூர்.

புறத்தே அலை ஓயும் இடத்தில் அலைவாய்க்கரையில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ளது போல், அகத்தே எங்கு எப்போது மன அலை எழுகிறதோ, அங்கு அப்போது அருள் முருகன் விளங்கிக் கோயில் கொள்வான் என்பதை திருச்செந்தூர் நமக்குக் காட்டுகிறது. 'மெய்யடியார்கள் வாழும் இடத்தைத் தேடிவந்து, அவர்களுடன் விளையாடி அங்கேயே நின்று வாழ்கின்ற மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாள்’ என்று செந்திற் கந்தனை அருணகிரியார் போற்று கிறார். அதாவது, அடியார்களைத் தேடி இறைவன் வருவான் என்ற தத்துவத்தைக் கூறும் அழகான வரிகள் அவை!

திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பல நாட்கள் தங்கி தினமும் வழிபட்டார். செந்தில் நகர் வாழும் ஆண்மைக் காரனை, செந்தமிழ் சொல் பாவின் மாலைக்காரனை, செஞ்சொல் அடியார்கள் வாரக்காரனை சந்தமொடு சிந்தை மகிழ, பல பாடல் களால் பாடி மகிழ்ந்து, ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருக்கும்போது ஒருநாள் முருகப்பெருமானது அற்புதக் காட்சி கிடைத்தது.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

அப்போது மாசி மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏழாம் நாள் விழாவில் பெருமான் மலர் மாலைகளைப் புனைந்து விளாமிச்ச வேர் விமானத்தில் எழுந்தருளியிருந்தார். கள்ளமிலா அடியார் கள் உள்ளம் உருகி வள்ளல் முருகன் புகழை இனிய இசையுடன் பாடிக்கொண்டு வந்தனர்.

அன்று மாலை தங்கச் சப்பரத்தில் முருகன் பவனி வருகிறார். இந்தக் காட்சியைக் கண்ட அருணை முனிவர், 'பெருமானே! உன் திருவோலக்க அழகைக் காண இரு கண்கள் போதுமா? இத்தனை ஆபரணங்களைப் புனைந்து காணக் காணத் தெவிட்டாதக் காட்சியுடன் விளங்குகின்றீரே! இப்படிக் கொஞ்சம் நடித்தருளும்; உமது திருநடனம் காண விழைகின்றேன்' என்று வேண்டினார். செந்திற்கந்தன் அருணகிரியாரைப் பின்புறம் வரச் செய்து திருநடனம் புரிந்து, நடனக் காட்சியைக் காட்டி அருள்புரிந்தார்.

'முருகா! கடம்பும், மகுடமும், செங்கையும், வேலும், ஆறுமுகமும், பன்னிரு கண்களும், குளிர்ச்சியான பேரொளியும், தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என்னும் ஆறு ஆபரணங்களும் திருவடிகளில் கணகணவென்று ஒலிப்பதுமான இந்த உமது குழந்தைக் கோலம்- நடனக் கோலம், என் கண் குளிர எந்தவேளையும் சந்தித்தல் வேண்டும்'' என்று உள்ளம் நெகிழ வேண்டினார்.

'தண்டையணி...’ என்று தொடங்கும் இந்தத் திருத்தல திருப்புகழில், 'கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே...' என்ற வரியில், 'செந்திலிலும்’ என்ற சொல்லில், முன்பு... சிதம்பரத்திலும், கொடுங்குன்றத்திலும் (பிரான்மலை), தணிகையிலும் தனக்கு நடனக் காட்சி காட்டியதைக் குறிப்பிடுகிறார் என்பதை அறிய முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பிரம்மோத்ஸவத்தில் ஏழாம்நாள் திருவிழாவில் மாலையில் தங்கச் சப்பரத்தில் முருகன் எழுந்தருளும்போது, சப்பரத்தின் பின்புறத்தில் நடனக் கோலத்துடன் அவரை தரிசிக்கலாம்!

சுவாமிமலையில் அருணகிரியாருக்கு திருவடி காட்டி ஆட்கொண்டார் குருநாதன். இதனை, ''தகையா தெனக்கு உன் அடிகாண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே'' எனப்  போற்றுகிறார் அருணகிரியார்.

- அடியார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism