Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

நாங்கள் வடஆற்காடு முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாகக் குலதெய்வம் எது என்பது தெரியவில்லை. எங்கள் தெய்வத்தை எப்படி அறிந்துகொள்வது என்கிற விவரம் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- பி.ராஜசேகரன், சென்னை-82

சிறுவாச்சூர் மதுர காளியம்மனின் புகழ்பாடும் சிறுவாச்சூர் மதுரகாளி அந்தாதி பாடலை ஆர்.கோபாலசாமி என்பவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களில், 'தேவி மதுரகாளி சிறுவாச்சூரில் கோவில் கொண்டாய் தேவி மதுரகாளி சித்தர் முத்தர் பணிந்து போற்றும் தேவி மதுரகாளி...' என்று துவங்கும் பாடல் வரிகள் மட்டுமே நினைவில் உள்ளன. அந்தப் பாடலின் மொத்த வரிகளையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். கைவசம் முழுப் பாடலையும் வைத்திருப்பவர்கள், அதன் பிரதியை எனக்கு நகல் எடுத்து அனுப்பினால், மிகவும் நன்றி உடையவளாக இருப்பேன்.

- எஸ்.ராஜலட்சுமி, சென்னை-78

உதவலாம் வாருங்கள்!

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி ஆகிய பாடல்கள் அடங்கிய சி.டி. எனக்குத் தேவைப்படுகிறது. அதோடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு சிவன் கோயில், ஹளபேடு சிவன் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை கோயில்களின் தலவரலாறுகள் அடங்கிய நூல் எங்கே கிடைக்கும், அவற்றின் விலை என்ன என்கிற தகவலும் தேவை. இந்தத் தகவல்கள் அறிந்தவர்கள் அதை எனக்குத் தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்.

- எஸ்.பி.இந்திராணி, திருப்பூர்-7

ஸ்ரீதேவி மகாத்மியத்தின் 700 மந்திரங்களின் சாரமாகக் கருதப்படுவது ஸ்ரீதுர்காசப்த ஸ்லோகி. இதைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். மேற்படி மந்திரங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருப்பவர்கள், அதை பிரதி எடுத்து அனுப்ப வேண்டுகிறேன்.

- எஸ்.நாகராஜன், சென்னை-76

நாங்கள் தெலுங்கு 6000 நியோகிப் பிரிவைச் சேர்ந்த பிராமண வகுப்பினர். சாண்டில்ய கோத்திரம். எங்கள் மூதாதையர் வாழ்ந்த ஊர் கன்னாப்பட்டி. அவர்கள் புலம்பெயர்ந்து பெங்களூருவில் குடியேறியதால், குலதெய்வ வழிபாடு தடைப்பட்டுப் போனது. தற்போது, பிரசன்னம் பார்த்ததில் கன்னாப்பட்டியில் கோயில் கொண்டுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன்தான் எங்களின் குலதெய்வம் என்பது தெரிந்தது. எங்கள் குலதெய்வமாகக் கண்டறிந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும், எங்களைப் போன்றே இந்த அம்மனைக் குலதெய்வமாக வழிபடும் சாண்டில்ய கோத்திரக்காரர்கள் இருக்கிறார்களா என்கிற விவரம் தெரிந்தவர்கள் எனக்கு தெரிவித்து உதவலாமே!

- ஸ்ரீகாந்த், பெங்களூரு

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் தொடர்பாக நிறையத் தகவல்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதுபற்றி அறிந்தவர்கள் தகவல் தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்’ என்று 10.7.2012 இதழில் தஞ்சாவூரைச் சேர்ந்த வாசகர் எஸ்.கே.அன்பு கேட்டிருந்தார்.

'பெருமாளின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் இரண்டாவது அவதாரமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம்தான் இந்த கூர்ம அவதாரம்!

கூர்ம அவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவரது சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.

##~##
ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. இந்த அரிய தத்துவத்தை ஆமை அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் ஸ்ரீமகாவிஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே, கூர்மம்!

ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம்- ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்குக் கோயில் இருக்கிறது. இவரை, 'கூர்மநாதர்’ என்று அழைக்கின்றனர். மூலஸ்தானத்தில் ஆமை வடிவில் அருள்கிறார் பெருமாள்.

ஸ்ரீமகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவால், பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதே நேரம் பல சுபமான நிகழ்வுகளும் நடைபெற்றன. ஸ்ரீமகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரக் கோலத்தினை வழிபட, சனியின் தாக்கம் குறையும் என்பர்...' என்று, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாசகி இராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீமாரியம்மனை வழிபடும் முறைகள் என்னென்ன? பச்சை என்கிற வழிபாட்டை வீட்டில் வைத்து நடத்துவது சரியா? சரி என்றால், அந்தப் பூஜைகளை எவ்விதம் செய்ய வேண்டும்?’ என்று 26.6.2012 இதழில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லக்ஷ்மண சர்மா என்பவர் கேட்டிருந்தார்.

'சக்தி கே.கிருஷ்ணமூர்த்தி என்பவர், வாழைப்பந்தல் என்கிற ஊரில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் கோயில் தல வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். '21 (பிபி 1) 10-ஆவது தெரு, பெரியார் நகர், சென்னை- 600 082’ என்கிற முகவரியில் இயங்கி வரும் பத்மசக்தி நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதில் பச்சை பரப்புதல் சிறப்பு வழிபாடு, பச்சையம்மன் கோயில்கள் அமைந்துள்ள ஊர்களின் விவரங்கள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன' என்று தகவல் அனுப்பியுள்ள விருதுநகர் வாசகர் கே.எஸ்.எஸ்.எஸ்.சண்முகம், மாரியம்மன் துதிப் பாடல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். இந்தப் புத்தகம் வாசகர் லக்ஷ்மண சர்மாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு