Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

சுவாமி மலை... மலையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் கட்டுமலையாக எழுந்த அழகிய திருத்தலம். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் நான்காவது படைவீடு இது! நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானை ஆற்றுப்படுத்திய 'திருவேரகம்’ இதுவா அல்லது வேறு தலமா என்கிற சர்ச்சைக்கு அருணகிரிநாதர் தமது திருப்புகழில் முற்றுப்புள்ளி வைக்கிறார். ''ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப்பதி'' (கோமளவெற்பினை...) என்கிறது அவரது திருப்புகழ்ப் பாடல். இந்தத் திருவேரகத்தில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானின் பாத தரிசனம் கிடைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தகையா தெனக்குன் அடிகாண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில் சமர்வேலெடுத்த பெருமாளே'' (செகமாயை)

'செகமாயை’ என்று தொடங்கும் இந்தப் பாடலில் முருகப் பெருமானைக் குழந்தையாக வரவேண்டுகிறார் அருணகிரிநாதர். பத்து மாதம் கர்ப்பத்தில் இருந்து இந்நிலத்தில் மகனாகப் பிறந்து, தமது தோளில் தவழ்ந்து, மடி மீது விளையாடி, அழகிய மணிவாயால் முத்தம் தரவேண்டும் என்று விரும்புகிறார் அவர். குழந்தை பாக்கியம் பெற இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்தல் வேண்டும் என்பார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

##~##
இந்தத் திருப்புகழில் 'புதல்வன்’ என்ற சொல்லை 'பொருள்’ (திறமாயளித்த பொரு ளாகி) என்ற சொல்லால் அருணகிரியார் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. (முருகப் பெருமான் அடியெடுத்துக் கொடுத்த முதல் திருப்புகழ்ப் பாடலான 'முத்தைத்தரு’ பாடலிலும் 'பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்’ என்று குறிப்பிடுவதும் இங்கே நோக்கத்தக்கது).

சுவாமிமலையை தரிசிக்கும் முன் கும்பகோணத்தில் ஆறுமுகப் பெருமானைத் தரிசிக்கிறார் அருணகிரியார். ''செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ!'' என்று கும்பகோணத்துப் பெருமானிடம் வேண்டுகிறார். இந்த வேண்டுகோள் அருகிலுள்ள சுவாமி மலையில்தான் நிறைவேறுகிறது. இங்கு ஏரகத்துப் பெருமான்மீது 'திரு ஏழு கூற்றிருக்கை’ என்று சித்ரகவி (தேர் வடிவில் அமைந்தது) பாடி இன்புறுகிறார். ''அடியேன் அழைத்தபோது வந்து உதவி, வெற்றி அளித்தவர் இந்தக் குருபர மூர்த்திதானே!'' என்று குறிப்பிடும் அருணகிரியார், இந்தத் தலத்தை 40 திருப்புகழ்ப் பாடல்களால் பாமாலை சூட்டியுள்ளார்.

ருணகிரிநாதருக்குப் பல தலங்களிலும் பல்வேறு வகையில் ஆறுமுகப் பெருமானது தரிசனம் கிடைத்தது. அதில் முக்கியமான திருத்தலம்... திருவண்ணாமலை!

அருணகிரியார் வாழ்ந்த காலத்தில், திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்னும் காளி உபாசகன் ஒருவன் இருந்தான். அவன், அருணகிரிநாதருடைய அளவற்ற புகழைக் கண்டு அழுக்காறு கொண்டான். தனது வழிபடு கடவுளான காளியை சபையில் வரவழைத்துக் காட்டுவதாகவும், அதைப்போல அருணகிரியாரும் தாம் வழிபடும் கடவுளைக் காட்டுதல் வேண்டும் என்றும் சம்பந்தாண்டான் வாதிட்டான். அருணகிரிநாதரும் அதற்குச் சம்மதித்தார். அப்போது, திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட பிரபுடதேவராயன் என்னும் அரசனின் முன்னிலையில் இதற்கு ஏற்பாடாயிற்று. இரவு முழுவதும் வேள்வி செய்து தமது தேவிகாளியை அழைத்தான் சம்பந்தாண்டான். ஆனால், காளி அவனுக்கு காட்சி தரவில்லை. உடனே, புரபுடதேவராயன் அருணகிரிநாதரைப் பணிந்து, 'கந்தவேளை வரவழைத்துக் காட்டி அருள வேண்டும்' என்று வேண்டினான்.

'கந்தவேளை எந்த வேளையும் காணலாம்; எங்கே நினைத்தாலும் அங்கே என் முன் வந்து எதிர்நிற்பான்' என்று அருணகிரியார் கூறி, அண்ணாமலையார் கோயிலின் சிவகங்கை திருக்குளத்தில் மூழ்கி, அதன் கரையில் இருக்கும் 16 கால் மண்டபத் தில் ஈசானத் தூண் அருகில் போய் நின்றார். 'ஐயனே! கருணை வடிவான தேவரீர்... அடியேன் பொருட்டு இத்தூணில் இருந்து வெளிப்பட்டுக் காட்சி தர வேண்டும். சந்தச்சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே...' என்று துதித்தார்.

அப்போது, 'அதலசேடனாராட... மயிலும் ஆடி நீ ஆடி வர வேணும்....’ எனும் திருப்புகழ் பாட... முருகவேள் பிரபுடதேவராயன் கண்டு களிக்கும்படி தோன்றி, அனைவருக்கும் அருள்புரிந்தார். இதனை, 'சைலம் எறிந்தகை வேர்க்கொடு மயிலினில் வந்தனை ஆட்கொணல் சகமறியும்படி காட்டிய குருநாதா....’ (அரிவையர்... திருச்சிராப்பள்ளி) என்று, நன்றியுடன் பாராட்டி மகிழ்கிறார் அருணகிரியார்.

முருகப்பெருமான் தூணில் இருந்து வெளிப்பட்டு... மயிலாட அதன்மீது குமர வேலும் ஆடும்போது, அந்தக் காட்சியை நேரில் கண்டு இன்புறும் பெரும்பேற்றை மன்னன் பிரபுடதேவராயன் பெற்றான். அவனது உள்ளமும் மகிழ்ச்சி மிகுதியால் ஆடியது. அவனுக்கு ஈசான திசையில் உள்ள தூணில் இருந்து முருகவேள் வெளிப்பட்டுக் காட்சியளித்தார். அதனால், அதனை கர்ப்பக்கிரமாக அமைத்து ஒரு திருக்கோயிலை பிரபுடதேவராய மன்னன் கட்டியதாக வரலாறு. இந்தக் கோயில் 'கம்பத்து இளையனார் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள்ளேயே இந்தச் சந்நிதி அமைந்துள்ளது. 'அதலசேடனாராட...’ என்று துவங்கும் பொதுத் திருப்புகழில் 'உதயதாப மார்பான பிரபுடதேவ மாராயன் உளமும் ஆட வாழ்தேவர் பெருமாளே...’ என்ற வரியைக் கொண்டு மேற்கண்ட வரலாறு உறுதி செய்யப்படுகிறது.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

ருணகிரிநாதரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் சோமநாதன், கலிசைச் சேவகன், பிரபுட தேவராயன் ஆகியோரது பெயர்களை திருப்புகழில் காண முடிகிறது. மேலும், 'பாரதம்’ பாடிய வில்லி புத்தூராருடன், அருணகிரிநாதர் கவித்துவ வாதம் செய்தபோது பாடியதுதான் 'கந்தரந்தாதி’ எனும் நூல் என்று கருதப்படுகிறது. எனவே, அருணகிரிநாதர் முதலாம் புக்கர் (பொக்கணர்- விஜயநகர அரசர்) காலத்தில் வாழ்ந்தவர் என்றும், திருப்புகழில் அவர் குறிப்பிடும் பிரபுட தேவராயர் என்பது முதலாம் புக்கரின் பட்டப்பெயர் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, அருணகிரியாரது காலம் 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் என்று கூற இயலும்.

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் மொத்தம் பதினாறாயிரம் என்பர். அவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் நின்றபடி அந்தத் திருப்புகழ் ஏடுகளை பூமியில் சிதறி விழுமாறு விட்டதால், அவை பல்லோர் வயப்பட்டு பலப் பலவாய் பல இடங்களுக்கும் போயின என்றும், நிறைவாக அருணகிரி, முனீந்திரர் சிதாகாசப் பெருவெளியில் மறைந்தருளினார் என்றும்... ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தான் எழுதிய அருணகிரிநாதர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். பாம்பன் சுவாமிகள், தாம் பாடியுள்ள ஒவ்வொரு பதிகத்திலும் நிறைவுப் பாடலில் அருணகிரிநாதரைப் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை, அணிச்சுவை, பக்திச் சுவைகளோடு சந்தம் பல செறிந்து விளங்கும் திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் மயில் சேவல் விருத்தங்கள், திருஎழு கூற்றிருக்கை ஆகியவை அருணகிரியார் நமக்காகத் தந்த முருகப்பெருமானின் தோத்திர நூல்களாகும். அருணகிரியார் பாடிய பல்லாயிரம் திருப்புகழ்ப் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 1,331 பாடல்களே! இதில் 206 தலங்களுக்குரிய பாடல்கள் 1,029. மற்ற 302 பாடல்கள் பொதுவானவை.

மனித வாழ்க்கையில் புலன்வழி பட்ட இன்ப- துன்பங்களை அனுபவித்து, இது நன்று, இது தீது என்று பகுத்து உணரும் ஞானம் அனுபவ ஞானமாகும். அனுபவ ஞானம் பெற்றவன் நன்மை- தீமைகளை உணர்ந்து தீயவினைகளில் இருந்து விலகிக் கொள்ளும் திறம் பெற்றுவிடுவதால், இந்த அனுப ஞானம் பிறப்பறுக்கும் தன்மையுடையதாகும். எனவே, அனுபவ ஞானத்தின் பெட்டகமாகத் திகழ்வது அருணகிரியாரின் வாக்கு. அதனால்தான் அவரை 'வாக்குக்கு அருணகிரி’ எனப் பாராட்டியுள்ளனர் ஆன்றோர்.

ஆறுமுகப் பெருமானுடைய திருவருளால் இந்த உலகத்தில் வாழும்போதே பேரானந்தப் பெருவாழ்வு பெற்று ஜீவன் முக்தராக விளங்கியவர் அருணகிரிநாத சுவாமிகள். அவர் பாடிய திருப்புகழ் இன்று தமிழ் விளங்கும் இடமெல்லாம் பரவி, மக்கள் உள்ளத்தை உருக்கி இன்பம் அளிக்கிறது.

- அடியார் வருவார்...