உதவலாம் வாருங்கள்!

'பத்துக் கம்பர்’ என்று அழைக்கப்பட்ட ஒரு லட்சம் பாடல்கள் எழுதிய திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் (இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா-வின் குருநாதர்) பாடல்கள் அடங்கிய திரட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன். உ.வே.சா. அவர்களே அதை வெளியிட்டு இருந்தார். அதோடு, அவரது வரலாற்றையும் தனி புத்தகமாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்தப் புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. உங்களுக்கு அதுபற்றி தகவல் தெரிந்தால் எனக்கு உதவலாமே..!
- அவினாசி முருகேசன், காரமடை
##~## |
- எம்.கோவிந்தராஜன், ஆணைக்காரன் சத்திரம்
'ஆளுடைநாயகன்’ எனும் திருநாமம் கொண்ட முருகப்பெருமானைப் பற்றி பெரியவர் ஒருவர் என்னிடம் கூறுவது போல கனவு ஒன்று கண்டேன். அந்தத் திருநாமம் கொண்ட முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலம் குறித்து அறிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்கள். அதேபோல், தண்ணீரினுள் மூழ்கியவண்ணம் அருள்புரியும் நீலநிற பள்ளிக் கொண்ட பெருமாள் விக்கிரகம் ஒன்றும் என் கனவில் வந்தது. இத்தகைய அபூர்வ தரிசனம் அமைந்த திருத்தலம் குறித்து அறிந்தாலும் தகவல் தாருங்கள். இந்தத் தெய்வங்களை தரிசிக்க நான் ஆவலாக இருக்கிறேன்.
- லோகிதா மதன்குமார், சென்னை-62
திருமூலர் எழுதிய 'புவனை கலைஞான தீபம்’ என்ற புத்தகம் தருமபுரம் ஆதீனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தனது இஷ்ட தெய்வமான ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் குறித்து திருமூலர் எழுதிய நூல் இது. இந்த நூலில், இயந்திரங்களின் அரசன் என்று, ஸ்ரீபுவனேஸ்வரி இயந்திரத்தை குறிப்பிட்டு இருப்பார். இப்போது எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுகிறது. தருமபுரம் ஆதீன நூலகத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் அந்த நூல் கிடைக்கும் இடம் தெரிந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்களேன்!
- சே.சந்தானம், சென்னை-92
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இயற்றிய 'பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ என்கிற பாராயண நூலை படிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எப்போது அதை பாராயணம் செய்வது நல்ல பலன்களை அள்ளித் தரும்? உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்களேன்!
- முருகேசன், கரூர்


'எங்களது குலதெய்வம் திருச்சி மணப்பாறையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவர். இந்த ஸ்வாமியின் வரலாற்றை தெரிந்து கொள்வதோடு, அவரை எந்தக் கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்?’ என்று, 21.8.2012 இதழில் சின்னமனூர் வாசகி பா.வைஷ்ணவி பாலகிருஷ்ணன் கேட்டிருந்தார்.
'மணப்பாறையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்தது. இலக்கையன், சாலக்கரையான், நல்லையன், இராசகோபாலன் முதலான பெயர்களும் இவருக்கு உண்டு. பௌர்ணமி, அமாவாசை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீநல்லாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நாம் செய்யக்கூடிய அனைத்து நல்ல காரியங்களும் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், சந்தான விருத்தி உண்டாகும். கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கவும் அருள்புரிவார். அதோடு, தொடர்ந்து 16 வாரங்கள் நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் நாம் நினைப்பது கட்டாயம் கைகூடும்...'' என்று தெரிவித்துள்ள திருச்சி வாசகி சரோஜா சுதர்சன்ராம், ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவர் கோயில் திருவிழாக்கள், அங்குள்ள பிற தெய்வங்கள் மற்றும் பல விவரங்களை எழுதி அனுப்பி இருக்கிறார். அதன் நகல் பிரதி, வாசகி பா.வைஷ்ணவி பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
'சித்தர்கள் பற்றிப் படிப்பதில் ஆர்வம் உள்ளவள் நான். அந்தச் சித்தர்களில் பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் பற்றிய வரலாறு மற்றும் விவரங்கள் அடங்கிய நூல் எங்கே கிடைக்கும்?’ என்று, 21.8.2012 இதழில் சென்னை வாசகி மீனா ரவிகுமார் கேட்டிருந்தார்.
'புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சுற்றிலும் 28 சித்தர்கள் வாழ்ந்து, ஐக்கியமான இடங்கள் உள்ளன. அவர்களில் பெண் சித்தர்கள் மூன்று பேர். ஸ்ரீகுருசாமி அம்மையார், சடைத் தாயாரம்மாள், முருகனடிமை பச்சையம்மாள் ஆகிய அவர்களது வரலாறு மற்றும் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை, 'எண்.21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49’ என்கிற முகவரியில் இயங்கி வரும் சங்கர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது...' என்று, திருப்பாதிரிப்புலியூர் வாசகர் எஸ்.ஜவகர் தெரிவித்துள்ளார்.
'பெண் சித்தர்கள் வரிசையில், திருவண்ணாமலை அம்மணி அம்மாள், ஒளவையார், மாயம்மா, கருணாம்பிகை அம்மையார், சிவகாமிப் பரதேசி அம்மையார், சர்க்கரை அம்மாள் போன்றோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களின் விரிவான வரலாற்றோடு, மேலும் பல சித்தர்கள் பற்றிய விவரங்களை விஜயா பதிப்பகம் 'சித்தர் தரிசனம்’, 'சித்தர் பீடங்கள்-200’ எனும் இரு புத்தகங்களாக வெளியிட்டுள்ளது...' என்று, கும்பகோணம் வாசகர் புலவர் சீ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.