மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

''ஒருமுரு காஎன்று உள்ளம் குளிர உவந்துடனே
வருமுரு காஎன்று வாய்வெரு வாநிற்பக் கை இங்ஙனே
தருமுரு காஎன்று தான்புலம் பாநிற்பத் தையல் முன்னே
திருமுரு காற்றுப் படையுட னேவரும் சேவகனே!''

- தனிப்பாடல்

##~##
பெ
ண்மையைப் போற்றும் பெருமை கொண்டது நம் பாரத நாடு. கணவனே கண்கண்ட தெய்வம் எனும் கொள்கையிலும் இறைவழிபாட்டிலும் உறுதியாக வாழ்ந்து, பிறந்த வீடு- புகுந்த வீடு இரண்டுக்குமே பெருமை சேர்த்து வந்துள்ளனர் பெண்கள். அவர்கள் இல்லற நெறியில் இன்புற்றுச் செம்மையாக வாழ்ந்ததால், இயற்கையும் அவர்களது கற்பு நெறியைக் கண்டு

அஞ்சியது. அதனால், அவர்களது இனிய இல்லற வாழ்வு வரலாற்றில் போற்றிப் பேசப்படுகிறது.

சோழவளநாட்டின் பழைமையான தலம் ஒன்றில், கந்தவேள் கழலைத் தவிர மற்ற ஏதும் கருதாத சிந்தையுடைய வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் முருகபாதர். வணிகர் பலர் வாழ்ந்த அவ்வூர் குபேர பட்டணம் போலத் திகழ்ந்தது. அங்கு அழகான முருகன் ஆலயம் ஒன்றும் பொலிவுடன் திகழ்ந்தது.

எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் முருகனின் ஆலயத்தில் ஒருநாள், அடியார் ஒருவரைச் சந்தித்தார் முருகபாதர். அவரது கண்களின் ஒளியும் தோற்றப்பொலிவும் முருகபாதரைக் கவர்ந்தது. உடனே, தமது இல்லத்துக்கு வந்து உணவருந்திச் செல்லுமாறு, அந்த அடியாரை அழைத்தார். அடியாரும் அதற்கு இசைய, அவரை வரவேற்று உபசரித்தனர் முருகபாதர் தம்பதி. வீட்டில் இவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் காணப்படாததால், ''உங்களுக்கு மகப்பேறு உண்டா?'' என்று கேட்டார் அடியார். தம்பதியர் வருத்தம் தோய்ந்த மௌனம் காத்தனர்.

'முருகப் பெருமான் அருள் உங்களுக்குப் பூரணமாக உள்ளது. நீங்கள் கிருத்திகை, செவ்வாய் நாட்களில் விரதமிருந்து, இந்த முருகன் கோயிலை வலம் வந்து அடியார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்குப் பெண் மகவு வாய்க்கும்'' என்று ஆசி வழங்கினார் அந்த அடியார்.

முருகப்பெருமானே அடியார் உருவில் தமது இல்லத்துக்கு வந்து வாழ்த்தியதாக எண்ணிய அந்தத் தம்பதி மிகவும் சந்தோஷம் அடைந்தனர். செவ்வாய், கிருத்திகை நாட்களில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். அடியார்களுக்கு அன்னதானம் செய்தனர். அதன் பயனாக அவர்களுக்கு அழகான பெண் குழந்தையை அளித்தான் ஆறுமுகப் பெருமான். முருகப்பெருமான் அருளால் பிறந்த குழந்தை என்பதால் 'முருகம்மை’ என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டினர். பலருக்கும் தான- தருமங்களைச் செய்து மகிழ்ந்தனர்.

மழலை மொழி பேசும் பருவத்திலேயே 'முருகா... முருகா...' என்று அந்தக் குழந்தை அழைக்கத் தொடங்கியது. முருகபாதர் தம்பதிக்கு ஒரே ஆச்சரியம்! குழந்தை உண்ணும் போதும், விளையாடும்போதும், உறங்கும் போதும்கூட 'முருகா... முருகா...’ என்றே சொல்லிற்று. அதோடு... வா, போ, வேண்டும், வேண்டாம் போன்ற எல்லாச் சொற்களுடனும் 'முருகா’ என்று சேர்த்துப் பேசுவதைக் கேட்டு, மற்றவர்களும் வியந்தனர்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முருகம்மை பருவ வயதை அடைந்தபோது அவளது அழகு, அன்பு, அடக்கம், அறிவு, ஆழ்ந்த பக்தி மேலும் மெருகேறியது. அவளின் ஒப்பற்ற குணங்களுக்கு ஏற்ற மணமகனைத் தேடத் தொடங்கினார் முருகபாதர். வணிகர் குலத்தில் பிறந்த தனஞ்சயன் என்பவன் அழகும், அறிவும், தொழில்நுட்பமும் பெற்றவனாகத் திகழ்ந்தான். செல்வம் ஈட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். அவனுக்குத் தந்தை இல்லை. அவன் வணிக நோக்கில் முருகபாதரின் சொந்த ஊருக்கு வந்தபோது, அவரைச் சந்தித்தான். அவரது இல்லத்துக்கும் வந்தான். தனஞ்சயனையே தம் மகளுக்கு ஏற்ற மணாளனாகத் தீர்மானித்தார் முருகபாதர். அவனது குடிப்பிறப்பு பற்றியும், குண நலன் பற்றியும் விசாரித்தார். அதில் திருப்தி அடைந்த முருகபாதர் தமது மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்த ஏற்பாடு செய்தார். திருமுருகன் திருவருளால் ஒரு நல்ல நாளில் முருகம்மை- தனஞ்சயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பொன்னும் மணியும் நிறைந்த செல்வங்களை மகளுக்கு வழங்கினார் முருகபாதர்.

அழகான இளம் மனைவியுடன் தனது ஊரை அடைந்தான் தனஞ்சயன். அவனது தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரியிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டு, தமது இல்லறத்தைத் தொடங்கினாள் முருகம்மை. முருக நாமத்தை ஜபிப்பதையும் எப்போதும் போலத் தொடர்ந்தாள். தனஞ்சயன் தன் மனைவியிடம் மிகவும் அன்பு செலுத்தினான். இருப்பினும், அவனது உள்ளம் வாணிபத்தைப் பெருக்கும் எண்ணத்திலேயே அதிகம் இருந்தது.

''மனிதனுக்குப் பொருள் மிகவும் முக்கியமானது. அது நிரம்ப இருந்தால் ஒழிய இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது. அதனால், நிறையப் பொருளைச் சம்பாதிக்கக் கடல் கடந்து செல்லத் திட்டமிட்டுள்ளேன்'' என்று மனைவியிடம் ஒருநாள் தெரிவித்தான்.

முருகம்மை அதைக் கேட்டு உள்ளம் நடுங்கினாள். கணவனைப் பிரிந்து வாழ்வது தனக்குத் துன்பத்தைக் கொடுக்கும் எனக் கருதினாள். ''உங்கள் எண்ணம் எனக்குப் புரிகிறது. ஆனாலும், பொருள் மிகுதியாக இருந்தால், அதனால் துன்பம்தான்! அதனைப் பாதுகாப்பதிலும் பெருக்குவதிலுமே எப்போதும் நம் கவனம் இருக்கும். அதனால் கவலைகள்தான் வந்தடையும். எனவே, பொருளால் இன்பம் வராது. இறைவனை நினைந்து உருகுவதால் வரும் இன்பமே சிறந்தது. எனது வேண்டுகோளை ஏற்று, இங்கேயே தொழிலை நன்கு செய்யுங்கள். நம்மிடம் உள்ள செல்வம் போதும்'' என்று கூறி அழுதாள்.

தனஞ்சயன் மனைவியின் கண்ணீரைக் கண்டு மனம் உருகினான். சிறிது காலம் உள்ளுரிலேயே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தான். இருப்பினும், அவனது ஆசை அடங்கவில்லை. தாயிடம் ரகசியமாகத் தனது கருத்தைக் கூறி, கடல் கடந்து செல்லத் தயாரானான். எதிர் வீட்டில் வசித்த முருகன் என்பவனைத் தனது இல்லத்தில் வேலையாளாக நியமித்து, மனைவியிடம் சொல்லாமல் தாயிடம் மட்டும் விடைபெற்றுப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் எழுந்த முருகம்மை, தனது பணிகளை வழக்கம்போலத் தொடங்கினாள். விடிவதற்கு முன்பே வியாபாரத்துக்குச் சென்றுள்ளார் தன் கணவர் என்று எண்ணி, மதிய உணவுக்காக அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இரவும் வந்தது. கணவன் வராததைக் கண்டு மிகவும் கவலை அடைந்தாள். வீட்டு வேலைக்காரனான முருகன் அவள் அருகில் வந்து, ''அம்மா... நீங்கள் வருந்த வேண்டாம். உங்கள் கணவர் வாணிபம் செய்யும் பொருட்டுக் கப்பல் ஏறி, வேறு நாடு சென்றுள்ளார்'' என்றான். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் முருகம்மை. கண்ணீர் விட்டுக் கதறினாள்.

கணவனை நினைத்து அடிக்கடி 'முருகா... முருகா...’ என்று அலறினாள். சரியாக உணவு உண்பதில்லை; அதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்தாள். இப்படியாக ஓராண்டு ஓடியது.

ஒருநாள் காலை, தனஞ்சயன் ஊர் திரும்பினான். கணவனைக் கண்டவுடன் முருகம்மை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஓடிச் சென்று அவன் கால்களில் வீழ்ந்து, கண்ணீரால் அவனது பாதங்களைக் கழுவினாள். பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. தனஞ்சயன் அவளது கண்ணீரைத் துடைத்து, ஆறுதல் கூறித் தேற்றினான்.

சிறு வயது முதற்கொண்டே முருக நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்கும் முருகம்மை பற்றி அவளது கணவனிடம்  தவறாகச் சொல்லி, அந்தக் கற்புக்கரசிக்குக் களங்கம் விளைவித்தாள் அவனது தங்கை. 'முருகம்மை அடிக்கடி முருகா, முருகா என்று அழைப்பது அந்த வேலைக்காரனையே’ என்று புது அர்த்தம் கற்பித்து, தனஞ்சயன் மனத்தைக் கரைத்தாள். இதற்கு அவன் தாயும் தூபம் போட்டாள். கோபமும் வெறுப்பும் அடைந்த தனஞ்சயன் தன் மனைவியிடம், ''இனி, முருகா என்ற வார்த்தையையே நீ சொல்லக்கூடாது!'' என்று ஆத்திரத்தில் கத்தினான்.

''முருகா... தாங்கள் என் உடலுக்கு நாயகர். முருகப்பெருமானே தங்களுக்கும் எனக்கும் உயிர்க்கு நாயகர். முருகனது திருநாமமே உலகுக்கெல்லாம் மூல மந்திரம். அதை உச்சரிக்கக்கூடாது என்று என்னைத் தடுப்பது சரியா?'' என்று கேட்டாள் முருகம்மை.

நாப்பழக்கத்தால் தன்னையும் அறியாமல் முருகம்மை வாக்கில் இருந்து முருக நாமம் வருகிறது என்பதை உணராத தனஞ்சயன் அளவுக்கு மீறிய சினம் கொண்டு, நீண்ட வாளை எடுத்து அவள் கையை வெட்ட வந்தான்.

''முருகா! தங்களைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை உமது நினைவாகவே காலம் கழித்ததன் பலன் இதுதானா? முருகா... வேண்டாம் முருகா! ஒரு குற்றமும் புரியாத என்னை வெட்டாதீர். நான் நிரபராதி, முருகா...'' என்று அவன் கையைத் தடுத்தாள் முருகம்மை.

பாவி தனஞ்சயன், சிறிதும் இரக்கம் இன்றி, வாளை வீசினான். அவளது வலக் கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே வீழ்ந்தது. ரத்தம் ஆறு போலப் பெருகி ஓடியது. அப்போதும் 'முருகா...’ என்றுதான் அலறினாள் முருகம்மை.

அக்கணமே, அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. தேவரும் மூவரும் போற்றும் அந்த முருகப்பெருமானே அங்கே தோன்றினார். அச்சம் அகற்றும் பச்சை மயில் வாகனத்தில் வள்ளி- தேவசேனா சமேதராகக் காட்சியளித்தார். முருகம்மை ஓடிச் சென்று இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து, கண்ணீர் வடித்துத் துடித்தாள். தனஞ்சயன் மிரண்டு நடுங்கினான். முருகம்மையின் வெட்டப்பட்ட கை, முருகப்பெருமானின் அருளால், முன்போலவே மீண்டும் அவள் உடலில் பொருந்தியது.

''உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!'' என்றார் கருணைக்கடலான கந்தப்பெருமான்.

''என் கணவரை அன்றி வேறு எந்த உலகையும் நான் விரும்பவில்லை. என் கணவருக்கும் அருள் புரிவீர்களாயின், அப்போது கந்தன் உலகம் என் சொந்த உலகம் ஆகட்டும்.'' என்றாள் முருகம்மை.

ஆறுமுகப்பெருமான் அவளுக்கு ஆசி வழங்கி, அவளது வாழ்நாளுக்குப் பிறகு தம்முடைய தேவியருக்கு மலர் கட்டும் பணிமகளாக இருக்க வரமளித்து அருள்புரிந்தார். முருகம்மையின் பெருமையைத் திருப்புகழில் அருணகிரியாரும் மற்றும் பிற புலவர்களும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

''ஒரு திரு முருகா என்றே உள்கிநின்று உருகி வாழ்த்தி
வருவது தெரியாக் கேள்வன் வாள்கொடு கொய்த கையைத்
தருமுரு கவன்பால் வேண்டித் தன்தலைவனையும் காத்த
திருமுரு கம்மையாரின் செந்தளிர்ப் பதங்கள் வாழி!''

- ஈ.வே.வேங்கட சுப்ரமணியம்

- அடியார் வருவார்...