

அந்த ஆலயத்தின் கதவுகளிலும் பிராகார அமைப்பிலும் அப்படியே கேரளப் பாரம்பரியம்! உள்ளே நுழைந்து, கொடிமரத்தையும் ஸ்வாமி சந்நிதியின் விமானத்தையும் காண, அச்சு அசலாக கேரளச் சாயல் இழையோடியது. சட்டென்று ஓரிடத்தில் பதினெட்டுப் படிகள்... அந்தப் படிகளைக்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்து முன்னேற... கண்குளிரும் வண்ணம் சாஸ்தா சபரிமலைநாதனின் அற்புதத் தரிசனம்!
##~## |
செட்டிநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் செல்ல... உள்ளம் பூரித்தாராம்! ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர், சென்னையில் ராஜாஅண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர்.
கடும்விரதமிருந்து, பஜனைகள் பாடி, அன்னதானமிட்டு, இருமுடி கட்டி யாத்திரை மேற்கொண்டு, சபரிமலைக்குச் சென்று ஐயப்ப தரிசனம் செய்வதுபோலவே, ராஜாஅண்ணாமலை ஐயப்பன் கோயில் ஐயனைத் தரிசிக்கவும் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர்; பஜனைப் பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்குகின்றனர்; இருமுடி கட்டிக்கொண்டு, கோயிலுக்கு வந்து, இவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 18 படிகளில் ஏறி, ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். இருமுடி இன்றி வருகிறவர்களுக்கெனத் தனிப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

40 அடி உயரக் கொடிமரமும், சுமார் 1,500 பேர் அமர்ந்து தரிசிக்கும் வகையிலான பிரமாண்டமான தியான அறையும் கொண்ட ஆலயம் இது. இங்கு, கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜ ஸ்வாமி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
ஸ்வாமிக்கு தினப்படி பூஜை களும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடை பெறுகின்றன. ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயமோ, வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்திருக்கிறது.
கார்த்திகை மாதம் துவங்கி மண்டல பூஜை, பிரம்மோத்ஸவம் என விழாக்களுக்குக் குறைவே இல்லை. கார்த்திகை மாதம் துவங்கியதுமே, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரள்கின்ற னர், ஆலயத்தில்!

தை மாதம் 1-ஆம் தேதியான மகர ஜோதித் திருநாளில், உத்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரங்கள் செய்து, 18 படிகளில் தீபமேற்றி பூஜைகள் நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்வார்களாம்!
''சிங்கப்பூர், பிரான்ஸ், மலேசியா போன்ற வெளிநாடுகளில் உள்ள அன்பர்களும், நகரத்தார்பெருமக்களும், எண்ணற்ற பக்தர்களும் இந்த ஆலய இறைவனைத் தரிசிப்பதற்காகவே திரளாக இங்கு வந்து செல்கின்றனர். இன்னும் சிலர், அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கின்றனர். அதன்படி, பிரசாதத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதைக் கடமையாகவும், பாக்கியமாகவும் கருதிச் செயல்படுகிறோம்'' எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் கோயிலின் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி. வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி பிரம்மோத்ஸவ விழா துவங்கி, ஆறு நாட்கள் விமரிசையாக நடந்தேறும். இதனைக் காணக் கண்கோடி போதாது எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
நினைத்த காரியம் நிறைவேற, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற, மனதுள் நிம்மதியும் சந்தோஷமும் குடிகொள்ள... வடசபரிமலை எனப் போற்றப்படும் ராஜாஅண்ணாமலைபுரம் ஸ்ரீஐயப்பனை வந்து தரிசியுங்கள்; அனைத்தையும் அள்ளித் தந்தருள்வான் ஸ்ரீஐயப்பன்!
- அ.ராமநாதன், படங்கள்: பு.நவீன்குமார்