மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டிநாடு’ என்று மணிவாசகர் போற்றும் புகழ்பெற்ற பாண்டிய நாட்டில், தாமிரபரணி நதிக்கரையில் நவ கயிலாயங்களும் நவ திருப்பதிகளும் அற்புதமாக அமைந்துள்ளன. அந்த நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பதியின் வடபால் ஸ்ரீகைலாசம் எனும் ஒரு பகுதி உள்ளது.

இந்த ஊரில் சைவ வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கந்தவேள் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். அவரது மனைவி சிவகாம சுந்தரி அம்மையார். இந்தத் தம்பதி, தங்களுக்கு மகப்பேறு வேண்டி திருச்செந்தூர் கந்தனை தொழுதனர். குமரன் அருளால் அவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வேகமாக வளர ஆரம்பித்தான். ஆனால், பேச்சு மட்டும் வரவில்லை. 5 வயது வரை அதே நிலையே நீடித்தது.

நாளடைவில் குழந்தை பேசிவிடுவான் என்று எதிர்பார்த்த பெற்றோருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. திருச்செந்தூர் வேலவன்தான் குழந்தையை கரைசேர்க்க வேண்டும் என்று எண்ணியவர்கள், தங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்றார்கள். அலைவாய் முருகன் திருவருள் வேண்டித் தொழுதனர். இலைவிபூதி பெற்று, ஏறக்குறைய ஒரு மண்டலம் செந்தூர் கந்தன் சந்நிதியில் தவம் கிடந்தனர். செந்தூர் முருகனும் அவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டார்.

அதையடுத்து, வாய் பேசமுடியாத குழந்தையின் உள்ளக் கண்ணுக்கு ஆறுமுகச் செவ்வேள் திருவடிவம் புலனாயிற்று. அந்த வடிவத்தையே குழந்தை நினைத்திருக்கையில் ஒருநாள் கந்தவேள் குழந்தையின் முன்பு தோன்றி 'நீ யார்?’ என்று வினவினார். அதுவரை பேசாத சிறுவன் முதன் முதலாக வாய்திறந்து 'அடியேன்’ என்றான். ஆறுமுகப் பரமன் அந்தச் சிறுவனுக்கு ஆசி கூறி 'குமரகுருபரன்’ என்று திருப்பெயரும் இட்டு மறைந்தருளினார்.

செந்தூர் கந்தன் திருவருளால் பேசும் ஆற்றல்பெற்ற குமரகுருபரன் அக்கணமே 'பூமேவு செங்கமலப் புத்தேளும்...’ என்று தொடங்கி, 'சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள்’ என்று முடியும் 'கந்தர் கலிவெண்பா’ பாமாலை சூட்டினார். 122 அடிகள் கொண்ட இந்த அற்புத ஸ்தோத்திரம் 'குட்டி கந்தபுராணம்’ என்று பெரியோர்கள் போற்றும் பெருமை கொண்டது.

##~##
''ஆறு திருப்பதிகளைத் தரிசித்து ஆறெழுத்தை ஓதுபவர் தம் சிந்தையில் குடிகொண்டவனே! செந்தூர்ப் பெருமானே! பகை, அவமிருத்யு, விக்கினங்கள், பிணிகள், பாதகங்கள், செய்வினை, பாம்பு, பிசாசு, பூதம், தீ, நீர், படை, விஷம், துஷ்ட மிருகம் - இவற்றால் என்றும் எனக்குத் தீது  வராமல் அருள் புரிவீராக! உமது மயில் வாகனம், பன்னிரு தோள்கள், வேல், சிற்றடி, செங்கை, பன்னிரு கண்கள், ஆறு திருமுகங்கள் - இவை எந்தப் பக்கமும் என்முன் தோன்ற வந்து, எனது துன்பங்களை ஒழித்து வரம் தந்தருள வேண்டும். எனது உள்ளத்தில் இன்புற்று வீற்றிருந்து, பழுத்த தமிழ்ப் புலமை பாலித்து, இருவினை, மும்மலம் ஒழித்து, அடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து, பேரின்பத்தை ஊட்டி என்முன் உமது திருவடி தரிசனம் தந்து ஆட்கொள்வீராக'' என்பது அதன் சாரம்.

குமரகுருபரர் தமது ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகயிலாச நாதர் மீது 'கயிலைக் கலம்பகம்’ என்னும் பிரபந்தம் ஒன்றை இயற்றினார். தொடர்ந்து, முருகப்பெருமானின் அருள்பெற்ற இலக்கண இலக்கியங்களையும் ஞான சாஸ்திரங்களையும் விரைவில் கற்றுத் தேர்ந்தார். பிறகு, மதுரை மீனாட்சியை தரிசிக்கச் சென்றார். அங்கிருந்த பெரியோர்கள் அவரை மிகச்சிறப்புடன் வரவேற்று அங்கயற்கண்ணி சந்நிதியிலுள்ள திருமடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர்.

அந்நாளில் திருமலை நாயக்கர் (1623-1659) மதுரையை அரசாண்டு வந்தார். மதுரை அன்பர்கள் வேண்டியபடி மீனாட்சியம்மை மீது பிள்ளைத்தமிழ் பாடியருளினார் குமரகுருபரர். 'எம் புதல்வன் திருவருள் பெற்று பாடிய செந்தமிழ் நூலை நான் கேட்க விரும்புகிறேன்’ என்று திருமலை நாயக்கர் கனவில் மீனாட்சியம்மை கூறி மறைந்தாளாம். மறுநாள் காலையில் தமது அமைச்சரிடம் தம் ஊரில் உள்ள அந்தப் பெரியவர் யார் என்று வினவினார் திருமலை நாயக்கர்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து, 5 ஆண்டுகள்வரை ஊமையாக இருந்து திருச்செந்திலாண்டவன் அருளால் பேசும் தன்மை பெற்ற குமரகுருபரர் அங்கு வந்துள்ளதை அமைச்சர் தெரிவித்தார். உடனே நாயக்கர், அவர் தங்கியிருக்கும் திருமடத்துக்குச் சென்று வணங்கி, மீனாட்சியம்மை மீது அவர் பாடிய காப்பியத்தைத் தான் கேட்க விரும்புவதாக கூறினார். குமரகுருபரரும் அதற்கு இசைந்து அரசனுக்குத் திருநீறு அளித்தார்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் தொடங்கியது. திருமலை நாயக்கர் முன்னிலையில் பொதுமக்கள் சூழ்ந்திருக்க, குமரகுருபரர் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பருவமாகப் படித்து வருகையில்... வருகைப் பருவம் ஓதும் காலத்தில், அங்கயற்கண்ணியான மதுரை மீனாட்சி, தனது கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகரின் குழந்தை வடிவில் திருமலை நாயக்கர் மடிமீது வீற்றிருந்தாள். வருகைப் பருவத்தில், 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே...’ என்ற திருப்பாடலைப் பாடியபோது அரசன் கழுத்திலிருந்த முத்து ஆரத்தை எடுத்து குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து மறைந்தருளினாள் அம்பிகை.

இந்த அற்புதக் காட்சியைக் கண்டு அங்கிருந்த அனைவரும் பேரானந்தக் கடலில் திளைத்தனர். மீனாட்சியின் அருள்பெற்ற குமரகுருபரரை பாராட்டும் விதமாக அவருக்குப் பொன்னும் மணியும் அளித்து கௌரவித்தார் அரசர். அதோடு, அவருக்கு யானை, குதிரை, சிவிகை குடை, கொடி முதலான பல விருதுகளும் கொடுத்து மரியாதை செய்தார்.

குமரகுருபரர் மதுரையில் தங்கியிருந்த காலத்தில் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, சோமசுந்தரப் பெருமான் மீது மதுரைக் கலம்பகம் முதலான செந்தமிழ் மாலைகளை இறைவனுக்கும் அம்பிகைக்கும் அணிவித்தார். திருமலை நாயக்க மன்னரின் விருப்பப்படி 'நீதிநெறி விளக்கம்’ எனும் மிகச் சிறந்த நீதி நூல் ஒன்றையும் இயற்றியருளினார் என்பர். அதற்கு பரிசாக 'அரியநாயகிபுரம்’ என்ற ஊரை அவருக்குக் காணிக்கையாக மன்னர் வழங்கினார் என்றும் தெரியவருகிறது.

பிறகு, குமரகுருபரர் வடதிசை யாத்திரை புறப்பட்டார். சோழ நாட்டில் பல திருத்தலங்களை வணங்கினார். தருமபுர ஆதீனத்தில் அப்போது முதல்வராக இருந்த ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகரை வணங்கி, அவரிடம் தீட்சை பெற்று ஞானோபதேசம் பெற விரும்பினார். தேசிகர், குமரகுருபரரை சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசித்து வருமாறு பணித்தார்.

அதன்படி அங்கிருந்து புறப்பட்ட குமரகுருபரர், புள்ளிருக்குவேளுர் எனும் இன்றைய வைத்தீஸ்வரன்கோவிலை அடைந்தார். தம்மை அடைந்தாரது உடற்பிணியும், பிறவிப்பிணியும் ஒழிக்கவல்ல தையல்நாயகி உடனமர் வைத்தியநாதப் பெருமானை வணங்கினார். தமது பரமாசார்ய மூர்த்தியாகிய முத்துக்குமார சுவாமியையும் வழிபாடு செய்து, அன்றிரவு அங்கே துயில் கொண்டார். குமரகுருபரரின் கனவில் கந்தவேள் தோன்றினார். 'நம்மைக் குறித்தும் ஒரு பிள்ளைத்தமிழ் பாடுவாயாக!’ என்று அருளி மறைந்தார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

கந்தவேள் பணித்தபடி வைத்தீஸ்வரன்கோவிலில் குமரகுருபரர் பாடியருளிய 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்’ பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் அற்புதமான பிரபந்தமாகும். குமரகுருபரருடைய அறிவில் அந்த முருகப்பெருமானே எழுந்தருளியிருந்து, உலகமெல்லாம் மகிழத் தமிழாகிய அமுத கிரணத்தை ஒழுகச் செய்தான் என்பதை... 'உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே...’ என்று அதில் வரும் பாடல் வரி ஒன்றால் நாம் உணரலாம். அருட்புலமையால் தோன்றிய இப்பிள்ளைத் தமிழை அன்புடன் கற்றுப் பொருள் உணர்ந்து கூறுபவர்களுக்கு, தமிழ்ப்புலமையும் முருகன் அருளும் ஸித்திக்கும் என்பது சத்தியம். (இந்த நூலின் பெயர் முத்தையன் பிள்ளைத் தமிழ், புள்ளிருக்குவேளுர் சேனாபதிப் பெருமாள் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்குவேளுர் குமாரதேவர் பிள்ளைக்கவி என்றெல்லாம் பல ஏட்டுப் பிரதிகளில் காணப்படுவதாக டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிட்டுள்ளார்)

தொடர்ந்து, தில்லையில் ஆடல்வல்லானை  தரிசித்த குமரகுருபரர், சிதம்பர செய்யுட் கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை ஆகியவற்றை பாடியருளினார். அதன் பிறகு, தமது ஞானாசார்யர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகரிடம் ஆசிபெற்று காசிக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கே கங்கையில் நீராடி விச்வேசப் பெருமானை வழிபட்டு, காசி துண்டி விநாயகர் மீது ஒரு பதிகமும், காசிக்கலம்பகமும் பாடினார். காசியில் ஆன்மிக சேவையாற்ற இடம் பெறவேண்டி அப்போதைய காசியில் அரசாண்ட மன்னன் டில்லி பாதுஷாவை சந்திக்க விரும்பினார். அவர்கள் பேசும் இந்துஸ்தானி மொழியில் பேசும் ஆற்றல் பெற கலைமகளை வேண்டி 'சகலகலாவல்லி மாலை’ என்ற பதிகம் பாடினார். சரஸ்வதிதேவி அருளால் அந்த மொழியில் சிறந்த அறிவு பெற்று, பாதுஷாவை சந்தித்து பேசினார். இவரது கல்வியறிவும் தவவேடமும் அரசனுக்கு மகிழ்ச்சியளித்தது. அவருக்கு மரியாதை செய்து, அவர் விரும்பியபடி காசியில் மடம் அமைப்பதற்கு கேதாரகட்டத்தில் இடம் வழங்கினான். அங்குள்ள கேதாரீஸ்வரர் கோயிலை புதுப்பித்தார் குமரகுருபரர்.

குமரகுருபர சுவாமிகள் காசியில் அமைத்த மடத்துக்கு 'குமாரசாமி மடம்’ என்று பெயர். அங்கே அவர் சிவயோகம் செய்து வாழ்ந்து வந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் கல்விச்சாலை ஒன்றும் ஏற்படுத்தி, அங்கே இந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் செய்தார். சிறந்த ராம பக்தராகிய துளசிதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் என்றும், அவர் கம்பராமாயணத்தில் உள்ள கருத்துக்களை தாம் இயற்றிய ராமாயணத்தில் அமைத்துக்கொண்டார் என்றும் கூறுவர்.

குமரகுருபர சுவாமிகள் மீண்டும் ஒருமுறை தருமபுரம் வந்து தம் ஞானாசார்யரை தரிசித்துவிட்டு காசிக்குச் சென்றார். அங்கு வாழ்ந்துவரும் நாளில் ஒரு வைகாசி மாதம் தேய்பிறை மூன்றாம் நாள் சிவபெருமான் திருவடி நிழலில் கலந்தார்.

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் வழியில் வந்தவர்கள் திருப்பனந்தாளில் திருமடம் அமைத்து அறப்பணிகளையும், அருட்பணிகளையும் ஆற்றிவருகிறார்கள்.

- அடியார் வருவார்...