Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முருகா எவர்க்கு முதல்வா சிவசண்முகா திருமால்
மருகா தமிழ்ப்புல வாஎன்று நான்உனை வாழ்த்தமன
முருகா திருப்பது நீதிகொ லோஎன்ன யோசனை காண்?
அருகா அருட்கட லேபழ னாபுரி ஆண்டவனே

- மாம்பழக்கவி

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ப
ழநி’- இது ஒரு மகா மந்திரம். ''படிக்கின்றிலை பழநித் திருநாமம்; படிப்பவர் தாள் முடிக்கின்றிலை'' என்பார் அருணகிரிநாத சுவாமிகள். 'சரவணபவா’ என்னும் ஆறெழுத்து ஒன்றிப்போகும் மலை இது. அதாவது, சடக்ஷரம் ஓதும் பலன் பழநித் திருநாமத்தை ஓதுவதால் கிடைக்கும். அத்தகைய பெருமைமிக்க திருத்தலமான பழநி, பல அதிசயங்கள் கொண்டது.

இந்தத் திருத்தலத்தில் அருளும் பழநியாண்டவரை வழிவழியாக பக்தி பூண்டு உத்தமசீலராய் வாழ்ந்த முத்தையா ஆசாரியார்- அம்மணியம்மை தம்பதிக்கு இரண்டாவது திருமகனாகத் தோன்றியவர் 'மாம்பழம்’. இது அவர்களது குலப்பெயர். இவரது ஏழாம் தலைமுறைப் பாட்டனார் சிற்பக்கலை வல்லுநர். கோயில் மண்டபங்களை சிற்ப நூல் விதி வழுவாது அமைப்பதில் கைதேர்ந்தவர். மதுரையை திருமலைநாயக்கர் ஆண்ட காலத்தில் அவர் கட்டிய வசந்த மண்டபம் (புதுமண்டபம்) அவரது கை வண்ணத்தையும் திறத்தையும் எடுத்துக்காட்டும் சிறப்புடையது.

மாம்பழக் குழந்தை வளர்ந்து வரும் நாளில், மூன்று வயதில் வைசூரி என்னும் கொடிய அம்மை (வெப்பு) நோய் அந்தக் குழந்தையைத் தாக்கியது. உடல் முழுவதும் கொப்புளமாக வெடித்து, பல நாட்கள் அதன் தீவிரம் குறையவில்லை. குழந்தைக்கு என்ன வைத்தியம் செய்வது என்று அறியாது மனங்கலங்கிய பெற்றோர், அதனை ஒரு வாழை இலையில் வைத்து தூக்கிக்கொண்டு, பழநி மலைப் படியேறி முருகன் சந்நிதி முன்பு கிடத்தினர். பழநி ஆண்டவரே கதியென்று அவரை சரண்புகுந்து, தங்கள் குழந்தையைக் காத்தருள வேண்டுமென்று கதறினர்.

அப்போது, ''முத்தையா! கவலையை விடு! எமது உத்தரவுப்படி நட. உமது பிரார்த்தனைக்கு மகிழ்ந்தோம். எம்முன் கிடத்தியிருக்கும் உமது புதல்வனை இல்லத்துக்கு எடுத்துச் செல்க. பாலன் பிணி நீங்கிடும்!'' என்று ஓர் அசரீரி கேட்டது. அந்த அசரீரி வாக்குப்படி, பழநி முருகன் அருள்பாலித்தவண்ணம் உடலில் உள்ள கொப்புளங்கள் குறைந்து, நோயில் இருந்து குணம் பெறத் தொடங்கினான் குழந்தை.

ஒருநாள் இரவு குழந்தை வாய் திறந்து, ''முருகா! முருகா!' என்று மழலைச் சொல்லால் பேசத் தொடங்கியது. அதைக் கேட்ட பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதேநேரம், ஏற்கெனவே தாக்கிய அம்மை நோயில் இருந்து மாம்பழக் குழந்தை குணம் அடைந்தாலும், அதன் கண்பார்வை பாதிக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் பெரும் துயரம் அடைந்தனர். 'மீண்டும் பழநி ஆண்டவனிடமே போய் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என, குழந்தையை அழைத்துக்கொண்டு, மறுபடியும் பழநி மலை திருச்சந்நிதானத்தை அடைந்தனர்.

கோயில் சிவாச்சார்யர் பழநிமலை முருகப்பெருமானின் அர்த்தசாமப் பால் அபிஷேகத் தீர்த்தத்தையும் திருநீற்றுப் பிரசாதத்தையும் தந்து, அவரது இல்லத்துக்குச் செல்லுமாறு பணித்தார். குழந்தையின் பெற்றோரும் அப்படியே செய்தனர்.

அன்றிரவு முத்தையா ஆசாரியாருக்கு ஒரு கனவு. அதில், பழநி ஆண்டவர் நரை பழுத்த முதுமைக் கோலத்தில் கையில் தண்டு ஊன்றி தோன்றினார். ''அன்பனே! உம் புதல்வன் பார்வை இழந்ததற்காகக் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு நேர்ந்தது அவன் பழவினையின் விளைவு. அவனது ஊனக் கண் பார்வை இழந்தாலும், ஞானக்கண் சுடரொளியுடன் பிரகாசிக்கும். பல நூல்களையும் கற்றுத் தேர்ந்து பெரும் புலவனாகத் திகழ்வான். கடல்மடை திறந்தாற்போல் கவிபாடும் ஆற்றல் அவனுக்கு உண்டாகும். மாம்பழத்துக்கு ஞானாசார்யன் யாமே!'' என்று கூறி மறைந்தார் ஸ்ரீதண்டபாணி ஸ்வாமி.

இறை உத்தரவை ஏற்றுக்கொண்ட முத்தையா ஆசாரி, தன் புதல்வனுக்குத் தினமும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான அருட்பாடல்களைப் பயிற்றுவித்தார். குழந்தையை தம் மடிமீது படுக்க வைத்து, அவனது முதுகில் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவை உயிர், மெய், உயிர்மெய் என எழுதிக்காட்டிக் கற்றுக்கொடுத்தார். மாம்பழக் குழந்தையும் எழுத்துக்களை உணர்ந்து எழுதும் ஆற்றலைப் பெற்றான்.

மாம்பழக் குழந்தை வளர்ந்து வரும் காலத்தில், மாரிமுத்துக் கவிராயர் என்பவர் பழநியில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கினார். மாம்பழம் அவரிடம் மாணவனாகச் சேர்ந்து தமிழ் கற்கத் தொடங்கினான். ஒன்பது ஆண்டுகளில் அந்தாதி, மாலை, உலா, தூது, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களை யாப்பிலக்கண விதி அறிந்து கவிபாடும் திறமை பெற்றான். அதோடு, வடமொழியையும் நன்கு பயின்றான். 'ஏகாக்ர சித்தம்’ என்னும் மனம் ஒருமைப்பட்ட நிலையில் அவனது கவித்துவ ஞானம் அற்புதமாக வளர்ந்தது.

இளம் பருவத்திலேயே தமது ஞானாசார்யனான குகப்பெருமானின் திருவருளால் பழநிப் பதிகம், குமரகுருப்பதிகம், செந்திற்பதிகம், சிவகிரிப்பதிகம் ஆகியவற்றை பழநி ஆண்டவருக்கு பாமாலைகளாகச் சூட்டி மகிழ்ந்தார் மாம்பழக்கவி. அவரது சொல் ஆற்றலும் கற்பனைத் திறனும் பெருகி, அதனால் 'கவிராஜர்’ என்னும் பட்டமும், கௌரவமும், சிவிகையும், பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன.

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள், மாம்பழக் கவிச்சிங்க நாவலரை அழைத்து, ஆதரவு தந்து மகிழ்வித்தார். அருணகிரியார் அருளிய திருப்புகழின் முதலடியான 'முத்தைத்தரு...’ என்பதை முழுவதுமாக ஓர் வெண்பாவாகப் பாடுவீர் என அரசர் கேட்டுக்கொள்ள... அடுத்த நிமிடமே அந்த வரியை ஓர் வெண்பாவாகப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

''வரமுதவிக் காக்கு மனமே! வெண் சோதி
பரவிய முத் தைத்தரு பத்தித் - திருநகைஅத்
திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித்
துக் குருபரன் என ஓது...''

என்று பாடிய மாம்பழக் கவிச்சிங்க நாவலரை முத்துராமலிங்க சேதுபதி பெருமையோடு கௌரவித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் இருந்த ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களிடம் சென்று அற்புதமாகக் கவிமாலைகள் சூட்டி, அவர்களிடமிருந்து பரிசுகள் பல பெற்று இன்புற்றார்.

இந்தக் காலத்தில் அவர் இயற்றிய இசைத்தமிழ்ச் சிங்கார நூல்கள் ஏராளம். சதுரங்கபந்தம், அஷ்டநாகபந்தம் முதலிய சித்ர கவிகளையும் இயற்றியுள்ளார். தமது 21-ஆம் வயதிலேயே 'தேவாங்க புராணம்’ என்னும் அற்புத நூலைப் படைத்தார். 27-வது வயதில் திருமணம் செய்துகொண்டு, இல்லறத்தை இனிது நடத்தினார்.

தமது ஞான சற்குருவாகிய பழநி ஆண்டவர் மீது கொண்ட பக்தியினால், பழநி நான்மணிமாலை, திருப்பழநி வெண்பா, குமரன் அந்தாதி, சிவகிரி யமகவந்தாதி முதலான திவ்ய கவிப் பிரபந்தங்களை இயற்றினார். மேற்கூறிய நூல்கள் ஒவ்வொன்றும் நூறு பாடல்கள் கொண்டவை. மேலும், பழனாபுரிமாலை, பழநிக்கோயில் விண்ணப்பம் போன்றவையும் பழநி முருகனைப் புகழ்ந்து இவர் பாடியவைதான்.

ஊனக் கண் இழந்தாலும் ஞானக் கண்ணைப் பெற்று, ஞானபண்டித சுவாமியை நாளும் போற்றிப் பரவிய மாம்பழக்கவிச் சிங்க நாவலர் தமது 48-ஆம் வயதில், 1884-ஆம் ஆண்டு மாசி மாதம் சுக்லபட்ச நவமி கூடிய நாளில் தமது திருக்கரங்களை சிரமேல் குவித்துக் கொண்டு,

''என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல்
அன்ன பிழை யெல்லாம் அகற்றி இன்னே - நின் உபய
பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம்
நீத குகனே நம்பினேன்...''

என்று பாடிக்கொண்டே, முருகப்பெருமானின் திருவடிகளில் கலந்தார்.

பழநி என்றவுடன் பஞ்சாமிர்தம் மட்டுமல்ல, இந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலரும் அடியார்களின் நினைவுக்குள் வந்து செல்கிறார்.

- அடியார் வருவார்...